செய்யு - 26
பஞ்சு மாமா வடவாதியில் கொல்லுப்பட்டறை
வைத்திருந்தது. முருகு மாமா, லாலு மாமாவிலிருந்து பஞ்சு மாமா மாறுபட்டது. மீண்டும்
ஒரு விசயத்தை ஞாபகப்படுத்துவதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இவர்கள் அனைவரும்
விகடுவுக்கும், செய்யுவுக்கும் தாத்தா முறையில் வருபவர்கள். விகடுவின் அம்மாவுக்குதான்
இவர்கள் மாமாக்கள். அதுவும் தாய் மாமாக்கள். விகடுவின் அம்மா இவர்களை மாமா எனக் கூப்பிடுவதைப்
பார்த்து விகடுவும் அப்படியே கூப்பிடப் போய், அது அப்படியே செய்யுவையும் தொற்றிக்
கொள்ள இவர்கள் மாமாவானவர்கள்.
பஞ்சு மாமா மிகவும் மென்மையானவர். யார்
எது கேட்டாலும் அதை அப்படியே கொடுத்து விடும் மறுக்க முடியாத மனசுக்காரர். பட்டறைக்கு
யார் வந்தாலும் டீக்கடைக்கு உடனே ஆள் அனுப்பி விடுவார். ஒரு வாய் டீ குடிக்காமல் பட்டறையை
விட்டு வர முடியாது.
சுற்றுப்பட்டி கிராமங்களில் எங்காவது திருவிழா
என்றால் எல்லா பிள்ளைகளும் பஞ்சு மாமாவின் பட்டறைக்குப் படையெடுத்துக் கொண்டு போய்
விடும். பஞ்சு மாமா எல்லா பிள்ளைகளுக்கும் சில்லறைகள் தருவார். எல்லா பிள்ளைகளும் என்றால்
சொந்தக்காரப் பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளோடு கூட வந்தப் பிள்ளைகள் என்று வேறுபாடில்லாமல்
எல்லா பிள்ளைகளுக்கும் தருவார்.
விகடுவின் அம்மா வெங்கு தொடங்கி இப்போது
விகடு மற்றும் செய்யு வரை இது தொடர்கிறது எனும் போது நீங்களே யோசித்துப் பார்த்துக்
கொள்ளுங்கள், குழந்தைகளுக்காக பஞ்சு மாமா எவ்வளவு சில்லறைகளைக் கொடுத்திருப்பார்
என்பதை. எங்கு திருவிழா என்றாலும் பஞ்சு மாமாவைப் பார்த்து விட்டுதான் பிள்ளைகள் திருவிழாக்களுக்குப்
போகும். இதனால் பஞ்சு மாமாவுக்கு விகடுவையும் செய்யுவையும் பொருத்த வரையில் காசு
மாமா என்ற பெயரும் உண்டு.
கொல்லுப்பட்டறை வேலை என்பதால் பஞ்சு மாமாவின்
வேட்டி எப்போதும் கருப்பாக இருக்கும். சட்டைப் போட மாட்டார். கழுத்தில் ஒரு கருப்புத்
துண்டு கிடக்கும். அது கண்டிப்பாக ஏதோ ஒரு நிறத்திலான துண்டுதான். அவரது கரி வேலை
துண்டுக்கும் அந்த நிறத்தைக் கொடுதிருந்தது. பஞ்சு மாமா கொஞ்சம் பெருத்த உருவம்.
எந்நேரமும் சதா வேலை பார்த்த வண்ணம் இருப்பார். உடம்பிலிருந்து எப்போதும் வியர்வை
வழிந்த வண்ணம் இருக்கும். விஷேசங்களிலும் அவரை அதிகம் பார்க்க முடியாது. பெண்டு பிள்ளைகளை
அனுப்பி விட்டு பட்டறையே கதியே எனக் கிடப்பார். ஏதாவது விஷேசங்களில் பார்த்தாலும் வந்த
சுவடு தெரியாமல் கிளம்பி விடுவார்.
பஞ்சு மாமா நிறைய சம்பாதித்தார். கொல்லு
வேலையைக் கொழுத்த வேலை என்பார்கள். அதுவும் விவசாய வேலைத் தொடங்கும் நாட்களில் இரவு
பகல் என்று பார்க்க முடியாது. வேலை எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும். அசராமல்
மண்வெட்டிகளுக்கு இலையைத் தட்டி காம்பு போட்டுக் கொண்டே இருப்பார். அந்த நாட்களில்
லாலு மாமாவும் பட்டறைக்குப் போய் சுத்தியல் போடுவார் அல்லது துருத்தி ஊதிக் கொண்டிருப்பார்.
செய்யுவுக்குப் பஞ்சு மாமாவின் பட்டறையிருந்து
வரும் சுரீர் சத்தம் ரொம்பப் பிடிக்கும். அதற்காகவே அவள் பட்டறைக்குப் போக விரும்புவாள்.
அரிவாள், கொடரி, கடப்பாரை, மண்வெட்டியின் இலை என்று எது அடித்தாலும் அதைப் பழுக்க வைத்துதான் சுத்தியலால் அடித்து வாகான
வடிவுக்குக் கொண்டு வருவார்கள். அடித்து முடித்து வாகான வடிவம் வந்த பின் பக்கத்தில்
இருக்கும் கரும் திரவமாய் மாறி இருக்கும் தண்ணீர்த் தொட்டியில் போடுவார்கள். அப்போதுதான்
அந்த சுரீர் என்ற சத்தம் வரும்.
பொதுவாக இரும்படிக்கும் இடத்தில் குழந்தைகளைப்
பஞ்சு மாமா அனுமதிக்காது. பெண் பிள்ளைகளுக்கு இந்த விசயத்தில் கொஞ்சம் சலுகை உண்டு.
கொஞ்ச நேரம் பார்க்க அனுமதித்து விட்டு பிறகு கிளம்பச் சொல்லும். அதற்கு ஒரு காரணம்
இருந்தது. பஞ்சு மாமாவுக்குப் பெண் குழந்தைகள் இல்லை என்ற ஏக்கம் உண்டு. அதனாலேயே அக்காவான
சாமியாத்தாவின் அத்தனை பெண் பிள்ளைகள் மீது அதுக்கு அளவற்றப் பாசம் இருந்தது.
"வூட்டுக்கு ஒரு பொம்பள புள்ள இருக்குணும்ங்றேங். நமக்குப் பொறந்தது மூணும்
ஆம்பளப் புள்ளயோலாப் போயிடுச்சு." என்று உச் கொட்டுவார்.
முருகு மாமா, லாலு மாமா இரண்டு பேரும்
பணத்தை மதிக்கும் அளவுக்குக் குணத்தை மதிக்கத் தெரியாதவர்கள். எதைப் பேசினாலும் அவர்களின்
பேச்சு கடைசியில் பணத்தில் வந்துதான் முடியும். பஞ்சு மாமா இதற்கு நேரெதிர். குணத்தைக்
கொண்டாடும். பஞ்சு மாமாவின் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. பணம் இல்லாமல்
போய் விட்டால் முருகுவும், லாலுவும் தன்னை மதிக்காமல் போய் விடுவார்களோ என்ற பயம்தான்
அது. அது சதா சர்வகாலமும் வேலைப் பார்த்துக் கொண்டே இருந்ததுதான் காரணமும் அதுவாகத்தான்
இருந்திருக்கும்.
உறவுகளிடம் பழகுவதில் முருகு மாமாவும்,
லாலு மாமாவும் இருவேறு அளவுகோல்களை வைத்திருப்பார்கள். பணம் இருப்பவர்களிடம் ஒரு மாதிரியாக
மதிப்பும் கெளரவமுமாகப் பழகுவார்கள். பணம் இல்லாதவர்களிடம் ஒரு மாதிரியாக எகத்தாளமாக
நக்கலாக நடந்து கொள்வார்கள். தன்னிடம் ரெண்டு பேரும் எகத்தாளமாகவே நக்கலாகவோ நடந்து
விடக் கூடாது என்ற அச்சம் பஞ்சு மாமாவுக்கு இருப்பதை பட்டறைக்குப் போகும் அப்பாவிடம்
அடிக்கடிப் பகிர்ந்து கொள்வார்.
கொல்லு வேலையில் அவர் அதிகம் சம்பாதித்தார்
என்றாலும் லாலு மாமாவும், முருகு மாமாவும் வேறு லெவலில் பொருளாதாரத்தில் முன்னேறிப்
போய் கொண்டிருந்தார்கள். லாலு மாமாவுக்கு வேணி அத்தை சம்பளத்தோடு சேர்த்துப் பார்த்தால்
ரெண்டு சம்பளம். முருகு மாமா திட்டையூரார் சர்க்கரை ஆலையில் நல்ல வேலையில் இருந்ததால்
நல்ல சம்பளம். வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களையெல்லாம் அது ஆலையின் பண்டசாலையிலேயே
குறைந்த விலைக்கு வாங்கி வந்து விடும். சம்பளம் இதனால் முருகு மாமாவுக்கு பெருமளவில்
மிச்சமாகும். இது தவிர உறவுக்காரர்களுக்குக் கல்யாணம் என்று ஆலையில் எழுதிக் கொடுத்தால்
குறைந்த விலைக்கு சீனி வாங்கிக் கொள்ளலாம். அப்படிப் பல கல்யாணங்கள் நடந்ததாக எழுதிக்
கொடுத்து குறைந்த விலைக்கு சீனியை வாங்கி அதை நல்ல விலைக்கு வேறு விற்று சம்பாதித்துக்
கொண்டிருந்தது. இது தவிர முருகு மாமாவும், லாலு மாமாவும் சீசன் வியாபாரங்களில் இறங்கிக்
கடை போட்டு காசு பார்ப்பார்கள். திருவிழாக் கடைகள் போடுவதில் துவங்கி, பொங்கல் என்றால்
கரும்பு விற்பது, தீபாவளி என்றால் வெடி விற்பது என்று பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள
எல்லா விசயத்திலும் இறங்கி அடிப்பார்கள். அந்த சீசன் வியாபாரத்தில் பஞ்சு மாமாவை மட்டும்
கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். பஞ்சு மாமாவின் மனதில் அதுவும் ஒரு பெரும்
ஏக்கமாக இருந்தது.
பஞ்சு மாமாவுக்குச் சம்பாத்தியத்தைப் பொருத்த
வரையில் எந்தக் குறையுமில்லை. முருகு மாமா, லாலு மாமாவோடு ஒப்பிடும் போது பஞ்சு மாமாவின்
சம்பாத்தியம் உசத்தியில்லை என்பதைத் தவிர. இதை வைத்துக் கொண்டே முருகு மாமாவும், லாலு
மாமாவும் பஞ்சு மாமாவை மட்டம் தட்டுவார்கள். இது பஞ்சு மாமாவின் மனைவி ராணி அத்தைக்குப்
பிடிக்காது. இதனால் ராணி அத்தை பஞ்சு மாமாவை வீட்டில் ஒரு நிமிஷம் தங்க விடாது.
"சீக்கிரம் போங்க. அவிய்ங்கள விட ஒத்த காசு நம்மகிட்ட கூட இருக்கணும்!"
என்று விரட்டி விடும்.
அப்போது ஓகையூரில் ப்ளாட் பிடிப்பது என்பது
பிரசித்தம். ப்ளாட் பிடிப்பது என்றால் வயலை ஒத்திக்கு எடுப்பது. வயலை வைத்திருப்பவர்கள்
ஏதேனும் சூழ்நிலையால் அந்த வருஷம் விவசாயம் செய்ய முடியாமல் போகலாம். அதற்காக வயலை
விவசாயம் செய்யாமல் போட்டு விடக் கூடாதே என்பதற்காக அந்த வருஷத்துக்கு மட்டும் ஒரு
மாவுக்கு இவ்வளவு பணம் என்று கணக்குப் பண்ணிப் பணத்தை வாங்கிக் கொண்டு ஒத்திக்கு விடுவார்கள்.
பொதுவாக ஒரு ப்ளாட் வயல் என்பது இரண்டே கால் மா. சில ப்ளாட் வயல் இரண்டரை மாவும் இருக்கும்.
இப்படி ஒரு வயல் அளவு வரைமுறை இந்தச் சுற்று வட்டாரப் பகுதிகளில் உண்டு. இதன் அடிப்படையில்
வயல் பிடிப்பது என்பது ப்ளாட் பிடிப்பதாக பெயர் மாறிப் போனது. ப்ளாட் பிடித்துப் பணம்
கொடுத்தவர் அந்த வருஷம் முழுவதும் வயலில் விவசாயம் செய்து கொள்ளலாம். வயல்காரர் மறுவருஷம்
வாங்கியப் பணத்தைக் கொடுத்து விட்டு வயலைப் பெற்றுக் கொள்வார். ஒருவேளை மறுவருஷம்
அவரால் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் எந்த வருஷம் பணம் கொடுக்கிறாரோ
அந்த வருஷம் வரைக்கும் வயல் பணம் கொடுத்தவரிடமே இருக்கும். இதில் வயலை ஒத்திக்கு விடுபவருக்கு
வட்டியில்லாமல் பணம் லம்பாகக் கிடைக்கும் என்பதால் விவசாயம் செய்யாதவர்களும் வயலை வாங்கிப்
போட்டு இது போல் ப்ளாட்டுக்கு விடும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
முருகு மாமா, பஞ்சு மாமா, லாலு மாமா என
மூன்று பேருக்கும் வயலைப் ப்ளாட்டுக்குப் பிடிப்பதில் போட்டியே நடக்கும். அதுவும்
ஓகையூரில் பிடித்து விட்டால் அந்த வருஷம் நல்ல லாபம் பார்த்து விடலாம் என்பதால் ஓகையூரில்
ப்ளாட் பிடிப்பது ஏக கிராக்கியாக இருக்கும்.
அந்த வருஷம் ஓகையூரில் பஞ்சு மாமாவை விட
முருகு மாமாவும், லாலு மாமாவும் நான்கு ப்ளாட்டுகள் கூடுதலாகப் பிடித்து விட்டன. பஞ்சு
மாமா இதையே பார்ப்போரிடமெல்லாம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது. இத்தனைக்கும்
பஞ்சு மாமாவே முருகு மாமா, லாலு மாமாவை விட கூடுதலாக மகசூல் எடுக்கும். விவசாய ஆட்களுக்கு
மண்வெட்டி, அரிவாள் அடித்துக் கொடுத்து சல்லிசாகத்தான் காசு வாங்கும் பஞ்சு மாமா.
சமயங்களில் காசு வாங்காமலும் விட்டு விடும். இதனால் விவசாய ஆட்கள் பஞ்சு மாமா வயலை
வந்து பார்க்க அவசியமே இல்லாத அளவுக்கு விசுவாசமாக வேலை செய்து கொடுப்பார்கள்.
அப்பாவைப் பார்த்த போதும் பஞ்சு மாமா,
"அவனுங்க நாலு ப்ளாட்டு கூட பிடிச்சுட்டானுங்க வாத்தியாரே!" என்றார்.
"உங்களுக்குப் பட்டறையில வேலய்க்கு
என்ன பஞ்சமா? ஆளுங்கதான் உங்களுக்குன்னா தனிவேல பாப்பாங்களே! அவங்க மொத்தமா நாலு ப்ளாட்டுக்கு
கூட அறுக்குறது எவ்வளவோ அதுக்குக் கொஞ்சம் கூட கொறயாம நாலு ப்ளாட்டு கம்மியா இருந்தாலும்
உங்களுக்கு வருதா இல்லியான்னு பாருங்க!" என்றார் அப்பா.
அப்போது செய்யுவும் கூட இருந்தாள்.
"ஆம்மா மாமா! இந்த வருஷம் பூரா எல்லா திருவிசாவுக்கு எங்கிளிக்கல்லாம் நெறய காசு
கொடுக்குற அளவுக்கு உங்களுக்குத்தான் நெறய விளயப் போவுது!" என்று செய்யு சொன்னதும்,
"ஏ ராசாத்தி!" என்று செய்யுவை அப்படியே அலாக்காகத் தூக்கி உச்சி மோந்தது
பஞ்சு மாமா.
*****
No comments:
Post a Comment