8 Mar 2019

அதிரடி டாக்டர்



செய்யு - 18
            மயங்கி விழுந்த சாமியாத்தாவை வடவாதி சோனாச்சலம் டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். வடவாதி கிராமங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவர்தான் டாக்டர். அவர் டாக்டர் என்றால் டாக்டருக்குப் படித்தவரில்லை. டாக்டர் ஒருவரிடம் கம்பெளண்டராக இருந்து டாக்டராக ஆனவர். அவர்தான் இந்தப் பகுதிக்கே டாக்டர். முரட்டு வைத்தியம் பார்ப்பவர் என்று பேர் பெற்றவர். அவருக்கு அதிரடி டாக்டர் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
            ஒரு சமயம் குளத்தில் மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்த நாடிமுத்துவை மாடு முட்டியதில் அவரது விதைப்பைக் கிழிந்து பெரும்பாடாகி விட்டது. நாடிமுத்து கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரியாக வேறு இருந்தார். நாடிமுத்துவைக் குளக்கரையில் தூக்கிப் போட்டு சோனாச்சலம் டாக்டருக்கு ஆள் அனுப்பினார்கள். சம்பவ இடத்துக்கே நேரில் வந்து தையல் போட்டு ஊசி போட்டார் சோனாச்சலம்.           
            "இனுமே ஒண்ணும் பெரச்சனயில்ல. இருந்தாலும் டவுனுக்கு அழச்சுபுட்டுப் போய் ஒரு தடவ காட்டிப்புட்டா நல்லது!" என்றார். ஒரு நோட்டு பேப்பரில் விலா வாரியாக அவர் என்ன செய்தார் என்பதையும் என்ன ஊசி போட்டார் என்பதையும் பத்து வரிகளுக்கு மேல் எழுதி அதையும் கையில் கொடுத்து காட்டுமாறு சொல்லி விட்டுப் போய் விட்டார்.
            சோனாச்சலம் டாக்டர் பேச்சு மறுபேச்சு ஏது? அந்த நேரத்தில் வந்த பஸ்ஸில் தூக்கிப் போட்டு திருவாரூர் டவுனுக்குக் கொண்டு போய் அங்கு டாக்டரைப் பார்த்தால் அந்த டவுன் டாக்டர் அசந்து போனதுதான் மிச்சம். "இந்த இடத்துல இவ்வளவு லாவகமா, பயப்படாம தையல் போட்டது யாரப்பா?" என்று டவுன் டாக்டர் மூக்கின் மீது விரல் வைத்தார். அந்த நேரம் பார்த்து சோனாச்சலம் எழுதிக் கொடுத்த நோட்டு பேப்பரைக் கொடுக்க டாக்டர் ஆச்சரியத்தில் ஆடிப் போய் விட்டார். "ரொம்ப டீடெய்ல எழுதியிருக்காப்புல! இவ்வளவு டீடெய்ல்டா எழுதுன கேஸ் ஹிஸ்டரிய இதுவரை நான் பார்த்ததில்ல. மேற்கொண்டு ஒண்ணும் பிரச்சனயில்ல. நான் எழுதிக் கொடுக்குற மருந்து மாத்திரைகள மட்டும் வாங்கிக்குங்க!" என்று சொல்லி கடகடவென எழுதிக் கொடுத்து, "நீங்க விருப்பப்பட்டா ரெண்டு நாளைக்கு பெட்ல இருந்துக்கலாம். மருந்து மாத்திரைகளை வாங்கிகிட்டு வீட்டுக்கு அழைச்சுட்டுப் போறதுன்னாலும் போயிடலாம்!" என்றார். அதுக்கு மேல் காசு கொடுத்து எதுக்கு பெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாடிமுத்துவை அழைத்துக் கொண்டு மருந்து மாத்திரைகளை மட்டும் வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தாயிற்று. இருந்தாலும் எல்லாருக்கு ஒரு சந்தேகம் இருந்தது, நாடிமுத்துவுக்கு குழந்தைப் பிறக்குமா என்று? நாடிமுத்துவுக்கும் இந்த பயம் இருந்தது. நாடிமுத்துவும் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாது என்று வேறு அடம்பிடித்துக் கொண்டிருந்தது.
            அப்போதும் சோனாச்சலம் டாக்டர்தான் வந்தார். நாடிமுத்துவின் பொடணியிலயே ரெண்டு தாங்கு தாங்கி விட்டு, "ஒனக்குக் கொழந்த பொறக்கலேன்னா ஊசி போட்டு மருந்து மாத்தர எழுதிக் கொடுக்குற இந்த வேலயையே தூக்கிப் போட்டுடுறேண்டா!" என்று சவால் விட்டார்.
            நாடிமுத்து கல்யாணத்துக்குச் சம்மதித்தது. நாடிமுத்துவுக்கு நாலு குஞ்சு குலுப்பான்கள் பிறந்தது. நான்காவது பிரவத்தின் போது டவுன் ஆஸ்பத்திரியின் நர்ஸம்மா திட்டியதில் வேறு வழியில்லாமல் குடும்பக்கட்டுபாடு பண்ணிக் கொள்ள நாடிமுத்துவுன் மனைவி ஒத்துக் கொண்டது. அந்த அளவுக்கு ஒரு விசயத்தைக் கணித்துச் சொல்வதில் நாடிமுத்து டாக்டர் பெர்பெக்டாக இருந்தார்.
            இப்போது சோனாச்சலம் டாக்டரைப் பற்றி உங்களுக்குப் புரிந்திருக்கும் என்ற நினைக்கிறேன். இதனால்தான் அவரை யாரும் கம்பெளண்டர் என்று கூப்பிடாமல் டாக்டர் என்றே அழைத்தனர். அவரிடம் ஒரு யமகா பைக் இருந்தது. அதன் சத்தம் ஒரு மாதிரியாக வித்தியாசமாக டர் டர்ரென்று இழுவையாக இருக்கும். அந்தச் சத்தத்தைக் கேட்கும் போது விகடுவின் நெஞ்சுக்குள் ரம்பத்தை வைத்து அறுப்பதைப் போல ஒரு மாதிரியாக இருக்கும். அந்த சத்தத்தைக் கேட்டே நாடிமுத்து டாக்டர் வந்து விட்டார் என்ற செய்தி நாலு வட்டாரத்துக்குத் தெரிந்து விடும். அந்த யமகா பைக்கில் போய் யமனிடம் போகவிருந்த எவ்வளவோ உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் நாடிமுத்து டாக்டர். ஒரு வகையில் சொல்லப் போனால் இப்போது கேட்கும் நூற்றியெட்டு ஆம்புலன்ஸின் சத்தத்தைப் போல சொல்லலாம் அவரின் பைக் சத்தத்தை.
            நாடிமுத்து டாக்டர் சாமியாத்தாவின் நாடியைப் பிடித்து பார்த்தார். ஸ்டெத்தாஸ்கோப்பை ‍நெஞ்சில் வைத்துப் பார்த்தார். ஒரு நிமிடம் நெற்றியைச் சுருக்கி யோசித்தார். ஒரு ஊசியைப் போட்டு விட்டு, "யோசிக்காதீய. உடன தஞ்சாவூரு பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போயிடுங்க. அங்க கொண்டு போனீங்கன்னா குணப்படுத்திடுவாங்க. அதான் நல்லது!" என்றார்.
            அப்பாவும், மாணிக்கநாயகமும் காருக்கு ஏற்பாடு பண்ணி தஞ்சாவூர் கொண்டு சென்றார்கள். தஞ்சாவூரில் சாமியாத்தாவுக்கு மூளைக்குச் செல்லும் ஏதோ ஒரு நரம்பு வெடித்து விட்டதாகச் சொன்னார்கள். செய்தி கேள்விபட்டு அம்மா செய்யுவைத் தூக்கிக் கொண்டு விகடுவை வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வடவாதிக்கு வரும் பி.எல்.ஏ. பஸ்ஸைப் பிடித்து தஞ்சாவூருக்கு ஓடியது.
            வாழ்க்கப்பட்டு பெரியம்மா, சிப்பூர் பெரியம்மா, சிப்பூர் சித்தி, தேன்காடு சித்தி, லாலு மாமா, முருகு மாமா, பரமு மாமா, உடம்பு முடியாத வேணி அத்தை உட்பட, கிராமத்து சனங்கள் வரை எல்லாரும் வந்து பார்த்தார்கள். வைத்தி தாத்தாவும், ஏயெம் மாமாவும் ஒரு வாரம் ஆன பின்தான் வந்து பார்த்தார்கள். பின்நாட்களில் குணமான சாமியாத்தா இந்த விசயத்தைச் சொல்லிச் சொல்லி அழுதது.
            பத்து நாட்கள் மயக்க நிலையிலேயே சாமியாத்தா இருந்து பிறகு கண் திறந்து பார்த்தது. ஆஸ்பத்திரியில் சாமியாத்தாவைப் பார்த்த டாக்டர்கள், அதிர்ச்சி தரும் எந்த விசயத்தையும் சாமியாத்தாவுக்குச் சொல்லக் கூடாது என்றார்கள். அடுத்து வந்த ஒரு சில ஆண்டுகள் தவிர்த்துப் பார்த்தால், சாமியாத்தாவுக்கு நடந்தவையெல்லாம் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளாகத்தான் அமைந்தன. அந்த நேரங்களில் சொந்தப் பிள்ளைகளான குமரு மாமாவும், ஏயெம் மாமாவும் சாமியாத்தா சீக்கிரம் செத்துத் தொலையாதா? என்று எதிர்பார்த்தார்கள். அதைப் பற்றிப் பின்னர் சொல்கிறேன். அந்த நிகழ்வுக்குப் பிற்பாடு சாமியாத்தாவுக்கு எந்த நோய் நொடியும் வராமல் நிலைத்து நின்றது.
            சாமியாத்தாவை ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு தஞ்சாவூரில்  இருந்து அழைத்து வந்தார்கள். தஞ்சாவூரில் இருந்த அந்தக் காலகட்டத்தில் சின்னப் பெண்ணான செய்யுதான் அம்மாவோடு இருந்து மருந்து மாத்திரைகளை நேரங்காலத்துக்கு எடுத்துக் கொடுத்துப் பார்த்துக் கொண்டாள். இதனால் செய்யுவின் மேல் தனிப்பிரியம் உண்டு சாமியாத்தாவுக்கு. "நீ பொறந்தப்ப கூட ஒன் ஆயியோட கூட மாட இருந்து ரொம்ப நாளு பாத்துகிலேயேடி. இப்படி என்னய வுழுந்து வுழுந்து பாத்துக்கிறீயேடி!" என்று சாமியாத்தா அழும். "அழுவாத ஆத்தா! ஒன்னய நாங் கடசி வரக்கும் பாத்துப்பேன்!" என்று கண்களைத் துடைத்து விட்டு செய்யு சொல்லும் போது, "என் ராசாத்தி!" என்ற கட்டிப் பிடித்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்துக் கொஞ்சும் சாமியாத்தா.
            அம்மா மீது பாசம் இல்லாத பிள்ளைகளில் ஏயெம் மாமாவும் ஒன்று. தஞ்சாவூருக்கு வைத்தி தாத்தாவோடு வந்த போது ஏயெம் மாமா கையை வீசிக் கொண்டுதான் வந்ததாம். வைத்தி தாத்தாவும் வீசிய கை வெறுங்கையோடு வந்து பார்த்த கையோடு "இத நல்லா பாத்துக்குங்க!" என்று சொல்லி விட்டு வைத்தி தாத்தா அன்றிரவே பஸ் ஏறி விட்டாராம்.
            ஏயெம் மாமாதான் நான்கு நாட்களுக்கு இருந்ததாம். நான்கு நாட்கள் இருந்தது என்றால் தஞ்சாவூரைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஏயெம் மாமாவுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாகப் போய் விட்டதாம். தஞ்சாவூர் பெரியகோயில், சிவகங்கைப் பூங்கா எல்லாவற்றையும் சுற்றி விட்டு ஒரு நாளைக்கு எப்படியும் இரண்டு படங்கள் பார்த்து விட்டு நன்றாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்ததாம். ராத்தூக்கம் போடுவதற்கு மட்டும் ஆஸ்பத்திரிக்கு வந்து ஆஸ்பத்திரி கேட்டில் படுத்துக் கொள்ளுமாம்.
            செய்யு சும்மா இருக்க மாட்டாளாம். "ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு நாளாகுது? சாத்துக்குடி எப்புடி மாமா இருக்கும்? பிரெட்டு பாக்கெட்டு வாங்கியாறீயா?" என்று ஏயெம் மாமாவிடம் கேட்பாளாம். ஏயெம் மாமா செய்யு கேட்கும் எல்லாவற்றையும் ஊரைச் சுற்றி விட்டு ஆஸ்பத்திரி திரும்பும் நேரத்தில் வாங்கி வருமாம். அதையெல்லாம் செய்யு சாமியாத்தாவுக்குக் கொடுக்குமாம். இதெல்லாம் அம்மா சொல்லி விகடு தெரிந்து கொண்ட செய்திகள்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...