செய்யு - 13
"ன்னா... இந்த பாப்பா இப்படிக் கிடந்து
அழுவுது!" என்று செய்யுவின் அழுகைப் பற்றித் திட்டையில் பேசாத ஆட்கள் கிடையாது.
திட்டையில் இருக்கும் யாராக இருந்தாலும் இராப்பொழுதில் முழிப்பு வந்து விட்டால் செய்யுவின்
அழுகையைக் கேட்டு அதற்குப் பின் தூக்கம் வராமல் விடியும் மட்டும் அவளின் அழுகையைக்
கேட்டுக் கொண்டே சுவரோடு சுவராக சாய்ந்து உட்கார்ந்து விடுவார்கள்.
ஊரார் சொல்லாத வைத்தியமில்லை. அதைக் கேட்டு
செய்யுவுக்குப் பார்க்காத வைத்தியமில்லை.
கறிக்கடை பாய் மம்மூது விசயம் கேள்விப்பட்டு
வடவாதி பள்ளிவாசலில் இருந்து சர்க்கரை மந்திரித்து வாங்கி வந்து கொடுத்து விட்டுப்
போனார்.
சாமியாத்தாவே ஒருமுறை வந்து வேளாங்கண்ணிக்குப்
போய் மாதாவிடம் வேண்டிக் கொண்டு வந்து விடுவோம் என்று கையோடு செய்யுவைத் தூக்கிக்
கொண்டு அம்மாவையும் அழைத்துக் கொண்டு போனார்.
வைகாசியில் நடக்கும் மாரியம்மன் கோயில்
திருவிழாவில் வீட்டுக்கு வீடு கப்பரை வரும். திருவிழாவின் மறுநாள் காலையில் கப்பரை
எடுப்பது நடக்கும். தலையில் சிவப்புத் துணியால் ஒரு தலைப்பா கட்டு கட்டி, கழுத்தில்
மாலையோடு கருப்பு நிறத்தில் விஷேசமான ஒரு கால்சட்டைப் போட்டு கையில் எரியும் சட்டியை
ஏந்தி அதற்காகவே நாற்பத்தெட்டு நாட்கள் விரதம் இருப்பவர் ஏந்தி வரும் கப்பரையிடம் ஊரில்
இருக்கும் மக்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் மனத்தாங்கலுக்கு ஏற்ப குறி கேட்பார்கள்.
அதிலும் கப்பரை ஊர் சுற்றி கோயிலுக்குத் திரும்பி ஓர் அதிபயங்கரமான ஆட்டத்தைப் போட்டு
விட்டு கப்பரைச் சட்டியை இறக்கும் நேரத்தில் கேட்கும் குறி விஷேசமாகக் கருதப்படும்.
அம்மா அந்த நேரத்துக்காக கோயிலுக்குப் போய் காத்திருந்து செய்யுவின் அழுகை குறித்துதான்
கேட்டார். "அம்மனுக்கு பால் கொடம் எடுக்குறேன்னு வேண்டிகிட்டு மாவெளக்குப் போடுறேன்னு
வேண்டிக்கோ!" என்று சொல்லியது கப்பரை. அம்மா அதையும் செய்து பார்த்தார்.
இந்த கப்பரை குறித்தும், திருவிழா குறித்தும்
விரிவாகச் சொல்ல நிறைய இருக்கிறது. செய்யுவுக்குத் திருமணமான ஆண்டில் நடந்த சம்பவத்தோடு
அதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். அந்த ஆண்டில்தான் திட்டை கோயிலின் திருவிழா
வரலாற்றில் கப்பரைச் சட்டி கீழே விழுந்து உடைந்து போனது.
செய்யுவின் அழுகை தெய்வங்களுக்கேப் புதிராக
இருந்திருக்க வேண்டுமோ என்னவோ! அவள் அழுகை சில நாட்கள் மட்டுபட்டு இருக்கும். அதற்கும்
சேர்த்து அடுத்து வரும் பல நாட்களில் அழுது தீர்த்து விடுவாள்.
செய்யுவின் அழுகை ஓரளவுக்குக் கட்டுபட்டது
என்றால் அது வெள்ளெருக்கு நாறுக்குத்தான்.
அப்பா பொறுமையாக வெள்ளெருக்கு நாறெடுத்துத்
திரித்துக் கயிறாக்குவார். அதில் ஒரு இன்ச் விட்டு ஒரு இன்ச்சுக்கு முடிச்சுகள் போட்டுக்
கொண்டே வருவார். செய்யுவின் கழுத்தில் போடும் போது வெள்ளையும் மஞ்சளும் கலந்த ஒரு
நிறமாக இருக்கும். போகப் போக அடர் மஞ்சளும் கருப்பும் கலந்த நிறத்துக்கு மாறி விடும்.
ஒரு கயிறு நான்கைந்து மாதங்கள் அறுபடாமல் கழுத்தில் கிடக்கும். மறுபடியும் புதுகயிறுதான்
நாறெடுத்துப் போட வேண்டும். இரண்டு மூன்று
மந்திரித்த சிவப்புக் கயிறுகளோடு, ஒரு கருவமணிக் கயிறு கிடக்கும் செய்யுவின்
கழுத்தில் வெள்ளெருக்குக் கயிறும் கிடக்கும்.
செய்யவுக்கு ஒன்றரை வயதுக்கு மேல் ஆன போது
அழுகைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. இரண்டு வயதுக்குப் பிறகுதான் அவள் இரவில்
முழித்து அழும் அழுகையை ஒரளவுக்கு நிறுத்தினாள். அழாமல் இரவில் தூங்க அவளுக்கு மூன்றரை
வயதுக்கு மேல் ஆனது. அவள் பள்ளியில் சேர்க்கப்படும் வரையில் அப்பா வெள்ளெருக்கு நாறெடுத்து
கயிறு செய்து போட்டுக் கொண்டுதான் இருந்தார். வெள்ளெருக்கில் நாறெடுத்து கயிறு செய்வது
அப்பாவுக்கு விட முடியாத ஒரு பழக்கமாகவே போய் விட்டது.
விகடு பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவளைத்
தூக்கி வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டுவது வழக்கம். பெரும்பாலான நாட்களில் அப்படி
வேடிக்கைக் காட்டும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்காது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்
செய்யுவைத் தூக்கிக் கொண்டு பொய் விடுவார்கள். அதுபோன்ற நாட்களில் விகடு நண்பர்களோடு
விளையாட கேணிக்கரை ஸ்டாப்பிங்கை நோக்கி ஓடி விடுவான்.
திட்டையில் பெரும்பாலும் பிள்ளைகள் அக்கம்
பக்கத்து வீடுகளில்தான் வளர்வார்கள். தெருவில் யாருக்காவது குழந்தையைப் பிடித்து விட்டால்
தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். பொழுது சாய்ந்ததும்தான் கொண்டு வந்து விடுவார்கள்.
இரவில் தூங்குவதற்கு மட்டும்தான் குழந்தை வீட்டுக்கு வரும். வீட்டுக்கு வரும் மருமகளைப்
புகுந்த வீட்டில் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு
சொலவம் சொல்வார்களே, 'ஊரான் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் வீட்டுப் பிள்ளை
தானாக வளரும்' என்று. திட்டையில் பிள்ளைகள் வளர்வதைப் பார்க்கும் போதும் அதே சொலவம்தான்
ஞாபகத்துக்கு வரும்.
பக்கத்து வீட்டு அம்மாசியம்மா காலையில்
சமைத்ததும் செய்யுவைத் தூக்கிக் கொண்டு போய் விடுவார். பதினோரு மணி வாக்கில் அவர்
புல் அறுக்கப் போகும் போதுதான் திரும்பக் கொண்டு வந்து விடுவார். புல் அறுத்து வந்து
மாட்டுக்குப் போட்டதும் திரும்பத் தூக்கிக் கொண்டு போய் விடுவார். அவர் வீட்டில்
நிறைய மாடுகள் இருந்தன. கன்றுக்குட்டிகளும் அதிகம். விகடு பார்த்த நேரங்களில் எல்லாம்
கன்றுகுட்டிகளைக் காட்டிக் கொண்டே செய்யுவுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருப்பார்.
இந்தக் கிராமத்துத் தாய்மார்கள் நேரம் காலம் தெரியாமல் அவர்கள் நினைக்கின்ற நேரங்களில்
எல்லாம் குழந்தைகளுக்குச் சோறூட்டிக் கொண்டே இருப்பார்கள்.
செய்யு அம்மாசியம்மா வீட்டில் இருந்த நாட்கள்
அதிகம். அம்மாசியம்மா வீட்டுப் பெண் குழந்தையைப் போல்தான் அவள் வளர்ந்தாள். அம்மாசியம்மாவுக்கு
ஐந்தும் ஆண் பிள்ளைகள். பிள்ளைகள் ஒவ்வொன்றும் வேலைக்காக திக்குக்கு ஒன்றாய்ப் போயிருந்தனர்.
தீபாவளி, பொங்கலுக்குத்தான் ஊருக்கு வருவார்கள். வரும் போது செய்யுவுக்காக நிறைய
வாங்கி வருவார்கள். அம்மாசியம்மாவுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம்
இருந்தது. செய்யுவைத் தன் வீட்டின் பெண்குழந்தையாகவே அவர் நினைத்தார்.
அய்யாவு திட்டையூரார் சர்க்கரை ஆலையில்
வேலை பார்த்தார். அவருக்கு வேலை பார்க்கும் ஷிப்ட் பகல் இரவு என்று மாதத்திற்கு ஒரு
முறை மாறி மாறி விரும். பகல் ஷிப்ட் இருக்கும் நாட்களில் சாயுங்காலம் வேலை முடித்து
வந்தவுடன் கை கால்களை அலம்பி விட்டு செய்யுவைத் தூக்க வேண்டும் அவருக்கு. ஒருவேளை செய்யு
அம்மாசியம்மா வீட்டில் இல்லாமல் விகடுவின் வீட்டில் இருந்தால் செய்யுவைத் தூக்க வந்து
விடுவார்.
இத்தனைக்கும் செய்யுவின் வீட்டுக்கும்,
அய்யாவுவின் வீட்டுக்கும் வேலிச்சண்டை உண்டு. ஒவ்வொரு வருஷமும் வேலி அடைக்கும் போது தகராறு ஆரம்பிக்கும். அய்யாவு வேலிக்காலை
நகர்த்துகிறார் என்று அம்மா சத்தம் போடுவார். சில நாட்கள், சமயங்களில் சில வாரங்கள்,
சில மாதங்கள் வரை பேச்சு வார்த்தை நின்று போகும். அப்புறம் ரெண்டு வீடுகளில் யாருக்காவது
உடம்பு சரியில்லாமல் போகும் போது அதைச் சாக்காக வைத்து பேச ஆரம்பிப்பார்கள்.
செய்யு பிறந்து வளர ஆரம்பித்ததும் கொல்லைக்கு
இடையே இருந்த வேலியை அய்யாவு எடுத்து விட்டார். பல வருடங்களுக்கு ரெண்டு வீட்டுக் கொல்லைகளும்
திறந்த திறப்பாகவே இருந்தன.
அம்மாசியம்மா செய்யுவைத் தூக்கி வைத்து
"செய்யு! செய்யூ! செய்யூ!" என்று உச்சி முகர்வதைப் பார்க்கும் போது ஆசையாக
இருக்கும். செய்யு இரவில் அழும் அந்த நாட்களில் முழித்துக் கொண்டு ராவிலும் செய்யுவை
அம்மாசியம்மாவும், அய்யாவுவும் தூக்கி வைத்து சமாதனாப்படுத்தியிருக்கிறார்கள்.
சமைப்பதில் ரொம்ப சிக்கனம் காட்டுபவராக
பேர் பெற்றவர் அம்மாசியம்மா. அவர் சாயுங்கால நேரங்களில் செய்யுவுக்காக பலகாரங்கள் செய்வதையெல்லாம்
ஊரில் ஆச்சரியமாகப் பேசிக் கொண்டார்கள். விகடுவுக்கும் இது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவன் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் சோற்றைப் போட்டுச் சாப்பிடுவான். இப்போது அவனுக்குச்
செய்யுவுக்காகச் செய்யப்படும் பலகாரங்கள் கிடைக்கத் தொடங்கின.
*****
No comments:
Post a Comment