12 Mar 2019

சொன்னது நீதானா?



செய்யு - 22
            கிருஷ்ணா தியேட்டருக்குப் போகும் வழியில் நேராகப் போகாமல் வயலில் குறுக்கே விழுந்து போனால் வாரிக்கரைக்குப் போய் விடலாம். எப்படியும் வயலிலேயே ரெண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். வாரியைச் சுற்றியுள்ள வாய்க்கால்கள் எல்லாம் நெய்வேலி காட்டாமணக்கு மண்டிக் கிடக்கும். கோடைக்காலங்களில் எல்லாம் காய்ந்து போய் வாரியை அடைத்துக் கொண்டு கிடக்கும். விறகுக்காக அதை ஒடித்துக் கொண்டு வர பெண்டுகள் கிளம்பிப் போவார்கள்.
            அப்போது வைத்தி தாத்தா வீட்டுக்கு விகடு வந்திருக்கும் நாட்களில் அவன் சின்ன பிள்ளையாக இருந்ததால் கலா சித்தியும், வள்ளி சித்தியும் அவனையும் அழைத்துக் கொண்டு போவார்கள்.
            காய்ந்து கிடக்கும் அந்த காட்டாமணக்குகளைப் பெண்டுகள் உடைக்கும் வேகமும் அதை ஒரு கட்டாகக் கட்டித் தூக்கும் லாவகமும் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். கட்டுகள் ஒவ்வொன்றும் பெருங்கட்டுகளாக இருக்கும். அதைத் தூக்கிக் கொண்டு எப்படி நடக்கிறார்கள் என்பது விகடுவுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். கட்டுகளைக் கட்டுவதற்காகவே பழங்கயிறுகளை தயார் பண்ணி வைத்துக் கொள்வார்கள் பெண்டுகள்.
            "எப்புடிச் சித்தி இவ்ளோ பெரிய கட்ட தூக்குறே?" என்று விகடு கேட்டிருக்கிறான்.
            "புல்லுகட்டு அளவுக்குக் கூட பாரமா இருக்காதுடா செல்லம்!" என்று சொல்லி சிரிக்கும் சித்திகள் இரண்டும்.
            தூக்கிக் கொண்டு வரும் போது விகடுவின் தலையிலும் சிறிய கட்டு ஒன்று இருக்கும். "நீ ச்சும்மா நடந்து வாடா செல்லம்!" என்று சித்திகள் சொன்னாலும் விகடு தனக்கும் தலையில் கட்டு வேண்டும் என்று அழுவான். அதற்காகவே பெயருக்கு ஒரு சிறிய கட்டை அவன் தலையில் வைப்பார்கள். அவன் ரொம்ப சந்தோசமாக அதைத் தூக்கிக் கொண்டு எல்லாருக்கும் முன்பாக குடுகுடுவென்று ஓடி வருவான்.
            "இந்தப் பொடிப்பய எம்மாம் பெரிய கட்டத் தூக்கிட்டு எம்புட்டு வேகமாக போறாம் பாரு!" என்று சுற்றி கட்டுகளைத் தூக்கிக் கொண்டு வரும் பெண்டுகள் சிரிப்பார்கள்.
            அடுப்பில் அந்த காட்டாமணக்கை வைத்து எரித்தால் ஊர் கொண்ட புகையாக வரும். எவ்வளவு புகை வந்தாலும் காட்டாமணக்கின் ஓட்டை வழியாக வரும் புகையைப் பார்ப்பதற்கு அதிசயமாகத்தான் இருக்கும். அதைப் பார்ப்பதற்கென்றே கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டே விகடு உட்கார்ந்திருப்பான்.
            வாரிக்கரைக்குப் பெண்கள் கூட்டாகத்தான் போவார்கள். அப்படிப் போகும் போதும் சித்திகள் வாரிக்கரைப் போவதென்றால் மாலா  இல்லாமல் போக மாட்டார்கள். கலா சித்தி கல்யாணம் ஆகி தேன்காடு போன பின் வள்ளி சித்தியும், மாலாவும் போனார்கள்.
            காட்டாமணக்கை ஒடிக்கும் போது கிருஷ்ணா தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றிதான் பேசுவார்கள். யாரேனும் அந்தக் கூட்டத்தில் படம் பார்த்திருந்தால் அவர் கதையைச் சொல்ல மற்றப் பெண்டுகள் "ம்!" என்று சொல்லிக் கொண்டே கேட்டுக் கொண்டிருப்பார்கள். யாரும் படம் பார்க்கவில்லை என்றால் அவர்கள் போஸ்டரைப் பார்த்ததை வைத்தே ஒரு புதுக்கதையை உருவாக்கிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் சொன்ன கதைகளை இப்போது நினைத்துப் பார்க்கும் போது தியேட்டரில் அந்தப் படத்தைப் போய் பார்ப்பதை விட எவ்வளவு அருமையாக இருந்தது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு பெண்ணும் எவ்வளவு பெரிய கதை சொல்லி என்பது அந்த நேரத்தில்தான் தெரியும். அதைத் தவிர்த்து அவர்களுக்கு நிறைய நாட்டுப்புறக் கதைகளும் தெரியும். அரிச்சந்திரன் கதை, காத்தவராயன் கதை, வீரன் பொம்மி கதை, பாஞ்சாலம்மன் கதை என்று ஏகப்பட்ட கதைகள் தெரியும் அவர்களுக்கு. சித்திகள் விகடுவுக்கு நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு கதை கேட்டாலும் போதாது அவனுக்கு. அவர்கள் சிலநேரங்களில் அவனுக்கு கதை சொல்லி அலுத்துப் போய் விடுவார்கள். மறுபடியும் மறுபடியும் அவன் கேட்கும் போது, "ஒரு ஊர்ல நரியாம்! அத்தோட சரியாம்!" என்று சொல்லிச் சிரிப்பார்கள். விகடுவுக்குக் கோபம் வந்து விடும். "வீட்டுக்குப் போறன்!" என்று சொல்லி ஓட ஆரம்பிப்பான். அவனை ஓடி வந்து பிடித்து உட்கார வைத்து எதையாவது கதை என்ற பெயரில் இட்டுகட்டிச் சொல்லி சமாளிப்பார்கள். அப்படி அவர்கள் இட்டு கட்டிச் சொல்லும் கதைகளும் அவ்வளவு அருமையாக இருக்கும்.
            மாலாவைப் பொருத்த வரையில் வள்ளி சித்தியை விட வயது கூடுதலாக இருக்கும். மாலாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற ஏக்கமும் இருந்தது. அதை விட முக்கியமாக வள்ளியும் கல்யாணம் ஆகிப் போய் விட்டால் தெருவில் தன் வயதுக்கு துணை யாருமில்லை என்ற பயமும் இருந்தது. "இந்த கோனாருதான் சீக்கிரமா அந்த மாலாப் பொண்ண ஒருத்தம் கையுல பிடிச்சுக் கொடுத்தாத்தான் என்ன?" என்று சாமியாத்தாவும் சொல்லும்.
            மாலாவுக்கு இவ்வளவு நாள் ஆகியும் கல்யாணம் ஆகாமல், வள்ளி சித்திக்குக் கல்யாணம் ஆவதால் மனசு பொறுக்காமல் தாத்தாவிடம் படம் பார்க்கப் போனதை மாலா சொல்லியிருக்குமா? என்று விகடுவுக்குச் சந்தேகமாக இருந்தது. அப்படியில்லாமல், வள்ளி சித்திக்கு எப்போதும் வாய் துடுக்கு என்பதால் அது எதாவது துடுக்குத்தனமாகவோ அல்லது திமிர்த்தனமாகவோ சொல்லி அதனால் மாலாவுக்கு மனசு பொறுக்காமல் சொல்லியிருக்குமா என்றும் சந்தேகமாக இருந்தது விகடுவுக்கு.
            எப்படியிருந்தாலும் பாஞ்சாலம்மன் மேல் யாரும் சத்தியம் செய்ய மாட்டார்கள். மாலா சத்தியம் செய்ததால் மாலா சொல்வதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. மாலாவின் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. வள்ளி சித்தியை அடிப்பதைப் பார்த்து அதுவும் அழுதிருக்க வேண்டும்.
            "செரி! நீ போம்மா!" என்ற சொல்லி விட்டு அப்பா கிளம்பினார்.
            மாலா சித்தி வீட்டுக்குள் ஓடிப் போய் நான்கைந்து ஓம ரொட்டிகளை எடுத்து வந்து செய்யுவின் கையில் கொடுத்தது. விகடுவுக்கு அதில் ரெண்டை கையைக் காட்டி நீட்டி வாங்கிக் கொள் என்பது போல் நீட்டியது. விகடுவுக்கு மாலாவின் மீது கோபமாக இருந்ததால் அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தான்.
            "சத்தியமா அத்தான்! நாம எதுவுஞ் சொல்லல!" என்றது மாலா சத்தமாக.
            அப்பாவுக்குக் குழப்பமாக இருந்திருக்க வேண்டும்.
            "இத்த என்னத்தப் போயி விசாரிச்சுகிட்டு? அப்படியே வுட்டுட வேண்டியதுதான்." என்ற அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டது விகடுவுக்கும் செய்யுவுக்கும் கேட்டது.
            கொட்டகைக்குள் வந்து பார்த்த போது வள்ளி சித்தி சிரித்துக் கொண்டிருந்தது. சாமியாத்தா சித்தியின் தலையில் கைவைத்து தடவிக் கொண்டிருந்தது.
            "சீக்கரமாவே எல்லாம் மாறிடுச்சு போல!" என்றார் அப்பா.
            "இவளோளுக்கு அடி வாங்குறது ன்னா புதுசா? வாங்கி வாங்கி எல்லாம் மரத்துப் போயிடுச்சுங்க. அடி வாங்குறப்ப பார்க்குறப்பதான் பாவமாக இருக்கு. அடிவாங்கிட்டு அப்புறமா சிரிக்கிறத பாத்தா எனக்கே அது மாதிரி கட்டி வெச்சி அடிக்கணும் போலருக்கும். ஒவ்வொருத்தியும் இந்த வூட்டுல அடிச்ச சேவண்டியிருக்கே. அவரு இப்படி இல்லனாலும் இவளுகள வெச்சு சமாளிக்க முடியுமா ன்னா?" என்றது சாமியாத்தா.
            "வெங்குவன்னா அழச்சுக் கொண்டாந்து விடவா?"
            "அவ வேற வந்து தேவயில்லாத நாட்டாம பண்ணுவா!"
            அப்பா சிறிது நேரம் எதுவும் பேசாமல் தாத்தாவின் கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.
            "செரி! நாம கிளம்புறேன்!" என்றார்.
            "செய்யுவன்னா விட்டுட்டுப் போங்கத்தான்!" என்றது சித்தி.
            "அந்தக் குட்டி இங்க இருக்கட்டுமே! காலயில வந்து அழச்சுகிட்டுப் போகலாம்!" என்றது சாமியாத்தாவும்.
            அப்பா நெற்றியைச் சுருக்கி யோசித்தார்.
            "ன்னா யோசன? அவ எதாவது சொல்லுவான்னா?" என்றது சாமியாத்தா.
            "செரி! இருக்கட்டும்! நாம மாமாவைக் கடத்தெருவுல பாத்துட்டுக் கிளம்புறேன்!" என்றார் அப்பா.
            சித்தி செய்யுவை பக்கத்தில் இழுத்துக் கொண்டது.
            அப்பாவும் விகடுவும் கிளம்பி வெளியில் வந்தனர். பாஞ்சாலம்மன் கோயில் முன் போடப்பட்டிருந்த சைக்கிளை எடுத்தார் அப்பா.
            சாமியாத்தா அப்போது வேகவேகமாக ஓடி வந்தது.
            "வேற எதாவது சேதி இருக்கா?" என்றார் அப்பா.
            மெதுவாக அருகில் வந்த சாமியாத்தா விகடுவைப் பார்த்து, "நீ கொஞ்சம் அங்கிட்டுப் போடா!" என்றது சாமியாத்தா.
            கொஞ்சம் நகர்வது போல நகர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்கும் தொலைவில் நின்று கொண்டான் விகடு.
            "தப்பு எம்பேர்லதாங்க இருக்கு!" என்றது சாமியாத்தா.
            "ன்னா உளர்றீங்க?" என்றார் அப்பா.
            "இவ சினிமா பாக்கப் போனத அவருகிட்டச் சொன்னது நாந்தான்!"
            அப்பாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. "நீங்க ஏம் சொன்னீங்க?" என்றார் அப்பா.
            "இவ அடங்க மாட்டேங்றா. ரெண்டு நாளிக்கு ஒரு தபா சினிமாவுக்குப் போயிட்டு இருக்கா! கல்யாணம் வேற ஆவப் போவுதுல்ல. அதாம் பயமாக இருந்துச்சு. அவருகிட்ட சொல்லி கண்டிச்சு வையுங்கன்னுதான் சொன்னேம். அவரு இப்பப் போயி இப்படிப் போட்டு பழய மாதிரியே அடிப்பார்னு நாம நினைக்கல! மனசுக்குள்ளயே வெச்சுங்க. வெளியில வுட்டுட வேணாம்." சொல்லிவிட்டு சாமியாத்தா விடுவிடுவென்று கொட்டகையை நோக்கிப் போனது.
            அப்பாவுக்கு சைக்கிளில் ஏற பிடிக்கவில்லை. சைக்கிளை அப்படியே ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, "டேய் தம்பி! சைக்கிள தள்ளிட்டு வாடா!" என்ற சொல்லிவிட்டு முன்னே நடந்தார். விகடு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அப்பாவின் பின் நடந்தான்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...