14 Mar 2019

சலித்துத் தூர்ந்த சிரிப்பு



செய்யு - 24
            தவறு என்று தெரிந்தும் அதையே மீண்டும் செய்ய வேண்டி வரும் பாருங்கள், அதுதான் உறவுமுறையில் தவிர்க்க முடியாதது. அதே தவறை வெவ்வெறு காரணங்களுகாக சப்பைக்கட்டு கட்டிக் கொண்டு மீண்டும் மீண்டும் வேறு செய்ய வேண்டியிருக்கும். இதை எதற்காக சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், பாக்குக்கோட்டை தாத்தாவிடம் நகை செய்ய கொடுக்கக் கூடாது என்பதில் வைத்தி தாத்தா உறுதியாக இருந்தார். சொந்த பந்தம் விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக மாணிக்கநாயகமும், அப்பாவும் வலியுறுத்த "எங்கேயாவது செஞ்சுத் தொலைங்க!" என்றபடி வைத்தி தாத்தா அதற்கு அனுமதித்திருந்தார்.
            பொதுவாகப் பவுனில் கை வைத்தாலும் சரியான நேரத்துக்கு நகையைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார் பாக்குக்கோட்டை தாத்தா. வள்ளி சித்தி கல்யாணத்தில் அதிலும் பிறண்டு விட்டார். அவர் என்ன செய்வார்? அவர் சூழ்நிலை அப்படி ஆகியிருக்க வேண்டும்.
            ராசாமணி தாத்தா எனும் பாக்குக்கோட்டை தாத்தா பாக்குக்கோட்டையில் பேர் பெற்ற நகை ஆசாரி. இந்த வகையறாவில் அவர் அளவுக்கு சம்பாத்தியமாக இருந்தவர்கள் குறைவு. மூன்று வேளை சாப்பாடும் வாழையிழையில்தானாம். நெய் இல்லாமல் எந்த வேளை சாப்பாடும் இறங்காதாம் அவருக்கு. சரியான சோக்குப் பேர்வழி.
            சரசு ஆத்தா ராசாமணி தாத்தாவைக் கல்யாணம் செய்து இரண்டு ஆண்டுகள் வரை பிள்ளை இல்லாமல் இருந்ததாம். இதுவே குடும்பத்தில் ஒரு பிரச்சனை ஆக பாஞ்சலம்மனுக்கு வேண்டிக் கொண்டதாம். அப்போதேல்லாம் சரசு ஆத்தா பாஞ்சாம்மாவுக்கு விரதம் இருந்த கோயிலில் பைத்தியத்தைப் போல உருண்டு புரளுமாம். "எம்ம புருஷம் எம்ம வுட்டுப் போவப் போறாம்!" என்று சத்தம் போடுமாம். சாமியாத்தாவும் அப்போதெல்லாம் விபூதி அடித்து விட்டிருக்கிறது.
            கல்யாணம் ஆனதிலிருந்து சரியாக மூணரை வருஷம் முடிந்து பாலாமணி பிறந்தானாம். பாலாமணி பிறந்த பின் நன்றாக இருந்த பாக்குக்கோட்டை தாத்தா நொடித்துப் போக ஆரம்பித்தாராம். இதை சரசு ஆத்தாவே அடிக்கடி எல்லாரிடமும் சொல்லி சலித்துக் கொள்ளும், "ந்நல்லா இருந்த குடும்பத்த பாவிப்பய வந்து பொறந்து கெடுத்துப்புட்டான்டி!"
            "ந்நல்லா இருக்குடி ஒங் கூத்து! கொழந்த இல்லன்னு நாட்டயே அந்த பாடு படுத்துன நீ! கொழந்த பொறந்துடுச்சுன்னு இப்போ இப்படிப் பேசுறீயே. ந்நல்லா இருக்குடி ஒங்க ஞாயம்!" என்று சாமியாத்தா அதுக்கு நெட்டி முறித்துக் கொண்டே பதில் சொல்லும்.
            பாக்குக்கோட்டை தாத்தா நொடித்துப் போனதற்கு பாலாமணியின் பிறப்பை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. பாக்குக்கோட்டை தாத்தாவைத்தான் காரணமாகச் சொல்ல முடியும். அவருக்கு சீட்டாட்டம், நகை செய்வதில் பித்தலாட்டம், குடி என்று எல்லா மோசமானப் பழக்கங்களும் இருந்தன. அவருக்கு தலைமுறை தலைமுறையாக இருந்த சொத்துகளையெல்லாம் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகி இழந்து கொண்டிருந்தார். உச்சபட்ச இழப்பு என்பது குடியிருந்த வீட்டை விற்றது. அது பாலாமணி பிறந்த போது நிகழந்தது.
            பாலாமணி தவழ்ந்து விளையாடியது எல்லாம் வாடகை வீடுகளில்தான். வீடுகள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வாடகை கொடுக்க முடியாமல் வீடு வீடாக மாறிக் கொண்டிருந்தார்கள். ராசாமணி தாத்தாவால் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாமல் இந்த வீடு மாறும் படலம் நடந்து கொண்டிருந்தது. அந்த அளவுக்கு அந்த நாட்களில் அவர் சூதாட்டத்தில் மூழ்கிப் போனாராம். நகை செய்யக் கொடுத்த பவுனில் கை வைத்து அது தொடர்பான வழக்குகளையும் அவர் எதிர்கொண்டிருந்தாராம். அவர் கை வைத்த ஒவ்வொன்றிலும் தரித்திரம் தாண்டவமாடியது. அவ்வளவே இதில் நடந்த விசயம். இதில் பெண்கள் பாவம் என்ன செய்வார்கள்? புருஷனைக் குறை சொல்ல முடியாது. பிள்ளைகளைக் குறை சொல்லிக் கொஞ்சம் ஆறுதல்பட்டுக் கொள்கிறார்கள். சரியாக அந்த நேரத்தில் தாத்தாவின் தங்கச்சி அஞ்சு தாத்தாவின் வீட்டிலேயே வாழாவெட்டியாக வந்து ஆறு ஆண்டுகள் வரை தங்கியிருந்ததாம். ஏற்கனவே அதிகமாய்க் குடித்துக் கொண்டிருந்த ராசாமணி தாத்தா இதைக் காரணம் சொல்லி இன்னும் மிக அதிகமாய்க் குடித்துக் கொண்டிருந்தாராம்.
            ராசாமணி தாத்தாவுக்கு ஆத்தாவைப் போட்டு அடிக்கும் பழக்கமும் அந்த நாட்களில் உண்டாகியிருந்ததாம். இவ்வளவு நடந்தும் தாத்தா மிடுக்கை விடாமல் நடந்து கொள்வாராம். வீட்டில் யார் பட்டினி கிடந்தாலும் வாழையிலையில் சாப்பாடு நெய் சகிதம் அவருக்குத் தயாராக இருக்க வேண்டுமாம். சரசு ஆத்தா அக்கம்பக்கத்தில் வேலைக்குப் போய், கடனுக்கு வாங்கி என்று நிலைமையைச் சமாளித்துக் கொண்டிருந்ததாம்.
            விகடுவின் உறவினர்களில் யாரிடமும் கேட்டாலும் இதையெல்லாம் கதை கதையாகச் சொல்வார்கள்.
            அப்படி இருந்த பாக்குக்கோட்டை தாத்தாதான் இப்போது வள்ளி சித்தி கல்யாணத்தில் காவி வேட்டியும் சட்டையுமாக வந்து நின்றார்.
            "அடேய் முருகு! இந்தப் பயலுக்கு என்னாச்சு?" என்று முகத்துக்கு நேராகவே முருகு மாமாவிடம் கேட்டார் வைத்தி தாத்தா.
            "பாத்துப் பேசுங்க! மொதுவா பேசுங்க! மச்சாங் காதுல வுளுந்துடப் போவுது! அப்பறம் எதாச்சும் பெரச்சனையாடும்!" என்றார் முருகு மாமா.
            "அடப் போடா! மங்குனிப் பயலே! என்னடா மொதுவா பேசுறது? நாம போயி அவங்கிட்டயே கேட்டுக்கவா?"
            வைத்தி தாத்தா விடுவிடுவென்று நடந்தார். முருகு மாமா கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார்.
            "மலையாள தேசம் போயி மாந்திரீகர்கிட்ட சோசியம் கத்துகிட்டாராம். இனுமே நக செய்யுற வேலய செய்யப் போறதில்லயாம். சோசியர் ஆயிட்டதால காவிதாங் கட்டணமாம்!"
            "இனும நக செய்யறவன் தப்புச்சான். சோசியம் கேக்கப் போறவ மாட்டிக்கப் போறாம் போருக்கு! அது சரி நாம கொடுத்த நம்ம நகய இவம் எப்படிச் செஞ்சானாம்?"
            "அத இன்னொரு நக ஆசாரிகிட்ட கொடுத்துதாம் பண்ணிருக்காரு. அதாம் அவரிட்டேருந்து வாங்கியாறதுக்கு தாமசமாயிடுச்சாம்!"
            "பேஷ்! பேஷ்! ரொம்ப நல்லதாப் போச்சு. இனும இவங்கிட்ட ஏம் நக செய்யக் கொடுக்கலன்னு யாரும் கேட்க மாட்டியல்லே!" வைத்தி தாத்தா பெரிதாக சத்தம் போட்டுச் சிரித்தபடி இதைச் சொன்னார்.
            இதெல்லாம் சரசு ஆத்தாவின் காதுகளுக்குப் போயிருக்க வேண்டும். அது வாங்கி வந்த எவர்சில்வர் சாமானைக் கட்டிக் கொண்டு அழுதது.
            "கல்யாணத்துக்கு வாறதுக்கு பைசா காசில்ல. இந்த மனுசம் எல்லாத்தயும் கொண்டு போயி மறுபடியும் சீட்டு ஆடுறதுல வுட்டுப் புட்டாரு. இருந்த கொஞ்ச நஞ்ச காசையும் மலையாள தேசம் போறன்னு புடுங்கிட்டு வுட்டுப் புட்டாரு. காசிக்கு நாம எங்கப் போவேம்? வூட்டுல இருந்தது ஒரே ஒரு பித்தள அண்டா. அத அடகு வெச்சிட்டுதாங் இந்த சாமான வாங்கிட்டு பஸ்ஸ புடுச்சு ஓடியாறேன். நம்ம நிலமெ இப்படியா ஆகணுங்?" மூக்கைச் சிந்தியபடி மூசு மூசு என்று அது அழுதது.
            "வுடு தங்கச்சி! கல்யாண வேல எவ்வளோ கெடக்குப் பாரு. எழும்பிப் போயி வேலயப் பாரு. எல்லாஞ் சரியாயிடும்!" என்று சாமியாத்தா இடுப்பில் இருந்த சுருக்குப்பையில் நிரப்பியிருந்து விபூதியை எடுத்து சரசு ஆத்தாவின் மேல் அடித்து விட்டது.
            "ன்னம்மோ போ க்கா! பாக்குறவுங்க என்ன சொல்லுவாங்க? இப்புடி குடும்பத்துல இருந்துட்டு காவிய கட்டிக்கலாமா? கேட்டதுக்கு சொவுத்துலயே வெச்சு தலய தேச்சுப்புட்டாரு. மண்ட முழுக்க நாலு நாளா வலி." மண்டையைப் பிடித்துக் கொண்டது சரசு ஆத்தா.
            "ஏண்டி புள்ளைவோல அழைச்சுகிட்டு வந்தானடி. வீசுன கை வெறுங் கையுமா புருஷன மட்டுங் புடுச்சுகுட்டு வந்துருக்கே!" சாமியாத்தா பேச்சை மாற்றப் பார்த்தது.
            "அதுங்கள அழைச்சுட்டு வாறதுக்கு பஸ்ஸூ காசுக்கு எங்கப் போறது? அதாங் கெடக்கட்டும்ணு அங்கயே வுட்டுபுட்டு வந்துட்டன்."
            "புள்ளங்க சாப்பாட்டுக்கு என்னாடி பண்ணும்?"
            "இவர்ரு அங்க இல்லன்னக்கா எல்லாந் நல்லா சாப்புடும். இவர்ரு இருந்தாத்தான் அதுங்க அங்க இங்க வேல செஞ்சு சேக்குற காசையும் புடுங்கிட்டு போயிடுவாரே!"
            "சோசியம்லாம் குடும்பத்துக்கு ஒத்துக்காதுடி! அதுல போயி ஏம்டி இறங்குனாரு ஒம் புருஷம்?"
            "எல்லாம் அந்த சீட்டாட்ட குருப்பு பண்ணுன வேல. இவரு அடிக்கடி சீட்டாடி தோத்துப் போறதால அந்த குரூப்பு இவர்ர கெளப்பிகிட்டுப் போயி மலையாள மாந்திரீகங்கிட்ட கொண்டு போய் நிப்பாட்டி குறிப்புக் கேட்டுருக்கு. அவரு இந்த ஆளப் பாத்ததும், இவ்ளோ நாளா எங்கடா இருந்தேன்னு கேட்டு, உம்மதான்டா தேடிட்டு இருக்கேம்ன்னு சொல்லி இங்க தங்கிட்டுப் போடாம்னுச்சுடாம்! இவர்ரும் அங்கய தங்கி ஏதேதோ ஒலய பொத்தகப் பொரட்டி கத்துகுட்டு வந்துருக்காரு. இனும சோசியம்தான் பார்ப்பாராம். அடிச்சுச் சொல்லிபுட்டாரு!"
            "உம்ம தலயெழுத்து! யாரு மாத்த முடியும் சொல்லு!"
            "எப்புடியோ க்கா! இப்போலாம் குடிக்குறதில்ல. சீட்டாடப் போறதில்ல. ஏதோ இப்படியே இருந்தா கொட‍ தேவல. எப்படியோ ஒழைச்சுக் கொட்டி குடும்பத்த தூக்கு நிறுத்திப்புடுவேன் க்கா!"
            பாவம் சரசு ஆத்தா! அனுபவிக்கக் கூடாத பல கஷ்ட நஷ்டங்களை அது அனுபவிக்குமாறு ஆகி விட்டது. அவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும் அதன் முகத்தில் ஒரு சிரிப்புக் களை இருக்கவே செய்தது. கஷ்டங்களைக் கண்டு அலுத்துப் போயிருக்க வேண்டும் அதுக்கு. அதுவும் சரிதான்! எப்போதாவது கஷ்டம் என்றால் அது ஒருவகைத் துயரத்தைக் கொடுக்கும். எப்போதும் கஷ்டம் என்றால் அந்த துயரமே ஒரு சிரிப்பையும் கொடுத்து விடுகிறது. உலுத்துப் போன சலித்துத் தூர்ந்த காலத்தின் எகத்தாளச் சிரிப்பு அது.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...