25 Mar 2019

ஞானத்திற்கான சாத்தியமாகும் ஒரு வழிமுறை


ஞானத்திற்கான சாத்தியமாகும் ஒரு வழிமுறை
            எதையும் செய்ய முடியாத பயம் ஆட்கொள்கிறது மனதை. செய்ய செய்ய அதுவாக நிகழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறது மனம். அப்படி செய்ய செய்ய நிகழாமல்தான் இருக்கிறதா என்ன? நிகழத்தான் செய்கிறது. நிகழ்பவைகள் ஏனோ பிடிக்கவில்லை என்பதற்காக நிகழ்த்த முடியாத இயலாமையில் தவிப்பதாக உணர்கிறது மனம்.
            நிகழ்பவைகளில் விரும்புபவைகள் என்ன? விரும்பாதவைகள் என்ன? அதற்கும் மனதுக்கும் சம்பந்தம்தான் என்ன? அந்த விருப்பம்தானா? மனம் விரும்பும்படித்தான் மனம் ஒன்றை நிகழ்த்த வேண்டுமா என்ன? நிகழ்பவைகள் என்னவென்று மனம் யோசித்தால் என்ன? அப்படி ஒருநாளும் மனம் செய்ததில்லையே. என்ன நிகழ்கிறது? அதைப் பார்க்க வேண்டும். அது பற்றி யோசிக்க வேண்டும். மனதைத் திறந்து பார்ப்பதற்கு அந்த இடம்தான் ஒரு வாய்ப்பு. ஒரு மனச்சோர்வு, விரக்தி என்பது திரும்பிப் பார்ப்பதற்கு ஒரு வகையில் திரும்பிச் செல்வதற்கு ஒரு வாய்ப்பு. அதுதான் மனதை மனமே அடையாளம் காட்டும் இடம். அது நொறுங்கி உடைந்து போக வேண்டிய அவசியத்தைக் காட்டும் இடம். மனம் தனக்குள் சிக்கிக் கொள்ளும் இடமும் அதுதான். பெரும்பாலானவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். மகத்தான வாய்ப்பு கிடைக்கும் அந்த இடத்தில் அதைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் ஒரு சிலராக இருக்கிறார்கள்.
            மனதை உடைத்து வெளியேறம் அந்த இடம் வினோதமானது. எப்படி அதை விளக்கினாலும் அது புதிரான வார்த்தைகளில் சிக்கிக் கொள்ளக் கூடியது. காலந்தோறும் அதனால் அது விளக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த விளக்கமே ஒரு புதிருக்குள் தள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது.
            அதை உணர்தல் என்பது மாபெரும் பாதை. தன்னைக் கடக்கும் பாதை அது. அதிலிருந்து விடுபடல் மாபெரும் துணிவு. தன்னை வெல்லும் துணிவு அது.
            எப்படிச் சொன்னாலும் நழுவிச் செல்லும் அது ஒருவாறாக இப்படித்தான் இருக்கிறது...
            விருப்பமான ஒரு மனது உட்கார்ந்து கொண்டு மனதின் இன்ன பிற பகுதிகளை எல்லாம் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. அந்த விருப்பமான மனதுக்கு இசைந்தாற் போல் மனதின் அனைத்துப் பகுதிகளும் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறது. இப்படி மனதுக்காக வாழும் ஒரு நிலைதான் பித்து பிடித்தாற் போன்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்கிறது. முடியாவிட்டால் விட்டு விட்டால் என்ன? மனதுக்கு பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைத்து விடுகிறது. மனது அதை விரும்புவதில்லை. அது பிரச்சனைகளில் உழன்று உழன்று அதுவே பழக்கமாகி எதையாவது தனக்குள் பிரச்சனையாக்கி அது குறித்துச் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. இப்படிச் சிந்தித்து உழல்வதை பழக்கத்தின் காரணமாக விடாத முடியாத மனம் அப்படி இல்லாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. உளைச்சல் இப்படி ஒரு மனப்பழக்கமாக ஆகி விடுவதை உணர்ந்து விடுபடுவதும் அதே மனதில்தான் இருக்கிறது.
            அந்த உணர்தலும் அந்த விடுபடுதலும் ஒரு கணத்தில் நிகழும் மனதுக்கு மிகப்பெரும் விடுதலை கிடைக்கிறது. இந்த உணர்தலும் விடுபடுதலும் ஒரு கணத்தில் நிகழும் அந்த விடுதலையை மனம் அவ்வளவு எளிதில் சாத்தியமாக்கி விடுவதில்லை. உணர்தல் சாத்தியமான மனதில் விடுபடல் சாத்தியமாகாமல் போகலாம். அதற்கு ஒரு துணிவு மாபெரும் துணிவு தேவையாகத்தான் இருக்கிறது. மனதை இழப்பதற்கான துணிவு அது.
            பொதுவாக மனதுக்கு எதையும் இழப்பது பிடிக்காது. அது பற்றுகளின் பொருட்கூடு. எந்த இழப்பையும் அதனால் தாங்க முடியாது. இழப்புகள் மனதை உருக்குலைத்துப் போட்டு விடும். அதுதான் பற்றுணர்வாக மனதுக்குள் நீடித்துக் கொண்டே இருக்கும். வெளியிழப்புகளிடம் அச்சம் காட்டும் மனம், தன்னையே இழப்பதை நினைக்கும் போது மாபெரும் அச்சத்தின் பிடிக்குள் சிக்கி விடும். மனதை இழப்பதை அது அழிவு போல, பிறழ்வு போல சிந்திக்கும். அப்படி ஓர் அழிவு அல்லது பிறழ்வைச் சந்திப்பதை விட இப்படியான உளைச்சலான நிலையில் இருப்பது கூட மேல்தான் என்று அது சிந்திக்கும்.
            உணர்ந்த பின்னும் அந்த விடுபடலை இந்த அச்ச உணர்வுதான் தடுக்கும். இந்த அச்ச உணர்வைக் கடப்பதற்குதான் மாபெரும் துணிவு தேவைப்படும். ஒரு கட்டத்தில் எல்லா இழப்புகளைத் தாங்கிக் கொண்டாலும் தன்னை இழப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பது போன்ற போக்குத்தனத்தை மனம் காட்டும்.
            அதையும் தூக்கி வீசும் அந்தத் துணிவுதான், உண்மையில் தன்னைத் தூக்கி வீசும் அந்தத் துணிவுதான் விடுபடுதலுக்கான மாபெரும் பாதை. அது ஒரு வெடிப்பு. மாபெரும் வெடிப்பு. அந்த வெடிப்புக்கு உணர்தல் கூட தேவையில்லை. அந்த வெடிப்புக்குப் பின் ஒருவர் விடுபட்டவர் ஆகிறார். அவருக்கு அதற்குப் பின் உலகம் விளையாடும் ஒரு பொருளாகி விடுகிறது. எல்லாம் விளையாட்டுதான் அவருக்கு. இழப்பும் ஒரு விளையாட்டு, ஏற்பும் ஒரு விளையாட்டு, விளையாடாமல் ஒதுங்கி இருப்பதும் ஒரு விளையாட்டு.
            இதில் உணர்ந்து விடுபடுகிறவர் மெய்ஞானியாய்த் தோற்றம் தருகிறார். அவர் எப்படி விடுபடலாம் என்பதற்கான வழிகளைச் சொல்லலாம். விடுபடல் என்பது அவரது வழிகளில் இல்லை. அது அவரவர்களிடமே இருக்கிறது. அந்த மாபெரும் துணிவை தனக்குத் தானே ஒருவர் தந்து கொள்ளலாமே தவிர, இன்னொருவரால் தர முடியாது.
            இந்த உணர்தலுக்கும், விடுபடலுக்குமான முயற்சியை நீங்கள் தீவிரமாக முயன்று பார்க்கலாம். அது இன்னும் நிலைமையைத் தீவிரமாக்கி விடும். அதற்கான முயற்சியை நிறுத்திக் கொள்ளும் அபத்தமான தன்மையில் அது இருப்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்குள் காலத்தைக் கடந்து விடுவீர்கள். விடுபடாமையைப் பொருத்த வரையில் அதற்கு செயல்தான் தீனி. அந்த மனச்செயல்தான் அதன் முக்கிய தீனி. ஆனால் நீங்கள் இதைப் புரிந்து கொண்டதாக தீவிரமாக அல்லவா செயல்படுவீர்கள். மனம் பெருந்தீனிக்காரராய் ஆகி விடும். மனத்தின் பசியை உங்களால் போக்க முடியாமல் தவிப்பீர்கள். அதன் பெருந்தீனிக்கு முன் உங்களின் பொழுதுபோக்குகள், சாகசங்கள், களியாட்டங்கள், வஞ்சினங்கள், பழித் தீர்த்தல்கள் எல்லாம் சாதாரணமாகி விடும். எதிலும் நிறைவுறாத, எதற்கும் கட்டுப்படாத நாளுக்கு நாள் ஊதிப் பெருத்துக் கொண்டிருக்கும் மனதின் அச்சத்தைச் சுமந்து கொண்டு அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் விட்டு விடுவது அவ்வளவு எளிது. அதைப் புரிந்து கொண்டு விட்டு விடுவது அவ்வளவு கடினம். அது ஜஸ்ட் லைக் தட் அதுவாக நிகழக் கூடியது. ஒரு மாபெரும் துணிச்சல்காரராய் உங்களை நீங்கள் பலியிடுவதற்குப் பயப்படாத அசாத்திய துணிச்சல்காரராய் இருந்தால் அது அந்தக் கணத்திலே நிகழ்ந்து விடுகிறது. நீங்கள் கட்டி வைத்த மனக்கூடின்றி நீங்கள் என்பது என்ன? ஒரு மாயத்தோற்றததைக் கட்டி எழுப்பிக் கொண்டு அந்த மாயத்தோற்றத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள். எதுவும் இருந்தால் அதை எப்படி விட்டு விடுவது என்பதை உங்களுக்கு விளக்கி விட முடியும். நீங்களோ எதுவும் இல்லாத ஒன்றை அல்லவா விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் அதை விளக்க விளக்க அதன் பிடி இன்னும் இறுக்கமாகிப் போகிறது.
            விளக்கமாய்ச் சொல்வதற்கு எதுவும் இல்லை. விட்டு விட இப்படி ஒரு வகையில் விளக்கம் கூட தடைதான்.
            விட்டு விடுவதில் என்ன இருக்கிறது? கை விட்டு விடுவதால் கை கையை விட்டு நழுவிப் போய் விடுவதாக நினைக்கும் பயத்தை கைவிட அவரவரால் மட்டும் முடியும். நீங்கள் கை விடுகிறீர்கள். கை அங்கேதான் இருக்கப் போகிறது. அது அங்கேதான் இருக்கப் போகிறது. நீங்கள் கைவிட்டு விட்டீர்கள். மனமற்ற உங்களைப் பார்க்கும் போது உங்களுக்கே அதியமாய்த்தான் இருக்கும். அந்த அதிசயத்தையும் வாழ்நாளில் பார்த்து விடுங்களேன். இழப்பிற்குப் பின்னான அந்த மாபெரும் அடைதல். அதை அடைந்தால் இழக்கத் தயாராகாலாம் என்று நினைப்பதற்கு இதில் எதுவுமில்லை. இழந்தால்தான் அந்த அடைவே கிடைக்கிறது. இழப்பதற்குத் தயாராகும் மனம் சாதாரணமா என்ன? தன் சாவை தானே தரிசித்துக் கொள்ள எந்த மனிதர் விரும்புவார்? தன் இழப்பை தானே மேற்கொள்ள எந்த மனம்தான் விரும்பும்? அந்த இழப்பைத் துணிந்து தரிசிக்கும் போது அந்த மனமே இல்லாமல் போய் விடுகிறது. ஒரு மாபெரும் விடுதலை சாத்தியமாகிறது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...