17 Mar 2019

புது வீடு கட்ட நினைக்க உருவான புதிய மனிதர்கள்



செய்யு - 27
            ஒருவரைப் பிடிக்காமல் போய் விட்டால் அவரை ஒதுக்கி மனதளவில் கொன்று விடுவார்கள் முருகு மாமாவும், லாலு மாமாவும். பஞ்சு மாமாவை அதுகள் இரண்டும் வெறுப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அது அவர்களோடு உடன் பிறந்தது. அதிர்ந்து பேசக் கூட தெரியாதது. குழந்தைகளிடம் பேசத் தெரிந்த அளவுக்குக் கூட அதுக்குப் பெரியவர்களிடம் பேசத் தெரியாது. குழந்தைகளிடம் எப்படிப் பேசுமோ அப்படி ஓர் அப்பாவித் தனத்தோடுதான் அது எல்லாரிடமும் பேசும். படித்து வேலைக்குப் போகாத பஞ்சு மாமா உழைத்து இந்த அளவுக்குச் சம்பாதிப்பது அதுகள் இரண்டின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு கணக்குப்படி பார்த்தால் அது உண்மை. படிக்காமல் உழைத்துச் சம்பாதிப்பவர்களில் அதிகமாகச் சம்பாதித்தவர்களின் பட்டியலில் பஞ்சு மாமாதான் முதலில் இருந்தது.
            பஞ்சு மாமாவை இழிவுப்படுத்துவதில் முருகு மாமாவின் பிள்ளைகளுக்கு தனி சந்தோசம். முருகு மாமாவுக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருந்தன. மூத்தப் பிள்ளை சந்திரா. அதை நாரங்குடியில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். ரெண்டாவது ரகு. மூன்றாவது வீரா. நான்காவது தேசிகா. ஐந்தாவது சுமன்.  இதில் நான்காவதாக சொன்ன தேசிகாதான் பஞ்சு மாமாவை அதிகமாக நக்கல் செய்யும். அதெல்லாம் தேசிகாவின் சொற்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதெல்லாம் முருகு மாமாவும், பஞ்சு மாமாவும், நீலு அத்தையும் பேசிக் கொள்ளும் போது தேசிகா கவனித்த வார்த்தைகளாகத்தான் இருக்க முடியும். அவ்வளவு கேவலமாகச் சிந்திப்பதற்கு தேசிகாவுக்கு அனுபவம் போதாது. தேசிகா எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் பஞ்சு மாமாவுக்கு தேசிகா மேல் தனிப் பிரியம். அதற்கு தேசிகா பெண் குழந்தை என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. தனக்கு ஒரு பெண் பிள்ளை இல்லை என்ற ஏக்கத்தை பஞ்சு மாமா இப்படித்தான் எல்லா பெண் குழந்தைகள் மேலும் பிரியத்தைப் பொழிவதன் மூலம் தணித்துக் கொண்டது.
            பஞ்சு மாமாவின் போக்கில் சில மாதங்களாகவே மாற்றம் ஏற்படத் துவங்கியது. உடல் பெருத்துக் கொண்டே போனது. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் நடுராத்திரி நேரங்களில் எழுந்து பட்டறையைத் திறந்து வேலை பார்க்க ஆரம்பித்தது. பேசுவது குறைந்து கொண்டே போனது.
            திடீரென்று ஒரு நாள் ஓட்டு வீட்டை இடித்து விட்டு மாடி வீடு கட்டப் போவதாக சொன்னது பஞ்சு மாமா. பிரச்சனை இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பித்தது. பஞ்சு மாமாவின் வீடு நன்றாகத்தான் இருந்தது. முருகுவும், லாலுவும் மட்டம் தட்டி தட்டி அதன் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்திருந்தார்கள். அந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீண்டு வருவது பஞ்சு மாமாவுக்கு அப்போது முக்கியமாகப் பட்டிருக்க வேண்டும். பொதுவாக யாரையும் குறை சொல்லாத பஞ்சு மாமா முதன் முறையாக தேசிகாவின் மீது அப்பாவிடம் குறை சொன்னது.
            "அந்தச் சின்னப் பொண்ணு கூட நம்மள மதிக்க மாட்டேங்குது வாத்தியார்ரே! நாம்ம சரியான துருத்தியாங். நாம்ம பொட்டதனமா நடந்துக்குறோம்மா. கிழிஞ்ச வேட்டி பண்டாரங்குது. கருத்த வேட்டி கரிச்சட்டிங்குது. கிட்ட வராத நாறுதுங்குது. வேர்வ நாத்தங் முண்டஞ்சாமிங்குது. இதல்லாம் அந்தப் பொண்ணால யோஜிக்க முடியுமா சொல்லுங்க வாத்தியார்ரே? அன்னிக்கு வேலய்க்குக் கெளம்பிப் போறன். பின்னாடி சின்ன கல்ல தூக்கி நம்ம மேல அடிக்குதுங்க வாத்தியார்ரே! நமக்கு ரொம்ப வெசனமா போச்சுங்க வாத்தியார்ரே! நாம்ம கொல்லு வேல பாக்குறுங்கிறதாலதான கொஞ்சங் கூட மதிக்க மாட்டேன்றானுவோ. அதாங் வாத்தியார்ரே, வூட்டக் கட்டிப்புடறதுன்னு முடிவுக்கு வந்துட்டன்!"
            அப்பா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு மெளனமாக நின்று கொண்டிருந்தார்.
            "ன்னா வாத்தியார்ரே ஒண்ணுஞ் சொல்லாம அப்படியே செலயாட்டம் நிக்குறீங்க?"
            அதற்கு மேலும் மெளனத்தைத் தொடர விரும்பாமல், "பெரியவங்கிட்டயும், சின்னவங்கிட்டயும் ஒரு வார்த்த கலந்துகிட்டீங்களா சித்தப்பா?" என்றார் அப்பா.
            "எங்க வாத்தியார்ரே கலந்துக்குறது? நாம்மளதான் கிட்டக்கூட நெருங்க வுட மாட்டேங்றானுவோ. நம்மள ஒரு நாயா மதிச்சாக் கூட நல்லாயிருக்கும்ல! வூட்ட இடிச்சுபுடறதுன்னு முடிவு பண்ணிட்டன். நமக்கு யாரும் வாணாம் வாத்தியார்ரே. நீங்க மட்டும் வந்து நின்னா போதும்!"
            முருகு மாமாவுக்கும், லாலு மாமாவுக்கு செய்தி தெரிந்த அன்று சாயுங்காலம் வீட்டின் முன் சண்டைக்கு நின்றார்கள்.
            "ரெண்டு வூடு ஒண்ணா நிக்குது. மத்தியில பொதுச்சொவரு இருக்குது. வூட்ட இடிக்கிறதுன்னா ரெண்டயும் ஒண்ணா இடிக்கணும். பயித்தியங்கூலித்தனமா ஒண்ண இடிச்சு இன்னொன்னு கீழ வுழுந்துச்சுன்னா அப்பறம் நல்லா இருக்குது பாத்துக்கோ!" முருகு மாமா ரோட்டில் நின்று கொண்டு சத்தம் போட்டது.
            "கொல்லு வேல பாத்து கொள்ளை அடிக்குறங்ற திமிராங்றேன்? இருக்கறத ஒலுங்கு மருவாதய இருக்கணும். காசு இருக்குன்னு ஆடிகிட்டு நின்னா சூத்த அறுத்துப்புடுவம் பாத்துக்கோ!" லாலு மாமாவும் சத்தம் போடுவதில் சேர்ந்து கொண்டது.
            "நாம்ம வந்து உம்மகிட்ட காசு கேட்டனா? வூடு கட்ட எடம் கேட்டனா? எதுவும் கேக்கல. பொதுச்சொவருக்கு எந்த பங்கமுமில்லாம வூட்டை இடிக்கறத நாம்ம பாத்துக்குறேன்."
            "காசு கொலுப்பு எடுத்து அலயாதடா பயித்தங்கூலிப் பயலே! கட்டுனா ரெண்டு வீட்டயும் ஒண்ணா தூக்கி நிறுத்திக் கட்டணும். எங்கிட்ட காசு வாணாமா? காசு வந்தோன்னா சொல்றன்டா பயித்தங்கூலிப் பயலே! அது வர்றிக்கும் ச்சும்மா கெடடா பயித்தங்கூலிப் பயலே!"
            இவர்கள் பேசுவதையெல்லாம் வீட்டுக்குள்ளிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த  ராணி அத்தை, "ஆசக்கி ஒரு வூடு கட்டிக் கூட பாக்கக் கூடாதா?" என்று ரோட்டுக்கு வந்து அழ ஆரம்பித்தது.
            "வந்துட்டா மவராசி குலுங்கிகிட்டு. புருஷங்காரதாம் பயித்தியம் புடிச்சுப் போய் கோட்டித்தனமா உளர்றான்னா இவம் அதுக்கு மேல மெண்டலு கேஸால்லா இருப்பா போலருக்கு. புத்திமதிச் சொல்லித் திருத்துடி தரித்திரங் பிடிச்ச நாயீ!" என்றது நீலு அத்தை.
            "யாரு ன்னா சொன்னாலும் சர்தான். வ்வூட்டுக் கட்டுறது கட்டுறதுதாங்! நமக்கு வூடு கட்டணுங். நம்மள யாரும் இம்ச பண்ண வேணாம்!" என்றது பஞ்சு மாமா அழும் குரலில்.
            "போடா மசுர்ரூ. மசுர்ரூ..." என்று ஆரம்பித்து வாய் கூசும் வார்த்தைகளாக பேச ஆரம்பித்தது முருகு மாமா.
            லாலு மாமாவும் தான் ஒரு வாத்தியார் என்பதை மறந்து, "மசுர்றான்... மசுர்றான்..." என்று ஆரம்பித்து ஆண்-பெண் இனப்பெருக்க உறுப்புகளோட தொடர்புடைய வார்த்தைகளாக பேச ஆரம்பித்தது.
            "எங்கள வுட்டுருங்க. எங்கள வுட்டுருங்க. கேவலமா பேசாதீங்க!" என்று ராணி அத்தைக் குழறும் குரலில் கெஞ்ச ஆரம்பித்தது.
            "நாம்மா யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏம் இப்படிப் போட்டு நம்மள கேவலமா பேசுறீங்க?" என்று அழுதது பஞ்சு மாமா.
            முருகு மாமாவும், லாலு மாமாவும் நாராசமான வார்த்தைகளைப் பேச கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. கூடியவர்கள் எல்லாரும் முருகு மாமாவையும், லாலு மாமாவையும், "எதுவும் பேசாதீங்க. பேசித் தீர்த்துக்கலாம். எதுவா இருந்தாலும் கூட்டம் போட்டு சமாதானம் பண்ணிக்கலாம்!" என்று தணிக்க முயன்றுப் பார்த்தார்கள். அவர்கள் தணிக்க முயல முயல இருவரின் வாயிலிருந்தும் அருவருக்கத்தக்க ஆபாசமான வார்த்தைகளாக வர ஆரம்பித்தன. கடைசியாக கூட்டத்தில் இருந்தவர்கள் இருவரையும் இழுத்துக் கொண்டு போக முயற்சித்தனர். இவருவரும் திமிறிக் கொண்டு முன்பை விட மிக மோசமாக பேச ஆரம்பித்தார்கள். சூழ்நிலை நிலைகுழைய ஆரம்பித்தது.
            ராணி அத்தை, "பேச்ச நிறுத்துங்கடா!" என்று அதிரும் குரலில் கத்திக் கொண்டே கூந்தலை விரித்துப் போட்டது.
            "பொட்டச் சிறுக்கி..." என்று ஆரம்பித்து முருகு மாமாவும், லாலு மாமாவும் ஒரே குரலில் பேச ஆரம்பித்தனர்.
            தன் மனைவியைக் கேவலமாகப் பேசுகிறார்கள் என்று தெரிந்தும் கையெடுத்துக் கும்பிட்டபடி, "இப்படியல்லாம் பேசாதீயோ!" என்று தலைகுனிந்தபடி நின்றது பஞ்சு மாமா.
            ராணி அத்தை வேக வேகமாக வீட்டுக்குள் ஓடி அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தது. "பேசுங்கடா! எவனா யிருந்தாலும் பேசுங்கடா! நாக்க அறுக்குறம் பாருங்கடா! பேசுங்கடா! இப்பப் பேசுங்கடா!" என்றது.
            இப்போது பஞ்சு மாமா உடல் அதிர நடுங்கிக் கொண்டே நின்றது.
            இப்போதாவது ஓர் அமைதி ஏற்பட்டு எல்லாம் கலைந்து போய் விடுவார்கள் என்று கூட்டம் எதிர்பார்த்தது. நிலைமை அதற்கு மேல் இன்னும் தீவிரமானது.
            "டேய் பொட்ட நாயே! பொட்டச்சிய பேச வுட்டுட்டு வேடிக்கையாடா பாக்குறே? ஒம் மூஞ்சுல ஒண்ணுக்கு அடிக்கிறம் பாருடா. அதக் குடிச்சாதான்டா நீயில்லாம் திருந்துவ!" என்று லாலு மாமா தன்னைப் பிடித்திருந்தவர்களை உதறி விட்டு வேட்டியை அவிழ்த்து எறிந்து விட்டு பட்டாப்பட்டி டிராயரோடு பஞ்சு மாமாவை நோக்கி முன்னேறியது.
            அதுவரை எங்கிருந்தாளோ என்று தெரியாத தேசிகா ஓடி வந்து, "சித்தப்பா நீயேம் அந்தப் பொட்டபய மேல ஒண்ணுக்கு அடிக்குறே. நம்மள தூக்கி வுடு நாம அடிக்கிறேம். பொட்டச்சி அடிச்சாதாங் பொட்டப்பயலுக்கு புத்தி வரும் தெரியுமா?" பெரிய மனுசிப் போல பேசியது. கூடியிருந்த கூட்டத்துக்கு ஒரு நொடி சர்வநாடியும் ஒடுங்கியது போலிருந்திருக்க வேண்டும். சுற்றியிருந்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்பதற்குள், கூட்டத்தின் அதிர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு முருக மாமா தன்னைப் பிடித்திருந்தவர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஓடி வந்து தேசிகாவைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு பஞ்சு மாமா முன் போய் நின்றது.
            ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் இல்லாமல் எது முன்னே நிகழ்ந்து, எது பின்னே நிகழ்ந்தது என்று புரிவதற்குள் தேசிகா அடித்த ஒண்ணுக்கு பஞ்சு மாமாவின் முகத்திலிருந்து ஒழுகி உடல் முழுவதையும் நனைத்துக் கொண்டு இறங்கியது. பஞ்சு மாமாவுக்கு நகர வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அப்படியே நின்றது.
            கூட்டமே ஒன்று சேர்ந்து "நீங்கல்லாம் மனுசங்களடா!" என்று சத்தம் போட்டபடியே முருகு மாமாவையும், லாலு மாமாவையும் இழுத்துக் கொண்டு போய் ரோட்டின் ஓரத்தில் பிடித்துத் தள்ளினார்கள். "ச்சீ! இதுல்லாம் ஒரு பொண்ணா?" என்று ஒருவர் காறித் துப்பினார்.
            ராணி அத்தை அரிவாளைக் கீழே போட்டு விட்டு தலையில் அடித்துக் கொண்டே மண்ணை வாரி இறைத்தது. "நீங்கல்லாம் நல்லா இருக்க மாட்டீங்கடா! நாசமா போயிடுவீங்கடா!"
            பஞ்சு மாமா அமைதியாக, இடித்து விட்டு கட்ட வேண்டும் என்ற நினைத்து அந்த ஓட்டு வீட்டுக்குள் மெதுவாக மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்துப் போனது. கதவைப் படாரென்று அறைந்து சாத்தியது. கூட்டத்திலிருந்த ஆண்கள் ஓடிப் போய் கதவைப் படார் படாரென்று தட்டினார்கள். ஒரு சிலர் வீட்டுக்கு மேலேறி ஓட்டைப் பிரிப்பதிலும் இறங்கினார்கள்.
            இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே சேதி வடவாதி முழுவதும் பரவி, திட்டைக்கும் போய்ச் சேர வைத்தி தாத்தா வீட்டிலிருந்தும், விகடுவின் வீட்டிலிருந்தும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...