வாழ்வியல் போராட்டத்தின் உருவகம் கற்றாழை
அப்பன் சண்முகம் பெருங்குடிகாரன்.
அம்மா பாக்கியம் அப்பன் ஸ்தானத்திலிருந்து
குடும்பத்தை நிலைநிறுத்தப் போராடும் பாட்டாளி.
சண்முகம் - பாக்கியத்தின் இரண்டாவது பெண்தான்
கற்பகநாதர்குளத்து மணிமேகலை.
மணிமேகலைக்கு மூத்தவள் பூரணம். மணிமேகலையின்
படிப்பைக் கெடுத்தவள்.
மணிமேகலைக்கு இளையவள் வளர்மதி கடைசிவரை
மணிமேகலைக்கு துணையாய் நிற்பவள்.
மணிமேகலையின் அப்பன் சண்முகம் சாராயக்
கடையில் செய்து கொடுத்த சத்தியத்திற்காக வாடியக்காட்டு முனியப்பன் மகன் செல்வராசுவுக்கு
மணிமேகலையைக் கல்யாணம் செய்து கொடுக்கிறான்.
மணிமேகலையின் மகாபுருஷன் செல்வராசு எப்படிப்பட்டவன்
என்றால் குடிகாரன், சூதாட்டக்காரன், திருட்டுப்புத்தி உள்ளவன், பெண்களைத் தொடுப்பு
தேடி அலைபவன், குனிந்து நிமிர்ந்து வேலை பார்ப்பதற்கு அஞ்சி உடம்பு வளையாமல் வாழ நினைப்பவன்.
ஒரு நாள் பீடி வாங்கி வைக்காமல் வேலைக்குப்
போனதற்காக மணிமேகலையின் காலைத் தடுக்கி விடுகிறான் செல்வராசு. வாயும் வயிறுமாய் இருக்கும்
மணிமேகலை தடுமாறி விழும் போது வயிறு நிலைப்படியில் அழுந்தி கர்ப்பம் கலைகிறது.
இரண்டாவதாகத் தரிக்கும் கர்ப்பம் குழந்தையாக
பிறந்து டெட்டனஸ் வந்து இறந்து போகிறது.
மூன்றாவதாகத் தரிக்கும் கர்ப்பம்தான் கலா
எனும் குழந்தையாகப் பிறக்கிறது.
வாடியக்காட்டு ஆம்பள - பொம்பள போக்கு
சரியில்லை என்று நினைக்கும் மணிமேகலை கலாவைக் கற்பகநாதர்குளத்திலிருக்கும் அம்மாவின்
வீட்டில் வளர்க்கிறாள். ஐந்தாவது வரை பாட்டி வீட்டில் தங்கிப் படிக்கும் கலாவை அதற்குப்
பின் தங்கை வளர்மதி வாழ்க்கைப்பட்டுப் போகும் கும்பகோணத்தில் பனிரெண்டாவது வரை படிக்க
வைக்கிறாள்.
குடும்பத்துக்காக மாடாய் உழைத்து ஓடாய்
மணிமேகலைத் தேய்ந்து கொண்டிருக்கையில், வரதராசன் தென்னந்தோப்பில் தேங்காய் திருடி
மாட்டிக் கொள்ளும் செல்வராசு பஞ்சாயத்து நடக்கும் போது ஒன் பாத்ரூம் போகிற சாக்கில்
ஊரை விட்டே ஓடிப் போய் மல்லிப்பட்டிணத்தில் இந்திரா என்ற பெண்ணோடு குடும்பம் நடத்துகிறான்.
மணிமேகலையின் மாமனார், மாமியாரும் இறந்து
போகிறார்கள். அவள் தனிக்கட்டையாகிறாள்.
வாடியக்காட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வயிற்றுப்பாட்டுக்காக
அவள் வாழ்க்கையோடு போராடுகிறாள். நடவு வேலைக்குப் போகிறாள், கார்நெல் விதைத்துப்
பார்க்கிறாள், கருவக்காடு வெட்டும் வேலைக்குப் போகிறாள்.
இதற்கிடையில் மல்லிப்பட்டிணத்தில் இந்திராவைத்
தொடுப்பாக வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் செல்வராசு கர்ப்பமாக இருக்கும் இந்திராவைப்
பார்த்துக் கொண்டு துணையாக இருக்க வேண்டும் என்று மணிமேகலையை அழைக்கிறான். வரமறுக்கும்
மணிமேகலையை அடித்துத் துவம்சம் செய்து விட்டுப் போகிறான்.
மணிமேகலையின் மகள் கலா வாடியக்காட்டுக்கு
வந்து போவது எப்போதாவதுதான் என்றாலும் அந்த இடைப்பட்ட நாட்களில் அவளுக்கு பிரசிடெண்ட் சந்திரசேகரன் மகன் குமாரைப் பிடித்துப் போய் விடுகிறது.
இதனால் கலாவை வாடியக்காட்டிலும் வைத்துக் கொள்ள முடியாமல், கலாவுக்கு ப்ளஸ்டூ படிப்பும்
முடிந்து அதற்குப் பின் வளர்மதியின் வீட்டிலும் வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறும்
மணிமேகலைக்கு தங்கை வளர்மதியே கலாவை வேதாரண்யம் குருகுலத்தில் சேர்த்து விடுவோம் என்று
யோசனை சொல்கிறாள். இந்த யோசனையோடு கலாவை அழைத்துக் கொண்டு வாடியக்காட்டுக்கு வரும்
மணிமேகலைக்கு அங்கும் ஒரு சோதனை காத்திருக்கிறது. இந்திராவை அழைத்துக் கொண்டு வாடியக்காட்டுக்கே
வந்து விடுகிறான் செல்வராசு. அதற்கு மேலும் வாடியங்காட்டில் இருக்கப் பிடிக்காமல் கற்பகநாதர்குளத்துக்கு
போகும் மணிமேகலையையும், கலாவையும் அங்கு வந்துப் பார்க்கும் வளர்மதி அவர்களை திருப்பூருக்கு
அழைத்துக் கொண்டு வேலைக்குச் சேர்த்து விடுகிறாள்.
திருப்பூரில் வேலை பார்த்து சம்பாதித்து
தன் மகளுக்கு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறாள் மணிமேகலை.
அப்படியெல்லாம் நடக்க விதி விட்டு விடுமா மணிமேகலையின் வாழ்வில்?
கலா விருப்பப்பட்டபடியே வாடியக்காட்டு
பிரசிடெண்ட் மகன் குமாரோடு அவளுக்குக் கல்யாணம் நடக்கிறது. அந்தக் கல்யாணத்தை ஏற்கவும்
முடியாமல், மறுக்கவும் முடியாமல் நடத்தி முடித்து விட்டு திருப்பூருக்கு வரும் மணிமேகலை
அங்கு தன்னைப் போல் நிராதரவாய் நிற்கும் பெண்களோடு சேர்ந்து ஒரு வீட்டை வாங்கி கம்யூனாக
குடியிருக்கிறார்கள்.
எஞ்சிய வாழ்வை இப்படியே உழைத்து ஓட்டி
விட வேண்டும் என்று நினைக்கும் மணிமேகலையின் முன் "நானும் அம்மாகொடயே இருந்துடலாமுன்னு
வந்துட்டேன்" என்று எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் குமாரோடு வாழ முடியாமல் நரம்பு
போல மெலிந்து வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்து நிற்கிறாள் கலா.
கற்றாலைச் செடி இருக்கும் இடத்துக்குத்
தகுந்தாற் போல தன்னைத் தகவமைத்துக் கொள்வதைப் போல மணிமேகலை பிறந்த இடமான கற்பகநாதர்குளத்திலும்,
புகுந்த இடமான வாடியக்காட்டிலும், அதற்குப் பின் வாழ வழி தேடிச் செல்லும் திருப்பூரிலும்
தன்னை தகவமைத்துக் கொள்கிறாள். எந்த இடத்திலும் அவள் இருந்தாலும் மணிமேகலையின் உழைப்பு
மட்டும் குறைவதில்லை. அவளது துயரங்களுக்கும் குறைவில்லை.
துன்பங்களையும் துயரங்களையும் துடைத்தெறிந்து
விட்டு உழைப்பதில் தன்னை ஆழ்த்திக் கொள்கிறாள் மணிமேகலை.
பெண் சமூகத்தின் மீது காலம் காலமாய் பிரயோகிக்கப்படும்
வன்முறையின் ஒட்டுமொத்தக் குறியீடாய் நாவல் முழுவதும் நிற்கிறாள் மணிமேகலை. பொறுப்பற்ற
கணவனைக் கட்டிக் கொண்டு குடும்பத்தை நிலைநிறுத்துவதற்காக அத்தனைப் பொறுப்புகளையும்
தன் தலையில் கட்டிக் கொண்டு போராடுகிறாள்.
குடும்பம் ஏற்படுத்தும் தாக்கம், சமூகம்
ஏற்படுத்தும் தாக்கம், பொருளாதாரம் ஏற்படுத்தும் தாக்கம் என எல்லாவற்றோடும் மாய்ந்து
மாய்ந்து எதிர்நீச்சல் போடுகிறாள் மணிமேகலை.
குடும்பத்துக்காக எவ்வளவோ அடக்குமுறைகளையும்,
அராஜகங்களையும், வன்முறைகளையும் சகித்துக் கொள்ளும் அவள் செல்வராசு இன்னொரு பெண்ணைக்
குடும்பம் நடத்த வீட்டுக்கு அழைத்து வரும் போதுதான் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
தன் மீது கணவன் காட்டும் உச்சபட்ச வன்மத்துக்கு அவள் அமைதியாகக் காட்டும் எதிர்வினை
அது மட்டுமே. அப்போதும் தான் யாருக்கும் பாரமாக இருந்து விடக் கூடாது என்ற உள்ளுணர்வு
கொண்டவளாகவே அவள் இருக்கிறாள்.
உழைத்துத் தேய்ந்து தன் சொந்தக் காலில்
நிற்பதில் எந்த இடத்திலும் பின்வாங்காமல் நிற்கும் மணிமேகலை ஆணாதிக்கச் சமூகத்தால்
சுரண்டப்பட்ட ஒரு பெண்ணின் வடிவம்.
கடைசியாக அவள் தேர்வு செய்யும் சுயசார்புள்ள
பெண்களாக இணைந்து வாழும் கம்யூன் எனும் அமைப்பு வாழ்வாதாரம் மறுக்கப்பட்ட பெண்களுக்கான
தீர்வாக கொள்ளத்தக்கது. அதே கம்யூன் அவளுக்கும் அவளது மகளுக்கும் சேர்த்தே புகலிடமாக
முடிவதுதான் நாவலின் சோகம். குடும்பம் எனும் அமைப்பு பெண்களை ஒதுக்கித் தள்ளும் போது,
பெண்களுக்கான மாற்று அமைப்பாக இப்படியொரு தீர்வை
சு.தமிழ்ச்செல்வி முன்வைக்கிறார் என இந்நாவலின் முடிவைக் கொள்ளலாம்.
*****
No comments:
Post a Comment