செய்யு - 37
நரிவலம் ஹாஸ்டல் பள்ளிக்கூடத்திற்குத்
தெற்காக கூப்பிடு தூரத்தில் இருந்தது. அது பழைய காலத்து ஓட்டு வீடு. முன்புறம் கூரை
போட்டு சற்று இழுத்து நீட்டியிருந்தார்கள். திண்ணையை ஒட்டி உள்ளே ஒரு வரவேற்பறை போன்ற
கூடம். அதன் இடப்பக்கமும் வலப்பக்கமும் இரண்டு அறைகள். வரவேற்பறைக் கூடத்தைக் கடந்து
உள்ளே சென்றால் நடுவில் முற்றம் அமைந்த கூடம். கூடத்தின் இடப்பக்கம் சமையலறை இருந்தது.
விகடுவோடு சேர்த்து அறுபது மாணவர்கள் அங்கே தங்கியிருந்தனர். கொல்லைப்பக்கத்தில்
பெரிய புழக்கத்துக்கு இடம் இல்லாமல் பத்தடி தூரத்தில் வேலி இருந்தது.
ஹாஸ்டலின் திண்ணைப் பக்கத்துக்கு வெளிப்புறம்
பெரிய இடமாக நீண்டிருந்தது. எப்படியும் ஐநூறு அடிக்கு மேல் நீளமிருக்கும். அதைத் தொடர்ந்து
ஒரு காம்பெளண்ட் சுவர் இருந்தது. அந்த காம்பெளண்ட் சுவரை ஒட்டி ஓரு கூரைக் கொட்டகை
இருந்தது. அந்தக் கூரைக் கொட்டகையில்தான் சமைப்பதற்குத் தேவையான விறகுகள் சேமிக்கப்பட்டு
இருந்தன. ஹாஸ்டலைப் பொருத்த வரையில் இந்தக் கூரைக் கொட்டகை முக்கியமான இடம். பின்னர்
அந்த ஹாஸ்டல் மூடப்படுவதற்குக் காரணமான ஒரு துர்பாக்கியமான சம்பவம் அந்தக் கொட்டகையில்தான்
நிகழ்ந்தது.
ஹாஸ்டல் வீட்டின் வலது பக்கம் பெருந்திடலாக
நீண்டிருந்தது. திடல் முழுவதும் ஆங்காங்கே தென்னை மரங்கள் நிறைய இருந்தன. அந்த தென்னை
மரங்களுக்கு இடையே கயிறு கட்டி ஹாஸ்டலில் இருந்த பிள்ளைகள் துணி காயப் போட்டனர்.
நரிவலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே
நல்ல தண்ணீர் கிடைத்தது. அந்தத் தண்ணீர் கிடைத்த இடங்களெல்லாம் அந்த காலத்துக் கிணறுகள்.
இந்தக் காலத்தில் போடப்பட்ட அனைத்து போர்களில் இருந்தும் வந்த தண்ணீர் உப்புத் தண்ணீராக
இருந்தது.
ஹாஸ்டலின் தென்மேற்கு மூலையில் ஒரு போர்க்
கொட்டகையில் அதை ஒட்டி ஒரு தண்ணீர் தொட்டியும் இருந்தது. அந்தத் தண்ணீர்த் தொட்டியில்
மோட்டரைப் போட்டு விட்டு தண்ணீர் பிடித்து வைத்திருப்பார்கள். கை, கால் அலம்புவதற்கும்,
தட்டு, தம்ப்ளர் அலம்புவதற்கும் அந்தத் தண்ணீரைத்தான் பிள்ளைகள் பயன்படுத்துவார்கள்.
அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியாது. கரிக்கும். அதனால் அந்தத் தொட்டிக்கு உப்புத்
தண்ணி தொட்டி என்று பிள்ளைகள் பெயர் வைத்திருந்தார்கள்.
ஹாஸ்டலுக்கு குடிதண்ணீர் ஓர் ஒற்றை மாட்டு
வண்டியில் வரும். ரேஷன் கடைகளில் வைத்திருப்பார்களே மண்ணெண்ணெய் டின், அது போன்ற டின்னை
படுக்கை வசத்தில் வைத்து அந்த ஒற்றை மாட்டு வண்டியைத் தயார் செய்திருந்தார்கள். ஹாஸ்டலுக்கும்,
பள்ளிக்கூட வாத்தியார்களின் வீடுகளுக்கும் அந்த ஒற்றை மாட்டு வண்டிதான் தண்ணீர்ச் சேவை
செய்து கொண்டிருந்தது. ஹாஸ்டலுக்கு வரும் நல்ல தண்ணீர் ஆண்டியப்பர் கோயில் கிணற்றிலிருந்து
வந்து கொண்டிருந்தது.
நரிவலத்தில் நல்ல தண்ணீர் கிடைத்த இடங்களில்
ஆண்டியப்பர் கோயில் கிணறு முக்கியமானது. அடுத்து வேலாயுத முதலியார் வீட்டுக் கிணறு
முக்கியமானது. முன்றாவதாக ஊருக்கு வெளியே இருந்த பெருங்கிணறு. இந்த மூன்று இடங்களில்
இருந்தும்தான் மக்கள் சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு நல்ல தண்ணீரைக் கொண்டு
வந்து கொண்டிருந்தனர். அங்கே கூட்டம் அதிகமாகி விடும் நேரங்களில் பக்கத்து கிராமமான
களக்காட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்தனர். களக்காட்டில் எல்லா இடங்களிலும்
நல்ல தண்ணீர் கிடைத்தது. இரண்டு கிராமங்களுக்கு இடையில் அதிகபட்சமாக இரண்டு அல்லது
மூன்று கிலோ மீட்டருக்கு மேல் தூரம் இருக்காது. களக்காட்டில் போர் போட்ட இடமெல்லாம்
நல்ல தண்ணீர் கிடைத்தது. நரிவலத்தில் உப்புத் தண்ணீராகக் கிடைத்தது. தெற்கே அப்படியே
களக்காட்டைக் கடந்து எந்த கிராமத்துக்குச் சென்றாலும் நல்ல தண்ணீர் கிடைத்தது.
நரிவலம் ஆண்டியப்பர் கோயிலைச் சுற்றிப்
பெரிய குளம் இருந்தது. கோயிலின் மூன்று பக்கங்களைச் சுற்றிலும் அந்த குளம் பரந்து
விரிந்திருந்தது. கிட்டதட்ட ஒரு தீபகற்ப அமைப்பு. கோயிலின் தென்னண்டைப் பக்கமிருந்த
குளக்கரையில் இருந்த ரோட்டைக் கடந்தால் பள்ளிக்கூடம் வந்து விடலாம். அந்த ரோடுதான்
பள்ளிக்கூடத்துக்கும் கோயிலுக்கும் போகும் முக்கியமான வழி. கோயில் குளத்தின் மேலண்டைப்
பக்கமும், வடவண்டைப் பக்கமும் மெயின் ரோடு. அந்த மெயின் ரோட்டில்தான் நரிவலத்தின்
கடைத்தெரு அமைந்திருந்தது.
கோயில் குளம் நரிவலத்துக்கு முக்கியமானது.
நரிவலத்தின் பெரும்பான்மையான சனங்கள் அங்குதான் குளித்தார்கள். ஹாஸ்டல் பிள்ளைகளுக்கும்
அதுதான் முக்கியமான குளியல் இடம். நரிவலத்திலிருந்து களக்காடு போகும் வழியில் வெண்ணாறு
இருந்தது. ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் ஆறு முக்கியமான குளியல் இடமாக மாறி விடும்.
ஹாஸ்டல் பிள்ளைகளும் அப்போது ஆற்றுக்குப் போய் விடுவார்கள்.
ஹாஸ்டலில் ஞாயிற்றுக் கிழமை முக்கியமான
நாள். அன்று மாலை நேரத்தில் தூர்தர்ஷனில் போடும் தமிழ்ப்படத்தைக் காட்டுவதற்காக பள்ளிக்கூடத்துக்கு
அழைத்து வருவார்கள். அப்படி மணிரத்னத்தின் ரோஜா, பாலுமகேந்திராவின் வீடு, இரவிச்சந்திரன்
நடித்த அதே கண்கள் போன்ற படங்களைப் பார்த்த ஞாபகம் விகடுவுக்கு இருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை படம் பார்த்து வந்த பின்னர்
அனைத்து மாணவர்களையும் ஹாஸ்டலில் இருக்கும் பெட்டிகளில் சோதனை போடுவார்கள். ஹாஸ்டல்
பிள்ளைகள் யாரும் பணம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது முக்கியமான விதி. மீறி பணம்
வைத்திருந்தால் முதல் முறை எச்சரிப்பார்கள். இரண்டாவது முறை தண்டிப்பார்கள். பிள்ளைகளுக்கு
சோப்பு, பவுடர், நோட்டு, பேனா, பென்சில் என எது தேவையென்றாலும் ஒரு துண்டுக் காகிதத்தில்
எழுதி வார்டனிடம் கொடுத்து விட வேண்டும். பிள்ளைகள் என்னென்ன வாங்கினார்களோ அது கணக்கில்
சேர்க்கப்பட்டு அது அந்தந்த மாதத்து ஹாஸ்டல் பீஸோடு சேர்க்கப்பட்டு விடும். ஒவ்வொரு
மாதத்துக்கான பீஸ் ஒரு அஞ்சலட்டையில் எழுதி பெற்றோர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு
விடும். அவர்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிறன்று அன்று பணத்தைக் கட்டி விட வேண்டும்.
வேறு நாள்களில் வர அவர்களுக்கு அனுமதி கிடையாது. அன்றைய தினம் பிள்ளைகளுக்குப் பிடித்த
தின்பண்டங்கள், உணவு வகைகளை அந்த ஒரு நாளுக்கு மட்டும் கொண்டு வந்து கொடுத்து விட்டு
பிள்ளைகளோடு பேசியிருந்து விட்டுப் போகலாம் பெற்றோர்கள். தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கும்
பிள்ளைகளுக்கு தாய்மார்கள் கொண்டு வந்த சாப்பாட்டை ஊட்டி விடும் காட்சி வேடிக்கையாக
இருக்கும். பிள்ளைகளும் ஆசையோடு ஊட்டி விடுவதை வாங்கிச் சாப்பிடுவது அதை விட வேடிக்கையாக
இருக்கும்.
கிட்டதட்ட கொஞ்சம் அணுக்கமாக யோசித்தால்
ஜெயிலில் இருக்கும் ஒருவரை ஆசையோடு அவருக்குப் பிடித்த பட்சணங்கள், பண்டங்களை வாங்கிக்
கொண்டு பார்ப்பதைப் போலத்தான் இருக்கும் அந்தக் காட்சி.
விகடுவைப் பொருத்த வரையில் ஹாஸ்டலில்
இருக்கும் அவனைப் பார்க்க அப்பா மட்டுமே வருவார். விகடுவோடு பேசியிருந்து விட்டுப்
போய் விடுவார். பேச்சும் அதிகமாக இருக்காது. நீண்ட நேரம் அப்படியேத்தான் உட்கார்ந்திருப்பார்கள்.
ஒரு மெளனப்படத்தைப் பார்ப்பதைப் போலத்தான் இருக்கும் அந்தக் காட்சி. எப்போதாவது பேசிக்
கொள்ளும் போது மணிரத்னம் படத்தைப் பார்ப்பதைப் போல பேச்சுகளும் அளந்தெடுத்து வைத்ததைப்
போல இருக்கும். அவர் மற்ற பெற்றோர்களைப் போல் விகடுவுக்கு எதுவும் வாங்கி வர மாட்டார்.
விகடுவுக்கு அப்பா வந்து போகும் மாதத்தின்
முதல் ஞாயிறு குறித்து சனியன்றே பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விடும். அன்றைய இரவில்
அவனுக்கு ஆயிரமாயிரம் கனவுகள் பயங்கரமாக வரும். அப்பா புதிதாக வாங்கிய டிவியெஸ் பிப்டியில்
ஓட்டத் தெரியாமல் ஓட்டிக் கொண்டு வருவதாகவும், ஓட்டி வந்த வண்டி விபத்துக்குள்ளாவது
போலும் ஏகப்பட்ட கனவு மயமாகி கலவரமாக இருக்கும் அவனுக்கு.
இந்தக் கனவுகளையெல்லாம் குறிப்பிட்டு ஒரு
முறை அப்பாவிடம் சொன்னான் விகடு, "நீங்க நம்மல பாக்கக் கூட வர வேணாம். மணியார்டர்லயே
பணத்த அனுப்பிடுங்களேம். இங்க வர முடியாத பெத்தவங்க அப்படித்தாம் பண்றாங்க!"
அப்பா சிரித்தார்.
"ஏன் சிரிக்குறீங்க?" என்றான்.
"கனவுன்னா அப்படிதாங் வரும்!"
என்றார் அப்பா.
"நீங்க வராம இருந்தீங்கன்னா நமக்கு
அப்டிலாம் கனவு வராதுல்ல!"
"அப்ப அப்பா வந்து பாக்கலையோன்னு
நெனக்கும்டா மனசு!"
"நம்மால அன்னிக்குப் படிக்கீவே முடியல!
மறுநா காலயில நீங்க வர வரய்க்கும் டபடபன்னு இருக்குது!"
"ரண்டு மூணு தடவ நாம்ம வந்துட்டுப்
போற வரிக்கும் அப்படிதாங் இருக்கும். அப்பால பழகிடும்டா!"
அப்பா அப்படிச் சொன்னாலும் அவன் ஹாஸ்டலில்
இருந்த நாட்களில் அவர் வந்து பார்த்த மாதத்தின் முதல் ஞாயிறு குறித்த கனவுகள் எதுவும்
பழக்கத்திற்கு வராமல் ஒவ்வொரு முறையும் அது புது முறையைப் போலத்தான் மென்மேலும் பயங்கரமான
கனவுகளாக வளர்ந்து கொண்டிருந்தன.
சில நாட்களில் அப்பா வந்து சேர்வதற்கு
பதினொரு மணி அல்லது பனிரெண்டு மணியாகி விடும். அது போன்ற நாட்களில் மிகுந்த கலவரமாக
இருக்கும் விகடுவுக்கு. நிலைகொள்ள முடியாமல் வாசலைப் பார்த்த வண்ணமே திண்ணைக்கு வெளியே
இருந்த வெளிப்பகுதியில் வெயிலிலேயே அமர்ந்திருப்பான் விகடு.
*****
No comments:
Post a Comment