18 Mar 2019

ஒட்டைப் பிரித்தல்



செய்யு - 28
            திடீரென ஒருவர் செய்யும் செயலுக்கு உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. மனதுக்குள் விபரீதம் நடந்து விடுமோ என்று அஞ்சுகிறது. பஞ்சு மாமாவின் திடீர் கதவடைப்பு அப்படிப்பட்ட உணர்வைத்தான் உருவாக்கியது.
            ராணி அத்தையின், "என்னங்க! கதவத் தொறங்க!" என்ற சத்தம் காற்றில் கலந்து சுற்றியிருந்தவர்களின் மனசுக்குள் கூசிக் கொண்டு அரூபமாய் எதிரொலித்தது. கதவு பழங்காலத்து ஒற்றைக் கதவு. உள்ளே தாழ்ப்பாள் போட்டு விட்டால் உடைத்து விட்டு உள்ளே நுழைவது கடினமானது.ஓட்டைப் பிரித்தவர்கள் ரீப்பர்களை கைகளால் பெயர்த்து எடுக்கப் பார்த்தனர். கால்களால் பலங்கொண்ட மட்டும் உதைத்துத் தள்ளினர். ஒருவர் உள்ளே குதிக்கும் வகையில் ஓட்டை விழுந்ததும் ஏறியிருந்தவர்கள் ஒவ்வொருவராகக் குதித்தனர். தாழ்ப்பாளைத் திறந்து விட மொத்த கூட்டமும் வீட்டுக்குள் நுழைந்தது. வீடு முழுவதும் அலசித் தேடினார்.
            பின்கட்டுப் பக்கம் குளிக்கும் சத்தம் கேட்டது. ஒரு கணம் எல்லாரும் நின்றனர். தலைதெறிக்க ஓடி வந்த ராணி அத்தை மட்டும் போய்ப் பார்த்தது. "அவுங்க குளிச்சிகிட்டு இருக்காங்க!" என்றது.
            கூட்டத்துக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. கிடைத்த இடத்தில் ஆளாளுக்கு உட்கார்ந்தனர். குளித்து முடித்த பஞ்சு மாமா துவட்டிக் கொண்டு வீட்டுக்குள் வந்தது. கட்டியிருந்த அதே கருத்த வேட்டியைக் கட்டிக் கொண்டிருந்தது. தண்ணீர் பட்டு பாதி வேட்டி நனைந்திருந்தது.
            பஞ்சு மாமாவின் முகத்தில் என்றும் இல்லாத அமைதி இருந்தது. மிகத் தெளிவாகப் பேசியது. "நாம வூடும் கட்டல. ஒண்ணும் கட்டல. அவங்ககிட்டப் போய் சொல்லிடுங்க. நம்மள எல்லாரும் மட்டமா நினைக்கிறாங்களேன்னு நினைச்சுகிட்டு ஏதோ புத்திப் பேசவிப் போய் அப்படிச் சொல்லிட்டன். இந்த வூட்டுக்கு ன்னா கொறச்சல்? இதுலயே இருந்துட்டுப் போறன். புள்ளீங்க தலயெடுத்துப் பண்ணிகிட்டும். மனசுக்குள்ள ஒரே கொழப்பமா இருந்துச்சு. இப்போ தெளிஞ்ச மாரியிருக்கு."
            பஞ்சு மாமா நிதானமாக இருப்பதாக எல்லாருக்கும் தோன்றியது. ஆளாளுக்கு அவர்கள் மனதில் தோன்றிய ஆறுதலைச் சொன்னார்கள். கூட்டம் கலைய நீண்ட நேரமானது. எல்லாரும் முருகு மாமாவையும், லாலு மாமாவையும் திட்டித் தீர்த்தார்கள்.
            வைத்தி தாத்தாவும், அப்பாவும் பஞ்சு மாமாவின் வீட்டில் நுழைந்த போது, "இதுல்ல அசிங்கப்பட ஒண்ணுமில்ல. அவளும் எம் பொண்ணுதான. கொழந்தய தூக்கி வெச்சுக்கிறப்ப அதுங்க ஒண்ணுக்கு அடிக்கிறதில்லியா. அப்படிப் புள்ளீங்க ஒண்ணுக்கு அடிச்சதாங்க சந்தோசம்." என்று பஞ்சு மாமா எதிர்கொண்டு ஆறுதல் சொல்லும் என்று அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை.
            வைத்தி தாத்தாவும், அப்பாவும் அதிகம் பேசவில்லை. பஞ்சு மாமாவைப் பேச விட்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். பஞ்சு மாமா கேட்பவர்களின் ஞாபகச் சக்தியைச் சோதிப்பது போல எப்பப்போதோ நடந்த பல்வேறு சம்பவங்களை ஞாபகப்படுத்திப் பேசிக் கொண்டு இருந்தது. அதையெல்லாம் இப்போது பேசுவதற்கு அவசியம் என்ன என்பது போல அப்பா யோசித்துக் கொண்டிருந்தார். சொந்தப்பந்தங்களில் இருந்த எல்லாரையும் பற்றி பேசிக் கொண்டே வந்து ஒவ்வொருவரும் நன்றாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்த பஞ்சு மாமா, "செய்யுவ ந்நல்ல இடத்துல பாத்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் வாத்தியார்ரே!" என்றது பஞ்சு மாமா.
            "அதுக்கென்ன இப்போ அவசரம்? பத்து பன்னெண்டு வருஷம் இருக்குல்ல!" என்றார் அப்பா சிரித்துக் கொண்டே.
            "அதயெல்லாம் யோஜித்து வெச்சுக்கணும் வாத்தியார்ரே. அந்த நேரத்துல போய் தடபுடன்னு எதயாச்சும் பண்ணிடக் கூடாதுல்ல." என்றது பஞ்சு மாமா.
            "நீங்க ரொம்ப மனவேதனயில இருப்பீங்களோன்னு தவிச்சுப் போய்ட்டோம். நீங்க ன்னான்னா எங்க எல்லாரையும் பத்திப் பேசிட்டு இருக்கீங்களே?" என்று அப்பா சொன்னதும்,
            "பெரிய பய பாலிடெக்னிக்ல படிச்சுட்டு அங்கயே வேல தேடிகிட்டு இருக்காம். நடுபய பட்டறயப் பாத்துப்பாம். சின்ன பய படிச்சுட்டு இருக்காம். எல்லாம் தேறிப்பானுவோ! வூடும் பரவால்ல. அப்புறம் பாத்துப்போம். தேவயில்லாம மனசப் போட்டுக் கொழப்பிக்கிட்டன். அதாங் நீங்கல்லாம் இருக்கீங்கல்ல. இதுல பெரச்சன ஒண்ணும் வேணாம்னு நெனைக்குறன். அப்படியே வுட்டுப்புடலாம். நடந்தது நடந்துப் போச்சு. ன்னாங்குறீங்க?"
            "அத எப்படி அப்புடியே விடறது? அவனுங்களப் போய் ரெண்டு வார்த்த கேட்டுப்புட்டு வந்தா தேவலாம்!" என்றது வைத்தி தாத்தா.
            "அதாங்! அதாங்! வேண்டாங்குறேம்!"
            "நீ இப்படியே இருடா பஞ்சு? இன்னும் எளக்காரமா போவட்டுங்!"
            ராணி அத்தை காபி போட்டுக் கொண்டு வந்தது. காபியைக் குடித்து விட்டு வைத்தி தாத்தா ராணி அத்தையிடம், "ஒண்ணுங் கவலப்படாத. எல்லாம் இருக்குறோம். பாத்துக்கலாம். அவம் ஏதோ புலம்புற மாதிரி தெரியுது. பாத்துக்கோ! காலம்பற வந்து பாக்குறோம்!" என்று கிளம்பத் தயாரானது.
            கிளம்பும் போது பஞ்சு மாமா அப்பாவின் தோள்களைத் தொட்டுச் சொன்னது. "வாத்தியார்ரே நீங்க ஒரு வார்த்த சொன்னீங்க. ரெண்டு பேரையும் ஒரு வார்த்த கலந்துக்குங்கன்னு. கலந்திருக்கலாம் போலருக்கு. கலந்துக்காம போனதாலதான் கோபமாயிடுச்சுங்க. ஒரு எட்டுப் போய் சொல்லியிருந்தா ந்நல்லா இருந்திருக்கும். யாரோ சொல்லிக் கேள்விப்பட்டதும் கோபமா ஆயிடுச்சுங்க. இப்பன்னா வாறீங்களா ஒரு எட்டுப் போய் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்குவோம்!"
            "ன்னடா மன்னிப்பு? நீ ஒம்ம எடத்துல வூடு கட்டுற. அதுக்கு யாரக் கேட்கணும் நீ? தப்புப் பண்ணது அவிய்ங்க. அவிய்ங்கதான் வந்து மன்னிப்புக் கேட்கணும். அசிங்கம் புடிச்சவ்ய்னுங்க!" என்றது வைத்தி தாத்தா.
            பஞ்சு மாமாவின் வீட்டிலிருந்து வெளியே வந்து பக்கத்தில் இருந்த முருகு மாமாவின் வீட்டைத் திரும்பிப் பார்த்தது வைத்தி தாத்தா. வீடு பூட்டப்பட்டிருந்தது. "கெட்டிக்காரப் பய! வூட்டுல இருந்தா வந்து கேள்விக் கேட்போம்னு வூட்டப் பூட்டிட்டு ஓடிட்டாம் பாரு! கவுட்டுக்கார பயல்ல அவம்." என்றது வைத்தி தாத்தா அப்பாவிடம்.
            "போறப்ப ன்னாத்தா அள்ளிகட்டிட்டு போவப் போறாங்களோ தெர்யல. வறட்டுக் கவுரவம் புடுச்சில்ல அலயுறாங்க." என்றது அப்பா.
            "ன்னாத்தா சொல்றது போங்க! ஒண்ணும் நெலவரம் சரியில்ல. நடந்த கதயப்பத்தியெல்லாம் உங்ககிட்டப் பேச முடியாது. அவ்வளவு நடந்துருக்கு. இவனுங்களுக்கு ன்னா கவுரவம் வேண்டிக் கெடக்கு. திருட்டுப் பயலுங்க. ஊர்ல ஒரு கத்திரிக்கா, தேங்கா இருக்கக் கொடாது. அவ்வளத்தயும் திருடித் தின்னு பஞ்சாயத்துல நின்னப் பயலுவோ. இன்னிக்கு ன்னான்னா நெலய நிக்குறானுவோ! அந்த லாலு பய நீலுவோட குண்டியப் பிடிச்சுகிட்டு நின்னப் பயதானே!" என்று வைத்தி தாத்தா பேச ஆரம்பித்ததும் அப்பா ஒதுங்கி ரோட்டோரம் போக ஆரம்பித்தார்.
            "செரி! நீங்க கெளம்புங்க. வாய்ல வந்துபுடுச்சு! ன்னா பண்ணச் சொல்றீங்க?" என்றது வைத்தி தாத்தா.
            வைத்தி தாத்தாவைப் பொருத்த வரையில் இவ்வளவு நாட்களில் இன்றுதான் பஞ்சு மாமாவின் வீட்டின் உள்ளே போய் பேசியிருக்கிறது. யார் வீட்டு விஷேசம் என்றாலும் திண்ணையில் உட்கார்ந்து விட்டு திண்ணையோடு எழுந்து போய் விடும். சாப்பாடு என்றாலும் திண்ணையில் கொண்டு வந்துதான் போட வேண்டும். மற்ற நாட்களில் விசாரிப்பு என்றால் சைக்கிளை விட்டு இறங்காமல் சத்தம் கொடுக்கும். வீட்டில் இருப்பவர்கள் வெளியே வந்து கேட்டுக் கொண்டு போக வேண்டும். அப்படிப்பட்ட வைத்தி தாத்தா இன்று உள்ளே வந்து பேசியதே பஞ்சு மாமாவுக்குப் பெரிய ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். ராணி அத்தையும் இதைக் காப்பி கொடுக்கும் போது சுட்டிக் காட்டிச் சொன்னது, "நீங்க வூட்டுக்கு உள்ளார வந்து காப்பி குடிக்கிறது இது மாரில்லாம் நடக்கணும்னு எழுதிருக்கப் போலருக்கு!"
            பஞ்சு மாமா அமைதியடைந்து விட்டதாக எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
            இரவு ஏழு மணி வாக்கில் கிளம்பிப் பட்டறைக்குப் போவதாக கிளம்பியது பஞ்சு மாமா.
            "இன்னிக்கு ஒரு நாளாச்சம் ந்நல்லா படுத்துத் தூங்குங்க. நாளிக்குப் பாத்துக்கலாம்!" என்று சொல்லியிருக்கிறது ராணி அத்தை.
            "வேல நெறயக் கெடக்குடி. இன்னிக்கு நடந்த கூத்துல்ல ஒண்ணும் ஆகாமப் போயிடுச்சு. கதவ சாத்திட்டுப் படுத்துக்குங்க. நாம வர்றதுக்கு காலம்பற ஆனாலும் ஆவும். நாம்ம கிளம்புறன்." என்றது பஞ்சு மாமா.
            "நடுப்பயலன்னா கெளப்பிட்டுப் போங்களேன்!"
            "அவனே மம்புட்டிக் காம்புக்கு கருவ மரத்த வெட்டிட்டு வந்து களப்பா இருப்பாம். சாப்புட்டுப் படுக்கச் சொல்லு! சின்னவம் எங்க?"
            "ன்னா புள்ளீங்க அவம்? வ்ளோ நடந்துருக்கு. பள்ளியோடம் விட்டு சாயந்தரம் வந்ததும் பக்கத்துல அவங்க வூட்டுல போயி நின்னு பாத்துட்டு பூட்டிருக்கேன்னு திரும்பி வாரான். பெரிப்பா பெரிம்மால்லாம் எங்கேங்குறாம்! அப்புறம் எங்கேயோ கெளம்பிப் போனவம்தாம். ராத்திரி கொட்டிக்கத்தாம் வருவாம் போலருக்கு."
            "பாவம்! சின்ன புள்ள. அவனுக்கு ன்னா தெரியும்? புள்ளீங்கன்னு அப்படித்தாம் இருக்கும்!"
            பஞ்சு மாமா கிளம்பியது. பட்டறையைத் திறந்தது. பட்டறையைச் சுற்றியிருந்த கடைகளில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து விசாரித்து ஆறுதல் சொல்லிப் போனார்கள். பஞ்சு மாமா வேலையைச் செய்து கொண்டே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டது. வேலையில் மிக உன்னிப்பாக இருந்தது.
            பக்கத்து ரைஸ்மில் வேலாயுத முதலியார், "ன்னா பஞ்சு! வுட்டா இன்னிக்கு எல்லா வேலயயும் முடிச்சிடுவே போலருக்கே. வேலய கொஞ்சம் பாக்கி வைங்காணும். நாளிக்கும் பாக்கணும்ல!" என்றார்.
            பஞ்சு மாமா எல்லா வேலைகளையும் முடித்து விட்டு இரவு படுத்த போது மணி எத்தனை ஆகியிருக்கும் என்பது தெரியவில்லை. பஞ்சு மாமா கதவை உள்புறமாகப் பூட்டிக் கொண்டு படுத்துக் கொண்டது.
            பொழுது புலர்ந்தது.
            வீயெம் மாமாவின் சைக்கிள் வடவாதியிலிருந்து திட்டையை நோக்கி வேகமாக விரைந்து கொண்டிருந்தது.
            விகடு மணமங்கலம் பள்ளிக்கும், செய்யு திட்டைப் பள்ளிக்கும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்பாவுக்குப் பள்ளிக்கூடம் நேரமாகி இருந்ததால் அவரும் வேக வேகமாக கொல்லையில் குளித்துக் கொண்டிருந்தார்.
            மணி எட்டரை, எட்டே முக்கால் சுமார் இருக்கும்.
            சைக்கிளில் வேகமாக வந்த வீயெம் மாமா சைக்கிளை அப்படியே போட்டு விட்டு தடதடவென்று வீட்டுக்குள் ஓடி வந்தது. சைக்கிள் கீழே விழுந்த சத்தம் வீடு முழுவதும் கேட்டிருக்க வேண்டும்.
            செய்யு புருவத்தை மேலே தூக்கி என்னவென்பது போலப் பார்த்தாள்.
            "அப்பா எங்கடா?" என்றது வீயெம் மாமா.
            அதற்குள் அம்மா ஓடி வந்து, "ஏண்டா சின்னம்பி சைக்கிள இப்படிப் போட்டுட்டு ஓடியார்றே?" என்றது.
            வீயெம் மாமா அழ ஆரம்பித்தது. "ன்னடா சொல்லுடா! அம்மாக்கு மறுபடியும் ஒடம்பு எதுவும் முடியலியா? அந்த வள்ளிக்குட்டி எதாச்சும் பண்ணாளாடா?"
            "அலுல்லாம் ஒண்ணுமில்ல. பஞ்சு மாமா மருந்து குடிச்சுட்டுச் செத்துப் போயிட்டு!" என்று ஓவென்று கதறி அழ ஆரம்பித்தது வீயெம் மாமா.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...