19 Mar 2019

கொலைக்களக் காதை



செய்யு - 29
            காலத்தின் குழப்பமான சங்கிலியைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதா என்ன? எந்தச் சூத்திரத்துக்கும் கட்டுப்படாமல் காலம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சூத்திரத்துக்குக் காலம் கட்டுப்படுவது போல தோற்றம் தந்தாலும் அதற்கு எதிரான இன்னொரு சூத்திரத்திலும் அது இயங்கிக் கொண்டிருக்கிறது. எந்தச் சூத்திரத்தில் காலம் இயங்கிக் கொண்டிருப்பதாக நினைக்கிறோமோ அதற்கு நேர் எதிரான சூத்திரத்திலும் காலம் இயங்கிக் கொண்டிருக்கிறது. காலத்தின் சூத்திரத்தில் இப்படி ஏன் நடக்கிறது என்ற கேள்வியை எழுப்ப மடியாது. ஒரு கேள்விக்குப் பல பதில்களை வைத்திருக்கிறது காலச் சூத்திரம்.
            பஞ்சு மாமாவைப் பற்றி அதிகமாகவே விகடு எழுதித் தள்ளி விட்டான் என்று நீங்கள் நினைக்கலாம். அதிகமாக எழுத வேண்டும் என்ற  திட்டமிடல் எதுவும் இதில் இல்லை. அதுவாகவே நிகழ்ந்து விட்டது. இப்படி எழுதியதற்குப் பின் அவனுக்கு ஒரு விடுபடல் சாத்தியமாகியிருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் சாத்தியமாகவில்லை. எழுதியதற்குப் பின்தான் அந்தத் துயரக் காட்சிகள் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து அச்சுறுத்துகின்றன.
            ஓடு பிரிக்கப்பட்ட பஞ்சு மாமாவின் வீடு மனதை விட்டு அகல மாட்டேன்கிறது. அந்த ஓட்டையிலிருந்து வீட்டுக்குள் பாய்ந்து வந்த ஒளி இப்போதும் பாய்ந்தபடியே இருக்கிறது. இப்போது பஞ்சு மாமாவின் வீடு மாடி வீடாகி விட்டது. உத்தேசமாக ஓட்டு வீடாக ஓடு பிரிக்கப்பட்ட இடம் அந்த மாடி வீட்டிலும் ஒரு தலும்பைப் போல இருப்பதான கற்பனை விகடுவை வாட்டிக் கொண்டு இருக்கிறது. இதை அந்த வீட்டுக்குப் போன பல நேரங்களில் விகடு உணர்ந்திருக்கிறான்.
            பஞ்சு மாமாவின் பட்டறையின் ஒரு பகுதி இன்னும் கொல்லு பட்டறையாக இருக்கிறது. அதன் இன்னொரு பகுதி தடுத்துப் பிரிக்கப்பட்டு ஹார்டுவேர் கடையாக இருக்கிறது. அந்தக் கடையில் கயிறு கட்டப்பட்டு நிறைய தொங்கவிடப்பட்டு இருக்கின்றன. வாளிகள், மக்குகள், கயிறுகள், கரணைகள், கண்திருஷ்டிப் பொம்மைகள், கம்பிச்சுருள்கள், பூட்டுகள் இப்படிப் பல தொங்கிக் கொண்டு இருக்கின்றன. வியாபாரம் முன்பைப் போல பெரிதாக இல்லை. பட்டறை வேலைகளும் குறைந்து விட்டன. டவுனிலிருந்து ரெடிமேடாகக் கிடைக்கும் மண்வெட்டிகள், அரிவாள்கள், கோடரிகள், பாரைகள் அங்கே இருக்கின்றன. பஞ்சு மாமாவின் அந்தப் பட்டறையிலிருந்து ஒரு சூன்யத்தின் வாடை வீசிக் கொண்டே இருக்கிறது. இப்போது பெருகி விட்ட டிராபிக்கிற்கு ஒரு வகையில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த டிராபிக் மட்டும் பெருகாவிட்டால் அந்தப் பட்டறைக் குறித்த பிரக்ஞையின்றி அதைக் கடப்பது அவ்வளவு எளிதா என்ன!
            புறக்கணிப்பதன் மூலம் ஒரு மனிதரைத் தன்னையே புறக்கணிக்கச் செய்து விடக் கூடிய வேலையை அதற்கு பின்னும் முருகு மாமாவும், லாலு மாமாவும் விட்டார்களா என்ன? அதிலிருந்து விடுபட முடியாமல் அவர்கள் தவிர்த்தார்களோ என்னவோ! அதையே சுபாவமாக ஏற்றுக் கொண்டு விட்டார்களோ என்னவோ! எது எப்படியோ லிக்கர் டிரிங்கிங், சிகரெட், பான் மசாலா மட்டுமா உயிரைக் கொல்லும். அந்தஸ்து, கெளரவம் கூட உயிரைக் கொல்லும்.
            பஞ்சு மாமாவின் சாவுப் பந்தலில் முருகு மாமாவும், லாலு மாமாவும் பாடிய பிலாக்கணங்கள் கொஞ்சமா நஞ்சமா? எழுத எழுத அவைகள் உரையாடல்களாக நீளும். அந்தப் பிலாக்கணங்களின் ஒவ்வொரு வரிகளும் இப்போதும் விகடுவின் மனதில் புதையுண்டு கிடக்கின்றன. எழுத எழுத மீண்டும் அவைகள் அச்சுறுத்தக் கூடும். உயிரைக் குடித்தவிட்ட உரையாடல்களால் மீண்டும் உயிரை மீட்க முடியுமா என்ன! அவர்கள் உயிரை மீட்பது போலத்தான் உரையாடினார்கள். பஞ்சு மாமாதான் உயிரோடு எழுந்து வரவில்லை. அவர் அந்த உரையாடல்களைக் கேட்டு மீண்டும் எழுந்து விடக் கூடாது என்ற பிடிவாதத்தோடு மரபெஞ்சு ஒன்றில் படுத்துக் கிடந்தார். கால்கள் இரண்டும் கட்டைவிரல்களைக் கோத்துக் கட்டப்பட்டு இருந்தன. ஒருவேளை எழுந்தாலும் நிலைதடுமாறி மீண்டும் கீழே விழுந்து இறந்து விடுபவரைப் போல அவரது நிலை இருந்தது.
            கடைசியாக, "ஊர்ல எல்லாரும் நெனக்கிற மாதிரி இதுக்கும் எங்களுக்கும் ன்னா சம்பந்தம்? இதுக்கு சம்பந்தம் இருக்குன்னா அன்னிக்கே செத்துப் போயிருக்கணும். அப்போல்லாம் ந்நல்லா இருந்துபுட்டு, ந்நல்லா பேசிட்டு மறுநா சாவு வுழுந்துருக்குன்னா ன்னா விசயம்? ஏத்தோ குடும்பத்துல பெரச்சன. மருந்த குடிச்சிட்டாங். ஒரு ஓடுகாளிய கட்டி வெச்சோம்ல. வூடு கட்டு வூடு கட்டுன்னு நச்சரிச்சே கொன்னுபுட்டு!" முருகு மாமா அப்படிப் பேசியது குறித்து சாவு வீட்டில் இருந்த யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார். சாவுப்பந்தலில் தேவையில்லாதப் பிரச்சனைகள் வேண்டாம் என்று சுற்றியிருந்தவர்கள் நினைத்திருக்கலாம். மனதுக்குள் கருவிக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். அல்லது நடந்தது நடந்து முடிந்து விட்டது என்று இருந்திருப்பார்கள். பிணப்புறப்பாடு தாமதமாகிக் கொண்டிருந்ததால் ஒவ்வொருவரும் அதற்கான ஏற்பாடுகளில் மும்மராக இருந்தார்கள். ஒருவேளை இப்படி ஒரு சூழ்நிலையைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டும் முருகு மாமா அப்படிப் பேசியிருக்கலாம். 
            நடுவீட்டில் பஞ்சு மாமாவின் பிணத்தோடு அழுது கொண்டிருந்த ராணி அத்தைக்குக் கேட்காதவாறு கவனமாக சன்னமான குரலில்தான் இதைப் பேசினார் முருகு மாமா. ஒருவேளை ராணி அத்தைக் கேட்டிருந்தால் நிலைமை எப்படி வேண்டுமானால் ஆகியிருக்கலாம். இதையெல்லாம் சாவுப்பந்தலில் உட்கார்ந்திருந்த பஞ்சு மாமாவின் மூத்த மகன் சங்கு என்ற சங்கரும், நடுமகன் ஆனந்தும் கேட்டுக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லையோ என்னவோ! அவர்களுக்கு முருகு மாமா மற்றும் லாலு மாமா குறித்த அச்சம் இருந்தது என்னவோ! தங்களின் எதிர்காலத்துக்கு அவர்கள்தான் இனி ஏதாவது செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததோ என்னவோ!        "அய்யோ சித்தப்பா! பெரிப்பா! பாலிடெக்னிக் எக்ஸாம்ல பெயிலாயிட்டன். ரண்டு வருஷமா எழுதுறன் முடியல பெரிப்பா! முடியல சித்தப்பா!" என்று சங்கு என்ற சங்கர் முருகு மாமாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதது அப்போது.
            பொதுவாக அந்தச் சாவுப்பந்தலில் முருகு மாமாவையும், லாலு மாமாவையும் யாரும் பொருட்படுத்தவில்லை. அதுவும் அவர்களுக்கு வசதியாய்ப் போய் விட்டது. சங்கு பெயிலான செய்தியை மட்டும் பெரிதாகப் பேசிக் கொண்டார்கள். "ரண்டு வருஷமா அப்பங்காரங்கிட்டய மறச்சிருக்காங் பாருங்களேம்!" என்று பேசிக் கொண்டார்கள். சாவுக்கு ஓகையூரிலிருந்த வந்த விவசாயக் கூலித் தொழிலாளிகள் மட்டும் அவர்கள் இருவரைப் பார்க்கும் போது மட்டும், "கொல்லு ஆசாரிய கொன்னுபுட்டீகளேடா பாவிகளா!" என்று சத்தம் போட்டார்கள். அப்போது மட்டும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்ட இருவரும் சத்தம் போட்டவர்கள் நகர்ந்து சென்ற பிறகு நைச்சியமாய்ச் சிரித்துக் கொண்டார்கள்.
            அவ்வபோது முருகு மாமாவும், லாலு மாமாவும் பஞ்சு மாமாவின் அகால மரணத்திற்காக பச்சாதாபப்படுவதாக அடிக்கடிக் காட்டிக் கொண்டார்கள். அதில் மறக்க முடியாத நிகழ்வு ஒன்றும் நிகழ்நதது. பஞ்சு மாமாவைச் சமாதி வைத்த இடத்தில் விழுந்து புரண்டபடி லாலு மாமா திருவாசகம் பாடியனார். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பார்களே. ஒருவேளை தன்னுடைய வாசகத்துக்கு உருகாவிட்டாலும், தான் பாடும் திருவாசகத்துக்காவது உருகட்டும் என்று லாலு மாமா நினைத்திருக்கலாம். அப்படி உருகி உருகி விழுந்து புரண்டு பாடிய லாலு மாமாவின் சட்டை, வேட்டியெங்கும் இடுகாட்டு மண்ணாக இருந்தது.
            பஞ்சு மாமாவின் சவ ஊர்வலத்துக்கு முருகு மாமா வெடிப்பதற்கு வெடிகள் தந்தார். இந்த மரணத்துக்கு வெடிகள் தேவையில்லை என்று ஊர் பெரிசுகள் சொன்னார்கள். அதை மறுத்து பெருந்தன்மையாக வெடிகளைத் தர முன்வந்தார் அவர். பிறகு அவர் அந்த வெடிகளுக்கானத் தொகையை மிகத் துல்லியமாக கேட்டு வாங்கிக் கொண்டார். அதற்கு அவர் வியாபாரம் என்பது வேறு, உறவு என்பது வேறு என்ற காரணத்தைச் சொன்னார். இரண்டும் வேறு வேறு எனும் போது அவர் ஏன் உறவை வியாபாரமாக்கினார்? யார் கேட்க முடியும் இந்தக் கேள்வியை அவரிடம்? கேட்டால் மசுரு மசுரு என்று திட்டுவார். அதுவும் யாருக்கும் தெரியாமல் அவர் சிக்கன் சிக்ஸ்டிபை பகோடா சாப்பிடும் அந்த மாலை நேரங்களில் கேட்க வேண்டும். "போடா மசுர்ரான்!" என்று திட்டுவார். கேட்கும் நீங்கள் அவரது சிக்கன் பகோடாவைக் கேட்டுவிடுவீர்களோ என்பதன் அச்சமாகவும் அது இருக்கக் கூடும்.
            அலங்கரிக்கப்பட்ட தேர்ப்பாடையில் அமர்ந்தபடி போனார் பஞ்சு மாமா. பஞ்சு மாமாவின் வீட்டில் அன்று எவ்வளவு குழந்தைகள் திரண்டிருந்தனத் தெரியுமா? ஒரு மரண வீட்டில் திரண்டிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை எண்ணிச் சொல்வது எவ்வளவு கொடுமை தெரியுமா? கொஞ்ச நேரம் பஞ்சு மாமாவுக்காக அழுத குழந்தைகள் அப்புறம் வீட்டைச் சுற்றிலும் விளையாட ஆரம்பித்து விட்டன. பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள்? பெரியவர்கள் நிகழ்த்திய ஒரு மட்டரகமான விளையாட்டுக்காக குழந்தைகள் ஏன் தங்கள் விளையாட்டை நிகழ்த்த வேண்டும்? அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
            ராணி அத்தைக்கு அதற்குப் பின் மற்றொரு கவலை ஏற்பட்டது. கடைசிப் பையன் செந்தில் முருகு மாமாவின் வீட்டிலேயே கிடந்தான். ராணி அத்தை எப்போது பார்த்தாலும் அதைக் குறிப்பிட்டுச் சொன்னது. "அப்பனைக் கொன்னவங்க வீட்டிலேயே கெடக்குறானே இந்தக் கடகுட்டிப் பய!" என்று புலம்பியது. செந்திலுக்கு வெடிகள் மேல் தணியாதப் பிரியம். அந்தப் பிரியமே அவனை எப்போதும் முருகு மாமாவின் வீட்டை நோக்கித் தள்ளியது. தீபாவளிப் போக இழவு, விஷேஷம், மற்றும் பெரும்புள்ளிகளின் வருகை என்று தேவையேற்படும் போது வெடிகள் வாங்குவதற்கு முருகு மாமாவின் வீட்டுக்கு வருபவர்களுக்கு அதை எடுத்துக் கொடுப்பது செந்திலுக்கு பிடித்தமான ஒன்று. வெடிகளை வகைபிரித்து அடுக்கி வைப்பது, தேவையானதை எடுத்து வருவது, எந்த வெடி என்ன விலை என்பது எல்லாம் அவனுக்கு அத்துபடியாகியிருந்தன.
            பஞ்சு மாமாவின் வீட்டின் கீழண்டைப் பக்கம் ஒரு கொட்டகை இருந்தது. அதுதான் முருகு மாமாவின் வெடிக் கிடங்கு. தீபாவளி வந்தால் வெடிக்கடையாக மாறி விடும். மிக நீண்ட காலம் அங்கிருந்த வெடிக்கடையை ராணி அத்தை சண்டை போட்டு முருகு மாமாவின் வீட்டுக்குப் பக்கத்தில் மாற்றிக் கொள்ள வைத்தது. அதற்கும் பெரும் பஞ்சாயத்துகள் நடந்தன. முருகு மாமாவும், லாலு மாமாவும் அதை மூவருக்கும் பொதுவான இடம் என்றார்கள். பஞ்சாயத்தார்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்தப் பஞ்சாயத்தில் எவ்வளவோ துணிவாக நின்று பேசி விட்டு வந்த ராணி அத்தையை செந்தில் அழ வைத்தான். "பெரிப்பா அந்த இடத்துல கட வெச்சத்தான் என்ன? எதுக்குப் போயி அதுக்கு சண்ட போட்டு வந்தே? நான் சந்தோசமா இருக்குறதே ஒனக்குப் பிடிக்காதா?" என்று செந்தில் கேட்டதைப் பார்த்து மாய்ந்து மாய்ந்து அழுதது ராணி அத்தை.
            செந்தில் இப்படி நடந்து கொண்டதைப் பொதுவாக ஊரில், "அந்தப் பொடிப்பய முருகுவையும், லாலுவையும் பழி வாங்கத்தான் அங்க கெடயா கெடக்குறாங்! அவம் நடிக்குறாங். என்னிக்காவது ஒரு நா வெடிக்கடய கொளுத்தி விட்டுருவாங் பாருங்க!" என்று பேசிக் கொண்டார்கள்.
            அப்படி எதுவும் நடக்காதது முருகு மாமாவும், லாலு மாமாவும் செய்த புண்ணியமாகத்தான் இருக்கும். பின்னாட்களில் நடந்த ஒன்றை முன்கூட்டியே சொல்வதால் காலக்குழப்பம் நிகழ்ந்து விடாது என்றால் சொல்ல வேண்டிய விசயம் ஒன்று உண்டு. மேலும் சுவாரசியத்துக்காக செந்தில் பற்றிய பின்னாட்கள் குறித்தத் தகவலைத் தள்ளி வைப்பதில் என்ன இருக்கிறது? பின்னாட்களில் நடந்த அந்த விசயம் - செந்தில் வெளிநாட்டுக்குப் போய், வெளியூரில் தங்கி வடவாதிக்குச் சம்பந்தம் இல்லாதவனாக ஆகி விட்டான்.
            மற்றபடி முருகு மாமாவும், லாலு மாமாவும் கொல்லு ஆசாரிகளைக் கொல்வதைக் குலத் தொழிலாக வைத்திருந்தார்களோ என்னவோ! வடவாதியிருந்து சிறுவாடிச் செல்லும் வழியில் இருந்த தம்பு என்ற கொல்லு ஆசாரிக் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணி, குடும்பச் சண்டையை ஊதிப் பெரிதாக்கி தம்பு ஆசாரி தூக்கில் தொங்கக் காரணமானார்கள்.
            ஒருமுறை, "ஊர்ல பஞ்சுவும், தம்புவும் செத்ததுக்கு நாம்மதான் காரணனும்னு பேசிகிட்டு இருக்கானுவோ!" என்று லாலு மாமா சொன்னதுக்கு,           "அவனவனும் லேவுடியா இருந்து சாவுறதுக்கு நாம்ம என்ன பண்ணறதுங்!" என்றது முருகு மாமா.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...