13 Mar 2019

தாத்தாவின் கணிப்புகள்



செய்யு - 23
            வைத்தி தாத்தா திருத்துறைப்பூண்டிக்காரர். ஆத்தாவைக் கல்யாணம் கட்டிக் கொண்டு வந்து வடவாதியிலேயே தங்கி விட்டார். அவருக்குத் திருத்துறைப்பூண்டியில் சொந்தங்கள் இருந்தன. கல்யாணம் காட்சி என்றால் போவார். மற்றபடி அவர் சொந்தங்களைப் பார்க்க தனிப்பட்ட முறையில் போனது கிடையாது.
            கிருஷ்ணா தியேட்டர் இருந்த காலக்கட்டத்தில் அவர் மெயின்ரோட்டில் பெட்டிக்கடை ஒன்றை வைத்திருந்தார். வேலை விட்டு வந்து ஆறு மணிக்கு மேல் கடையைத் திறப்பார். அது குமரு மாமா வெளிநாடு போகாமல் ஊரில் இருந்த காலக்கட்டம். குமரு மாமா, வீயெம் மாமா எல்லாரும் கடையில் இருப்பார்கள். ஒரு சிறிய பெட்டிக்கடைக்கு மூன்று பேர்கள் இருப்பார்கள். சமயங்களில் அப்பாவும் அந்த வியாபாரத்துக்குப் போய் நிற்பார். அது போன்ற நேரங்களில் அந்த சிறிய பெட்டிக்கடைக்கு நான்கு பேர்கள் இருப்பார்கள். கிருஷ்ணா தியேட்டருக்கு வருவோர் போவோர்தான் மெயின் ரோட்டின் அந்த இடத்திலிருந்துதான் ஒடித்து தெரு வழியாக தியேட்டருக்குச் செல்ல வேண்டும். அவர்களே அந்தக் கடையின் வாடிக்கையாளர்கள். ராப்பொழுதில் இரண்டாவது ஆட்டம் விடும் போது கூட்டம் அள்ளும். பொருட்களை எடுத்துக் கொடுக்க பத்து பேர் இருந்தாலும் போதாது. வியாபாரமே அந்த நேரத்தில்தான். பீடி, சிகரெட்டு, பாக்கு, தீப்பெட்டி இவைகள்தான் முக்கிய வியாபாரப் பொருட்கள். அப்படி விற்றுத் தீரும் அவைகள். தாத்தாவுக்கு சினிமா பிடிக்காது. யாரும் சினிமா பார்க்கவும் கூடாது. இருந்தாலும் அவருக்கு இந்த சினிமா வாடிக்கையாளர்கள் முக்கியமானவர்கள். பல நேரங்களில் அவர் கிருஷ்ணா தியேட்டரைத் திட்டுவார், "ஒரு தியேட்டர ஆரம்பிச்சு ஊரயே கெடுத்துட்டானுவோ! இவ்ளோ சனங்களும் எந்த ஊர்ல இருக்குதுன்னே தெரியலியே. இப்படிக் கிளம்பி சார சாரயா போவுதுங்களே. உக்காந்து வூட்டுல உருப்படியா வேல பார்த்தா ன்னா?" என்பார்.
            சில மாதங்களில் தாத்தா அந்தக் கடையையும் வியாபாரத்தையும் இன்னொரு தாடி வைத்த தாத்தா ஒருவரிடம் கைமாற்றி விட்டு விட்டார். வியாபாரம் நல்ல லாபமாக இருந்தும் ஏன் தாத்தா விட்டார் என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம். அந்தக் கடையை விட்ட சில நாட்களிலேயே அந்தக் கடையின் பக்கத்தில் ஒரு டீக்கடையை நடத்துவது என்று முடிவு எடுத்து அதுவும் தொடங்கப்பட்டது. அந்த டீக்கடையும் மாலை நேர டீக்கடைதான். அதுவும் சில மாதங்களில் கை மாற்றி விடப்பட்டது. அதற்குப் பின் தாத்தா எந்த வியாபார முயற்சிகளையும் தொடங்கவில்லை.
            "ஏன் மாமா நல்ல போயிட்டிருந்த கடையை பாதியிலய விட்டீங்க?" என்று அந்த நாளில் அப்பா கேட்டது விகடுவுக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
            அதற்கு தாத்தா சொன்ன பதிலும் இன்னும் அப்படியே மனதில் இருக்கிறது விகடுவுக்கு. அவர் சொன்னார், "அதயெல்லாம் ரொம்ப காலத்துக்கு லாபத்துல நடத்த முடியாது மாப்ளே! அந்த நேரத்துல கைக்காசு தேவப்பட்டுச்சு. ஆரம்பிச்சோம். யெவாரமும் பிச்சுகிட்டுப் போச்சு. ஒரு கட்டத்துக்கு மேல அதுல யெவாரம் ஓடாது. நல்லா யெவாரம் இருக்கிறப்பவே கை மாத்தி விட்டதுல நல்ல காசு கிடச்சிடுச்சு. அத்தோட விட்டுடணம்."
            அவர் இந்த விசயத்தில் கணித்தது சரிதான். அதற்குப் பின் அந்தப் பெட்டிக்கடையும், டீக்கடையில் கை மாறிக் கொண்டே இருந்தன. கிருஷ்ணா தியேட்டர் மூடப்பட்ட பிறகு அந்தக் கடைகளும் மூடப்பட்டன.
            இப்படி விசயங்களைத் துல்லியமாகக் கணிப்பதில் அவர் கெட்டிக்காரர். மனிதர்களை அண்ட விடாமல் இருப்பதில் ரொம்ப கவனமாகவே இருப்பார். சிரித்துக் கொண்டே மனம் நோகும்படிப் பேசி விடுவதிலும் அவர் கெட்டிக்காரராக இருந்தார். யாரைப் பற்றியும் கறாரான விமர்சனத்தை முன் வைக்கும் தைரியம் அவருக்கு அதிகமாகவே இருந்தது. "அட போங்கடா! உங்களப் பத்தித் தெரியாதா? எல்லா பயலும் குடும்பத்த கவனிக்காம ஓடுன களவாணிப் பயலுகதானடா!" என்பதை சர்வ அலட்சியமாகச் சொல்லுவார். ரொம்ப அரிதாக அவர் மகள் வீடுகளுக்கு பொங்கல், தீபாவளி வரிசைகள் வைக்கப் போவார். அது மிக அரிதாக எப்போதாவது நடக்கலாம். ஆமாம்! அது உண்மையிலேயே மிக மிக அரிதாக நடப்பதுதான். அப்படி நடந்து விட்டால் அந்த வருஷம் முழுவதும் அதுதான் பேச்சாக இருக்கும். உதாரணத்துக்கு சிப்பூருக்கு வரிசை வைத்து விட்டார் என்றால் சிப்பூர் பெரியம்மா அதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும். "இந்த வருஷம் அப்பாவே வந்தார்ருடி வரிச வைக்க. கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடி." என்று அது சொல்லி சொல்லி மகிழ்ச்சி அடைவதைப் பார்க்கும் போது, இந்த தாத்தா ஒவ்வொரு வருஷமும் ஏன் இப்படி செய்யக் கூடாது என்று விகடுவுக்கு நினைக்கத் தோன்றும். மிக அரிதாக நடக்கும் இந்த வரிசை சமாச்சாரத்துக்கு மற்றபடி குமரு மாமா, வீயெம் மாமாதான் போவார்கள்.
            வள்ளி சித்தி மேல் மோசமான அபிப்பராயம் இருந்தது வைத்தி தாத்தாவுக்கு. "இதல்லாம் என்னத்தப் போயி குடும்பம் நடத்தி என்னத்தப் பண்ணப் போவுது? இன்னும் ரெண்டு வருஷம் வூட்டுல போட்டு பொசுக்கி எடுத்துதாம் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அதுக்குள்ளய அவசரப்படுத்துறீயளே?" என்பார். அவரது கணிப்பு பின்னாட்களில் சரியாகத்தான் இருந்தது. வள்ளி சித்தி பாகூர் சித்தப்பாவோடு கோவித்துக் கொண்டு இரண்டு மூன்று முறைக்கு மேல் வந்தது. வைத்தி தாத்தா கண்டுகொள்ளவே இல்லை. எப்போதாவது, "அந்த நாய வூட்ட வுட்டு வெளியில போகச் சொல்லு! நாம எவனுகிட்டயும் போயி சமாதானத்துக்ககுல்லாம் போயி நிக்க மாட்டன்!" என்று சத்தம் போடுவார். ஒரு வாரத்திற்குள் பாகூர் சித்தப்பா வடவாதி வந்து சித்தியிடம் கெஞ்சிக் கூத்தாடி அழைத்துக் கொண்டு போகும்.
            வள்ளி சித்தி மேல் வைத்திருந்ததை விட மோசமாக பாக்குக்கோட்டை தாத்தா மீது அபிப்ராயம் ஆகி விட்டது தாத்தாவுக்கு. வள்ளி சித்தியின் கல்யாணத்துக்கான திருமாங்கல்யத்தை அவர் கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி கடைசி பஸ்ஸூக்குதான் கொண்டு வந்து கொடுத்தார். அவர் வருவாரோ மாட்டாரோ என்று எல்லாருக்கும் திக்கு திக்கு என்று இருந்தது.
            வள்ளி சித்தியின் கல்யாணம் கூத்தாநல்லூர் சுந்தரி மஹாலில் நடந்தது. எல்லாரும் அப்போது அந்த கல்யாண மஹாலில் இருந்தோம். அது முன்பு ஜாபர் தியேட்டராக இருந்து இப்போது கல்யாண மஹாலாக ஆகி விட்டது. சுற்றுப்பட்டி ஊர்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்த்த தியேட்டர். விகடுவுக்குத் தெரிந்து அவன் அப்பா, அம்மாவோடு டி.ராஜேந்தரின் 'என் தங்கைக் கல்யாணி' படம் பார்க்கப் போய் டிக்கெட் கிடைக்காமல் திரும்பியிருக்கிறார்கள். அப்படிக் கூட்டம் கும்கும்மென்று கும்மிய தியேட்டர்தான் இப்போது கல்யாண மஹாலாகி விட்டது.
            "அவந்தான் களவாணிப் பயன்னு தெரிஞ்சுப் போயி கிடக்குல்ல. அவங்கிட்டப் போயி அந்த சோலியக் கொடுக்குறீயளே. கொஞ்சமாவது யோசன வேணாமா?" என்று பாக்குக்கோட்டை தாத்தா திருமாங்கல்யத்தை எடுத்து வரும் போதே சத்தம் போட்டார் வைத்தி தாத்தா. வைத்தி தாத்தாவின் பேச்சு பலருக்கும் பிடிக்காததுதான். அவரது கணிப்பு காலத்தைக் கடந்து எப்படி அவ்வளவு துல்லியமாக சரியாக நடந்தது என்பது அறிய முடியாத விசித்திரமும் கூட. வைத்தி தாத்தா அப்படித் திட்டியது அவர் காதில் நன்றாகவே விழுந்திருக்கும். அவரிடம் பழைய மாப்பிள்ளை முறுக்கு எல்லாம் இப்போது இல்லை. எல்லாரிடம் குழைந்து குழைந்து பேச ஆரம்பித்திருந்தார்.
            இந்த வைத்தி தாத்தா மட்டும் எப்படி எதையும் கவனிக்காம இப்படித் திட்ட முடிகிறது என்பது எல்லாருக்கும் அப்போது கேள்வியாக இருந்தது. ஏனென்றால் பாக்குக் கொட்டைத் தாத்தாவின் தோற்றம் அப்போது அப்படி இருந்தது.
            வள்ளி சித்தியின் கல்யாணத்துக்கு வந்திருந்த அவர் காவி வேட்டிக் கட்டி, காவிச் சட்டைப் போட்டிருந்தார் பாக்குக்கோட்டை தாத்தா. முகத்தில் தாடி வளர ஆரம்பித்திருந்தது. வழக்கமாக பார்த்தால் அவர் பட்டைக் கரை போட்ட வேட்டி கட்டியிருப்பார். பளபளவென்று சிலுக்கு சட்டை மாதிரி இருக்கும் மஞ்சள் சட்டை அல்லது நீல சட்டைதான் போட்டிருப்பார்.
            "இதென்ன இப்படிக் காவியும் அதுவுமா?" என்ற பாக்குக்கொட்டை தாத்தாவைக் கேட்காத ஆளில்லை.
            சரசு ஆத்தா பஞ்சப் பராரிக் கோலத்தில் வந்தது. பிள்ளைகள் யாரையும் அது கல்யாணத்துக்கு அழைத்து வரவில்லை. சரசு ஆத்தாவுக்கு ஒரு பையன் ரெண்டு பெண்கள். பையன் பாலாமணி விகடுவை விட இரண்டு மூன்று வயது மூத்தவன். முதல் பெண் சுந்தரி செய்யுவை விட நான்கைந்து வயது மூத்தது. இரண்டாவது பெண் பிந்து செய்யுவை விட ஓரிரு ஆண்டுகள் மூத்தது.
            சாமியாத்தா ஓடிவந்து சரசு ஆத்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டது. சரசு ஆத்தா அப்போது கையில் நடுத்தரமான அண்டாவைப் போன்ற எவர்சில்வர் பாத்திரத்தை வள்ளிச் சித்தியின் கல்யாணத்துக்காக வாங்கி வந்திருந்தது. அதைக் கீழே வைத்து விட்டு அது சாமியாத்தாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டது. அதன் கண்களில் கண்ணீர்.
            "என்னடிம்மா ரெண்டு நாளிக்கு முன்னாடி வராம இப்போ வர்றீயே? இப்போ வர்ற நீயாவது ந்நல்லா கில்லா வர்றீயா என்ன? ஏண்டிம்மா இப்படி இருக்கீயே?" என்றது சாமியாத்தா.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...