25 Mar 2019

அன்னபட்சி



செய்யு - 35
            பனியனின் முன்பக்கத்தைப் பின்பக்கமாகவும், பின்பக்கத்தை முன்பக்கமாகவும் அணிந்து கொள்ளும் போது ஏற்படும் ஒரு அசெளகரியம் ஏற்படும் அல்லவா! உண்மையில் அது அசெளகரியம்தானா? ஒரு மாதிரியாகப் போட்டுப் பழகி விட்டதால் ஏற்படும் அசெளகரியம். கொஞ்ச நாட்கள் முன்பக்கத்தைப் பின்பக்கமாகவும், பின்பக்கத்தை முன்பக்கமாகவும் போட்டு அது ஒரு பழக்கத்துக்கு வந்து விட்டால் பின்பு முறையாகப் பனியன் போடுவது அசெளகரியமாகி விடும். எல்லாம் பழக்கத்தினால் உண்டாகும் அசெளகரியம். அப்படி ஒரு அசெளகரியம் வேண்டாம் என்று நினைத்துதான் சமூகம் எல்லாவற்றுக்கும் ஒரு முறையைப் பரிந்துரைக்க நினைக்கிறது. பனியன் என்றால் அதை இப்படிப் போடு என்பது அதில் ஒரு பரிந்துரை. அதை மாற்றிப் போட்டு பழகி விட்டவர்களுக்கு சமூகத்தின் முறையோடு ஒத்துப் போவதில் ரொம்பவே சிரமத்தைச் சந்திக்க நேரிட்டு விடும். பனியனை மாற்றிப் போடுவதால் போடுபவருக்கு என்ன தீமை வந்து விடப் போகிறது? இவர் பனியனை மாற்றிப் போடுகிறவர் என்று சமூகம் பேச ஆரம்பிக்கும் போது சமூகம் செய்யும் தீமை துவங்கி விடுகிறது. நீண்ட காலத்துக்கு அதைக் கேட்கும் பொறுமை இருந்தால் சமூகம் அதைக் கண்டுகொள்ளாத நிலைக்கு வந்து விடும். தன்னுடையப் பேச்சைக் கண்டு கொள்ளாதவர்களை ஒரு கட்டத்துக்கு சமூகமும் கண்டு கொள்ளாது. அதை அவ்வளவு விரைவில் சமூகம் செய்து விடாது. ஒரு நீண்டகால பரிசீலனையில் வைத்துதான் அந்த முடிவுக்கு சமூகம் வரும். ஒரு நீண்ட கால பொறுமைக்கு நீங்கள் தயாராக இருந்தால் சமூகம் உங்களுக்கான விதிவிலக்கைத் தரவும் தயாராக இருக்கிறது. குறுகிய காலத்திற்குள் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் சமூகத்தோடு போராட வேண்டியிருக்கும். வெறும் வாயோடு இருக்கும் சமூகத்தின் வாய்க்குக் கிடைத்த அவலாகி விடுவீர்கள் நீங்கள். இதில் இன்னொரு விசயத்தைப் பாருங்களேன்! வேடிக்கையாக இருக்கும். நீண்ட காலத்துக்கு நீங்கள் பொறுமையாக இருந்து அதை நீங்கள் சகித்துக் கொண்டு விட்டால், உங்களை சமூகம் ஒரு பேஷனாக ஏற்றுப் பின்தொடரவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது பனியனை மாற்றிப் போடுவது பேஷன். அந்தப் பேஷனின் பிதாமகன் நீங்கள்.
            நீண்டகாலம் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. எவ்வளவு நீண்ட காலம் நீங்கள் அதில் இருப்பீர்கள். ஒரு கட்டத்தில் சலித்து விடுவீர்கள். மனஉளைச்சலில் மல்லாந்து விடுவீர்கள். ஒரு பனியனை மாற்றிப் போட்டது மாபெரும் குற்றம் என்று நினைப்பீர்கள். ஒழுங்காவே பனியனைப் போட்டிருக்கலாமோ என தவறு செய்து விட்டதான ஒரு உணர்வில் குமைந்துப் போவீர்கள்.
            விகடு பனியனை மாற்றிப் போடுபவன். இதற்காக நீங்கள் விகடுவை நிறுத்தி அவனது ஆடையை உரித்துச் சோதனை செய்து பார்த்து விடாதீர்கள். அவன் பனியனைச் சரியாகப் போட்டிருப்பான். இங்கு பனியன் என்பது பனியன் அன்று.
            விகடுவுக்கு அந்த அச்சம் இருந்தது. வருங்காலம் குறித்த முடிவில் தவறு செய்து விடுவோமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. பின்னர் வருங்காலத்தில் வாழ்க்கை குறித்த அபத்தமான முடிவுகள் எடுத்த போது வராத அச்சம் அப்போது இருந்தது.
            வாழ்க்கையின் பல அபத்தமான முடிவுகளை அவன் எடுத்த போது யோசிக்கவே இல்லை. அவனுக்கு யோசிக்க நேரமில்லை என்பது காரணமில்லை. அவன் யோசிக்கவே விரும்பவில்லை. அடுத்தடுத்த அபத்தமான முடிவுகளில் அவன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தான். இப்போது நிலைமை அப்படியில்லை. அவன் யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
            ஒரு கட்டத்துக்கு மேல் யோசனை எங்கு யோசனையாக இருக்கிறது? அது அச்சமாக மாறி விடுகிறது. வருங்காலம் குறித்த ஒரு கொடூரமான பயமாக கண்ணில் நிழலாடத் தொடங்கி விடுகிறது.
            இந்தக் கொடூர அச்சத்தை விரட்டுவதற்கு ஒரே வழி எப்படி கைகாட்டுகிறார்களோ அப்படி ஒரு வழியில் சென்று விடுவதுதான். விகடு எப்படி மேத்ஸ் குரூப் படிப்பிற்குச் சம்மதித்தான் என்பதை இதற்கு மேல் விளக்க என்ன இருக்கிறது?
            அப்பா அவனை ஒருமுறை நரிவலத்திலிருந்து அழைத்து வரும் போது பேசினார். அது ப்ளஸ் ஒன் காலாண்டு விடுமுறைக்கு அழைத்து வந்த போது நேர்ந்தது.
*****
            "தாத்தவப் பத்தி உனக்குத் தெரியுமாடா?" என்றார் அப்பா.
            "தெர்யலேயப்பா!" என்றான் விகடு.
            "எனக்கும் அவர தெரியாது. எனக்கு மூணு வயசா இருந்தப்பவே செத்துட்டாரு!வெவரம் புரியாத வயசு. அவரு என்ன தூக்கி வெச்சிருந்த ஞாபகத்துல ரொம்ப நாளய்க்கி அழுகிட்டு இருந்திருக்கேம். இப்போ உசுரோட இருக்குறதுல எங்கண்ணன், எங்க அக்காதாங் அவர பாத்தவங்க. எந் தங்கச்சி கைக்கொழந்த! உங்க தாத்தாவ நாந் பொறந்த ஊருக்கே தெரியும்."
            அப்பா இப்போது எதற்கு சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் என நினைத்தான் விகடு.
            அப்பா பேசிக் கொண்டே போனார். 
            "எங்க அப்பா அதாங் உம்மோட தாத்தா சாமிநாதம். மர ஆச்சாரி. கும்பகோணத்து வகையறா. கும்பகோணத்தில் பெரிய வேலைக்காரர்னு பேரெடுத்தவங்க. இப்போ பாக்குற மரவேல மாரில்ல அப்போ. மரங்களைப் பதம் பார்த்து வெட்டணும். வெட்டுன மரத்த பலகையாக்கணும். சட்டமாக்கணும். எல்லாம் கைவேலதான். எந்திரங்க எதுவும் கெடயாது. கணக்குச் சுத்தமா இருக்கணும் தெரிஞ்சுக்கோ. கொஞ்சம் பிசகுனா வேலயில இடிக்கும்பாங்க. அப்போல்லாம் ஓட்டு வீடுங்க. வேலன்னா மாசக் கணக்குல நடக்கும். மர வேலய்க்கு நல்ல மவுசு. அதுவும் சாமிநாதம் ஆச்சாரி வேலன்னா கேட்ட காச கொடுப்பாங்க. கொடிகட்டிப் பறந்தவர்டா நம்மவரு. ஆச்சாரி வகையறாவுல வில்லுவண்டி வெச்சுகிட்டுப் போனவரு.
            ஆவணத்துல ஆத்தாவ கட்டிகிட்டாரு. ஆத்தா பேரு ரத்தினம். ஆத்தா சொந்த பந்தங்கள பாத்துகிட்டே இருந்தா சந்தோசமா இருக்கும்ணு ஆவணத்துக்குப் பக்கத்துல விருத்தியூர்ல ஜாக வந்துட்டாங்க. ஆத்தாவுக்கு ரொம்ப வர்ஷம் கொழந்தயில்ல. வம்சம் விருத்தியாகாமா போயிடுமோன்னு தாத்தா பயந்துகிட்டு இருந்துருக்காரு. என்ன சம்பாதிச்சு என்ன புண்ணியம்? ஒரு கொழந்தயில்லயேன்னு பாக்குறவங்க பேசியிருக்காங்க.  ஆத்தாவுக்கு சங்கடமா போச்சு. தன்னோட தங்கச்சி தையல்நாயகியையே பிடிச்சுக் கொண்டாந்து தாத்தாவுக்கு கட்டி வெச்சுது. நாங்க மூத்தவங்கள பெரிம்மான்னும், எங்கம்மாவ சின்னம்மான்னும் கூப்புடுவோம். சின்னத்தாவ கட்டி வெச்சும் ரெண்டு வர்ஷம் கொழந்தயில்ல. எல்லாருக்கும் திரும்பவும் ரொம்ப பயமா போச்சு. தாத்தாவும், ரெண்டு ஆத்தாவும் விருத்தியூர் மாரிம்மனுக்கு வேண்டிகிட்டாங்க. வேண்டிகிட்ட அந்த வர்ஷமே உம்மோட பெரிப்பா பொறந்தாரு. ரெண்டு பெரிய அத்தைங்க, நானு, சின்னத்தன்னு வரிசயா பொறந்தோம்!
            பெரிப்பா பொறந்ததுமே தாத்தாவுக்கு விருத்தியூரு மாரிம்மன் மேல ரொம்ப பக்தியா போச்சு. அது வரைக்கும் வூட்டு வேலைக நெல, கதவு, சன்னல்லு அப்படின்னு செஞ்சவுரு மரச்சிற்ப வேல செய்ய முடிவெடுத்தாரு. அதுவரைக்கும் அவரு அது மாரி வேல செஞ்சதுல்ல. அவங்களோட முன்ன வகையறாவுல ரொம்ப வமிசத்துக்க முன்னாடி பாத்துருக்காங்க. அப்புறம் அதுல பொழப்பு கொறஞ்சதும் இப்படி வீட்டுவேலய்கப் பக்கம் திரும்பிட்டாங்க.
            தாத்தா மாரிம்மனுக்கு அன்னபட்சி செய்யறதுன்னு முடிவெடுத்தாரு. ந்நல்லா பெருமரம் தேவயா இருந்துச்சு. கும்பகோணத்துக்கு இந்தப் பக்கம் பாபாநாசம், தாராசுரத்துல ஆரம்பிச்சு அந்தப் பக்கம் திருமருகல் வரிக்கும் நெறய இடங்கள்ல தேடிப் பாத்துட்டு திருச்சேறயில ஒரு மரத்தப் பாத்துருக்காரு. ந்நல்ல கருங்காலி கட்ட. அத ஆள பாத்து வெட்டிக் கொண்டாந்துட்டாரு. நாப்பத்தெட்டு நாளு வெரதம் இருந்து மஞ்ச துண்டு மஞ்ச வெட்டி கட்டிகிட்டு கவுச்சி கிவுச்சிச் சாப்புடாம இருந்து செஞ்சு முடிச்சாரு.
            இப்போயும் திருவிழாப்போ அந்த அன்னபட்சி மேல மாரிம்மன்ன வெச்சுதான் சாமி பொறப்பாடு வரும். தாத்தா பண்ண அன்னபட்சியப் பாத்து பல கோயில்ல கூப்புட்டாங்க. என்னோட ந்த வேல விருத்தியூரு மாரிம்மனுக்கு மட்டுந்தான்னு தாத்தா முடியாதுன்னுட்டாரு. அப்புறம் கோயில்ல இருக்குற ல்லா வேலயும் பாத்துக் கொடுத்தாரு. இன்னுமும் தாத்தாவோட வேல அங்க இருக்கு. அன்னபட்சி அப்படியே ன்னா அம்சமா இருக்கு தெர்யுமாடா.
            அது ஒரு கணக்குடா. எத்தனையோ வமிசத்துக்கு முன்னாடி வுட்டுப் போன வேலய உங்க தாத்தா மனசுல அப்படியே ஒரு கணக்கா கொண்டாந்து செஞ்சு முடிச்சாரு. அந்தக் கணக்கு நம்ம குடும்பத்துல யாரோட மனசுலயாவது இருக்கும். உன்னோட மனசுலயும் இருக்கும்னு நெனக்கிறன்.
            தாத்தா போனதுக்கு அப்புறங் சொந்த பந்தங்கல்லாம் கைவுட்டுப் போயிட்டாங்க. பெரியாத்தா ஆம்புள மாரி ஒழச்சு குடும்பத்த தூக்கி நிறுத்துனுச்சி. சின்னாத்தா வூட்டுக்குள்ள இருந்துகிட்டு கொழந்தங்களா இருந்த எங்கள வளத்து ஆளாக்கிச்சு. வறுமன்னா தாங்க முடியாத வறும. அன்னன்னிக்கு நாள ஓட்டுறதே கஷ்டமா இருந்துச்சு. ஒங்க பெரிப்பா சின்ன வயசுலயே வேட்டிய கட்டிட்டு பெரிய மனுசம் மாரி வேலய்க்குப் போனாரு. நாங்கல்லாம் அப்போ ஆடு மேய்க்கப் போனோம். எப்படியோ காலம் ஓடிச்சு. ஒங்க தாத்தா மனசுல இருந்த கணக்க எங்களால பிடிக்க முடியாமப் போச்சுடா.
            கண்ணாலயே பாத்து அளப்பாரு. எல்லாங் கண்ணளவுதானாம். அளந்து பாத்தா அவ்வளவு கச்சிதமா இருக்கும்பாங்க. அளந்து வருவி எடுத்தாருன்னா சட்டம் வெச்சு அளந்து பாக்கவே வேண்டியதில்ல.
            ஒனக்கு இப்போ அந்த மாரி கஷ்டம், வறுமல்லாம் எதுவுமில்ல. நீ படிக்கணும்டா. தாத்தா பண்ண மாரி அன்னபட்சிய நீயும் பண்ணணும்டா!" என்றார் அப்பா.
            "அதுக்கு நம்மள நீங்க ஆச்சாரி வேலிக்குல்ல அனுப்பியிருக்கணும்!" என்றான் விகடு.
            அப்பா சிரித்தார். "டேய் அன்ன பட்சிங்றது ஒரு குறி. மரவேலயில்ல மட்டுந்தான் அன்னபட்சிய உருவாக்கணுங்றதுல்ல. நீ போடுற கணக்கு துல்லியமா இருந்து அத பாத்து ஊரு உலகம் மூக்குல கை வெச்சா அதுவுங் அன்னப்பட்சிதான்டா!"
            விகடு மூலம் ஒரு அன்ன பட்சி உருவாக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் அப்பா.
            அப்பாவின் கனவு புரியாமல் நோட்டுப் புத்தகங்கள் என்று ஆங்காங்கே நுணுக்கி நுணுக்கி எதையாவது எழுதி கவிதைகள் என்ற பெயரில் கிறுக்கித் தள்ளிக் கொண்டிருந்தான் விகடு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...