10 Mar 2019

இரண்டு தோஸ்துகள்



செய்யு - 20
            அப்பா சைக்கிளை எடுத்ததும் விகடு கேரியரில் ஏறிக் கொண்டான். முன் பிரேம் கம்பியில் சுற்றியிருந்த துண்டில் செய்யு ஏறிக் கொண்டாள். சைக்கிள் வடவாதி வைத்தி தாத்தா வீட்டுக்குப் போகத் தொடங்கியது.
            வள்ளி சித்தி கல்யாண ஏற்பாடுகள் விசயமாக தினந்தோறும் அப்பா வைத்தி தாத்தாவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார். போகும் போது ரெண்டு பேரையும் அழைத்துக் கொண்டு போவார்.
            கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீடு லிண்டல் மட்டத்துக்கு வந்திருந்தது. அதற்குப் பின்னாலிருந்து கொட்டகையில் நுழைந்தவுடன் தாத்தாவின் கட்டில் இருக்கும். முன்பு கூரை வீட்டில் இருந்தது போல எப்போதும் தாத்தா திண்ணைக் கட்டிலில் இருப்பதில்லை. படுப்பதற்கு மட்டும் வந்து போனார். வேலைக்குப் போய் விட்டு வந்த மற்ற நேரங்களில் எதிர்ப்பாய் இருந்த பஞ்சாயத்து தண்ணி டேப்பு கட்டையில் உட்கார்ந்திருக்க ஆரம்பித்தார். காலையில் தண்ணீர் வரும் நேரங்களில் பூவரசு மரத்தடியில் ஒரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தார்.
            வீடு கட்டும் வேலை ஆரம்பித்து போஸ்ட் போடுவதற்கு குழிகள் எடுத்த அந்த நாட்களில் குழிக்குள் சிங்காரவேலு கொத்தனார் இறங்கி ஏற ஏணி போட்டிருந்தார்கள். அவர் அதற்குள் இறங்கி ஏறி வருவதைப் பார்ப்பது செய்யுவுக்கு வேடிக்கையாக இருக்கும். அதைப் பார்த்து பார்த்து கைகொட்டிச் சிரிப்பாள்.
            "பாத்தீங்களா வாத்தியாரே! எம் பேத்திக்கு நம்மோட நிலமயப் பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது. அதுக்கா வுட்டுடமாட்டன் வாத்தியாரே! பொண்ண இந்த பாட்டனுக்குதான் கட்டிக் கொடுக்கணும் பாத்துக்குங்க!" என்று சிங்காரவேலும் கொத்தனாரும் சிரிப்பார்.
            சிங்காரவேலு கொத்தனார் ஆள் நெடுநெடுவென்று உயரமாக இருப்பார். சுமாரான கருப்பு நிறம். வைத்தி தாத்தாவும், சிங்காரவேலு கொத்தனாரும் தோஸ்துகள்.
            வைத்தி தாத்தா சிங்காரவேலு கொத்தனாரை 'தோஸ்து' என்றுதான் கூப்பிடுவார். வேலையில் அப்படி ஒரு சுத்தம், துல்லியம் இருக்கும். ஏரியாவில் சிங்காரவேலு கொத்தனாரைத் தெரியாத ஆள் இருக்க மாட்டார்கள். மனை போடுபவர்கள் அவரை விட்டு விட்டு வேறு கொத்தனாரை வைத்து போட மாட்டார்கள். ராசிக்கார ஆளு என்ற பெயரையும் அவர் வாங்கியிருந்தார்.
            கூத்தாநல்லூர் பாய்மாருகளுக்கு சிங்காரவேலு கொத்தனார் இல்லையென்றால் வேலை ஓடாது. அவர் எங்காவது வேலையில் இருந்தாலும், "நாளானலும் பரவாயில்ல ஆயின்! நீங்க வந்துதான் செய்யணும்!" என்பார்கள். அப்படி ஒரு செல்வாக்குக்காரர்.
            எவ்வளவு வேலை பார்த்தாலும் ஒரு பொட்டு சிமெண்ட் கரையை அவர் உடம்பில் பார்க்க முடியாது. அவ்வளவு துல்லியமாக வேலை பார்ப்பார். கை அப்படி வேலை செய்யும். கல்லை உடைப்பதிலிருந்து, கலவையை வைப்பது வரை அப்படி ஒரு நேர்த்தி இருக்கும். அவரிடம் வேலை பார்ப்பவர்கள்தான் பாவப்பட்ட வகையறாக்கள். அவர் கரணையை நீட்டினால் சரியாக அந்த இடத்தில் சாந்து சட்டி இருக்க வேண்டும். கொஞ்சம் இடம் பிசகியிருந்தாலோ, சாந்து சட்டி வர நேரமானாலோ சித்தாள்கள் தொலைந்தார்கள். தாங்க முடியாத கோபம் வந்து விடும். கரணையை வீசியெறிந்து அடிப்பார். சமயங்களில் கல்லை வீசியெறிந்தும் அடிப்பார். வேலையைப் போட்டு விட்டு அரை மணி நேரம் அப்படியே உட்கார்ந்து விடுவார். அப்புறம் ஆட்கள் வந்து தலைகீழாக நின்று சமாதானப்படுத்த வேண்டும்.
            அவ்வளவு கறாராக இருந்தாலும் அவரிடம்தான் கெட்டியான சித்தாள் செட் இருந்தது. சம்பளத்தைச் சரியாகக் கொடுப்பதில் சிங்காரவேலு கொத்தனார் பேர் பெற்றவர். வீடு கட்டுபவர்கள் அற்றை நாள் நாள்பணம் குறைவாகக் கொடுத்தாலும் ஆட்களுக்கு கூலியைக் கொடுத்து விட்டு மிச்சத்தைத்தான் எடுத்துக் கொள்வார். மிச்சம் இல்லையென்றாலும் வெறுங்கையோடு அவர் போவாரேயொழிய ஆட்களை வெறுங்கையோடு போக விட மாட்டார். அதனாலேயே அவரிடம் வேலை பார்க்க சித்தாள்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.
            சிங்காரவேலு கொத்தனாரின் சைக்கிளைப் பார்க்க வேண்டுமே. அது அந்தக் காலத்து ரலே சைக்கிள். சிலோனிலிருந்து வாங்கி வந்த சைக்கிள் என்பார் அவர். அதை அவர் சிலோனு சைக்கிள் என்றுதான் அழைப்பார். சைக்கிள் இன்று புதிதாய் வாங்கியது போல அவ்வளவு பவிசாக இருக்கும். அவர் எவ்வளவு வெயிலில் நின்று வேலை பார்த்தாலும் சைக்கிளை நிழலாக உள்ள இடத்தில் நிறுத்தி பழைய போர்வை ஒன்றை போர்த்தியிருப்பார். கொத்தனார் சைக்கிளை எடுக்க யாருக்கும் அனுமதி கிடையாது. அவர் மட்டும்தான் அதில் கை வைக்கலாம். கேரியரில் அவர் மனைவியைத் தவிர பிள்ளைகளைக் கூட ஏற்றியதில்லை. அப்படி ஒரு மனுசன் அவர். ஒருமுறை அவரின் மூத்த மகன் குமரு சைக்கிளை எடுத்து விட்டான் என்பதற்காக மனுசன் மகனைக் போட்டு வெளுத்து எடுத்து விட்டார்.
            அது சரி! வைத்தி தாத்தா மகன் அதாவது விகடுவின் பெரிய மாமன் பெயரும், சிங்காரவேலு கொத்தனார் மூத்த மகன் பெயரும் குமரு என்று ஒன்றாக இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அவர்கள் ரெண்டு பேரும் அப்படி ஒரு தோஸ்துகள் என்பது முன்பே சொல்லப்பட்டதுதான். முதல் பிள்ளை ஆண் குழந்தையாகப் பிறந்தால் குமரு என்றுதான் பேர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவர்கள் அவர்கள்.
            சிங்காரவேலு கொத்தனார் வடவாதிக்கு ஜாகை வந்ததும் அவருக்கு நிறைய இடங்களில் வேலை பிடித்துக் கொடுத்தவர் வைத்தி தாத்தாதான். அப்புறம் அவர் தன் வேலை சுத்தத்தால் நிறைய வேலைகளைப் பிடித்துக் கொண்டாலும் மர வேலை பார்க்கும் வைத்தி தாத்தாவுக்கும் வேலை பிடித்துக் கொடுப்பார். வைத்தி தாத்தாவின் வேலையில் வேலைச்சுத்தம் அப்படியொன்றும் பெரிதாக இருக்காது. இருந்தாலும் வைத்தி தாத்தாவுக்கு வேலை பிடித்துக் கொடுப்பதை தன் கடமையாக நினைத்துச் செய்வார். அது போன்ற நாட்களில் திட்டையூரான் ஆலை வேலையை விட்டு விட்டு மரவேலைக்குப் போய் விடுவார் வைத்தி தாத்தா.
            கொத்தனாருக்குக் காலையில் எழுந்ததும் முதல் வேலை சைக்கிளைத் துடைப்பதுதான். அரை மணி நேரத்துக்கு மேல் துடைப்பார். ஒவ்வொரு போக்ஸ் உட்பட எல்லாவற்றையும் வேலை மெனக்கெட்டு துடைப்பார். துடைத்து விட்டு ஒரு பார்வை பார்ப்பார். அதில் அவருக்கு திருப்தி வர வேண்டும். இல்லையென்றால் மறுபடியும் துடைக்க ஆரம்பித்து விடுவார்.
            சைக்கிள் துடைப்பு முடிந்ததும் கோவணத்தை இழுத்துக் கட்டிக் கொண்டு குளியல் போடுவார். குளியல் முடித்து வந்தவுடன் வீட்டின் முன் இருக்கம் பெஞ்சில் சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். பழைய சோறும் வெங்காயமும்தான் காலைச் சாப்பாடு. அதைச் சாப்பிட்டு முடிக்க அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும்.
            சட்டையைப் போட்டுக் கொண்டார் என்றால் சைக்கிள் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுவார். சைக்கிள் முன் இருக்கும் மண்ணை அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டே எழுந்திருப்பார். "அப்பாடி தெய்வமே இன்னிக்கு வேல நல்ல விதமா நடக்க நீதான் அருள் பண்ணணும்!" என்று சைக்கிள் முன் கும்பிட்டு வேண்டிக் கொள்வார்.
            "சம்பாதிச்சு மொதல்ல வாங்குனது இந்த சைக்கிள்தான். எல்லா பயலும் செகண்ட் ஹேண்ட் சைக்கிள்தான் வாங்குவான். புது சைக்கிள்தான் வாங்கணும்னு ரெண்டு வருசம் வாய கட்டி வயித்த கட்டி பணம் சேத்துருக்கேன் பாரு. இந்த சைக்கிள்ல போயி வேல பாக்காத ஊரு கெடயாது. இப்படி பாத்தீன்னா நன்னிலம் வரைக்கும் போயிருக்கேன். இப்படி பாத்தீன்னா திருத்துறபூண்டி வரைக்கும் போயிருக்கேன். இப்படிப் பாத்தீன்னா ஒரத்தநாடு அம்மாபேட்ட வரைக்கும் போயிருக்கேன். எல்லாம் இந்த சைக்கிள்லதான். ஒரத்தநாடு பியெட்டு காலேஜே நம்ம வேலதாம் தெரியும்ல. அந்த என்சினியருக்கு நம்ம வேல புடுச்சுப் போயிடுச்சு. கூடவே வந்திருன்னுட்டாரு. நம்மால முடியாதுன்னுட்டேன். அப்பதான் குமர்ர மரவேலக்கி அழைச்சுட்டுப் போனேன். சரி நாம போவட்டியும் பரவாயில்லன்னு குமர அவரோட புடுச்சி வுட்டேன். நம்ம பய நல்லா வேல கத்துருந்தான்ன அவனயும் சேத்து புடுச்சி விட்டுருக்கலாம். அதனால நம்ம பயல வுடல. அதனால நம்ம குமர்ரு இங்கயே இருக்கான். அந்தக் குமர்ரு என்சினியரு கூடயே இருந்துகிட்டு அவரு ஒத்தாசையிலயே வெளிநாட்டுக்கும் போயிட்டான்!" இதைச் சொல்லும் போது சிங்காரவேலு கொத்தனாருக்கு முகத்தில் அப்படி ஒரு பெருமிதம் பொங்கும்.
            விகடுவுக்கு அப்பாவின் சைக்கிளையும், சிங்காரவேலு கொத்தானரின் சைக்கிளையும் அடிக்கடி மனதுக்குள் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றும்.
            அவன் அப்பாவிடம் அடிக்கடி சொல்லுவான், "அப்பா! நாம கொத்தனாரு சைக்கிள எடுத்துகிட்டு நம்ம சைக்கிள கொடுத்துடுவோமா?" என்பான்.
            "அவரு புள்ளய குட்டிகள கூட தூக்கிட்டுப் போன்னு வுட்டுடுவாரு. சைக்கிள மட்டும் யாருகிட்டயும் வுட மாட்டாரு. நாமும் அவரு சைக்கிள வுட்டுப் பார்க்கணும்னு பத்து பதினஞ்சு தடவ கேட்டிருப்பன். ம்ஹூம்!" என்பார் அப்பா.
            வைத்தி தாத்தாவின் வீட்டைப் பற்றி ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். அதில் விடுபட்ட ஒரு விசயம் வீட்டைச் சுற்றியிருந்த வேலிதான். வேலி முழுவதும் அநேகமாக பூவரசு மரங்கள்தான். இடையிடையே வேப்ப மரங்கள் உண்டு. எல்லாம் அவர் வடவாதிக்கு வந்தப் புதிதில் வேலி போத்துகளாக வைக்கப்பட்டவை. அப்போதைய பூவரச மரங்களும், விதை விட்டுக் கிளம்பிய வேப்பமரங்களும் வரிசை வரிசையாக நெடுநெடுவென்று நின்று கொண்டிருந்தன.
            வடக்குப் பார்த்த வீடு. அதன் மேலண்டைப் பக்கம் வேலி எல்லாம் பூவரசம் மரங்கள்தான். கோடை வந்து விட்டால் மொசுகட்டைகளுக்குப் பஞ்சம் இருக்காது. திண்ணைக்கு எதிர்புறமாக இருக்கும் ரெண்டு பூவரசம் மரங்களில் மாடு  கட்டியிருப்பதால் அவைகள் இரண்டும் வழுவழுப்பாக இருக்கும். எவ்வளவு மாடுகள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் அப்போது. அது விகடு சிறு பிள்ளையாக இருந்த போது. இப்போது இருப்பது ஒரு எருமை மாடும், ஒரு பசுமாடும் அதன் கன்றுகுட்டியும்தான். அவைகளையும் வள்ளி சித்தி கல்யாணத்துக்குப் பின் விற்று விடுவது என்று முடிவாயிருந்தது.
            அப்பா சைக்கிளில் விகடு, செய்யு சகிதமாய் தாத்தா வீட்டில் சென்று இறங்கிய போது, வழக்கமாக எருமை மாடு கட்டியிருக்கும் அந்த பூவரசம் மரத்தில் வள்ளி சித்தி கட்டப்பட்டிருந்தது. சித்தியின் முகம் தொங்கிக் கீழே கிடந்தது. கைகட்டு பின்பக்கக் கட்டாக கைகளை மரத்திற்குப் பின்னே கொண்டு போய் கட்டப்பட்டு இருந்தது. அது போதாது என்று உடல் முழுவதும் திடலில் மாட்டைக் கட்டும் மாலைகயிற்றால் கட்டப்பட்டிருந்தது.
            அப்பாவைப் பார்த்ததும் சாமியாத்தா பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. வீட்டின் முன் நான்கைந்து பேர் நின்றிருந்தார்கள்.
            "கல்யாணம் ஆகப் போற பொண்ண இப்படிக் கட்டிப் போட்டு அடிக்கிறாரே! இதக் கேட்க யாரும் இல்லியா?" என்று புலம்பியது.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...