15 Mar 2019

ஆராய்ச்சி



செய்யு - 25
            விகடுவுக்கும் அவனது நண்பர்களுக்கும் அந்த நாட்களில் ஒரு பழக்கம் இருந்தது.
            வீடுகளில் பல்பு பீஸாகப் போய் விட்டால் அந்த பல்புகளையெல்லாம் சேகரித்து எடுத்து வைத்துக் கொள்வார்கள். இதற்காக ஒவ்வொரு வீடாகச் சென்று அந்த வீடுகளின் பின்னால் இருந்த குப்பைக்குழிகளைச் சோதனை போடவும் தயங்க மாட்டார்கள். அதில் பீஸாகப் போன பல்புகள் கிடந்தால் புதையலைக் கண்டெடுத்ததைப் போல கண்டெடுத்து கடத்திக் கொண்டு வந்து விடுவார்கள்.
            கண்டெடுத்த பல்புகளின் மேல் பகுதியை புல் அறுக்கும் அரிவாளால் கவனமாகக் கொத்தி எடுப்பார்கள். அதைக் கொத்தி எடுத்து விட்டால் காலி பல்பு ஒரு பாட்டில் போல அழகாக இருக்கும். பல்பை ஹோல்டரில் செருகுவதற்காக இரண்டு பக்கமும் நீட்டியிருக்கும் கம்பியை லேசாக ஒரு தட்டு தட்டினால் கீழே விழுந்து ஓட்டை விழுந்து விடும். அதில் நூலைக் கட்டினால் மாட்டித் தொங்க விடுவதற்கு பல்பு தயாராகி விடும். இப்போது அந்த பல்பில் தண்ணீரை ஊற்றி நீல இங்க், சிவப்பு இங்க், கலர் சாந்து போட்டு என்று கிடைக்கிற நிறத்தை வைத்து வண்ணமாக்கி விடுவார்கள். இதை வீட்டின் முன்னே அழகாகத் தொங்க விடுவார்கள். அதைப் பார்ப்பதற்கு ஆராய்ச்சிக் குடுவைப் போல இருப்பதால் அவர்கள் அதற்கு வைத்தப் பெயர் 'ஆராய்ச்சி'.
            நீங்கள் விகடு, முருகு, பரமு, சின்னு என்று யார் வீட்டிற்குச் சென்றாலும் பல வித வண்ணங்களில் பல விதமான ஆராய்ச்சிகள் திண்ணையில் தொங்கிக் கொண்டிருக்கும். யார் வீட்டில் அதிக ஆராய்ச்சிகள் தொங்கிக் கொண்டு இருக்கின்றன என்று இதில் ஒரு போட்டியே நடக்கும். இந்தக் கூத்துகள் அவர்கள் பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை தொடர்ந்தது. இந்த ஆராய்ச்சியில் ஒரு படி முன்னேறி டியூப் லைட்டிலும் வண்ண சாகசத்தைச் செய்து அசத்தியவன் பரமு. அவன் இதற்காக சிறிய பல்பிலிருந்து வித விதமான பெரிய பல்புகள் வரை சேகரித்து அதன் மேல் பாகத்தைக் கொத்தித் தள்ளிக் கொண்டிருந்தான்.
            ஊரில் பணம் அதிகம் வைத்திருப்பவரைப் பெரிய ஆள் என்று சொல்வதைப் போல இளவெட்டு செட்டுகளில் அதிக ஆராய்ச்சிகள் வைத்திருப்பவர் பெரிய ஆளாகச் சொல்லப்பட்டதால் பீஸான பல்புகளுக்குத் திட்டையில் பயங்கர கிராக்கி ஏற்பட ஆரம்பித்து விட்டது. இதனால் சின்ன சீரியல் பல்பிலிருந்து பெரிய நூறு வாட்ஸ் பல்பு வரை தெருவில் அல்லோகலப்பட்டது.
            ஆண் பிள்ளைகள் அட்ராசிட்டி செய்து கொண்டிருந்த இந்த வேலையில் பெண் பிள்ளைகள் இறங்கி விட முடியாது. வீட்டில் திட்டுவார்கள். "அந்தப் போக்கத்த பயலுகத்தான் மண்டக் கழண்டு போயி கண்டதையும் பண்ணிகிட்டு அலயுறானுவோனா, உங்களுக்கு என்னாடியாச்சு புத்திக் கெட்ட செறுக்கிகளா?" இப்படித்தான் ரொம்ப வெளிப்படையாகத் திட்டுவார்கள்.
            ஆண் பிள்ளைகளுக்கு இரக்கம் கொஞ்சம் இருந்ததால் ஆளாளுக்கு ஒன்றோ இரண்டோ ஆராய்ச்சிகளை பெண் பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். பதிலுக்கு அவர்கள் கொடுக்காப்புளி, பயத்தங்காய், வாதாங்காய், சப்பாத்திப்பழம் என்று கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் அன்றைய தினமே ஆராய்ச்சியைப் பறிமுதல் செய்து விடுவார்கள்.
            ஆண் பிள்ளைகளிடம் இருந்த இந்தப் போட்டி பெண் பிள்ளைகளிடமும் எப்படியோ வந்திருக்க வேண்டும்.
            விகடு இந்த விசயத்தில் பெரிய மனது பண்ணி ஓர் ஆராய்ச்சியைச் செய்யுவுக்குக் கொடுத்திருந்தான். செய்யுக்கு இன்னும் இரண்டு தேவைப்பட்டது.
            "ண்ணே! நமக்கு ன்னும் ரெண்டு கொடுண்ணே!" என்றாள்.
            "நீ உடச்சிடுவே பாப்பா. அந்த ஒண்ண பத்திரமா வெச்சுக்க! எல்லாம் நம்ம வூட்டுலதானே இருக்கு. எல்லாம் உன்னோடதாம் பாத்துக்கோ!" என்றான் விகடு.
            "ம்ஹூம்! நமக்கு ரெண்டு வேணும்!" என்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள் செய்யு.
            "ச்சொன்னா கேளு. இது பல்பு. உடஞ்சதுன்னா அம்மா சும்மா வுடாது! சின்ன புள்ளிகிட்ட யான்டா கொடுத்தேன்னு என்னத்தான் திட்டும்."
            "ஒண்ணும் திட்டாது. கொடுக்கலன்னத்தான் திட்டும்."
            "ச்சொன்னா கேட்க மாட்டே நீ!"
            "நமக்கு ஆராச்சி தர்றீயா இல்லியா?"
            "ம்ஹூம்! முடியாது போ!"
            செய்யு அழுது கொண்டே அம்மாவை அழைத்து வந்தாள்.
            "அவதான் அழுவுறால்ல. ஒண்ணு கொடேன்டா" என்றது அம்மா.
            "அதான் ஒண்ணு வெச்சுருக்குல்ல!"
            "அதச் சொல்லலடா. இன்னொன்னு கொடுத்துத் தொலயேண்டா!"
            "இது பல்பும்மா. உடஞ்சுதுன்னா பாத்துக்கோ. அப்பா திட்டுவாங்க. அத என்னால வாங்கிக்க முடியாது."
            "நான் சொல்லிக்கிறேன்டா. சின்ன புள்ளய அழுவ வுடாதே. கொடுடா ஒண்ணு!"
            விகடு மறுத்ததான்.
            அம்மாவே திண்ணையில் தொங்கிக் கொண்டிருந்த ஆராய்ச்சிகளில் ஒன்றை எடுக்கப் போனாள். 
            விகடு கையை நீட்டி மறித்தான்.
            "இதுங்களோட பெரிய ரோதனையாப் போச்சே!" அம்மா சலித்துக் கொண்டது.
            "அண்ணே அழகா கட்டித் தொங்க வுட்டுருக்குல்ல. அது அங்கயே தொங்கட்டும்டி செய்யு. அத ஏம் எடுத்துகிட்டு. உங்கிட்டதான் ஒண்ணு இருக்குல்ல. அத வெச்சுக்கடி." என்று அம்மா அடம் பிடித்த செய்யுவை இழுத்துக் கொண்டு உள்ளே போனது.
            "அவன் விளையாட போவட்டும். அப்ப ஒண்ண எடுத்து ஒனக்குக் கொடுக்குறன். இப்போ அழுவாம வாடி!" என்று அம்மா சொன்னதும், அழுது கொண்டே போன அழுகையை நிறுத்தி விட்டாள் செய்யு.
            எப்படியோ ஆராய்ச்சியைக் கொடுக்காமல் தப்பித்தாயிற்று என்ற மகிழ்ச்சி விகடுவின் மனதில் இருந்தாலும், விளையாடப் போனால் ஆராய்ச்சியில் ஒன்றை இழக்க நேரிடுமோ என்ற சந்தேகத்தில் அன்று முழுவதும் அவன் விளையாடப் போகாமல் இருந்தான். அத்தோடு செய்யுவிடம் இருக்கும் ஆராய்ச்சியையும் எப்படியாவது பிடுங்கிக் கொண்டு வந்து திண்ணையில் கட்டித் தொங்க விட்டு விட வேண்டும் என்ற திட்டமும் இருந்தது.
            ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை செய்யு பலவிதங்களில் ஆராய்ச்சி வேண்டுமென்று அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். அம்மா சாமர்த்தியமாக செய்யுவைச் சமாளித்துக் கொண்டிருந்தது.
            ஒரு கட்டத்தில் அம்மாவின் சமாளிப்பு செல்லுபடியாகாமல், "ராத்திரிக்குள்ள கொடுக்கலன்னா எல்லாத்தையும் அடிச்சு உடச்சுப்புடுவம் பாத்துக்கோ!" என்று செய்யு உக்கிரமான ஒரு மனநிலைக்கு வந்து சத்தம் போட்டாள்.
            விகடுவுக்குக் கோபம் வந்தது. அவன் ஓடிப் போய் செய்யுவின் கையில் இருந்த ஒரு ஆராய்ச்சியையும் பிடுங்கிக் கொண்டு வந்து திண்ணையில் கட்டினான். செய்யு மண்ணில் படுத்துக் கொண்டு கை கால்களை நீட்டி அழ ஆரம்பித்தாள்.
            "நீ கொடுக்குறீயா? இல்ல நாமளே போய் இப்ப எடுத்துட்டு வரவா?" என்று பயங்கரமா சத்தம் போட்டது அம்மா.
            பக்கத்து வீட்டு அம்மாசி அம்மா ஓடி வந்து, "ன்னா புள்ளடா நீ? சின்னப் புள்ளதான கேட்குது! ஒண்ணு கொடுத்தான்னா?" என்றது.
            "ஒண்ணு கொடுத்தா இன்னொன்னும் வேணுமாம்! யாரு கொடுப்பா?" என்றான் விகடு.
            "நீ வாடா குட்டி. இந்த ஊருலதான் நெறய பயலுவோ இந்தக் கருமத்த வெச்சிருக்கானுவோ இல்ல. நான் வாங்கித் தர்றேன்!" என்று செய்யுவைத் தூக்கிக் கொண்டு போனது அம்மாசியம்மா. அப்புறம் எப்போது அம்மாசியம்மா செய்யுவைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு கொண்டு விட்டது, யாரிடமாவது ஆராய்ச்சியை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்ததா, அல்லது வேறு என்ன நடந்தது என்று விகடுவுக்குத் தெரியவில்லை.
            எப்படியோ தன் ஆராய்ச்சி பழுதில்லாமல் தப்பி விட்டதாக நினைத்தான் விகடு.
            விகடு அப்படி நினைத்திருக்கக் கூடாதோ என்னவோ!
            மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது திண்ணையே அலங்கோலமாயிருந்தது. ஆராய்ச்சிகள் எல்லாம் உடைந்து திண்ணை முழுவதும் பல்புகள் உடைந்து கிடந்தன.
            "ம்மா! நம்ம ஆராய்ச்சியெல்லாம் வந்து பாரு. ஒண்ணு கூட இல்ல. ல்லாம் உடஞ்சிப் போயி கெடக்கு!" கதறும் தொனியில் சத்தம் போட்டான் விகடு.
            "இந்தக் கருமத்த கட்டித் தொங்க விடாத விடாதேன்னு சொன்னேன்ல. இப்படி ஒடஞ்சிக் கெடக்கே! யாரு பொறுக்குறது? காலுல குத்துனா என்னவாருது?" என்று விகடுவின் முதுகில் அம்மா நாலைந்து அடிகள் போட்டது.
            "ந்நல்லா போடும்மா! ன்னும் ந்நல்லா போடு!" சொல்லியபடி செய்யு சிரித்தாள்.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...