11 Mar 2019

கிருஷ்ணா தியேட்டர்



செய்யு - 21
            வைத்தி தாத்தாவுக்குக் கோபம் வந்து விட்டால் மகள்களை அந்த பூவரசு மரத்தில் கட்டி வைத்துதான் வெளுப்பார். அவர் கண்களில் படாமல் பெண்கள் வீட்டிலேயே ஒளிந்த மாதிரி நடந்து கொள்வது இதனால்தான். இப்படி அடிப்பதாலேயே "வைத்தி மாதிரி யாரும் பொண்ணுங்கள கட்டுசெட்டா வளக்க முடியாது!" என்று பேர் வாங்கியவர் தாத்தா. அப்படி பேர் வாங்குவதற்காகத்தான் தாத்தா அப்படி அடிக்கிறாரா என்று விகடுவுக்குச் சந்தேகமாக இருக்கும்.
            "கட்டி வெச்சு அடிக்கிற அளவுக்கு அப்படி ன்னா நடந்து போச்சு?" என்றார் அப்பா.
            "ராத்திரி கிருஷ்ணா தியேட்டருக்கு படம் பாக்கப் போயிருக்கு. இவருக்கு எப்படியோ விசயம் தெரிஞ்சுப் போச்சு. இவருக்குதான் படம் பாக்கப் போனா பிடிக்காதுல்ல. இந்த எளவெடுத்த முண்டம் அது தெரிஞ்சிருந்தும் ஏன் போய்த் தொலைஞ்சதுன்னு தெரியல. அதாம் கல்யாணம் ஆவப் போவதுல்ல. ஆன பின்ன போயி புருஷனோட எந்தக் கருமத்தையாவது பாத்துத் தொலைய வேண்டியதுதான. இப்படி ஏந்தாம் எம் பிராணனய வாங்குதுவோல்லோ தெரியலயே!" என்றது சாமியாத்தா.
            கிருஷ்ணா தியேட்டர் வைத்தி தாத்தா வீட்டிலிருந்து ரெண்டு பர்லாங் தூரத்தில் இருந்தது. அது ஒரு கொட்டாய் தியேட்டர். ரோட்டை ஒட்டிய இடத்தில் ஒரு பக்கம் மட்டும் ஓர் ஆள் உயரத்துக்கு காம்பெளண்ட் சுவர் இருக்கும். சுற்றியுள்ள மூன்று பக்கங்களும் மூங்கில் வேலி. அதற்கு உள்ளே, நடுமத்தியில் தியேட்டர். சுவரேறிக் குதிக்கும் அளவுக்குதான் தியேட்டருக்கான சுவர்கள். அதற்கு மேற்படி படம் தொடங்கி விட்டால் தார்பாயை இறக்கி விடுவார்கள். தரை டிக்கெட், பெஞ்சு டிக்கட், சோபா டிக்கெட் என்று மூன்று வித டிக்கெட்டுகள் உண்டு. தரை டிக்கெட் எடுத்தால் கொட்டிக் கிடக்கும் மணலில் உட்கார்ந்து படம் பார்க்கலாம். பெஞ்சு டிக்கெட் எடுத்தால் டீக்கடை பெஞ்சு சைசுக்கு போடப்பட்டிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்க்கலாம். சோபா டிக்கெட் என்றால் வசதியான நாற்காலிகளில் உட்கார்ந்து படம் பார்க்கலாம். அப்போது தரை டிக்கெட் ஒண்ணேகால் ரூபாய், பெஞ்சு டிக்கெட் இரண்டே கால் ரூபாய், சோபா டிக்கெட் மூன்றரை ரூபாய் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் தரை டிக்கெட்டில்தான் படம் பார்ப்பது. சமயங்களில் அம்மா அழைத்துப் போனால் பெஞ்சு டிக்கெட். அப்பா அழைத்துப் போனால் சோபா டிக்கெட்.
            தியேட்டரைச் சுற்றிலும் முச்சூடும் கருவக்காடு. ஊர்மக்கள் மலம் கழிக்க ஒதுங்கும் இடம். ராத்திரி நேரங்களில் பெண்டுகள் குழுவாக ஒதுங்கி விட்டு வருவார்கள்.
            அரிதாக சில நாட்களில் வைத்தி தாத்தா, "புள்ளிங்கலாம் என்ன பண்ணிட்டு இருக்குங்க?" என்று குரல் கொடுப்பார்.
            "இப்போதான் கிளம்பி கருவக்காட்டுப் பக்கம் போயிருக்குங்க!" என்று சாமியாத்தாவும் பதிலுக்கு வீட்டிலிருந்து குரல் கொடுக்கும்.
            "தனியாவா போயிருக்குங்க?"
            "சுத்தி உள்ள பொண்டுகளோட சேந்துதான் போயிருக்கு. மூடிட்டுப் படுங்க!"
            அதற்கு மேல் வைத்தி தாத்தா எதுவும் பேச மாட்டார். சாமியாத்தா இப்படித்தான் பிள்ளைகள் படம் பார்க்கப் போயிருக்கும் நாட்களில் சமாளிக்கும்.
            இப்போது நடந்திருக்கும் சம்பவத்தைப் பார்க்கையில், இதில் ஏதோ கோளாறு நடந்திருக்க வேண்டும் என்பது அப்பாவுக்குப் புரிந்தது.
            "கல்யாணம் ஆவப் போறப் பொண்ணு. ஒரு ஆசயில்ல பாத்துருக்கு. அதுக்கு இப்படிதாம் கட்டி வெச்சு அடிக்கிறதா?" என்று சொல்லி விட்டு சாமியாத்தாவிடம் அப்பா கட்டுகளை அவிழ்க்கச் சொன்னார்.
            "அத அவுக்கக் கூடாது. ராத்திரி முட்டும் இந்த நாற முண்ட அப்படியேத்தான் கட்டிக் கெடக்கணும்!" தாத்தாவிடமிருந்து ஆவேசமாய்க் குரல் வந்தது.
            "பாருங்கம்பி இப்படித்தான் அதட்டுறாரு! நாம் ன்னதான் பண்றது? ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. ரோட்டுல வர்ற சனம் போற சனம் எல்லாம் பாத்துட்டுப் போவுது. யாருக்கு அசிங்கம் சொல்லுங்க?" சாமியாத்தா கண்களைக் கசக்கிக் கொண்டது.
            "சொன்னா கேளுங்க மாமா! இப்பதான் அத்தைக்கி தஞ்சாவூரு கொண்டு போய் பாத்துட்டு வந்துருக்கு. அதிர்ச்சி தர்ற மாதிரி எந்த விசயத்தையும் அவங்க தாங்க மாட்டாங்க. நீங்க என்னான்னா எதையும் யோசிக்காம இந்த மாதிரி பண்ணிட்டு இருக்கீங்களே! இது நல்லாவா இருக்கு?"
            "அந்த நாற முண்டம் பண்ணது மட்டும் ந்நல்லாவா இருக்கு? அந்த நாயை இழுத்துப் போட்டு ரெண்டு வாங்கு வாங்கி நாக்கப் புடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்காம நமக்கு உபதேசம் பண்ணுறீங்களே!"
            "நீங்க கட்ட அவுத்து உள்ள கொண்டு போங்க அத்தே!"
            "அவர ஒரு வார்த்த சொல்லச் சொல்லுங்களேன்!"
            "அய்யய்யயே! நீங்க அவுத்து அழச்சுட்டுப் போங்க!"
            "இந்த வூட்டுல நமக்கு என்ன மருவாதயிருக்க? ஆளாளுக்கு நாட்டாம பண்ணா இது ன்னா குடும்பம்?" வைத்தி தாத்தாவின் குரல் கம்மலாக வெளிவந்தது.
            அதற்கு மேல் அப்பா யோசிக்கவில்லை. அப்பாவே போய் அவிழ்க்க ஆரம்பித்தார். கைகளைப் பின்னுக் கொடுத்து அங்கே இருந்த கட்டு, உடம்பைச் சுற்றி மாட்டுக்குக் கட்டும் மாலைகயிறு என எல்லாவற்றையும் அவிழிக்க ஆரம்பித்தார். விகடுவும் செய்யுவும் ஓடிப் போய் அவர்களின் பங்குக்கு அப்பா அவிழ்க்க அவிழ்க்க கயிறுகளைப் பிடித்து இழுத்தனர்.
            கட்டுகள் முழுவதும் அவிழ்க்கப்பட்ட உடன் சித்தி அழுது கொண்டே வீட்டுக்குள் ஓடியது.
            "நீங்கப் போய் உள்ள பாருங்க!" என்று அப்பா சொன்னதும் விகடுவும், செய்யுவும் சாமியாத்தாவைக் கைகளைப் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடினர்.
            "நீங்க பண்றது முறயில்ல மாமா!"
            "ஆறு பொட்டப் புள்ளிங்க. ஒண்ண கூட பழுதில்லாம கட்டிக் கொடுத்து இருக்கேன்!"
            "ம்! கொடுத்து இருக்கீங்க கொடுத்து இருக்கீங்க. எந்தப் பொண்ணுக்குன்னு நீங்க இன்ன வரைக்கும் ன்னா செஞ்சுருக்கீங்க? சொல்லுங்க பார்ப்பம். அப்புடியே வேலக்கிப் போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டா போதுமா? வேலகள இழுத்துப் போட்டு செய்யுறது யாரு? அந்தப் புள்ளிங்கதான இத்தன நாளும் மாடா ஒழைச்சு ஓடா தேஞ்சிருக்குங்க. அப்படி மாடா ஒழைச்சதுக்கு மாடு கட்டுற மரத்துலயே கட்டி ஒதைச்சுறிக்கீங்க. ஒண்ணு சுய புத்தி இருக்கணும். இல்லன்னா சொல்லு புத்தியையாவது கேக்கணும். ரெண்டும் ல்லன்னா ன்னா பண்றத?"
            "இப்ப ன்னா பண்ணணுங்றீங்க?"
            "இனும இது மாதிரி அடிக்குறத நிப்பாட்டணும்?"
            "நாம ன்னா லூசுப் பயலா? ச்சும்மா இருக்குறவங்கள அடிக்குறதுக்கு?"
            "அவள கண்டிச்சீங்களா நீங்க? இப்புடி நமக்கு புத்திமதிச் சொன்னா இந்த வூட்டுல ன்னா மரியாத இருக்கு எனக்கு?" தாத்தா கோபமாக துண்டைத் தோளில் தூக்கிப் போட்டு விட்டு கடைத்தெருவை நோக்கி நடந்தார்.
            அப்பா கூரைக் கொட்டகைக்குள் நுழைந்தார். சித்தி அழுது கொண்டிருந்தது. விகடுவும், செய்யுவும் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டு, "அழுவாத சித்தி!" என்று ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தனர்.
            "இவளாலயே எனக்குப் பாதி சீவன் போச்சு. இப்ப இவ பண்ணிகிட்டு இருக்குறதப் பாத்தா மீதி சீவனும் போயிடும் போலருக்குங்க!" என்றது சாமியாத்தா.
            "பாத்தீங்களா அத்தான்! எப்படிப் போட்டு நம்மள அடிக்குறாரு? பெத்த பொண்ணுன்னா ன்னா வேணா பண்ணலாமா? ஏன் ஆசயா நாம ஒரு படம் பாக்கக் கூடாதா? என்ன சீக்குரமே நாளிக்கே கல்யாணம் பண்ணி வுட்டுடுறுங்க. நம்மால இந்த வூட்டுல இருக்க முடியாது. நாம போயித் தொலயுறேன்!" அழுகையும் ஆவேசமாக சித்தி பேசி முடித்தது.
            அப்பா சிரித்தார். "நீ நம்மகிட்ட சொன்னா நாம அக்காவ அனுப்புறேன். நீங்க எல்லாருமா சேர்ந்து சினிமாவுக்குப் போவ வேண்டியதுதான? நீ ஏம் தனியா போனே? சரி! போனதுதன் போனே அந்த மனுசருக்குத் தெரியாமல போவ வேண்டியதுதான? இப்புடியா தெரியுற மாதிரி போயிட்டு வந்து அடிவாங்குவாங்க?"
            "எல்லாம் தெரியாமத்தான் அத்தான் போனேன். கோனாரு வீட்டு மாலாப் பொண்ணுதான் போட்டுக் கொடுத்துடுச்சு!"
            "அது ஏம் போட்டு விட்டுடுச்சு? நீங்க ரெண்டு பேரும் உயிர் சிநேகிதிகளாச்சே! எப்படி நடந்துச்சு இது?"
            "அவுங்க வூட்டுல கொடுத்த நக சாமானுகள அவளுக்குக் காட்டுனேன் அத்தான். நக சாமானுகள ஒரு தடவ போட்டுப் பாக்குறேனுச்சு மாலா பொண்ணு. அவங்க எனக்காகத்தான அத்தான் கொடுத்து வுட்டுருக்காங்க. அத எப்புடித்தான் நாம அவ போட்டுப் பாக்க கொடுக்க முடியும்? இதச் சொல்லித்தான் போட வேண்டாமுன்ன சொன்னேம் பாருங்க. அத கருகருன்ன மனசுல வெச்சிருந்தாப்பா போலருக்கு அத்தான். போட்டுக் கொடுத்துட்டா."
            "சரி! நா விசாரிக்குறேன்!" என்ற அப்பா கோனார் வீட்டை நோக்கிப் போனார். விகடுவும் செய்யுவம் பின்னால் ஓடினார்கள். அப்பா வருவதைப் பார்த்ததும் மாலா ஓடி வந்து அப்பா முன் நின்று, "சத்தியமா அத்தான். நாம எதுவுஞ் சொல்லல. பாஞ்சாலம்மா மேல சத்தியம்!" என்றது.
            "அய்! செய்யு பாப்பா!" என்று மாலா செய்யுவைத் தூக்கிக் கொண்டது.
            "வூட்டுக்கு வா விகடு!" என்று மாலா வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போனது.
            அப்போது கலா சித்தி, வள்ளி சித்தி, மாலாவோடு வாரிக்கரையோரம் காட்டாமணக்குப் பொறுக்கிக் கட்டிய நாட்கள் நினைவுக்கு வந்து போயின விகடுவுக்கு.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...