ஆம்பளைக்கு அறிவுரைகள் கிடையாதா?
எந்தக் காலத்தில் மனிதர்கள் மனிதர்களை
ஏமாற்றவில்லை? இதில் ஆணென்ன பெண்ணென்ன?
ஆண்கள் மட்டும் ஏமாறவில்லையா என்ன? அதிக
வட்டிக்கு ஆசைப்பட்டு சீட்டுக் கம்பெனியில் பணத்தைக் கட்டி ஏமாறவில்லையா? அப்படி ஏமாந்த
போதெல்லாம் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதானே வரிந்து கட்டிக் கொண்டு
நடையாய் நடந்தார்கள்.
பெண்கள் ஏமாறும் போது மட்டும் அவர்களுக்கு
எவ்வளவு அறிவுரைகளைச் சொல்கிறது இந்தச் சமூகம்? அவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள்
என்றால் ஏமாற்றியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றல்லா போராட வேண்டும்.
ஆண்கள் தாக்கப்பட்டால் தாக்கியவர்கள் மேல்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகவும், பெண்கள் தாக்கப்பட்டால் அந்த இடத்துக்கு நீங்கள்
ஏன் போகிறீர்கள் என்பதாகவும் சமூகத்தின் மனநிலைப்பாடு இருக்கிறது.
சரிபாதி இடஒதுக்கீடு வேண்டும் என்று தேர்தல்
வாக்குறுதி அளிக்கும் எத்தனைக் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் சரிபாதி இடஒதுக்கீட்டைப்
பெண்களுக்கு வழங்குகிறது சொல்லுங்கள்!
சமூகம் வழங்கும் அறிவுரைகளைப் பார்க்கும்
போது ஆண்களுக்குப் பெண்களை வஞ்சிக்க, பெண்கள் மீது வன்முறையை ஏவி விட, பெண்களை வன்புணர்வுக்கு
உள்ளாக்க ஆண்களுக்கு உரிமையும் அதிகாரமும் இருப்பது போலல்லவா இருக்கிறது.
"அவனுக்கென்ன ஆம்பள புள்ள. அவுத்துப்
போட்டுட்டு அம்மணமா கூட நடப்பான். பொட்டச்சிகதானே போத்திகிட்டுதான போகணும்."
என்று பெண்களில் சிலரே முன்வைக்கும் சொல்லாடல் ஒன்று போதாதா இந்தச் சமூகம் ஆண்-பெண்
பேதங்களை எந்த அளவுக்கு மனநிலைக்குள் மரபார்ந்த படிமமாய்ப் பொதிந்து வைத்திருக்கிறது
என்பதை அறிந்து கொள்ள.
ஆணுக்கு ஒரு கலாச்சார நடைமுறை, பெண்ணுக்கு
ஒரு கலாச்சார நடைமுறை என்று இருவித கலாச்சார நடைமுறையை பெருவியாதியைப் போலப் பீடித்துக்
கொண்டு நிற்பதில் இந்தச் சமூகம் பெருமிதம் கொள்கிறது. அதாவது சுகருக்கும், பி.பி.க்கும்,
கொலஸ்ட்ராலுக்கும் மாத்திரை மருந்து போட்டுக் கொள்வதைப் பெருமையாகப் பேசிக் கொள்ளும்
சமூகத்தைப் போல.
பெண்களுக்கு அறிவுரைக் கரங்களை அள்ளி அள்ளி
நீட்டுவதைப் போல ஏன் ஆண்களுக்கும் அள்ளி அள்ளி நீட்டக் கூடாது?
இப்படிச் சொன்னால்தான் என்ன...
நள்ளிரவில் போனால் பெண்ணின் கற்புக்கு
ஆபத்து என்று அவளை எச்சரிக்கும் அதே தொனியில், ஒரு பெண்ணின் கற்பைச் சூறையாடினானால்
அது சம்பந்தப்பட்ட ஆணின் எதிர்காலத்துக்கு ஆபத்து என்று ஆணையும் எச்சரித்து நச்சரித்தால்
என்ன?
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவான நீதியும்,
சட்டம் வழங்கும் பாதுகாப்பும், சமூகத்தின் அனுசரணையும், பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்கான
மறுவாழ்வும் கிடைக்கும் பட்சத்தில் எந்தப் பெண்ணும் தமக்கு நேர்ந்த பாதிப்பிற்காக குரல்
கொடுப்பார்கள்.
அப்படி அவர்கள் குரல் கொடுக்கத் துவங்கி
விடக் கூடாது என்பதில் இந்தச் சமூகம் குறியாக இருக்கிறது போலும். அவர்கள் குரல் கொடுக்கத்
துவங்கி விட்டால் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து விடுமே. அதை இந்தச் சமூகம்
விரும்பவில்லை போலும்.
பொள்ளாச்சி சம்பவத்துக்குப் பிறகு பொதுவெளி
தொடங்கி ஊடகங்கள் வரை ஆளாளுக்கு பெண்கள் இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் அறிவுரைகளை
அள்ளி வீசுகிறார்களே! அதில் ஒரே ஒரு அறிவுரையையாவது ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டும்
அள்ளி வீடக் கூடாதா?
*****
No comments:
Post a Comment