8 Feb 2019

அரிவாள் மனையில் வெட்டிப் போடு! - சிறுகதை


அரிவாள் மனையில் வெட்டிப் போடு!
- விகடபாரதி
            ஊருக்குள் டாஸ்மாக் வந்த போது கமலாவுக்கு மகிழ்ச்சி. இனி தன் புருஷன் குடித்து விட்டு வெளி ஊர்களில் விழுந்து கிடக்க மாட்டான். உள்ளூரில் குடித்து விட்டு உள்ளூரில் விழுந்து கிடப்பான். ஊர் ஊராய்த் தேடி அலைந்து கொண்டு தூக்கி வர வேண்டியதில்லை. உள்ளூரிலே தேடிக் கண்டுபிடித்துத் தூக்கிக் கொண்டு வந்து விடலாம். டாஸ்மாக் வந்ததற்கு மனதார தன் நன்றிகளை அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொண்டாள்.
            வழக்கமாக எட்டரை மணி சீரியல் முடிந்ததும் பக்கத்து வீட்டு சித்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவாள் கமலா. அவள் புருஷனும் அப்படித்தான். குடித்து விட்டு எங்காவது விழுந்து கிடப்பான். ஊரில் பெரும்பாலான ஆண்கள் அப்படித்தான். ஒவ்வொருத்தியும் பக்கத்து வீட்டுப் பெண்களை ஒருத்தொருக்கொருத்தர் ஒத்தாசையாய் அழைத்துக் கொண்டு கிளம்பிப் போவார்கள்.
            "ஆம்பிளைங்களுக்குக் குடிச்சே சீரழியவும், பொம்பளைங்களுக்கு உழைச்சே தேய்ஞ்சு போவவும் தலையில எழுதியிருக்கு!" என்று இந்த பொண்டுகள் கூட்டம் புருஷன்மார்களைத் தேடிப் போகுற வேளையில் காத்தாயி கிழவி வெற்றிலைப்பாக்கைப் போட்டு இடித்துக் கொண்டே குழறிக் குழறிச் சொல்வாள். காத்தாயி கிழவிக் காலத்தில், கிழவன் கள் குடித்து விட்டு இப்படித்தான் கிடந்ததாகவும், இப்போ பாட்டில்ல குடிச்சிட்டு இப்படி கிடக்கிறதாகவும் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பாள்.
            கிழவியின் பேச்சை உட்கார்ந்து கேட்டால், குடித்து குடிபுரண்டு கிடக்கும் புருஷன்மார்களைக் காக்காய்க் கொத்திக் கொண்டு போய் விடும் என்று எந்த பெண்டும் அதற்கும் மேல் அங்கே நிற்காது சென்று கொண்டே இருப்பார்கள்.

            குடித்து விட்டு வீடு திரும்புவதை விட, இதே போல் மயங்கி விழுந்து கிடக்கும் புருஷன்களையே பெரிதும் விரும்பினர் அந்த கிராமத்துப் பெண்டிர்கள். கொஞ்சம் தெளிவோடு வீட்டுக்கு வந்தால் அவர்கள் நிலை கந்தக் கோலமாகி விடும். அவர்களை இழுத்துப் போட்டு அடிக்கும் அடி நாயடி, பேயடியாக இருக்கும். திட்டும் வார்த்தைகள் உள்எலும்பு வரை ஊடுருவிக் கூசச் செய்யும்.
            மறுநாள், அடி வாங்கிய அந்தப் பெண்ணைப் பற்றியே தெரு முழுவதும் பேச்சாகி அது கிராமம் முழுதும் பரவியிருக்கும்.
            "மனுஷனா அவன்?" என்று அடித்தவனைப் பற்றி பெண்டிர்களும், "நல்ல வேலை செஞ்சான்பா! கொஞ்சம் விட்டா மேவிடுவாளுங்க!" என்று அடித்தவனின் பிரதாபங்களைப் பற்றி ஆண்களும் பேசிக் கொள்வர்.
            அந்த இரவும், அதில் பரவும் டார்ச் வைத்த செல்பேசியின் ஒளியும் கமலாவுக்குப் பழகி விட்டது. பெரும்பாலும் டாஸ்மாக்கின் வெளியில் அல்லது அதைச் சுற்றியுள்ள கடைகளின் ஓரங்களில்தான் விழுந்து கிடப்பான் அவன் புருஷன்.
            "அப்படி என்னதான் இருக்குன்னு இந்தக் கருமத்தைக் குடிச்சுத் தொலைக்கிறானுங்களோ! வாந்தி எடுத்து வெச்சா கிட்ட நெருங்க முடியுதா? ஈ கூட மொய்க்க மாட்டேங்குது. அம்புட்டு நாத்தம்!" சித்ரா பொருமினாள்.
            "நாங் கூட அந்த பாட்டில மூக்குக்குப் பக்கத்துல கொண்டு போய் பார்த்தேன். குடலைப் புரட்டிகிட்டு வந்துட்டுது. நமக்குப் பார்க்கிறப்பவே குடலைப் புரட்டுது. இந்த வெட்கங் கெட்ட ஆம்பளை சனத்துக்கு உள்ள போனாத்தான குடலைப் புரட்டிகிட்டு வெளியில வருது!" என்றாள் கமலாவும்.

            நீலகண்டன் டீக்கடையைக் கடந்து வலதுப்பக்கம் திரும்பிய போது, பாலா கவரிங் கடைக்குக் கீழே சுருண்டு கிடந்தான் சித்ராவின் கணவன். தேடி வந்த பொக்கிஷத்தைக் கண்டுபிடித்து விட்ட திருப்தி அவள் முகத்தில்.
            கமலாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. சித்ரா இனி போய் விடுவாள். தனியாக இனி புருஷனைத் தேட வேண்டும். எங்கு விழுந்து கிடக்கிறானோ? ஒவ்வொரு கடையாகத் தேடிப் பார்த்துக் கொண்டே போக வேண்டும். கடையில் இருக்கும் ஒன்றிரண்டு ஆட்களும் ஒரு மாதிரியாக பொம்பிளைகளையேப் பார்க்காதது போல பார்ப்பார்கள்.
            ஐயப்பன் மளிகையைத் தாண்டி டாஸ்மாக்கை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அந்த மளிகைக் கடை பக்கத்தில் பெட்டிக்கடை வைத்து இருந்த மாணிக்கம் தாத்தா கடையைக் கட்டும் வேலையில் மும்மரமாகிக் கொண்டு இருநதார்.
            கமலாவைப் பார்த்ததும் "செத்த நேரம் முட்டும் இங்ஙனதான் குடிச்சிகிட்டு இருந்தான். இன்னிக்குச் சரியா காசு கிடைக்கல போல இருக்கு! அப்புறம் அவன் வூட்டுக்கு அப்பவே கிளம்பிட்டானே!" என்றதும் கமலாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
            அவள் வீட்டை நோக்கி ஓடினாள். கூரையில் செருகியிருந்த சாவியை எடுத்து அவன் வீட்டைத் திறந்து விட்டால், கையில் அகப்படும் பொருளை எடுத்து சேட்டு கடையில் கொடுத்து காசு வாங்கி குடித்து விடுவான்.
            இப்படி அவள் புருஷன் அரசாங்கம் இலவசமாக கொடுத்த டி.வி., மிக்ஸி, பேன் வரை விற்று விட்டான். எஞ்சி இருந்தது கிரைண்டர் மட்டும்தான். அதை தூக்குவதற்கும் அவன் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தான்.
            எதை நினைத்து, எது நடக்கக் கூடாது என்று கமலா ஓடினாளோ அதுதான் நடந்து கொண்டிருந்தது. அவள் புருஷன் கிரைண்டரைத்தான் தூக்கிக் கொண்டு இருந்தான்.
            "அடப்பாவி மனுஷா! அதான் நாள் பூரா குடிச்சியே! அப்புறம் இதை வேற வித்து குடிச்சிபுட்டா அப்புறம் எப்படி வாய்க்கு ருசியா இட்லி, தோசை சாப்பிடுவே? வையுய்யா அத முதல்ல!" என்று கத்தினாள் கமலா.
            "அடச்சீ கஸ்மாலம்! என்னமோ நீ சீருசனத்தியா கொண்டு வந்த மாதிரி பேசுறே! கவர்மெண்டுல கொடுத்ததுதானே. எலவசமா வந்ததுதானே. கத்துறாப் பாரு உங்க வூட்டு சொத்து மாதிரி!" அவள் புருஷன் அவளை வெறுப்பேற்றினான்.
            "நீ உழைச்சு என்னத்த வூட்டுக்கு வாங்கிப் போட்டு இருக்கிற. இருக்கிறதையெல்லாம் வித்து வித்து குடிச்சே. கடைசியில என்னையையும் ஒரு நாள் வித்துக் குடிச்சாத்தான் நீ அடங்குவே போலிருக்கு!"
            "பேச்சைப் பாரு! உன்னை வித்துக் குடிக்க உங்கிட்ட என்ன இருக்கு? நீ கூத்தியாளா போனா கூட உன்னால பத்து பைசா சம்பாதிக்க முடியாது!" அவள் புருஷன் பேச அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
            "வார்த்தையை அளந்துப் பேசுய்யா! இல்லாட்டி நடக்குறது வேற" என்றாள் கமலா.
            "என்ன பண்ணுவே? அரிவாள்மனையை எடுத்து வெட்டிப்புடுவியா? எங்க வெட்டுப் பார்ப்போம்!" என்றான் அவன்.
            கல்யாணம் ஆன நாளிலிருந்து இந்த எட்டு வருஷமாய் அவள் பட்ட பாடுகளெல்லாம் அவள் நினைவுக்கு வந்தது. இந்த நாள் வரை வயிற்றில் ஒரு புழு, பூச்சி ஜனிக்காமல் குழந்தைபேறின்றி வெறுமையாய் வாழும் வாழ்வு அவளைச் சூழ்ந்து கொண்டது. "ஒரு குழந்தை குட்டி இருந்தா கூட, நாம ஜெயிலுக்குப் போய்ட்டா யாரு இதுகளைப் பார்த்துக்குப் போறான்னு யோசிக்கலாம். அதான் ஒண்ணுமே இல்லையே!" என்று அவள் யோசித்துக் கொண்டே இருக்கும் போதே, அவள் மண்டையில் மடாரென்று ஓர் அடி விழுந்தது.
            "என்னா வெட்டுவியான்னு கேட்டா எப்படி வெட்டுறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கியா? பிய்ச்சுப் புடுவேன் பிய்ச்சி! வுட்டா ரொம்பத்தான் பெரிய பிலிமா காட்டுறே? நாயி! நாயி!" என்றபடியே கீழே விழுந்து கிடந்த அவளை ஓங்கி ஓர் உதை விட்டான்.
            அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்படியே சுருண்டு கொண்டாள்.
            "அப்படியே இந்த கிரைண்டரைத் தூக்கி உந் தலையில போடணும்டி! எச்சப் பொறுக்கி நாயி! உன்னைக் கட்டிகிட்ட நாள்லேர்ந்துதான் விடியலைடி. அதுக்கு முன்னாடி குடிக்கிறதுக்கு காசு பிரச்சனையெல்லாம் வந்ததில்ல. நான் பத்து பேருக்கு வாங்கிக் கொடுப்பேன்டி. இப்பப் பாரு! நான்  ஒருத்தன் குடிக்கிறதுக்கு காசு இல்லாம அல்லாடுறேன்!"
            "நான் என்ன பாவம் செஞ்சோனே! உன்னைக் கட்டிகிட்ட பின்னாடிதான்டா என் வாழ்க்கையும் விடியல!" என்று கமலா சொன்னதும் கோபமான அவன் அவளை ஏறி ஏறி மிதிக்க ஆரம்பித்தான்.
            "டேய் வுடுறா மனுஷா! என்னால தாங்க முடியல!" என்ற அவள் எழு முயற்சித்த போது அவள் மேல் காலை வைத்து மிதித்துக் கொண்டிருந்த அவன் நிலைதடுமாறி விழுந்தான்.
            "ஏய்! என்னையே கீழே தள்ளி வுடுறியா? அவ்வளவு திமிரு வெச்சுப் போச்சா உனக்கு?" என்று அவன் கமலாவை நோக்கி மூர்க்கமாகப் பாய்ந்த போது, அவள் அருகில் கிடந்த அரிவாள்மனையை எடுத்துக் குறுக்கே நீட்டினாள். அவன் கழுத்தறுப்பட்டு விழுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
             கமலா புருஷன் கொலையுண்டது காற்றில் கசிந்து ஊரே அவள் முன் திரண்டது. அடுத்த சில மணி நேரங்களில் போலீஸ் வந்து அவளைக் கைது செய்தது.
            நீதிமன்ற விசாரணைகள் இரண்டாண்டுகள் வரை நடைபெற்றதன. அவள் வக்கீல் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. விசாரணையில் அவள் எதையும் மறைக்கவில்லை. மேற்கொண்டு எந்த முறையீடும் செய்ய விரும்பவில்லை என்ற வெளிப்படையாகச் சொல்லி விட்டாள். அவளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாகச் சொன்னார் நீதிபதி.
            அவள் சிறையில் இருந்த போது ஊர்ப்பெண்கள் பார்ப்பதும் போவதுமாக இருந்தனர். தன்னை யாரும் மறக்கவில்லை என்பது அவளுக்கு தெம்பாக இருந்தது.
            அவளை சித்ரா ஒருமுறை பார்க்க வந்த போது சொன்னாள், "கமலா! நீ மட்டும் உன் புருஷனை வெட்டலேன்னா இன்னிக்கு நாங்க நிம்மதியா இருக்க முடியாது. அதுக்கப்புறம் எவனும் நம் ஊர்ல பொண்டாட்டியை அடிக்கிறதில்ல. ஒரு துரும்பு கூட பொண்ணுங்க மேல படுறது இல்ல. குடிக்கிறது, படுத்துக்கிறதுன்னு பதிவிசா மாறிட்டானுங்கடி. இப்பல்லாம் நம்ம ஊர்ல குடிச்சிட்டு வந்து அடிச்சா யாரும் பொறுத்துக்கிறதில்ல. அடி பின்னி பெடலெடுத்துறோம்டி. வருஷா வருஷம் உன் பேரைச் சொல்லித்தான் மாரியம்மனுக்கு நடக்கும் திருவிழாவுல சேலை சாத்துறோம்!"
            ஆயுசுக்கும் இந்த ஜெயில்லயே இருந்திட்டாப் போதும் என்று இருந்த கமலாவுக்கு சித்ரா கூறியதைக் கேட்டதும் தான் அனுபவிக்கும் ஆயுள் தண்டனையில் ஓர் அர்த்தம் இருப்பதாகப் பட்டது. பொண்டாட்டியை அடிக்காத அந்தக் கிராமத்தைக் கண்ணார ஒருமுறை பார்க்க வேண்டும் என்பது போல இருந்தது.
*****

2 comments:

  1. "உள்ளூரிலே தேடிக் கண்டுபிடித்துத் தூக்கிக் கொண்டு வந்து விடலாம். டாஸ்மாக் வந்ததற்கு மனதார தன் நன்றிகளை அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொண்டாள்".ஹா..ஹா

    ReplyDelete
    Replies
    1. வாசிப்புக்கும் நேசிப்புக்கும் நன்றி ஐயா!

      Delete

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...