24 Mar 2019

அஞ்சாயிரம்



செய்யு - 34
            நரிவலம் பள்ளியில் விகடுவை மேத்ஸ் குரூப்பில் சேர்த்துக் கொள்வதற்கு ஐயாயிரம் கேட்டார்கள். அது ஓர் அரசு உதவி பெறும் பள்ளி. கணிதம் படிப்பதிலிருந்து தப்பிப்பதற்கு இதுவும் ஒரு வாய்ப்பாக தோன்றியது விகடுவுக்கு.
            "அஞ்சாயிரம் கொடுத்து அங்கப் படிக்குறதுக்கு நாம்ம திட்டையில இருந்துகிட்டே சைக்கிள் மிதிச்சோ, பஸ்ல போயோ திருநெய்ப்பேறுலயோ இல்ல கூத்தாநல்லூர்லேயோ நாம்ம சிறப்புத் தமிழ் படிக்கிறேம்பா!" என்றான் விகடு.
            "தமிழ்ல நீ எவ்ளோ வேணாலும் புத்தகத்த வாங்கி வெச்சு நீயே படிச்சுக்கலாம்டா. கணக்கு அப்படி முடியாதுல்ல. அதக் கொஞ்சம் படிச்சுக்கோடா." என்றார் அப்பா.
            கணக்கில் அதுதான் பிரச்சனை. கணிதமேதை இராமானுசம் போன்றவர்கள் அன்றி மற்றவர்களுக்கு அதை யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் மண்டையில் ஏறித் தொலையாது.
            விகடு படித்த அந்தக் காலக்கட்டத்தில் கணிதம் போன்ற ஒரு பாடப்பிரிவை எடுத்து அரசுப் பள்ளியில் படிப்பதில் சிரமம் இருந்தது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் அப்போது ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது.
            இதை அவன் மணமங்கலம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே அனுபவித்தான். அவன் படித்த போது ஆயிரத்து நூறு மாணவர்களுக்கு மேல் இருந்தார்கள். அவ்வளவு பேருக்கும் சேர்த்து ஐந்து ஆசிரியர்கள்தான் இருந்தார்கள். இந்த ஐந்து ஆசிரியர்களும்தான் பத்தாம் வகுப்பின் மூன்று செக்சனுக்கும் மாறி மாறி பாடம் எடுத்துச் சமாளித்தார்கள். மற்ற வகுப்புகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் முந்நூறு ரூபாய் சம்பளத்துக்கு ஆசிரியர்களைப் போட்டுச் சமாளித்தார்கள். எல்லா வகுப்புகளையும் எப்படிப் பார்த்தாலும் மூன்று செக்சன்கள் பிரிக்க வேண்டும். அதிலும் போதிய எண்ணிக்கையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய நிதி போதாதால் இரண்டு செக்சன்களாக மட்டும் பிரித்திருந்தார்கள். பத்தாம் வகுப்புக்கு மட்டும் பப்ளிக் பரீட்சை இருந்ததால் மூன்று செக்சன்கள் பிரித்திருந்தார்கள். ஒவ்வொரு செக்சனிலும் தொண்ணூறுக்கு மேல் மாணவர்கள் இருந்தார்கள். அந்த மூன்று செக்சன்களும் கூட சமயத்தில் ஆசிரியர் இல்லாமல் போகும் போது ஒரே செக்சனாக மாறி விடும்.
            அவ்வளவு பேர் படித்தும் மணமங்கலம் பள்ளியின் ரிசல்ட் ஒவ்வொரு வருடமும் எண்பது சதவீதத்துக்கு மேல் இருக்கும். அந்த ரிசல்ட்டுக்கு ஆசிரியர்களின் சோர்விலாத உழைப்பு ஒரு காரணம் என்றால் மணமங்கலம் பள்ளியைச் சுற்றி படித்து முடித்து வேலையில்லாமல் இருந்த இளைஞர்கள் எடுத்து வந்த டியூசன் வகுப்புகளும் மற்றொரு முக்கியக் காரணம். அந்த டியூசன்கள் இல்லாமல் போயிருந்தால் மணமங்கலம் பள்ளியில் நானூறு மார்க்குக்கு மேல் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்திருக்கும். ஒவ்வொரு வருஷமும் மணமங்கலம் பள்ளியில் நானூறுக்கு மேல் எப்படியும் இருபது பேருக்கு மேல் எடுப்பார்கள். எல்லாம் டியூசன்கள் செய்த கைங்கர்யம்.
            இப்படி ஒரு சூழ்நிலைதான் அரசுப் பள்ளியில் மேத்ஸ் குரூப் எடுத்துப் படித்தால் ஏற்படும் என்பது அப்பாவுக்குத் தெரிந்திருந்தது. அத்துடன் திட்டையிலிருந்து படித்தால் வீட்டுக்கும் பள்ளிக்கும் தினம் தினம் போவதற்கு பத்தும் வருவதற்கு பத்தும் ஆக இருபது கிலோ மீட்டருக்கு சைக்கிள் மிதித்தோ அல்லது உப்பியபடி செல்லும் பேருந்தின் பெருங்கூட்டத்திலோ சென்றுதான் படிக்க வேண்டியிருக்கும் என்பதையும் அவர் யோசித்தார். அதனால் அவர் ஐயாயிரம் பணம் போனாலும் பரவாயில்லை, நரிவலம் பள்ளியில் சேர்த்து விட்டு ஹாஸ்டலில் விட்டு விடலாம் என்று தீர்மானித்தார்.
            ஓர் அரசுப் பள்ளிக்கும், அரசு உதவிபெறும் பள்ளிக்கும் இருந்த‍ வேறுபாடே இதுதான். இரண்டிலும் அரசின் நிதியில்தான் ஆசிரியர்கள் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும். அரசு உதவி பெறும் பள்ளியில் இருக்காது. இப்போதைய சூழ்நிலையோடு ஒப்பிட்டுச் சொல்வதனால் ஓர் அரசுப் பள்ளிக்கும், ஒரு தனியார் பள்ளிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறதோ அதே போன்ற வேறுபாடுதான் அப்போது அரசுப் பள்ளிக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கும் அப்போது இருந்தது.
            இது ஓர் அபத்தம்தான். ஓர் ஆசிரியராக இருந்து கொண்டு, பணம் கொடுத்து ஓர் அரசு உதவிப் பெறும் பள்ளியில் சேர்க்க வேண்டியதில்லை என்பது தெரிந்தும் அப்பா விகடுவை நரிவலம் பள்ளியில் பணம் கொடுத்துச் சேர்த்தது. அவரைப் பொருத்தவரையில் விகடு கணிதத்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு மிக மிக அதிகமாக இருந்தது. இதை அவர் பட்டும் படாமலும் விகடுவின் மனதில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஏற்றிக் கொண்டிருந்தார். அதை விடவும் மேத்ஸ் குரூப்பில் நிறைய மதிப்பெண் எடுப்பவர்கள் டாக்டர், என்ஜினியர் என்று படிக்கப் போய் விடுவார்கள். அதனால் மேத்ஸ் குரூப்பில் ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்தாலே எப்படியும் ஆசிரியர் பயிற்சியில் இடம் கிடைத்து விடும் என்பதையும் அவர் கணித்திருந்தார். இதையும் கணக்குப் படிப்பவர்களின் ஒரு கணிப்பு என்று கொள்வதோ என்னவோ!
            கணக்குப் படித்து கசந்து போயிருந்த விகடுவுக்கு அப்பாவின் கணிதப் பித்து பிடிபடவில்லை. "ஏம்தான் இவர் கணக்குப் படிக்கச் சொல்லி இப்படி நச்சரிக்கிறாரோ?" என்று நினைத்தான். அப்பாவைப் பொருத்த வரையில் அவருக்குக் கணக்கை நன்றாகப் படித்தால் வாழ்க்கையை நன்றாக வாழ முடியும் என்ற கருத்திருந்தது. தமிழை நன்றாகப் படித்தாலும்தான் வாழ்க்கையை நன்றாக வாழ முடியும் என்று விகடுவுக்கும் ஒரு கருத்து இருந்தது. அதை விடவும் படித்தவர்கள் மட்டும்தான் வாழ்க்கையை நன்றாக வாழ முடியுமா? என்ற கருத்தும் கூட அவனுக்கு இருந்தது.
            இவ்வளவு ஆசைப்பட்ட ஒரு தந்தைக்கு விகடு எவ்வளவோ செய்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக தந்தையின் கனவை நிறைவேற்றும் அதிர்ஷ்டமும், பாக்கியமும் ஒரு சில பிள்ளைகளுக்கே கிடைக்கிறது. விகடு ஒரு வித மறுக்க முடியாத கட்டாயத்தால் கணக்கைப் படித்தான், தேறினான், மதிப்பெண்களையும் ஓரளவுக்கு வாங்கிக் குவித்தான். பிற்காலத்தில் கணிதத்தில் அவனால் பரிணமிக்க முடியாமல் போய் விட்டது. இதே போன்ற ஒரு கட்டாயம்தான் பின்னர் செய்யுவுக்கும் ஏற்பட்டது. விகடு ஒரு கட்டத்தில் கணக்கிலிருந்து தப்பித்தான் என்றால் செய்யுவுக்கு அது முடியாமல் போய் விட்டது. அவள் எவ்வளவு படிக்க வேண்டும் என்று நினைத்தாளோ அவ்வளவும் கணக்கிலேயே படிக்கும் படி ஆனது.
            இந்த கணக்கு விசயத்தில் விகடுவுக்கு நேர்ந்த ஒரு நல்லதிர்ஷ்டம் விகடுவுக்குப் பிடித்த ஒரு கணித ஆசிரியர் நரிவலம் பள்ளியில் கிடைத்ததுதான்.
            சீர் சனத்தி செய்து கட்டிக் கொடுக்கப்படும் புதுப்பெண்ணைப் போல நரிவலம் பள்ளியில் அஞ்சாயிரம் சீரோடு மேத்ஸ் குரூப் பயிலும் இருபது மாணவர்களில் ஒருவனாகச் சேர்க்கப்பட்டான் விகடு. ஒரு மேனிலைப் பள்ளியில் மேத்ஸ் குரூப் மாணவர்கள்தான் பெரியவர்கள் என்ற தோற்றம் எப்போதும் இருக்கும். மேத்ஸ் குரூப்பைத்தான் பர்ஸ்ட் குரூப் என்று சொல்வார்கள். அந்த கெத்தோடு பள்ளியில் சேர்ந்தது விகடுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இரண்டாண்டுகள் எப்படி கணக்கைச் சமாளிப்பது என்ற வெறுப்பும் மனதில் இருந்தது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...