20 Mar 2019

துயரம் சூழும் ஞாபக நிழல்



செய்யு - 30
            வாழ்க்கையின் கட்டமைப்பு விசித்திரமானப் பெட்டகமோ என்னவோ! ஒரு துயரத்துக்குப் பின் ஒரு கொண்டாட்டச் சூழலும், ஒரு கொண்டாட்டச் சூழலுக்குப் பின் ஒரு துயரச் சூழலும் மாறி மாறி அடிக்கும் புயல் காற்றின் சூழல் போல சுழற்றியடிக்கின்றன.
            பஞ்சு மாமாவின் மரணம் ஓர் இறுக்கமான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை மனிதனைக் கொல்லுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு பஞ்சு மாமாவின் இறப்பைப் பற்றி எல்லாரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்படிப் பேசுவதில் முழுமை இல்லைத்தான். பேச்சின் மூலம் ஓர் ஆறுதல் தேவையாயிருக்கிறதே. அந்த ஆறுதலுக்காகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படிப் பார்த்தால் வடவாதியில் குமரு மாமா வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப வைத்தி தாத்தா வீடு கட்டவில்லையா?
            முருகு மாமாவையும், லாலு மாமாவையும் பஞ்சு மாமாவின் இறப்பு விசயத்தில் வெளிப்படையாக யாரும் அதிகம் குற்றம்சாட்ட பயப்பட்டார்கள். ஒருவேளை அப்படிக் குற்றம் சாட்டி அது அவர்களுக்குத் தெரிந்து வார்த்தைகளாலேயே சம்பந்தப்பட்டவரையும் கொன்று விடுவார்களோ என்ற அருவமான பயம் எல்லாருக்கும் இருந்தது. அதே நேரத்தில் உள்ளுக்குள் பஞ்சு மாமாவின் இறப்புக்கும், தம்பு ஆசாரி இறப்புக்கும் அவர்கள் இருவரும்தான் காரணம் என்று பேசித் தீர்த்தார்கள்.
            வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நிராசையாகிப் போய் பஞ்சு மாமா இறந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. வைத்தி தாத்தா வீட்டின் புதுமனைப் புகுவிழா அந்தத் துயரச் சூழலைக் கொஞ்சம் மறக்கடித்தது.
            அதிகாலையில் குடிபுகும் வரை புது வீட்டில் தங்க முடியாது என்பதால் வாழ்க்கப்பட்டு, சிப்பூர், தேன்காடு, பாகூர் வகையறாக்கள் எல்லாரும் திட்டையில் விகடுவின் வீட்டில்தான் தங்கியிருந்தார்கள். அவ்வளவு பேருக்கும் வீட்டில் இடம் போதவில்லை. பெண்கள் வீட்டுக்குள் படுத்துக் கொண்டார்கள். ஆண்கள் எல்லாரும் படுதாவை விரித்து கொல்லைப்புறத்தில் படுத்துக் கொண்டார்கள். இரவு நெடுநேரம் வரை தூங்காமல் குடும்ப நிகழ்வுகளையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த இரவில் ஒரு சில மணி நேரங்கள்தான் எல்லாரும் உறங்கியிருப்பார்கள்.             அதிகாலை மூன்று மணி சுமாருக்கு எல்லாரும் எழுந்து தயாராகி வடவாதிச் சென்றார்கள்.
            அந்த இரவில் அப்பா சைக்கிளைத் தள்ளிக் கொண்டே எல்லாருடனும் நடந்தார். சைக்கிள் கேரியரில் செய்யு உட்கார்ந்திருந்தாள். எல்லாரும் பேசிக் கொண்டே நடந்தார்கள்.
            "பஞ்சு சித்தப்பா இருந்திருந்தா ந்நல்லா இருந்திருக்கும்!" என்றார் வாழ்க்கப்பட்டு பெரியப்பா.
            "ரொம்ப ஊக்கமான மனுசன். இருந்திருந்தா அடுத்த வருஷம் குடி போறது அவர் வூடாத்தான் இருந்திருக்கும்! வூடு கட்டணும்னு அவ்வளோ ஆசை அவருக்கு!" என்றார் அப்பா.
            "வூடு கட்டிக் கட்டிப் போறது எல்லாருக்கும் வாய்க்காதுங்க சகல. கோயிலயப் பாருங்க. எல்லா கோயிலுக்குமா பன்னன்டு வருசத்துக்கு ஒரு தடவ கும்பாபிஷேகம் நடக்குது? சில கோயிலுங்க பாழடஞ்சுக் கெடக்கிறதில்லயா. கடவுளா இருந்தாலும் அதுக்கு ஒரு யோகம் இருக்கணும். எப்படி இருந்தாலும் நம்ம மாமா மாதிரி ஆகாது. அவருக்கு எல்லாஞ் சரியான நேரத்தில சரியா நடக்கும்! புள்ளீங்க தலயெடுத்து வீட்டைக் கட்டிப் புது வூட்டுல வெச்சுப்புட்டுங்கலே! யோகக்காரருங்க மாமா!"
            இப்படியெல்லாம் பேசிக் கொண்டு வந்த வாழ்க்கப்பட்டு பெரியப்பா குடிபுகும் நிகழ்வுகள் முடிந்தவுடன் பஸ்ஸிலேறி வாழ்க்கப்பட்டு போய் விட்டார். எவ்வளவுக்கெவ்வளவு நல்ல மனிதராக இருந்தாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் ஒரு குடிகாரராக இருந்தார். நிலம் நீச்சு என்று வசதியான குடும்பத்தில் இருந்த அவர் எல்லாவற்றையும் குடித்தே அழித்தார். அவரது குடிப்பழக்கத்தைக் கண்டு மிரண்டு போன சொந்தப்பந்தங்கள் சொத்தைப் பிரித்துக் கொடுத்து அனுப்பி விட்டார்கள். இது பற்றி பேச்சு வரும் போது, "நானே சொத்தைப் பிரிச்சுக் கொடுங்கடான்னு கேட்கணும்னு நெனச்சுகிட்டு இர்ந்தேன். அவுங்களேப் பிரிச்சுக் கொடுத்துட்டாங்க சகல!" என்பார் வாழ்க்கப்பட்டு பெரியப்பா. ஆன மட்டும் குடித்து அழித்த வாழ்க்கப்பட்டு பெரியப்பாவுக்கு வீடு மட்டும்தான் இருந்தது. இன்றைய குடிபுகும் நிகழ்வுக்குக் கூட செய்முறை செய்ய வழியில்லாமல்தான் அவர் வந்திருந்தார். அப்பாதான் அவருக்கான பணத்தைப் போட்டார். அப்பாவிடமே கொஞ்சம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் வாழ்க்கப்பட்டுக் கிளம்பி விட்டார்.
            இப்போது வீடு குடிபுகும் விழாவைப் பற்றிப் பேசாமல் ஏன் வாழ்க்கப்பட்டு பெரியப்பாவைப் பற்றிப் பேசுகிறாய் என்று நீங்கள் கேட்கலாம். அடுத்தத் துயரச் சம்பவம் அவரால் நிகழ்ந்தது என்பதற்காக அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லி வைக்க வேண்டியதாக இருக்கிறது.
            இந்த குடிபுகும் விழாவில் விகடு தன்னை ஒரு பெரிய மனுஷனாக உணர்ந்தான். அதற்குக் காரணமும் இருந்தது. அவனைத்தான் மொய் எழுத உட்கார வைத்தார்கள். டிராயர் உள்ள ஒரு மேசையைப் போட்டு, அதன் மேல் போர்வையை அழகாக மடித்துப் போட்டு வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு, சந்தனம், குங்குமம் உள்ள தாம்பாளத்தை அதன் மேல் வைத்திருந்தார்கள்.
            விகடுவின் கையில் நாற்பது பக்க நோட்டு ஒன்றையும் ரெனால்ட்ஸ் பால்பாய்ண்ட் பேனா ஒன்றையும் கொடுத்திருந்தார்கள். செய்யு அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பணத்தை வாங்கி மேசை டிராயரில் போட்டுக் கொண்டிருந்தாள். மொய் எழுதியவர்கள் ஊரைச் சொல்லி, பேரைச் சொல்லி அதை விகடு எழுத, விகடுவின் கையெழுத்தை எல்லாரும் புகழ்ந்தார்கள்.
            குடிபுகும் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் மூன்று நாட்கள் வரை வடவாதியிலேயே இருந்தனர். அந்த மூன்று நாட்களும் ஒரே குதூகலம்தான். வீயெம் மாமா டி.வி.யையும் டெக்கையும் மூன்று நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தது. இரவு சாப்பாடு முடித்து ஒன்பது மணி ஆகி விட்டால் விடிய விடிய படமாக ஓடும். பகலிலும் பதினோரு மணி வாக்கில் படத்தைப் போட்டு விடும். விடிய விடிய படம் பார்த்தும் பகலிலும் தூங்காமல் எப்படிப் படம் பார்க்க முடிந்தது என்பதை நினைக்கும் போது இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.
            அந்த மூன்று நாட்களுக்குப் பிறகு வைத்தி தாத்தா கொஞ்சம் கூட யோசிக்காமல், "அவங்கவங்க வூட்டுக்குக் கெளம்புற சோலியப் பாருங்க. அங்க வூடு வாசலப் போட்டுட்டு இங்க வந்து கெடந்தா எப்புடி?" என்று வெளிப்படையாகப் பேசினார். கூடியிருந்த கூட்டம் அன்று சாயுங்காலத்துக்குள் கலைந்தது.
            அந்தக் குடிபுகும் விழா ஞாபகமாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அப்பாவிடம் இருந்தது. மேக்ஸி சைஸிலிருந்த அந்தப் புகைப்படத்தை பின்னர் பெரிதாக்கி அப்பா ஹாலில் மாட்டி வைத்தார். அந்தப் புகைப்படத்தில் வைத்தி தாத்தா வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் இருக்கிறார். சாமியாத்தா நீல நிற பட்டுப்புடவையில் இருக்கிறார். சிப்பூர் பெரியப்பா, சித்தப்பா, தேன்காடு சித்தப்பா, சித்தி, பாக்குக்கோட்டை சரசு ஆத்தா, அப்பா, அம்மா, செய்யு எல்லாரும் இருக்கிறார்கள். செய்யு அப்பாவின் அருகில் குழந்தையாக உட்கார்ந்திருக்கிறாள். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். விகடு அந்தப் புகைப்படத்தில் இல்லை. அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் எல்லாரையும் பின்னாட்களில் ஒரு துயரம் சூழ்ந்த வாழ்வு கவ்வியது. அந்தப் புகைப்படத்தை இப்போது பார்க்கும் போது ஒவ்வொருவரையும் பற்றிய அந்த துயரம் சூழ்ந்த வாழ்வு முடிவடையாத ஒரு ஞாபக நிழலாக நீள்கிறது விகடுவுக்கு. காலத்தின் சாட்சியமாய் உறைந்து போன அந்தப் புகைப்படம் ஏதோ ஒரு சோகக் கதையைச் சொல்வதற்காக சுவரில் பதிந்த சித்திரமென காட்சித் தந்து கொண்டிருக்கிறது.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...