10 Mar 2019

வளர்ச்சிக்கானப் புற்றுநோய் திசுக்கள்


வளர்ச்சிக்கானப் புற்றுநோய் திசுக்கள்
இவன்தான் நீருற்ற வேண்டும் என்று
வியர்வையாய் வழிந்தவன்
அதற்கு முன் நாற்றை நட்டவன்
நிலம் பாளம் பாளமாக ஆனதென
நெஞ்சு வெடித்துப் பிராது கொடுத்தவன்
தனக்கான மரணம் வருவதற்கு முன்
சாசனத்தை மீறி முந்திக் கொண்டு செத்தவன்
பன்னாட்டுப் பண்டங்களை வாங்காமல்
நெல்லுக்கு விலை இல்லை எனக் கூச்சலிட்டவன்
கொத்து கொத்தாக மடிந்த இனத்தைக்
கண்டு கொள்ளவில்லை என
முத்து முத்தாகக் கவிதை வடித்தவன்
கால் வயிற்றுக் கஞ்சிக்காக
வயிற்றுச் சுருக்கத்தைப் பொறுக்க முடியாமல்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக முழக்கமிட்டவன்
எலும்பும் தோலுமாய்க் காட்சியளித்து
அலும்பு செய்யும் இவனை
ஏதேனும் செய்தாலும் செத்து விடுவான்
எதுவும் செய்யா விட்டாலும் செத்து விடுவான்
செங்கல் எடுக்க சரளைப் பொறுக்க
கலவைக் கலக்க சாந்து சட்டித் தூக்கப் பயன்படும் இவனை
ஸ்மார்ட் சிட்டியில் தூக்கிப் போடு
அஸ்திவாரத்தில் புதைத்து
வளர்ச்சிக்கானப் புற்றுநோய் திசுக்களை
அரவமற்ற உலகின் குரல்வளையற்ற மனிதர்களுக்கானக்
கட்டிடங்களாய்ப் பெருக்கித் தொலையலாம்
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...