23 Mar 2019

வாழ்க்கை போடும் கணக்கு



செய்யு - 33
            மணமங்கலம் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை இருந்தது. மணமங்கலம் பள்ளியை மேனிலைப் பள்ளியாக்க முயற்சி நடந்து கொண்டிருந்தது. விகடு பத்தாம் வகுப்பு வரை அந்த முயற்சி பலிக்கவில்லை. அந்த முயற்சி பலிக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டதில் விகடு முதன்மையானவன். அப்படிப் பலித்து விட்டால் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்க வேண்டுமே என்ற பயம் அவனுக்குள் இருந்தது.
            மணமங்கலம் பள்ளியில் படித்த பிள்ளைகளின் லட்சியக் கனவு பாலிடெக்னிக்தான். அவர்களுக்குத் தெரிந்த பெரிய படிப்பும் அதுதான். பப்ளிக் பரீட்சையில் நானூறு மார்க்குக்கு மேல் எடுத்து விட்டால் பாலிடெக்னிக்கில் சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். மணமங்கலம் பள்ளியில் அதிகபட்ச மதிப்பெண்கள் எடுத்த பிள்ளைகள் எல்லாம் பாலிடெக்னிக்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். பாலிடெக்னிக் கிடைக்காதவர்கள் ஐ.டி.ஐ.யில் சேர்வார்கள். ப்ளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் பிள்ளைகள் அரிதுதான்.
            விகடு பத்தாம் வகுப்பு படித்த இரண்டு மூன்று செட்டுகளுக்கு முன்பிலிருந்துதான் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும் செட்டுகள் உருவாகியிருந்தன. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிப்பது என்றால் மேற்கே போனால் கூத்தாநல்லூர் அல்லது மன்னார்குடி. கிழக்கே போனால் திருநெய்ப்பேறு அல்லது நரிவலம். பிள்ளைகள் பலவிதமாகப் போய் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்க ஆரம்பித்தார்கள்.
            கூத்தாநல்லூர், திருநெய்ப்பேறு போனவர்கள் சைக்கிளில் போனார்கள். எப்படிப் பார்த்தாலும் பத்து கிலோ மீட்டருக்கு மேல் அவர்கள் சைக்கிள் மிதித்துப் போனார்கள்.
            மன்னார்குடி போனவர்கள் காலையில் ரெண்டாம் நம்பர் பஸ்ஸையும், சாயுங்காலம் பதிமூன்றாம் நம்பர் பஸ்ஸையும் நம்பிப் போனார்கள். தப்பித்தவறி அன்று பஸ் வராமல் போனால் பள்ளிக்கூடத்துக்கு போக வாய்ப்பில்லாமல் போய் விடும். மன்னார்குடியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வாய்ப்பிருந்தது. ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வைக்க பெத்தவர்கள் விரும்பவில்லை. டவுன் ஹாஸ்டலில் தங்கிப் படித்தால் பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள் என்ற அச்சம் அவர்களைப் பீடித்து இருந்தது.
            நரிவலத்தில் ஹாஸ்டல் இருந்தது. அந்த வசதி காரணமாக அங்குத் தங்கிப் படித்தவர்களும் இருந்தார்கள். நரிவலத்துக்கும் சைக்கிளில் போய் படித்தவன் சேப்பையன் மகன் சந்திரமோகன். எப்படியும் இருபது கிலோ மீட்டர் இருக்கும். அப்படி இப்படி குறுக்கால் போனாலும் பதினைந்து கிலோ மீட்டருக்கு குறைவிருக்காது. நரிவலத்துக்குச் சைக்கிளில் போய் படித்த ஒரே பெருமை சந்திரமோகனை மட்டுமே சாரும். சந்திரமோகனுக்குப் பின் யாரும் அப்படி ஒரு முயற்சியை எடுக்கவில்லை. நரிவலம் என்றால் ஹாஸ்டல் என்றாகி விட்டது.
            விகடு மணமங்கலம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது செய்யு திட்டைப் பள்ளியில் ரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள்.
            பத்தாவதுக்குப் பிறகு விகடுவை எங்கே படிக்க வைப்பது என்ற யோசனை அப்பாவுக்கு இருந்தது. விகடு படிப்பை விரைவில் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான். அதற்கு ஒரே வழி பாலிடெக்னிக் படிப்பதுதான். மூன்றாண்டுகளில் படிப்பது முடிந்து விடும். அதற்கு மேல் படிக்க வேண்டிய தொல்லை இருக்காது என்று நினைத்தான்.
            அப்பாவின் கணிப்பு வேறாக இருந்தது. அவர் விகடுவை ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்க வைத்து ஆசிரியர் பயிற்சியில் சேர்த்து விடுவது என்று முடிவெடுத்திருந்தார். பத்தாம் வகுப்பு பப்ளிக் பரீட்சை மதிப்பெண்கள் வந்த போது விகடு நானூறுக்கு மேல் மதிப்பெண்களை அநாயசமாகத் தாண்டியிருந்தான். அதனால் அவன் தன்னை பாலிடெக்னிக்கில் சேர்த்து விடுமாறு அப்பாவிடம் எல்லாம் தெரிந்த பெரிய மனுசன் போல் பேசிக் கொண்டிருந்தான்.
            அது பாலிடெக்னிக் படிப்பு லேசான சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம். பாலிடெக்னிக் முடித்து விட்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் நிறைய பேர் உருவாகியிருந்தனர். பஞ்சு மாமாவின் மூத்த மகன் சங்கு என்ற சங்கர் பாலிடெக்னில் பெயிலாகி வீட்டில் இருந்ததால் பாலிடெக்னிக் படிப்பில் பெயிலாகி விடலாம் என்ற அச்சம் வேறு நிலவியது.
            அப்பா விகடுவை ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தார்.
            "நாம்ம பாலிடெக்னிக்கே படிக்குறேனே!" என்றான் விகடு.
            "ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிச்சிட்டும் பாலிடெக்னிக் போலாம்டா!" என்றார் அப்பா.
            "அது ஏம்பா அதப் படிச்சிட்டு அப்புறம் பாலிடெக்னிக்கு போயிட்டு. நாம்ம நேராவே போயிடுறம்பா!"
            "ப்ளஸ் டூல்ல நல்லா மார்க் எடுத்தீன்னா ஒம்ம டீச்சர் டிரெய்னிங் சேத்து வுட்டுடலாம்னு பாக்குறன். அப்படி மார்க் வர்லன்னா நீ நெனக்குற மாரியே பாலிடெக்னிக் போயிடலாம்!"
            "டீச்சர் டிரெய்னிங்னா ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ரண்டு வர்ஷம், அப்பால டீச்சர் டிரெய்னிங் ரண்டு வர்ஷம். நாலு வர்ஷம் ஆகுதுப்பா. பாலிடெக்னினா மூணே வர்ஷம். எல்லாம் முடிஞ்சிடும். ச்சும்மா ச்சும்மா படிச்சிட்டே இருக்க முடியாதுப்பா. எரிச்சலா இருக்குப்பா!"
            அம்மாவும் இதைக் கேட்டுக் கொண்டிருந்தது. "படிப்பு விசயம். வேலய்க்குப் போற சமாச்சாரம். அப்பா சொல்றதக் கேளு. அப்பா வேலயில இருக்குறதாலதாம் சொந்தக்காரவோ மதிக்கிறாவ்வோ பாத்துக்கோ!" என்றது அம்மா.
            "நாம்ம மூணு வர்ஷத்துல பாலிடெக்னிக்கு படிச்சிட்டு வேலய்க்குப் போயிடுவன்மா!" என்றான் விகடு.
            "ஒரு வர்ஷத்துல என்னடா வந்துடப் போவுது? இதாண்டா மொற. இப்படிப் படிச்சிட்டீன்னா அப்புறம் நீ டிகிரி படிப்பு படிக்கிறன்னு நெனச்சாலும் படிக்கலாம். பெரச்சனயிருக்காது பாரு!" என்றது அப்பா.
            "நாம்ம மூணு வர்ஷத்துல எல்லாத்தயும் முடிக்கலாம்ன பாத்துட்டு யிருக்கேன். இதுல டிகிரிலாம் முடியாதுப்பா!"
            "அது ஒம்மோட விருப்பம். ஒரு வர்ஷம்தானடா கூடப் போவுது. மெரிட்ல டீச்சர் டிரெய்னிக் கிடச்சா முடிச்சோடனேயே வேலக்கிப் போயிடலாம்டா. பாலிடெக்னிக் படிச்சிட்டு அப்பால நீ வேல தேடணும் பாத்துக்கோ!"
            "அதுல ந்நல்லா படிச்சா படிக்கிறப்பயே வந்து ஆளெடுத்துபாவோளாம். ல்லாம் நமக்குத் தெரியும்!"
            "சங்கு மாரி பெயிலான்னா ன்னா பண்றது?"
            "இதுலயும் ப்ளஸ்டூல்ல பெயிலான்னா...?"
            "பரவால்ல. பெயிலானாலும் நீ பாலிடெக்னிக் படிக்கலாம். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிச்சுருக்காதல பாலிடெக்னிக் ஒனக்கு ஈஸியா போயிடும்டா!"
            விகடு ரொம்ப யோசித்தான்.
            "இந்தண்ணன் பெரியவுங்க சொல்றத கேக்குதா பாரு!" என்று செய்யு இடையில் புகுந்து சொல்லவும் அம்மாவுக்குச் சிரிப்பு தாங்கவில்லை.
            "அதாங் பாப்பாவும் சொல்லுதுல்ல. அப்பா சொல்ற மாரியே படிச்சுத் தொலடா போடா!" என்றது அம்மா.
            "இதப் படிக்குறதே பிடிக்க மாட்டீங்குதும்மா. எரிச்சலாருக்கு. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூல நெறய குரூப்பு இருக்காம்ல. நம்மள சிறப்புத்தமிழ்னு ஒரு குரூப்பு இருக்காம்ல அதுல சேத்து விடறீங்களா. படிக்குறன்!" என்றான் விகடு.
            "பாலிடெக்னிக் படிக்கணும்னு நெனக்குற. சிறப்புத்தமிழ் கேட்குறீயேடா. பின்னாடி நீ சொன்ன மாரி ஏதாச்சும் நடந்தாலும் மேத்ஸ் குரூப் படிச்சீன்னத்தாம் அதுக்கும் ஏதாச்சும் உபயோகமா இருக்கும்."
            மறுபடியும் மேத்ஸா என்று தயங்கியபடியே யோசிக்க ஆரம்பித்தான் விகடு.
            "ப்பா! என்னயல்லாம் படிக்கச் சொன்னீங்கன்னா நாம்ம எல்லா படிப்பயும் படிச்சு முடிச்சிடுவேம்லப்பா!" என்றாள் செய்யு.
            "அந்த சின்ன புள்ளிக்கு இருக்குற புத்தியாவது இருக்குதுன்னா பாரு! ஆளுதாங் போத்து மாரி வளந்து நிக்குதே தவுர பெரியவங்க சொல்றாங்களே அது கேப்போம்னு தோணுதா பாரு. எதுக்கு எடுத்தாலும் எடக்கு மொடக்கா பேசிட்டு. ஒன்னய எதுக்குப் படிக்க வைக்கணும்னு ல்லாந் தெரியும். படிக்க வெச்சா எத படிக்க வெக்கிறமோ அதப் படிக்குற சோலியப் பாருடா! சொகுசா உக்காந்து படிச்சிட்டு வாறதுக்கு வலிக்குது. கட்ட அடிக்க வுட்டா தெரியும் கஷ்டம்!" என்றது அம்மா.
            வாழ்க்கையே ஒரு கணக்குதாம். ஏதோ ஒரு கணக்கின் புதிரான விடையைத் தேடி படிநிலைகளோடு அவிழ்ந்து கொண்டிப்பதைப் போல அது அவிழ்ந்து கொண்டிருக்கிறது. அது ஒருவகைக் கணக்கு. படிப்பில் படிப்பது இது ஒருவகைக் கணக்கு.
            கணக்கில் விகடுவுக்கு அப்பா சொல்லிக் கொடுக்கும் முறை புரியாது. அவர் பழைய கணக்கு முறைக்குச் சொந்தக்காரர். மனதுக்குள்ளே படிநிலைகளைச் சொல்லி கணக்குப் போடுவது அவனுக்கு விசித்திரமாக இருக்கும். எவ்வளவு சிக்கலான கணக்குக்கும் அவர் மனதை அநாயசமாகப் பயன்படுத்துவார். அது எப்படி பேப்பர் பேனா இல்லாமல் இவ்வளவு பெரிய கணக்கை மனதுக்குள் கணக்கிடுறாரோ? இதை எப்படிதான் அட்சர சுத்தமாகப் புரிந்து கொண்டு நூத்துக்கு இவ்ளோன்னா இந்தத் தொகை்கு எவ்ளோன்னு பாத்தீன்னா என்று மொத்தக் கணக்கையும் வாயாலேயே சொல்லி முடித்து விடுகிறாரோ? என்று குழம்பியிருக்கிறான் விகடு. முடிவில் பார்த்தீர்கள் என்றால் விடை சரியாக அப்பா சொன்னபடி இருக்கும்.
            இந்தக் கணக்குப் புரியாமல்தான் பத்தாம் வகுப்பு படிப்பதற்குள் அவன் நான்கு இடங்களில் டியூசனை மாற்றியிருந்தான். கணக்குப் புரியாமல் படித்தது ஒரு கணக்கு என்றால் அந்தக் கணக்கில் விகடு வாங்கிய மார்க் தனிக் கணக்கு. அதாகப்பட்டது என்னவென்றால்... அப்படி இப்படி புரிந்து கணக்கைப் போட்டு பப்ளிக்கில் சென்டம் அடித்ததை இப்போதும் அவனால் நம்ப முடியாமல்தான் இருந்தது. ஆனால் அப்பாவுக்கு விகடுவின் மேல் நம்பிக்கையிருந்தது.
            வாழ்க்கையின் இந்த விடுபட முடியாத கணக்கை நினைத்த போது விகடுவுக்குச் சோர்வாக இருந்தது.     
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...