1 Mar 2019

மூர்த்தியப்பருக்குப் பூசை



செய்யு - 11
            அம்மாவிற்கு ஊசி போடாமலே ஆஸ்பத்திரியிலே அழைத்து வர வேண்டியதாகி விட்டது. இப்படி ஒரு சூழலை அப்பா எதிர்பார்த்திருக்க மாட்டார். அவருக்கு தர்மசங்கடமாகி விட்டது. அடுத்தமுறை பாப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் மன்னார்குடி டாக்டரிடம் எப்படி அழைத்துச் செல்வது என்று குழம்பித் தவித்தார்.
            செய்யுவுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தைக் கொடுக்கும் போது மட்டும் அழுகையை நிறுத்துவாள். சிறிது நேரத்தில் மீண்டும் அழ ஆரம்பித்து விடுவாள். ஆள் மாற்றி ஆள் தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் அவள் அழுகை சற்று மட்டுப்பட்டது போல இருக்கும். பாயிலோ தொட்டியிலோ போட்டால் அழுகை அதிகமாகி விடும்.
            சாமியாத்தாவுக்கு சொல்லி விட்டு அவர் வந்து விபூதி போட்டுப் பார்த்தார். இரண்டு நாளுக்கு ஒருமுறை வந்து விபூதி போட்டு விட்டுப் போனார். செய்யுவின் அழுகை நிற்காததைப் பார்த்து சாமி வந்து விட்டது அவருக்கு.
            "ம்... உம்... ம்ஹூம்" என்று பெருமூச்சு விட்டபடி, "மூர்த்தியப்பருக்கு வேண்டிகிட்டு ஒரு பூச பண்ணிடு!" என்றார்.
            "மூர்த்தியப்பா! நான் என்ன ஒனக்கு கொறை வெச்சேன்! ஒனக்கா பூச பண்ண மாட்டேன்?" என்று அம்மா சொன்னதும்,
            "சீக்கிரம் பண்ணிடு! ம்! சீக்கிரம் பண்ணிடு!" என்று முறுவலித்தார் சாமியாத்தா.
            மறுநாளே பூசைக்கான ஏற்பாடுகள் தயார் ஆனது. மூர்த்தியப்பருக்கு பூசை என்றால் அரிசி மாவும் வெல்லமும் கலந்த அடை, தேங்காய், பூ, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சுருட்டு, கள்ளு எல்லாவற்றையும் வைத்து செய்ய வேண்டும். கோழிக்குழம்பு கட்டாயம்.
            ரொம்பவும் உக்கிரமான சாமி மூர்த்தியப்பர். உச்சி கால வேளையில், பொழுது சாயும் வேளையில் கோயில் பக்கம் அண்ட விட மாட்டார் என்று பேசிக் கொள்வார்கள் ஊரில்.
            "நாங்கல்லாம் அங்கப் போயி எல்லா நேரமும் விளயாடியிருக்கோமே! எங்களயெல்லாம் அடிச்சதேயில்லியே!" என்று விகடு நாகு தாத்தாவிடம் கேட்டிருக்கிறான்.
            "இனிம அந்த மாதிரில்லாம் போய் விளயாடிப் புடாதே. அவரு நம்ம ஆளு. அடிக்கடி நான் சுருட்டு வாங்கிப் படைக்கிறன்ல. அதனாலதான் வுட்டுருக்கார். அவரு என்னோட சகவாசம் வெச்சிருக்கவங்கள ஒண்ணும் பண்ண மாட்டாரு. தெரிஞ்சிக்கோ!" என்று நாகு தாத்தா அதற்கு ஒரு பதில் சொல்லியிருக்கிறார்.
            மூர்த்தியப்பர் சிலையில் பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பார். ஆள் நல்ல ஆஜானுபாகுவான உயரமானத் தோற்றம். ஒரு கையில் அரிவாளோடு ஓங்கிய வண்ணமும் மறுகையில் ஒரு நீண்ட தடியும் வைத்திருப்பார். வேட்டியை முழங்காலுக்கு மேல் கால் சட்டை போல மடித்துக் கட்டியிருப்பார். தலையில் ஒரு முண்டாசு கட்டு.
            மூர்த்தியப்பர் கோயில் மூன்று தடுப்புகளாக இருக்கும். ஒவ்வொரு தடுப்பின் கூரையும் ஆர்ச் வடிவில் பார்க்க அழகாக இருக்கம். நடுவில் மூர்த்தியப்பர். இடது ஓரம் வீரன் சாமி. வலது ஓரம் பெரியாச்சி. மூன்று சாமிக்கும் மாலை போட்டு மூர்த்தியப்பருக்கும் வீரனுக்கும் வேட்டி சார்த்தி, பெரியாச்சிக்குப் புடவை சாத்தி பூசைப் பண்ணுவார்கள்.
            மூத்தியப்பர் கோயிலுக்குப் போக வேண்டும் என்றால் கேணிக்கரை ஸ்டாப்பிங்கிலிருந்து ரோட்டைக் கடந்து வெண்ணாற்று மூங்கில் பாலத்தைக் கடந்து போக வேண்டும். கோடைக்காலம் என்றால் ஆற்றில் இறங்கிப் போவதுண்டு. மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். ஆறு அது கொண்ட ஆழமாக இருக்கும்.
            பூசைக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் அப்பா செய்தார். வேளாருதான் பூசாரி. வேளாரு குட்டையாக கருப்பாக இருப்பார். எங்கே போவது என்றாலும் நடந்துதான் போவர். வேட்டி கட்டி தோளுக்கு இன்னொரு வேட்டியைப் போட்டு சுற்றியிருப்பார். அரிசி அடை, கோழிக்குழம்பை அவரே தயார் செய்து கொண்டு வந்தார். சோறு வடித்த பானை ஒன்றையும் வேட்டியால் ஈடு கட்டிக் கொண்டு வந்திருந்தார். பூசை ஆரம்பிக்கும் நேரத்தில் ஈச்சமண்டை கலயத்தில் கள்ளு கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார்.
            அந்த நேரத்தில் மழை லேசாக தூறுவதும் நிறுத்துவமாக இருந்தது. மூர்த்தியப்பருக்கு சாயுங்கால பூசைதான் செய்வார்கள். பள்ளிக்கூடம் விட்டு வந்து கலந்து கொள்வதற்கு அது வசதியாக இருந்தது.
            பூசைக்கு சாமியாத்தாவும் வந்திருந்தார். அம்மா, விகடு, அப்பா, அதிராம்பட்டினத்து ஆத்தா, அந்த ஆத்தாவின் கையில் செய்யு, சின்னு, பரமு, மன்னு, முருகு, பக்கத்து வீட்டு அய்யாவு, அம்மாசி, தம்மேந்தி ஆத்தா, முல்லேம்பா ஆத்தா, நாகு தாத்தா எல்லாம் இருந்தார்கள்.
            செய்யுவுக்கு அந்தப் புதிய சூழலில் அழத் தோன்றவில்லை போலும். அமைதியாக இருந்தாள்.
            "பாத்தீங்களாணும். மூர்த்தியப்பரு கோயிலுக்கு வந்த ஒடனே அழுகையை நிப்பாட்டிட்டா பொண்ணு!" என்றார் நாகு தாத்தா.
            வேளாரு பூசாரி புரியாத மொழியில் மந்திரம் போல ஓதிக் கொண்டே படையல் போட்டுக் கொண்டிருந்தார். அது ஏதோ மாந்திரீக மொழி போல இருந்தது.
            "முடிகயிறு போட்டுருக்கேன். இனிமே கொழந்த அழாது! வெள்ளி, செவ்வாய் மூர்த்தியப்பருக்கு விளக்குப் போடணும்! அடுத்த வருசமும் பூச போடறேன்னு வேண்டிக்கணும்!" என்றார் வேளாரு பூசாரி. அவரே செய்யுவின் கையில் முடிகயிற்றைக் கட்டி விட்டார். "எப்பா! மூர்த்தியப்பா! நீந்தேன் இந்தக் கொழந்தையோட அழுகைய நிப்பாட்டணும். யாரு ஏவல் செஞ்சிருந்தாலும் அத அழிச்சிப்புடணும்!" என்றார்.
            முடிகயிறைக் கட்டி முடித்ததும் செய்யு சிரித்தாள். எல்லாருக்கும் சந்தோஷமாக இருந்தது.
            அரிசி அடையையும், வாழைப்பழத்தையும் எல்லாருக்கும் கொடுத்தார் பூசாரி. கோழிக்குழம்பு கொண்டு வந்திருந்த பாத்திரத்தைத் திறந்தார். சோற்றுப்பானையில் ஈடு கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்தார். சோற்றைக் கோழிக் குழம்பில் கொட்டி கையால் கிளறினார். உருண்டையாக உருட்டி ஆளுக்கு ஒரு கை கொடுத்தார். அந்தக் கோழிக்குழம்பு வித்தியாசமாக இருந்தது. உரைப்பும் உப்பும் அதிகமாகவும் அதே நேரத்தில் ரொம்ப ருசியாகவும் இருந்தது. வேண்டும் என்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் உருட்டிக் கொடுத்தார். விகடுவும் அவனது கூட்டாளிகளும் நான்கு கை வாங்கிக் கொண்டார்கள். நாகு தாத்தாதான் நிறைய வாங்கிச் சாப்பிட்டார். பத்து கைகளுக்கு மேல் போனது அவருக்கு.
            பூசை முடித்து தட தடவென்று ஆடிக் கொண்டிருக்கும் அந்த மூங்கில் பாலத்தைக் கடந்து எல்லாரும் வந்து கொண்டிருந்தார்கள். நாகு தாத்தா மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தார். "மனுசன் அங்கேயே நின்று பூரா கள்ளையும் குடிச்சுபுட்டுதாம் வருவாரு!" என்றார் தம்மேந்தி ஆத்தா.
            இனிமே செய்யு பாப்பா அழ மாட்டாள் என்பதை நினைத்த போது எல்லாருக்கும் சந்தோசமாக இருந்தது.
            அன்று நள்ளிரவு வரை அந்த சந்தோசம் எல்லாருக்கும் இருந்தது. அதன் பின் அவள் அழ ஆரம்பித்த அழுகை இதற்கு முன் கேட்காததாக இருந்தது. அவள் அழுத அழுகையில் தெருவே முழித்துக் கொண்டது. எந்த சத்தத்துக்கும் அசராமல் தூங்கும் விகடுவும் முழித்துக் கொண்டான்.
            "எப்பா! மூர்த்தியப்பா! அதாஞ் செய்ய வேண்டிய எல்லாமும் செஞ்சிட்டோம்ல. இன்னும் ஏம்ப்பா கொழந்தய அழ வுடுறே?" என்றார் அதிராம்பட்டினத்து ஆத்தா.
            "யய்யா! எம் கொழந்தய அழ விடாம செய்யுங்கய்யா!" மூர்த்தியப்பரிடம் மன்றாடினார் அம்மா.
            அப்பா மோட்டுவளையை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தார்.
            மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொண்டு எல்லாரும் செய்யுவை அமைதிபடுத்த முயன்றார்கள். செய்யுவின் பேரழுகையோடு நகர்ந்து கொண்டிருந்தது அந்த இரவு.
            பொழுது புலரும் நேரத்துக்குச் சற்று முன் அசந்து போய் தூங்க ஆரம்பித்தாள் செய்யு. அப்போதுதான் அவளுடைய அழுகை நின்றது.
            அப்பா அந்த அதிகாலை நேரத்தில் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேளாரு பூசாரி வீட்டுக்குப் போனார். போன வேகத்தில் திரும்பி வந்தவர், "டேய் தம்பி! வந்து வண்டியில ஏறு. ஓகையூர் வரைக்கும் போய்ட்டு வருவோம்!" என்றார்.
            "இப்ப எதுக்கு விடிஞ்சும் விடியாம ஓகையூருக்கு?" என்றார் அம்மா.
            "வெள்ளெருக்கு நாருல கயிறு போட்டா கொழந்தயோட அழுகை நிக்கும்ணு சொன்னாரு வேளாரு! வெள்ளெருக்கு நாறு இங்க எங்க இருக்கு? ஓகையூருக்குப் போகணும். வெள்ளையாத்தாங்கரையில முன்னாடி ஒரு தடவ பாத்திருக்கேன். அதான் போய்ட்டு வந்துடறேன்!" என்றார் அப்பா.
            விகடு ஓடிப் போய் சைக்கிளில் ஏறிக் கொண்டான். அவ்வபோது பெய்த மழையில் சாலை சேறும் சகதியுமாய் இருந்தது. மழைநீர் அங்கங்கே தேங்கி நின்றது. சைக்கிளின் சக்கரங்கள் ஒகையூரை நோக்கிச் சுழல ஆரம்பித்தது.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...