செய்யு - 31
வாழ்க்கப்பட்டு பெரியம்மாவுக்கு மூன்று
பெண்கள், கடைக்குட்டியாக ஒரு பையன். வாழ்க்கப்பட்டு பெரியப்பா வேலைக்குச் செல்வதில்
விருப்பம் இல்லாதவராக இருந்தார் என்பதையும், குடிகாரராகவும் இருந்தார் என்பதையும்,
முறையாக வேலைக்குச் சென்று குடிக்காமல் இருந்திருந்தால் அவரைப் போல ஒரு நல்லவர் யாரும்
இருந்திருக்க முடியாது என்பதையும் அவரைப் பற்றிய பேச்சு வரும் போது ஒவ்வொருவரும்
சுட்டிக் காட்டுவார்கள். மிகவும் மென்மையான மனது வாழ்க்கப்பட்டு பெரியப்பாவுக்கு. யாரையும்
கடிந்து ஒரு வார்த்தை பேசியது கிடையாது. அவரது நடத்தைகளும் பேச்சுகளும் பண்பட்ட பணக்காரர்களின்
பேச்சையையும் நடத்தையையும் போல இருக்கும். எல்லா காரியத்திலும் பட்டும் படாமலும் அவர்
நடந்து கொள்ளும் முறை வெகு நேர்த்தியாக நாகரிகமாக இருப்பது போல இருக்கும்.
வாழ்க்கப்பட்டு பெரியம்மாவுக்கு ஏதோ ஒரு
சலிப்பு தட்டியிருக்க வேண்டும். அதுவும் அலட்சியமாகக் குடும்பத்தை நடத்திக் கொண்டிருப்பதாக
பெரியம்மாவை எல்லாரும் திட்டிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் அதற்கு மேல் இருப்பதாக
பிள்ளைகளையும் சொந்தக்காரர்கள் எல்லாரும் திட்டிக் கொண்டிருந்தார்கள். பெரியம்மாவின்
மூன்று பெண்களில் மூத்தப் பெண் விகடுவுக்கு அக்கா முறை. மற்ற இரண்டு பெண்களும் தங்கை
முறை. பையன் தம்பி முறை. செய்யுவைப் பொருத்த வரையில் எல்லாரும் அவளுக்கு அக்கா முறை.
பையன் அண்ணன் முறை.
வருடா வருடம் வாழ்க்கப்பட்டு அக்கா விகடுவுக்கு
பொங்கல் வாழ்த்து அனுப்பி வைக்கும். அதில் அஞ்சல் தலைகள் ஒட்டியிருக்காது. தபால்காரர்
பொங்கல் வாழ்த்தைக் கொடுத்து விட்டு அதற்கானத் தண்டத் தொகையை வசூலித்து விட்டுப்
போவார். பொங்கல் வாழ்த்து வாங்கத் தெரிந்த அக்காவுக்கு அஞ்சல் தலை ஒட்டி அனுப்பத்
தெரியவில்லையே என்று விகடு யோசித்திருக்கிறான். விவரம் புரியாத இளம்வயதில் விகடு வாழ்க்கப்பட்டுவுக்குப்
போயிருக்கிறான். அப்போது புரிந்து கொள்ள முடியாத விசயங்கள் இப்போது வாழ்க்கப்பட்டுவுக்குப்
போன போது விகடுவால் புரிந்து கொள்ள முடிந்தது.
வாழ்க்கப்பட்டுக்குப் போவதென்றால் கீழையூரில்
பஸ்ஸிலிருந்து இறங்கினால் சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கு கப்பிச் சாலையில் நடந்து
செல்ல வேண்டும். அப்பா விகடுவைத் தூக்கி தோளில் வைத்துக் கொள்வார். யாராவது சைக்கிளில்
வந்தால் விகடுவை அழைத்துச் செல்வதாகச் சொன்னால் அழுது அடம் பிடித்து அப்பாவின் தோள்களில்
அமர்ந்தபடியே போய் சேர்வான். அது ஒரு காலம்.
இந்த முறை வாழ்க்கப்பட்டுவுக்குப் போன
போது விகடுவுக்குப் பதில் செய்யு அப்பாவின் தோள்களில் உட்கார்ந்திருந்தாள். விகடு
ஓரளவுக்குப் பெரயி மனிதனாகி விட்டான். வாழ்க்கப்பட்டுவுக்குப் போவதற்கு முன் திருவாரூரில்
அப்பாவும் அம்மாவும் ஜவுளிக் கடையில் வேட்டி சேலை, பாவாடைத் துணி, சட்டைத் துணிகளை
எடுத்துக் கொண்டார்கள். பாத்திரக் கடையில் ஆறு தட்டு, ஒரு அன்னவெட்டி, இரண்டு கரண்டிகள்,
ஒரு உருளி, டபரா செட் ஆறு, லோட்டா ரெண்டு என் எல்லாவற்றையும் வாங்கி மூட்டை கட்டிக்
கொண்டார்கள். ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்கி கித்தான்
பையில் போட்டுக் கொண்டார்கள். விகடு கையில் ஜவுளிப் பையைத் தூக்கிக் கொண்டான். அம்மா
பாத்திர மூட்டையையும், கித்தான் பைபையும் தூக்கிக் கொண்டது.
பெரியம்மாவின் வீடு வாழ்க்கப்பட்டு பள்ளிக்கூடத்துக்கு
எதிரே இருந்தது. வீட்டைச் சுற்றி வேலியில்லை. சுற்றிலும் கருவச் செடிகள் மண்டியிருந்தன.
மண்சுவரால் ஆன் கூரை வீடு. கூரையில் ஓட்டைகள் நிறைய இருந்தன. மழைக்காலத்துக்கு தாங்குமா
என்று தெரியவில்லை. சுவரில் ஆங்காங்கே மழைநீர் வழிந்தோடிய தடங்கள் தெரிந்தன. நாங்கள்
போன நேரம் பிள்ளைகள் எல்லாம் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தன. எங்களைப் பார்த்ததும்
எல்லாரும் ஓடி வந்தார்கள்.
"வீட்டச் சுத்தியிருக்குற இந்தக்
கருவச் செடிகளங்யாவது வெட்டிச் சுத்த பத்தமா வெச்சிகிட்டானா? ஊருக்குப் போறதுக்குள்ள
நாம்மளாவது அதச் செஞ்சிக் கொடுக்கணும்!" என்றது அம்மா.
வாங்கி வந்திருந்த சாமான்களைப் பார்த்ததும்,
"எப்ப வந்தாலும் இது மாதிரி மூட்டையோட வர்றீங்களே! இங்க ஒண்ணும் இல்லன்னே முடிவு
பண்ணிட்டீங்களா?" என்றது பெரியம்மா.
பெரியம்மா இப்படிக் கேட்டாலும் அங்கே ஒண்ணும்
இல்லை என்பது உண்மையாகத்தான் இருந்தது. பெரியம்மா அவசர அவரமாக மூத்தப் பெண்ணைக் கூப்பிட்டு
கடைக்குப் போய் சீனியையும், டீத்தூளையும் வாங்கி வரச் சொன்னது. நடுப்பெண்ணைக் கூப்பிட்டு
ஒரு வீட்டின் பெயரைச் சொல்லி பால் வாங்கி வரச் சொன்னது.
டீயைப் போட்டுக் கொடுத்தது பெரியம்மா.
பெரியம்மாவுக்கு கைப்பக்குவம் அதிகம். சமையல் செய்வதிலும் கோலம் போடுவதிலும் சமத்து
என பெயர் பெற்றது. அதிலும் சிக்குக்கோலம் போட்டால் தெருவை அடைத்துப் போடும். சாமியாத்தா
இதற்காகவே பெரியம்மாவைத் திட்டும். "இப்படிப் பெருங்கோலமா சிக்குக் கோலமா போடாதங்கச்சி!
வாழ்க்கயும் அது மாதிரி ஆயிடுங்கச்சி! ஏதோ சின்னதா கோலம் போட்டோமா வந்தோமான்னு
இரு! இதுல்லாம் குடும்பத்துக்கு ஆகாதுங்கச்சி!"
சாமியாத்தா இப்படித் திட்டுவதை விகடு பலமுறை
கேட்டிருக்கிறான். அந்த ஞாபகம் வரவே, எதையும் கவனிக்காமல் வீட்டுக்குள் வந்து விட்ட
விகடு வாசலைப் போய் பார்த்தான். கொஞ்சம் பெரிய சிக்குக் கோலம்தான். சாமியாத்தா பெரியம்மாவின்
சிக்குக் கோலம் பற்றித் திட்டினாலும் அந்தக் கோலம்தான் அதுக்கான ஆறுதலாக இருந்திருக்கக்
கூடும். பெரியம்மாவின் மனசுக்குள் எண்ணற்ற சிக்குக் கோலங்கள் இருந்திருக்கக் கூடும்.
விகடு பார்த்தவரையில் பெரியம்மாவுக்கு
ரங்கோலி கோலத்தில் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. ரங்கோலிக் கோலத்தில் காட்டக் கூடிய
சித்திர வேலைபாடுகளையும் அது சிக்குக்கோலத்திலேயே காட்டும். சிக்குக்கோலத்திலயே அது
தேர் போடுவதும், பொங்கல் பானை போடுவதும், தாமரை போடுவதும் வெகு அம்சமாக இருக்கும்.
ஒவ்வொன்றுக்கும் நேர்புள்ளி, இடுக்குப் புள்ளி என்று அது புள்ளி வைப்பதைப் பார்க்கும்
போதே அவ்வளவு அழகாக இருக்கும்.
பெரியம்மா கோலம் போடும் நேரங்களில் பெரியப்பா
வாசலில் வந்து உட்கார்ந்து கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருப்பாராம். அவருக்கும்
பெரியம்மாவின் கோலத்தின் மீது பெரிய ஈடுபாடு இருந்தது. "பேச்சி மாதிரி கோலம்
போட முடியாது. அது கோலம் போடுறதுக்ககாகவே பெரிய வாசல் வெச்சி வீடுகட்டணும்"
என்பார். அதைப் பெரியப்பாவால் செய்திருக்க முடியும். ஆனால் அவரது சுழி, சொத்துப் பிரித்த
போது கிடைத்த நல்ல ஓட்டு வீட்டையும் விற்று விட்டு கூரை வீட்டுக்குப் பெண்டாட்டிப்
பிள்ளைகளைக் கொண்டு வந்து விட்டார்.
"நாம்ம எப்படியும் சம்பாதிச்சு ஒரு
நா பெரிய ஆளாவேன். டெய்லி வேலய்க்குப் போகலன்னு உனக்கொன்னும் வருத்தம் இல்லீல்ல!
டெய்லி வேலய்க்குப் போன ஒடம்பு நோவு தாங்கல. அதாம் அப்போக்கைப்போ போறம்!"
என்று பெரியம்மாவிடம் சொல்வாராம் பெரியப்பா.
"ஒங்களால முடியறப்ப போங்க! அதுக்காக
ஒடம்பப் போட்டு வருத்திக்கிடாதீங்க!" என்ற சொல்லுமாம் பெரியம்மா.
பெரியம்மாவுக்குப் பெரியப்பா மேல் கொஞ்சம்
கூட வருத்தம் இருந்ததில்லை. ஒரு நாளும் பெரியப்பாவைக் கேள்வி கேட்டதோ திட்டியதோ இல்லை.
பிள்ளைகளையும் அது அப்படித்தான் பாசமாக வைத்து இருந்தது. அதிர்ந்து ஒரு வார்த்தை பேசியது
கிடையாது. ஒருவேளை அதிர்ந்து ஒரு வார்த்தைக் கேட்டிருந்தால் குடும்பமே நல்ல விதமாக
மாறியிருக்குமோ என்ற கூட விகடு யோசித்து இருக்கிறான். பெரியம்மாவால் அது முடியாது.
"அவருக்கென்னடி ராசா வூட்டுப் புள்ள.
ஏதோ நாம்ம வந்த நேரம் அவருக்கு இப்படி ஆயுடுச்சு. அதப் பத்தி ஒரு நாளு கூட எங்கிட்ட
கொறையா அவரு சொன்னதில்ல தெரியுமா!" என்ற பெரியம்மா சொல்லும் போது பரிதாபமாக
இருக்கும். அவர்களைப் பொருத்த வரையில் எதுவும் பிரச்சனையாக இல்லை. வறுமைதான் ஒரே பிரச்சனையாக
இருந்தது. அதையும் அவர்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பிள்ளைகள் அப்பச்சி வீட்டில்
போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
பள்ளிக்கூடம் பக்கத்தில் இருந்ததால் பெரியம்மா
சமைப்பவர்களுக்கு கூட மாட ஒத்தாசையாக இருந்து அதில் கொடுப்பதை வைத்து சமாளித்துக்
கொண்டிருந்தது. பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் பெரியம்மா கொலைபட்டினியெல்லாம் கிடந்திருக்கிறது.
பெரியப்பாவுக்கு சாப்பாட்டைப் பற்றி கவலையில்லை. போகிற இடத்தில் சாப்பிட்டுக் கொள்வார்.
ஆன மட்டும் குடித்துக் கொள்வார். பெண்டாட்டிப் பிள்ளைகள் பட்டினியோடு கிடக்குமே என்பதைப்
பற்றி அவரால் அக்கறையாக சிந்திக்க முடிந்ததா என்பது தெரியவில்லை.
அப்பா ஒரு சில மாதங்களில் திட்டையில் நெல்
அரைத்து அரிசியாக்கி அரை மூட்டை அளவுக்கு அதை உரச்சாக்கில் போட்டுக் கொண்டு போய்
வாழ்க்கப்பட்டுவுக்குக் கொண்டு போய் கொடுத்து விட்டு வருவார். "சமயத்துல என்னால வந்துப் போக முடியல. நீங்க
மாசா மாசம் வந்தீங்கன்னா அர மூட்ட அரிசிய எடுத்துட்டு வந்துடலாம்!" வாழ்க்கப்பட்டு
போகும் போதெல்லாம் சொல்வார் அப்பா.
"வர்றேங் சகல!" என்பார் பெரியப்பா.
ஆனால் வர மாட்டார். பெரியம்மா கிளம்பினாலும் தடுத்து விடுவாராம்.
வறுமை தாளாமல் சில நாட்களில் பெரியம்மா
வயல் வேலைக்குப் போவதையும் பெரியப்பா தடுத்து விடுவார். அந்த சில நாட்களில் மட்டும்
ரோஷத்துடன் தொடர்ச்சியாக வேலைக்குப் போவார். கொஞ்சம் காசு சேர்ந்தால், அப்புறம்
பழைய கிறுக்குப் பிடித்து விடும். வேலைக்குப் போவதை விட்டு விட்டு குடிக்கப் போய்
விடுவார்.
அந்த நாள் முழுவதும் வாழ்க்கப்பட்டுவில்
இருந்த போதும் பெரியப்பா வரவில்லை. "மனுசங் எங்க குடிச்சிட்டு எங்க கெடக்குறாரோ!
தேடிகிட்டுப் போனாலும் கோவம் வந்துடுது. வூட்ட வுட்டு வெளியில போவத் தெரிஞ்ச ஆம்பளிக்கு
வூடு வரத் தெரியாதான்னு முசுக்குன்னு கோவம் வந்துடும்! நாம்ம என்னத்தப் பண்றதுடி வெங்கு!"
என்று சொன்னது பெரியம்மா.
"டேய் விகடு! ஏய் செய்யு! இது மாதிரி
மாசா மாசம் வந்துட்டுப் போறீங்களா?" என்றது பெரியம்மாவின் மூத்தப் பெண்.
"வர்றோம்க்கா!" என்றனர் ஒரே
குரலில்.
விகடுவும் செய்யுவும் சந்தோசமாக சொன்னார்களே
தவிர, மாசா மாசம் போவதற்கான சூழல் அமையாமலே போனது. அப்பா மட்டும் அரிசியை எடுத்துக்
கொண்டு இடையிடையே போய் வந்தார். அப்போது விகடுவும், செய்யுவும் வாழ்க்கப்பட்டு போவதற்கு
அடம் பிடித்துப் பார்த்தார்கள். "மூட்டையையும் தூக்கிட்டு உங்களயும் தூக்கிட்டு
என்னால போக முடியாது!" என்ற அப்பா மறுத்து விட்டார். "நாங்க ரெண்டு பேரும்
நடந்தே வர்றோம்!" என்ற சொல்லிப் பார்த்தாள் செய்யு. "நாம்ம வேணும்னா செய்யுவைத்
தோளில்ல தூக்கிட்டு வர்றேன்!" என்றான் விகடு. அப்பா சம்மதிக்கவில்லை.
ஆறு மாதமோ ஏழு மாதமோ இருக்கும். விகடுவும்
செய்யுவும் கொடுத்த வாக்கை மீறி விட்டார்கள் என்பதாலோ என்னவோ, அவர்கள் எப்படியும்
மீண்டும் வாழ்க்கப்பட்டு போவதற்கான சூழலை
உருவாக்க வேண்டும் என்பதாலே என்னவோ காலம் தன்னுடைய கோரச் சக்கரத்தை சுழற்றியிருந்தது.
யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்க முடியாத,
கற்பனையில் கூட சிந்திக்க முடியாத ஒரு செய்தியை காதில் வந்து துப்பி விட்டுப் போனது
காலம். பெரியப்பா பூச்சிமருந்தைக் கரைத்துக் குடித்து செத்துப் போயிருந்தது.
"மூணு பொம்பளப் புள்ளய பெத்து வெச்சிருக்கேம்.
எப்புடி கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போர்றேன்ன தெரியலன்னு ச்சும்மா பேருக்குத்தான்டி
பொலம்பிகிட்டு இருந்தாருடி. இந்த மனுசனா கட்டிக் கொடுக்கப் போறாரு சொல்லுங்கடி.
நீங்கதானடி பாத்து அதயும் செய்யப் போறீங்கடி. இந்த மனுசனுக்கு என்ன வந்துச்சுடி! இப்புடி
மருந்தக் குடிச்சுப்புட்டு..." என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் அழுதது வாழ்க்கப்பட்டு
பெரியம்மா.
வாழ்க்கப்பட்டு பெரியப்பா செத்ததுக்கும்,
பெரியம்மா சொன்ன காரணத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது போலத் தோன்றியது விகடுவுக்கு.
பஞ்சு மாமாவின் மரணம் ஏற்படுத்திய வடு மறையாத ஒரு வருஷத்துக்குள் வாழ்க்கப்பட்டு பெரியப்பா
செத்தது மனதை மேலும் ரணகளமாக்கியது.
"எண்ணே பெரிப்பா மருந்து குடிச்சுச்
செத்துப் போச்சு?" என்ற செய்யுவும் அடிக்கடி விகடுவைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.
*****
No comments:
Post a Comment