9 Mar 2019

யாரது?



செய்யு - 19
            நகைநட்டு சீர்சனத்தியெல்லாம் பிற்பாடு செய்து கொள்ளலாம் என்பதால் வள்ளி சித்தியின் கல்யாணத்தை முடிப்பதில் வைத்தி தாத்தா தீவிரமாக இருந்தார். அதே நேரத்தில் அவர் தீவிரமாக இருப்பார் என்றாலும் காரியங்களையெல்லாம் மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துப் போட மாட்டார். விகடுவின் அப்பா மருமகனாய் வரும் வரையில் முருகு மாமா, பஞ்சு மாமா, லாலு மாமாவின் தலையில் எல்லாம் விடிந்தது. இப்போது அந்த நிலையில மாற்றம். அப்பா எல்லா காரியங்களையும் பார்த்து செய்து விடுவார். மேலும் வைத்தி தாத்தா  தன் வாழ்நாளில் நம்பிய ரெண்டு மனுசர்களில் ஒருத்தர் அப்பா மற்றொருவர் குமரு மாமா.
            சாமியாத்தா தஞ்சாவூரிலிருந்து தேறி வந்த நிலையில் வள்ளி சித்தியின் ஏற்பாடுகள் அதிதீவிர நிலையை அடைந்தன. பொதுவாக வைத்தி தாத்தாவுக்கு குமரு மாமா தவிர வேறு யாருக்கும் செலவு செய்வதென்றால் அறவே பிடிக்காது. இந்த திருமணத்தில் சீர் சனத்தி இப்போது இல்லையென்பதால் தாத்தாவுக்கு ரொம்ப குஷியாகி விட்டது.
            குமரு மாமா வெளிநாட்டிலிருந்து கடிதம் போட்டது. அதில் வள்ளி சித்திக்கு செய்ய வேண்டிய நகைநட்டுச் சாமான்களையெல்லாம் ரெண்டு வருசங்களுக்குள் சரியாக செய்து விடுவது குறித்து உறுதியளித்து எழுதியிருந்தது. தவிர மாணிக்கநாயகமும் அதற்கான உறுதிமொழியை தன் பங்குக்கு, "அப்ப குமரு ஒனக்க எதுவும் செய்யலன்னாலும் நாம் அதப் போட்டு எல்லாத்தயும் ரெண்டு வருசத்துக்கள செய்யுறோம்!" என்று உறுதிபடுத்தியது.  இதனால் வள்ளி சித்தி கல்யாணத்துக்கு பிகு காட்டுவதை நிறுத்திக் கொண்டது. சீக்கிரம் கல்யாணத்தை முடித்து வையுங்கள் என்று சொல்லும் நிலைக்கு ஆளானது. கல்யாணம் முடிவதற்குள் வள்ளி சித்தி போட்ட ஆட்டம் இருக்கிறதே! புடவை இன்னா மாதிரி எடுக்க வேண்டும் என்றது. கல்யாணம் மண்படம் டவுனில்தான் பார்க்க வேண்டும் என்றது. கல்யாண சாப்பாடெல்லாம் இன்னின்ன் மாதிரி இருக்க வேண்டும் என்றது. மொத்தத்தில் அந்த நேரத்தில் வீட்டையே ரெண்டாக்கி விடும் அளவுக்கு அலம்பல் பண்ணியது.
            "இவ ன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஆடுறா?" என்று சாமியாத்தா அவ்வபோது புலம்பியது.
            பாகூர் மாப்பிள்ளை முகூர்த்தோலை முடிந்ததும் வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த நகைநட்டுகள், சேலைகள் எல்லாவற்றையும் வள்ளி சித்திக்குப் போட்டு விட்டுப் போனார். வள்ளி சித்தி நாளொரு புடவை கட்டிக் கொண்டது. நகை நட்டுகளைப் போட்டுக் கொண்டு உலா வர ஆரம்பித்தது.
            "அற்பனுக்கு வாழ்வு வந்தா இப்படித்தான் அர்த்தராத்திரியில குடைபிடிப்பானாம்!" என்று சாமியாத்தாவும் திட்டியது.
            வள்ளி சித்திக்கு திருமாங்கல்யம் செய்யும் வேலையை பாக்குக்கோட்டை தாத்தாவிடம் ராசாமணி ஒப்படைத்தனர். விகடுவுக்கும், செய்யுவுக்கும் அவர் தாத்தா. விகடுவின் அம்மா வெங்குவுக்கு அவர் சித்தப்பா. வெங்குவின் சின்னம்மா அதாவது சாமியாத்தாவின் ரெண்டாவது தங்கச்சி சரசுவைத்தான் பாக்குக்கோட்டை தாத்தா ராசாமணி கல்யாணம் செய்து கொண்டிருந்தார்.
            சரசு ஆத்தாவைக் கல்யாணம் செய்து கொண்ட பின் வடவாதி வகையறாவில் நடைபெறும் எல்லா கல்யாணங்களுக்கும் ராசாமணி தாத்தாதான் திருமாங்கல்யம் செய்து கொடுத்தார். அதற்கான பவுனை வாங்கி அவரிடம் கொடுத்து விட வேண்டும். வாங்கிக் கொடுக்கும் பவுனில் அவர் செய்யும் திருமாங்கல்யத்தில் குற்றம் இருப்பதை கலா சித்திக் கல்யாணத்தில் கண்டுபிடித்து அது பெரும் பிரச்சனை ஆகியது.
            "இனிமே அந்த பயகிட்ட நகை நெட்டு செய்யுற வேலய இத்தோட விட்டுடணும்!" என்று வைத்தி தாத்தா சத்தம் போட்டார்.
            இப்போது இருக்கின்ற அவசரத்தில் கூட குறைச்சல் போனாலும் அவரையே செய்ய விட்டு விடுவது என்று முடிவானது.
            வடவாதி வகையறாவில் சம்பந்தம் வைத்துக் கொண்டதில் ரொம்ப வசதியானர் பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தா. அவர் நகை வேலை செய்து வந்ததில் வருமானம் அமோகமாக இருந்தது. பாக்குக்கோட்டை சனங்கள் பலருக்கும் அவர்தான் நகை ஆசாரி.
            அவர் வடவாதிக்கு வந்தால் வீட்டு சாப்பாடு ஆகாது என்பார். இதற்காக ஓர் ஆளை ஏற்பாடு பண்ணி டவுனுக்குப் போய் ஒட்டல் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவார்கள். அதைத்தான் சாப்பிடுவார். சரசு ஆத்தாவின் அழகைப் பார்த்து ராசாமணி தாத்தா அவரைக் கட்டிக் கொண்டு போனதாக சாமியாத்தா அடிக்கடிச் சொல்லும்.
            "அவ மட்டும் ன்னா? வூட்டுக்குத் தெரியாம இங்கதான் வந்து கெடப்பா. பானையிலேர்ந்த அரிசியை அள்ளி வாயில போட்டுகிட்டு, அப்படியே கொஞ்சம் அரிசியை பாவடையில முடிஞ்சுகிட்டுப் போவா. பேச்சி, கொணவதி எல்லாம் ஒண்ணும் மண்ணுமா கெடந்து விளயாடுங்க! எதுவும் அவள சின்னம்மான்னே கூப்புடாதுக. சரசுன்னு பேரு சொல்லித்தான் கூப்பிடுங்க! அவரு வேலய விட்டு வர்ற வரைக்கும் இங்கதான் விளயாடுங்க. அவரு வந்துட்டா எல்லாம் எங்கு போகும்னு தெரியாது. தெசக்கு ஒண்ணா பறந்துடுங்க" சாமியாத்தா சொல்லும் போது வேடிக்கையாக இருக்கும். இதே பேச்சுதான். இதே முகபாவனைதான். சாமியாத்தா சொல்ல பத்து முறையாவது இதைக் கேட்டிருப்பான் விகடு.
            "ஏந் யாத்தா? தாத்தாவுக்கு அவங்களயெல்லாம் பிடிக்காதா?"
            "அவருக்கு யாரத்தான் பிடிக்கும்? புள்ளங்கன்னா யெரிஞ்சு யெரிஞ்சு விழுவாரு! குமரை மட்டுந்தான்டா அவரு மடியில தூக்கி வெச்சிக் கொஞ்சியிருக்காரு. அப்பறம் ஒன்னய பக்கத்துல உட்கார்ந்துக்க வுடறார். உங்க அப்பங்கிட்ட மட்டுந்தான் சரிசமமா பேசுவாரு! மாணிக்கநாயவம் வந்தா பேசுவாரு. வேற யாரத்தான் அவருக்குப் புடிக்கும்?"
            சாமியாத்தா சொன்னதை விகடு நேரிலேயே பார்த்திருக்கிறான். வைத்தி தாத்தாவிடம் பேசும் போது மிக பவ்வியமாகப் பேச வேண்டும். வீட்டுக்கு வருபவர்களை 'வாங்க' என்று கூப்பிடும் பழக்கம் கூட இல்லாதவராக இருந்தார். அவர் இருக்கும் நேரத்தில் யார் வீட்டுக்கு வந்தாலும், "யாரது?" என்றுதான் குரல் கொடுப்பார். "நாந்தான்!" என்று குரல் கொடுத்தால் தொலைந்தார்கள். "நாந்தான்னா அது யாரது?" என்பார் மறுபடியும். வந்தவருக்கு முகம் சுண்டிப் போய் விடும். அவரைப் பொருத்த வரை யார் வந்தாலும் ஊரைச் சொல்லி உறவு முறையைச் சரியாக சொல்ல வேண்டும். அவர் கதவு லேசாகத் திறந்திருக்கும்படி திண்ணையில் இருக்கும் கட்டிலில் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருப்பார். அவரின் குரல் கனமாக இருக்கும். சாமியாத்தா வீட்டில் இருந்தால் வேக வேகமாக திண்ணைக்கு ஓடி வந்து வந்தவர்களை அழைத்துக் கொண்டு கூடத்துக்குப் போய் விடும். அதற்கு மேல் அவர் எதுவும் பேச மாட்டார்.
            பாக்குக்கோட்டை தாத்தா கல்யாணம் ஆன புதிதில் சரசு ஆத்தாவோடு வந்த போது "யாரது?" என்று இதே கேள்வியைக் கேட்டு வெளியிலேயே நிறுத்தியிருக்கிறார் வைத்தி தாத்தா.
            "நாந்தான் சரசு. அவங்க கூட வந்திருக்கேன்!" என்ற சரசு ஆத்தா பதில் சொல்லியிருக்கிறது.
            "அதென்ன வூட்டுக்கு வந்தவங்கள யாரதுன்னு கேட்குறது? வந்தவங்கள வாங்க வாங்கன்னுதான் கூப்புடணும். மரியாதகெட்டத்தனமால்ல இருக்கு. கிளம்புடி நாம போவோம்!" என்று பாக்குக்கோட்டை தாத்தாவுக்குக் கோபம் வந்து விட்டது.
            சாமியாத்தா சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து சரசுவை அழைத்துக் கொண்டு பாக்குக்கோட்டை தாத்தாவையும் உள்ளே கூப்பிட்டு இருக்கிறது. பாக்குக்கோட்டை தாத்தா வீட்டுக்குள் வராமல் அப்படியே திரும்பி போய் விட்டார். திரும்பிப் போனவர் முருகு மாமா, பஞ்சு மாமா, லாலு மாமாவிடம் பஞ்சாயத்து வைத்திருக்கிறார்.
            "அத்தான் அப்படித்தான். இங்க வந்தாலும் வூட்டுக்குள்ள வரமாட்டாரு. சைக்கிள்ல அப்படியே ஒத்தகால பெடல்ல வெச்சுகிட்டு மறுகால திண்ணப் படியில ஊனிகிட்டு டேய்னுதான் கூப்புடுவார். ஓடிப் போய் நிக்கணும். 'எனக்கு வேல கெடக்கு. ஓகையூருல அறுவடை ஆயிட்டு இருக்கு. கண்டுமொதல் பண்ணி வூட்டுல கொண்டாந்து சேத்துடுங்கன்னு' போயிடுவாரு. நாங்கதான் போயி நின்னு எல்லாத்தயும் பண்ணி வூட்டுல சேக்கணும். மனுசம் பேச்சுதான் அப்படி இருக்கும். மத்தபடி எதுலயும் சம்மந்தப்பட்டுக்க மாட்டார்." என்றிருக்கிறார் முருகு மாமா.
            "அதுக்குன்னா என்னயும் மரியாத இல்லாம யாரதுன்னா கேப்பாரூ?" என்ற கோபம் கொப்புளிக்க கேட்டிருக்கிறார் பாக்குக்கோட்டை தாத்தா.
            "அதெல்லாம் அவருக்குப் புரியாது. வேலக்கிப் போவாரு. வூட்டுல திண்ணையில இருக்குற கட்டுல்ல கதவ சாத்திகிட்டுப் படுத்துக் கெடப்பாரு. வூட்டுல இந்தாண்ட கெடக்குறத அந்தாண்ட நவுத்திப் போட மாட்டாரு. யாரும் அவரு எதுக்க கிதுக்க போயிட முடியாது. சரிசமமா உக்காந்துப் பேசிடவும் முடியாது. நின்னுகிட்டதான் பேசணும். இதனாலய அவரு பெரிய மருமொவன் வாழ்க்கப்பட்டுகாரர் அவரு இருந்தா வூடு வர வந்துட்டு வூட்டுக்குள்ள வராமலயே போயிடுவாரு. வேலக்கிப் போயி அவரு வூட்டுல இல்லன்னாத்தான் வூட்டுக்குள்ள வந்து சாப்புட்டுப் போவாரு!"
            "அவரு ன்னா அம்மாம் பெரிய ஆளா? எல்லாம் அவருக்குக் கெடந்து ஆடுவீங்க போலருக்கு?"
            "நீங்க எங்க வூட்டு மருமொவம் மாதிரி அவரும் மருமொவம். மூத்த மருமொவம். ரொம்ப கோபக்காரரு. ரோஷக்காரரு. எங்க எல்லாத்தியையும் டேய்னுதான் கூப்புடுவாரு. நடுங்கிகிட்டேதான் போயி நிக்கணும். லாலு வாத்தியாரு ஆனதுக்கு அப்புறமும் கடத்தெருவுல பாக்குறப்ப டேய் லாலுன்னுதான் கூப்புடுறாரு. ன்னா பண்றது? போயி நிக்கத்தான் வேண்டியிருக்கு!"
            "வருசயா பொட்டப் புள்ளங்களயா பெத்து வெச்சுகிட்டு இவ்ளோ திமுரா அவருக்கு? எல்லாத்தயும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்ல? அப்ப பாத்து வெச்சுக்கிறன்! அஞ்சப் பெத்தா அரசனும் ஆண்டிம்பாங்க. இவரு ஆற பொண்ணால்ல பெத்து வெச்சிருக்காரு!" என்று அப்போது பொருமியிக்கிறார் பாக்குக்கோட்டை தாத்தா.
            பாக்குக்கோட்டை தாத்தாவின் பொருமலுக்கு காலம் மிக மோசமாக பதில் சொன்னது. வைத்தி தாத்தா அசால்ட்டாக ஆறு பெண்களையும் கல்யாணம் முடித்துக் கொடுத்தார். எந்தக் கல்யாணத்திலும் அவர் பட்டுக் கொண்டதில்லை என்பது இதில் வேடிக்கையானது. வந்த மருமவன்கள் எல்லாம் அவர் முன் அடங்கி ஒடுங்கி நிற்க வேண்டியிருந்தது. அல்லது அவர் கண்ணில் படாமல் ஒதுங்கி இருக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தப் பாக்குக்கோட்டை தாத்தா ரெண்டே பொண்ணுகளப் பெத்து அத கல்யாணம் முடிக்க படாதபாடு பட வேண்டியிருந்தது. அதைப் பின்னால் நேரம் வரும் போது சொல்கிறேன்.
            புகுந்த வூட்டுக்குப் போன பெண்கள் ஆசை ஆசையாகப் பிறந்த வூட்டுக்கு வந்தால், "பஸ்ஸூ திரும்பிப் போறதுக்குள்ள கிளம்பிடுறீயா?" என்பார் வைத்தி தாத்தா. இதனால் வடவாதிக்கு வரும் பெண்கள் தாத்தா வேலைக்குப் போன நேரத்தில் வந்து அவருக்குத் தெரியாமல் திண்ணைக்கு வராமல் இருந்து விட்டு நான்கைந்து நாட்கள் இருந்து போவார்கள். பெத்தப் பெண் வீட்டுக்கும் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது வைத்தி தாத்தாவுக்கு.
            வைத்தி தாத்தா திண்ணையில் வந்து உட்கார்ந்தால் உட்கார்ந்ததுதான். உட்கார்ந்திருப்பார் அல்லது படுத்திருப்பார். ஒண்ணுக்கு அடிக்க மட்டும் பூவரசம் மரத்தடிக்குப் போவர். ரெண்டுக்குப் போவதென்றால் சுடுகாட்டாங்கரைக்குப் போவார். மற்றபடி அவரை வெளியே பார்க்க முடியாது. சாப்பாடு, தண்ணியெல்லாம் "வூட்டுல யாரது?" என்ற குரலுக்கேற்ப கொண்டு போய் கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். அந்தக் குரலின் வேகத்துக்கு ஏற்பது கேட்கப்படுவது தண்ணீரா அல்லது சாப்பாடா என்பது வீட்டில் இருப்பவர்கள் விளங்கிக் கொள்வது படு தமாசாக இருக்கும். "கெழத்துக்கு இப்போ தண்ணிக் கொண்டு போ!" "கெழத்துக்கு இப்போ சாப்பாடு கொண்டு போ!" என்று தாத்தாவின் குரல் கேட்கும் போதெல்லாம் ஏகத்துக்கும் வள்ளி சித்தி சாமியாத்தாவை நக்கலடிக்கும்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...