7 Feb 2019

வனவிலங்குகளின் அழிவு - திட்டமிடப்பட்ட முயற்சி


கட்டடக் காடுகளின் மிருகங்கள்
            ஒரு யானையின் அட்டகாசம் தலைப்புச் செய்தியாகிறது. வனாந்திரங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த யானைகளுக்கு வனாந்திரம் மறுக்கப்படும் போது அதன் அட்டகாசங்கள் தொடங்குகின்றன.
            யானைகளின் அட்டகாசம் என்பது காடுகள் அழிக்கப்பட்டதை எதிர்த்து யானைகள் செய்யும் ஒரு போராட்டத்தின் வடிவம்.
            காடுகள் இருந்தால்தான் யானைகள் இருக்க முடியும். காடுகளே யானைகளின் தேவைகளை நிறைவு செய்ய முடியும். நேர்மாறாக யானைகள் இருந்தால்தான் காடுகள் இருக்கும். அவ்வகையில் யானைகள் காடுகளின் வனக்காவலர்கள்.
            நாம் எந்தக் காட்டை வளர்த்தோம்? எந்தக் காட்டை உருவாக்கினோம்? காடுகள் அவைகளாக வளர்ந்தன, உருவாகின. காடுகள் தந்த பலன்களை மட்டும் பெற்றுக் கொண்டோம். காடுகள் நமக்கு மட்டுமா பலன் தருகிறது? வனவிலங்குகளுக்கும் பலன் தருகிறது. எத்தனையோ பறவைகள், விலங்குகள், பூச்சிகளும், அருவிகள் போன்றவைகளுக்கு காடுகள் தாய். மழையின் முலைப்பாலும் காடுகளே.
            புலிகளைப் பாதுகாக்கவோ, யானைகளைப் பாதுகாக்கவோ நாம் செய்ய வேண்டியது எதுவுமில்லை. காடுகளை காடுகளாக விட்டு விட்டால் போதும். காடுகள் புலிகள், யானைகளின் காவல் தெய்வங்களாக காத்து நிற்கும். அழிந்து கொண்டிருக்கும் வனவிலங்குகளைப் பாதுகாக்க, பராமரிக்க நாம் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை. அதற்கான வரவு செலவு கணக்கு காடுகளில் கச்சிதமாக இருக்கின்றது. காடுகள் பார்த்துக் கொள்ளும்.
            மனிதர்கள் தந்திரமானவர்கள். காடுகள் அழிய வேண்டும் என்று நினைப்பவர்கள். அப்போதுதான் அங்கு தங்களின் சுயநலத்திற்கான இடங்களை உருவாக்க முடியும், யானைகளின் பாதுகாப்பு, புலிகளின் பாதுகாப்பு என்று நாமகரணங்களைச் சூட்டி பணத்தை ஒதுக்க முடியும் என்று திட்டமிடுபவர்கள். ஆம், ஒதுக்க முடியும் என்று திட்டமிடுபவர்கள்.
            காடுகள் பழங்குடிகளிடமும், வனவிலங்குகளிடமும் இருந்த வரையில் காடுகள் காடுகளாக இருந்தன. காடுகள் என்று நம் மனிதர்களிடமோ வந்ததோ அன்றே காடுகளில் இருந்த மிருகங்கள் அழிந்து ஒழிந்து போயின. அழிந்துப் போன காடுகளின் கோர மிருகங்களாக மனிதர்கள் ஆகிப் போயினர். இந்தக் கோர மிருகங்களுக்கு தாவரக் காடுகள் தேவையில்லை, கட்டடக் காடுகளே போதும்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...