26 Mar 2019

தேவிபாரதியின் 'நிழலின் தனிமை' - நாவல் அறிமுகம்



நிழலின் தனிமை - பழிவாங்குதலின் நிகழ்த்துக் கலை
            ஒரு பழிவாங்குதலின் வெறி கொலையில் முடியாமல், கருணைக் கொலையில் சாத்தியமாகாமல் அதுவாகத் தேர்ந்து கொண்ட மரணத்தில் முடிவது எவ்வளவு வேடிக்கையானது?
            எந்த மனநிலை ஒரு மனிதரைப் பழிவாங்கத் தூண்டுகிறது? அதில் எந்த மனநிலை ஒரு மனிதரைப் பழிவாங்க விடாமல் செய்கிறது?
            பழிவாங்க நினைக்கும் அந்த உணர்வை ஒரு மனிதர் துணையாக நினைத்தால் என்னாகும்? பழிவாங்கி முடித்து விட்டால் அந்த துணையை இழப்பதைத் தவிர அவருக்கு வேறு என்ன வழியிருக்கும்? அந்தத் தனிமையை எதிர்கொள்வது என்பது மேலதிக எவ்வளவு வெறுமையைத் தரும்? பழிவாங்கும் உணர்வைக் கைவிடுவதன் மூலம் எதிர்கொள்ள நேரிடும் தனிமையை விட அதைக் கைக்கொள்ளும் போது கிடைக்கும் ஒரு பிடிப்பு ஒரு மனிதரை அந்த உணர்வைக் கைவிட முடியாத வண்ணம் செய்து விடக் கூடுமோ?
            ஒரு பலகீனமான மனதுக்கு பழிவாங்குவதா? வேண்டாமா? என்று குழம்பிக் குழம்பித் தெளிவது ஒரு பழக்கப்பட்ட விளையாட்டாக மாறி விடும். ஒரு முடிவுக்கு வர முடியாமலும், குழப்பத்தைத் தீர்க்க விரும்பாலும் தொடர விடும் அந்த மனநிலை எதிர்பார்ப்பதெல்லாம் அதுவாக ஒரு முடிவு நிகழ்ந்து விட்டால்தான் என்ன என்பதைத்தான்.
            நிஜம் என்பது மனிதர் என்றால், மனம் என்பது மனிதரின் நிழல். அந்த மனதின் வெறுமைதான் 'நிழலின் தனிமை'.
            நிழலின் தனிமை பழிவாங்குதல் குறித்த ஒரு நாவல். பழிவாங்க நினைத்த மனிதர் பழிவாங்கப்படாமலே சுயமாக இறக்கும் போது எப்படி இருக்கும் ஒரு மனிதருக்கு? பழிவாங்க நினைத்த மனிதரின் மேல் ஒரு கருணையாக ஒரு முடிவு கொள்கிறது அது.
            ஒரு நாட்குறிப்பு எழுதுவது போல இந்நாவலை எழுதியிருக்கிறார் தேவிபாரதி. அந்த நான் என்கிற பாத்திரம் அநேகமாக அவர்தான். அவர்தான் அந்த எழுத்தர். நாவலை எழுதிய எழுத்தாளரும், நாவலுக்குள் இருக்கும் எழுத்தரும் அவரே.
            காலம் கடந்து எழுதப்பட்ட ஒரு நாட்குறிப்புதான் இது. காலம் கடந்து விட்டாலும் மனம் ஒவ்வொன்றையும் பரிசீலித்துக் கொண்டுதான் இருக்கிறது. பரிசீலிப்பது அப்படி ஓர் இயல்பன்று மனதுக்கு. அப்படிப் பரிசீலிப்பது ஒரு நோய் மனதுக்கு. எழுத்தாளர்கள் அந்த நோய்க்கு மிக அதிகமாகவே ஆட்படுகிறார்கள். கட்டியை உடைத்து விட்டால் ரணம் குணமாகி விடும் என்ற நினைப்பைப் போல் அவர்கள் ஒரு பரிசீலனை மூலம் நடந்ததை, நடந்தது குறித்த மனபரிசீலனையை உடைக்கப் பார்க்கிறார்கள்.
            எப்போது அது நிகழ்ந்ததோ அது அப்போதே உடைந்து விட்ட ஒன்றுதான். ஒரு எளிமையான மனம் இதை மிக எளிதாகப் புரிந்து கொள்ளும். ஓர் எழுத்தாள மனம் இதைச் சிக்கலாக்கித்தான் புரிந்து கொள்கிறது. அதற்கு காரணம் இருக்கிறது. எழுத்தாள மனம் மொழி எனும் கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பதில் அலாதியான ஆர்வம் கொண்டது. ஒவ்வொரு முறை முழுகும் போதும் வெவ்வேறு விதமான முத்துகள் கிடைப்பதைப் போல்தான் ஒவ்வொரு முறை எழுதும் போதும் அது வெவ்வேறு விதமாக அது மொழியோடு விளையாடிப் பார்க்கிறது.
            இப்போதைய சூழ்நிலை என்றால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படும் ஒரு பாலியல் குற்றத்தைத்தான் கருணாகரன் செய்கிறான். செய்து முடித்த கருணாகரன் அதைப் ஒரு பொருட்டே இல்லாமல் கடந்து விடுகிறான். அதைப் பார்த்த தேவிபாரதிக்கு அது பலவருட போராட்டமாக நீள்கிறது. அப்படி என்னதான் ஒரு பாலியல் குற்றம் நிகழ்ந்தது என்பதைக் கூட அவர் ஒருவாறாக மங்கலாகச் சொல்கிறார். இவ்வளவு மங்கலாகச் சொல்லும் தேவிபாரதி அவரே ஒரு கருணாகரனாக மாறி செய்யும் பாலியல் அத்துமீறல்களை மிக விரிவாகச் சொல்கிறார். கருணாகரன் மீது காட்டும் மிக அதிகபட்ச கருணை அது.
            நிகழ்ந்ததை எப்படி வேண்டுமானாலும் கற்பிதம் செய்து கொள்ளலாம் என்பதற்காக அவர் அதைப் பற்றி கூடுதலாகச் சொல்லாமல் கூட விட்டிருக்கலாம். அல்லது முடிவில் கருணாகரனுக்குக் கிடைக்க வேண்டிய மன்னிப்புக்காகக் கூட அதைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். அப்படி விட்டு விடுவதன் மூலம் தன்னளவில் தானும் கருணாகரன் மீது கருணை கொண்ட மனிதர்தான் என்ற பெயர் அவருக்கு வாய்க்கிறது.
            ஒரு மனதுக்கு ஓர் இலக்கு, ஓர் லட்சியம் தேவைப்படுகிறது. வெறுமனே ஓர் லட்சியம். பழிவாங்கும் உணர்வு கூட ஒரு லட்சியம்தான். மருத்துவராவது, பொறியாளராவது, ஆட்சியராவது என்ற இலக்கு லட்சியம் போல அதுவும் ஒரு வகை லட்சியம்தான். மற்ற லட்சியங்கள் போலில்லை இந்த லட்சியம். இந்த லட்சியம் நிறைவேறாத வரைதான் அந்த லட்சியத்துக்காக போராடுவதாகக் கற்பிதம் செய்து கொள்ள முடியும். நிறைவேறி விட்டால் அதன் வெறுமையில் காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும். அந்த வெறுமையைச் சந்திப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார் தேவிபாரதி. வெறொரு சம்பவம் ஒன்று பழிவாங்க நினைக்கும் மனிதரை மிக மோசமாக பழிவாங்கும் போது தேவிபாரதி அதை உற்றுநோக்குகிறார்.
            நாவலின் இறுதியில் தான் பழிவாங்க நினைத்த உருவத்தின் சாயலே அந்த உருவம், இந்த உருவமில்லை என்று சாரதா மருகும் இடம் இருக்கிறதே!பழிவாங்கும் உணர்வின் முடிவில் முளை விடும் கருணை அந்த இடம்.
            மன்னிப்பு பழிவாங்கும் உணர்வுக்கான மருந்து. அது உட்செலுத்துவதற்கான மருந்தா? அப்படி இருந்தால் அந்த மருந்தை வியாபார வணிகத்தில் எல்லாருக்கும் ஊசி மூலம் செலுத்தி விடலாம். பரிதாபமான ஓர் உண்மை என்னவென்றால் அது உள் உணர்வதால் உண்டாகும் மருந்து.
            ஒரு சிறுகதையின் அதீதமான நீட்சி போல் நீளும் இந்நாவல் ஆனவரை பழிவாங்குவதற்கான வாய்ப்பைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறது. ஓர் பலவீனமான இயல்பு அதுதான் என்றால் அதை தேவிபாரதி விரும்பவே செய்கிறார். அவரைப் பொருத்தவரையில் பழிவாங்குவதற்கான ஒரு கொலை தேவையில்லை. அதுவும் குறிப்பாக அதைத் தான் செய்து விடக் கூடாது என்பதற்காக குழப்பம் கூட அவரைப் பொருத்தவரையில் ஒரு நல்லதாகி விடுகிறது.
            வழக்கமான பழிவாங்குதலின் தமிழ்த் திரையாக இந்நாவல் நீண்டு விடக் கூடாது என்பதில் தேவிபாரதி மிகுந்த கவனமாக இருக்கிறார். அது குறித்த ஓர் உரையாடலைத் தொடர வேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் பழிவாங்குவதற்கான வசமான வாய்ப்பு வந்தும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார். படிக்கும் ஒரு வாசகருக்கு தேவிபாரதி ஏன் பழிவாங்கலைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறார் என்ற கேள்வி எழ வேண்டும் என்று நினை்ககிறார். தள்ளிப் போடுவதன் மூலம் தள்ளிப் போகும் பழிவாங்கலின் நீர்த்துப் போகும் தன்மையைத்தான் தேவிபாரதி கண்டடைகிறார்.
            பழிவாங்குதலுக்காக தேவிபாரதி தூக்கும் கத்தி அப்படியே துரு பிடித்துப் போய் விடுகிறதா என்ன? அது கருணாகரனின் மகனின் கையில் கிடைத்து வேறொரு ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது. எந்தக் கொலையை தேவிபாரதி விரும்பவில்லையோ அதே கொலையைத்தான் அவர் தூக்கிய கத்தி இன்னொருவர் மூலம் நிகழ்த்திக் கொள்கிறது. எந்தக் கொலையைப் பழிவாங்கல் மூலம் நிகழ்த்தக் கூடாது என்று நடுக்கமுற்றவராய் தேவிபாரதி தவிர்க்க நினைக்கிறாரோ, அதே கொலையைத்தான் ஒரு களியாட்டம் நிகழ்த்துகிறது.
            கருணாகரன் ஒரு களியாட்டமாய் சாரதாவின் மீது நிகழ்த்திய அதே வன்முறையை அவன் மகன் கெளதமன் இரண்டு கொலைகள் வடிவில் நிகழ்த்துகிறான். கருணாகரன் கருணையற்றவனாய், கொலைப்பழியைக் கூடாதென்று சொன்ன கெளதம புத்தர் கெளதமனாய் ஒரு கொலைகாரராய் நிற்கும் ஓர் அபத்தமான சூழலை தேவிபாரதி நிகழ்த்திக் காட்டுகிறார். பெயர்கள் இடம் மாறுவதால் மனிதர்கள் மாறுவதில்லை. அவர்கள் அதே மனிதர்கள்தான். பெயர்களில் என்ன இருக்கிறது என்று பெயர்களுக்கு எதிரான பிம்பத்தை உடைத்துப் போட முயற்சிக்கிறார் தேவிபாரதி. தன் நாவலை ஒரு பெயரற்ற கதைநாயகன் மூலம் அவர் நகர்த்த விரும்புவதன் காரணமும் அதுவாக இருக்கலாம்.
            ஒரு வாக்குமூலம் போல ஒரு நாவலைத் தந்திருக்கும் தேவிபாரதியிடம் இது ஓர் உண்மைச் சம்பவத்தின் புனைவா? அல்லது புனைவை நோக்கிய மாறுபட்ட எழுத்து முயற்சியா? என்று கேட்பது ஒரு வாக்குமூலத்தின் மீதான குறுக்கு விசாரணைப் போன்றதாகி விடும். அவர் வெளிப்படுத்த நினைக்கிறார். எதையும் நிறுவிக் காட்ட முயற்சிக்கவில்லை. இது சரி, இது தவறு என்ற கட்டுமானத்துக்குள் நாவலைக் கொண்டு செலுத்த விரும்பவில்லை. உணர்வுகளை வெளிப்படுத்தாதவர்களாக அல்லது வெளிப்படுத்த விரும்பாதவர்களாக அவரது நாவலின் பல பாத்திரங்கள் இருக்கிறார்கள். நடைமுறை வாழ்வில் அப்படித்தான் இருக்க முடிகிறது. ஒரு சினிமா பாத்திரத்தைப் போல அதீதமாக அழுது, அதீதமாக ஆத்திரப்பட்டு எந்த செயற்கைத்தனத்தை வாழ்வில் செய்து விட முடிகிறது? அதனால்தான் பாலகனாய் தூக்கிய அரிவாளை வைத்து எதுவும் செய்ய முடியாத தேவிபாரதி வாலிபத்தை அடைந்தும் தூக்கிய கத்தியையும் அப்படியே எதுவும் செய்ய முடியாத ஆற்றாமையால் அப்படியே போடுகிறார்.
            கோழைத்தனமான ஒரு மனத்தின் கட்டுமானமாக தேவிபாரதி தன்னை ஒரு எழுத்தராக நாவலில் காட்டியிருந்தாலும் ஒரு பழிவாங்கலைத் தள்ளிப்போடுமானால் அதுவும் ஏற்றதே என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். அதே கோழைத்தனமான மனத்தின் கட்டுமானம்தான் அதிகாரமும், வாய்ப்பும் கிடைக்கும் என்றால் நாயக பிம்பத்தை உடைத்து விட்டு வில்லத்தனமான கட்டுமானத்தைப் பின்தொடரும் என்பதையும் பிம்பக் கட்டுமானம் சிதைகிறதே என்பதையும் பொருட்படுத்தாமல் எடுத்துரைக்கிறார்.
            வாழ்க்கை எனும் விசித்திரத்தில் யாரை வெறுக்கிறோமோ அவரைப் பழிவாங்குவதில் காட்டும் வேகத்தை விட யாரை மென்மையாக நேசிக்கிறோமோ அவரை அதிகமாகப் பழிவாங்கி விடுகிறோமா என்பதை சுலோச்சனா மூலம் காட்டுகிறார் தேவிபாரதி. அவர் நினைத்திருந்தால் மிகக் கொடூரமாக கருணாகரனைப் பழிதீர்த்திருக்க முடியும். மிகச் சாமர்த்தியமாக கருணாகரனின் மகன் கெளதமனையும் பழி தீர்த்திருக்க முடியும். அவரின் பழிவாங்கும் வேகம் சுலோச்சனாவிடம் மிக அதிகமாகவே அதீத காமத்துடன் செல்கிறது. பலகீனமானவர்கள் மிக அதிமாக பழிதீர்க்கப்படுகிறார்கள், பழிவாங்கப்படுகிறார்கள். அந்தப் பட்டியலில் கருணாகரனால் சாரதா சேர்வதைப் போல, தேவிபாரதியால் சுலோச்சனா சேர்கிறார். ஒரு கட்டத்தில் தன்னளவில் தானொரு கருணாகரனாகவும் பரிணமிக்கிறார் தேவிபாரதி.
            இவ்வளவு விருட்டென்று சொல்லி நாவலை அப்படியே கடந்து விட முடியாது. அவரின் பாலியமும் அதன் ஆற்றாமைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. குழந்தைகளையும், பெண்களையும் களியாட்டத்தின் பலியாடுகளாக நிகழ்த்திக் காட்டும் அதிகார வன்மத்தின் மீதான கேள்வியையே வளர்ந்து வரும் பழிவாங்கல் உணர்வின் மூலம் ஒரு பெருத்த விவாதத்திற்குள் முன்வைக்க விரும்புகிறார் தேவிபாரதி.
            காலம் காலமாக பழிவாங்குதல் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நீதிமன்றங்கள் விசாரணைகள், தண்டனைகள் என்கிற ரீதியில் பரிசீலிக்கின்றன. தேவிபாரதி மன்னிப்பு, கருணை என்கிற ரீதியில் பரிசீலிக்கப் பார்க்கிறார். இனி வரும் காலங்களிலும் அது பரிசீலிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அதற்கான தீர்வு சட்டமும் தண்டனையுமா அல்லது மன்னிப்பும் கருணையுமா? என்று அது நீண்டு கொண்டேதான் இருக்கும். அந்த நீட்டிச்சிக்கு முடிவில்லை. ஏனென்று கேட்டால் மனிதர்கள் இரண்டையும் விரும்புபவர்களாக குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...