19 Feb 2019

முத்துன தேங்கா சாமிக்கு!



செய்யு - 1
            விகடு சின்ன பையன். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பள்ளி முடித்ததும் வேகமாக வீட்டுக்கு ஓடி வருவது அவனது வழக்கம். அவனோடு படித்தப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் அப்படித்தான். யார் முதலில் வீட்டுக்கு ஓடி வருகிறார்கள் என்பதில் போட்டியே உண்டு. 
            வேகமாக ஓடி வருபவர்கள் தட்டை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள். இதற்காகவெல்லாம் அம்மாவை எதிர்பார்ப்பதில்லை. மூன்று நான்கு தட்டுகள் போட்டுச் சாப்பிடுவார்கள். அப்புறம் சட்டையைக் கழற்றி எறிவார்கள். கால்சட்டை மட்டும்தான். சாப்பிட்டு முடித்ததும் வயிறு தொப்பையாகப் பெருத்திருக்கும். எதையோ சாதித்து விட்டதைப் போல வெளியே வருவார்கள் பிள்ளைகள்.
            விகடுவிடம் ஒரு சிவப்பு கால்சட்டை இருந்தது. அப்புறம் ஒரு பெரிய கருப்புக் கால்சட்டை இன்னும் சில கால்சட்டைகள் சொல்ல முடியாத நிறத்தில் இருந்தன. அவனுக்கு சிவப்பு கால்சட்டை மீது தனிப்பிரியம். அதை அணியும் நாட்களில் இனம் புரியாத மகிழ்ச்சி வந்து போகும்.
            இப்போது உள்ளது போல் தொடக்கப்பள்ளிகளில் சீருடை இல்லாத காலகட்டம். வருடத்துக்கு ஒரு முறை காக்கிக் கால்சட்டையும், வெள்ளைச் சட்டையும் தருவார்கள். சில முறை காக்கிக் கால்சட்டை மாறி நீலமாகவும் கொடுத்திருக்கிறார்கள். சீருடை அணிவது கட்டாயமில்லை. வெள்ளிக்கிழமை மட்டும் சீருடையில் வர வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சீருடைக் கொடுத்ததலிருந்து அது பின்பக்கம் கிழிந்து நார்நாராய்த் தொங்கும் வரை அதையேத்தான் போட்டுக் கொண்டு போவார்கள் எல்லா பிள்ளைகளும். அப்புறம் எந்த வெள்ளிக் கிழமையும் யாரும் சீருடை போட்டு வந்து அவன் பார்த்ததாக ஞாபகம் இல்லை. பத்து பதினைந்து நாட்களில் பித்தான்கள் பிய்ந்து போய் விடும். அப்புறம் படிப்படியாக சில நாட்களில் அது தன் ஆயுளை முடித்துக் கொண்டு விடும். பித்தான் பிய்ந்து கால்சட்டையை முடிச்சுப் போட்டுக் கொள்வதிலிருந்து அரைஞாண் கயிற்றை பெல்ட்டு போல போட்டுக் கொள்வது வரை கால்சட்டைப் போட்டுக் கொள்வது பிள்ளைக்குப் பிள்ளை மாறுபடும். விகடுவுக்கு அரைஞாண் கயிற்றைப் போட்டுக் கொள்வதுதான் பிடிக்கும். காலக்கட்டம் என்று சொல்லி விட்டதால் பிற்காலத்தில் காலக்குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் அந்த காலக்கட்டம் 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம்.
            பெண் பிள்ளைகளுக்கு வெள்ளைச் சட்டை, பச்சைப் பாவாடை. சிலமுறை நீலநிறப் பாவாடையும் தந்திருக்கிறார்கள். மூக்கில் சளி ஒழுக அந்தப் பிள்ளைகள் சீருடை அணிந்து வருவதைப் பார்க்கும் போது ரொம்ப அழகாகத்தான் இருக்கும். பாவாடையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மஞ்சள் பையோ, நரம்பு பையோ அதைப் பின்பக்கம் தூக்கிப் போட்டுக் கொண்டு அந்தப் பிள்ளைகள் நடந்து வரும் காட்சி இப்போதும் விகடுவின் மனதில் புகைப்படம் போல இருக்கிறது.
            இப்போது விகடு என்ன செய்கிறான் என்பதைப் பிறகு சொல்கிறேன். பிறகு என்ன பிறகு? இப்போதே சொல்லி விடுகிறேன். இந்த ப்ளாக்ஸ்பாட்டை எழுதிக் கொண்டிருக்கிறான்.
            அது என்ன விகடு என்றால் அதுதான் அவன் பெயர். பிற்காலத்தில் கவிதாபாரதி, பழனிபாரதி, யுகபாரதி அப்புறம் சந்தானபாரதி என பல பாரதிகளைப் பார்த்து அவனும் தன் பெயரை விகடபாரதி என மாற்றிக் கொண்டான்.
            நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. இப்போது மீண்டும் கால்சட்டைக்கு வந்து விடுகிறேன்.
            அந்தச் சிவப்புக் கால்சட்டை. அதைப் போட்டுக் கொண்டால் குஷி பிறந்து விடும். சிவப்பின் மீது அந்த சின்ன வயதிலேயே அவனுக்கு அப்படி ஒரு ஈடுபாடு இருந்திருக்கிறது பாருங்களேன். அவன் அப்போது நல்ல சிவப்பு. இப்போது கொஞ்சம் கருத்து விட்டான். நிறையவே கருத்து விட்டான் என்று சொன்னாலும் பொருட்குற்றம் வராது.
            நீங்கள் திட்டைக்கு வர வேண்டும் என்றால் வடவாதியைத் தாண்டி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் வர வேண்டும். சரியாக ஒன்றரையா என்று தெரியவில்லை. இரண்டு இரண்டரை கூட இருக்கலாம். வந்தீர்கள் என்றால் ஓர் இலேசான திருப்பம். தேங்காய் பட்டறை ஒன்று வரும். அதுதான் பஸ்ஸ்டாப். கேணிக்கரை ஸ்டாப்பிங் என்று சொல்வார்கள். கேணி எங்கே இருக்கிறது என்று விகடு சின்ன வயதில் பார்த்ததில்லை. அவன் வளர்ந்து பெரியவனாக பிறகுதான் அதைப் பார்க்கும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்தது. பஸ் ஸ்டாப்புக்குப் பக்கத்தில் ஒரு பெரிய குப்பை மேடு. அந்தக் குப்பை மேட்டிலிருந்து பாம்பு, நட்டுவாக்காலி, தேள் போன்றவகைள் பஸ் ஏற வந்து நின்றதால் ஊர்ப் பொதுமக்கள் அதைச் சுத்தம் செய்வது என்று ஒருமனதாகத் தீர்மானித்துக் குப்பை மேட்டை உடைத்துப் பார்த்தார்கள். ஊற்றெடுத்தக் குப்பைகளோடு அதன் கீழ்தான் கேணி இருந்தது. அப்புறம் சில ஆண்டுகளில் அந்த கேணி காணாமல் போய் விட்டது. அதன் வடவண்டைப் பக்கம் ரோட்டைக் கடந்தால் வெண்ணாறு. ஆற்றைத் தாண்டினால் அக்கரையோரத்தில் மூர்த்தியப்பர் கோயில். தென்னண்டைப் பக்கம் திரும்பி உள்ளே வந்து இடப்பக்கம் ஒடித்தீர்கள் என்றால் சரியாக ஆறு வீடுகள் தள்ளி ஒரு வீடு மட்டும் சம்பந்தம் இல்லாமல் தெருவுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். விகடுவின் வீடு அதுதான். கூரை வீடு. ரொம்ப காலத்துக்குப் பச்சை வண்ணம்தான் அடித்து வைத்து இருந்தார்கள். பிறகு அது நீல நிறத்துக்கு மாறி மீண்டும் பச்சை வண்ணத்துக்கு வந்தது.
            விகடு சாப்பிட்டதும் கேணிக்கரை ஸ்டாப்பிங்கை நோக்கி ஓடினான். வழக்கமாக பிள்ளைகள் சாப்பிட்டு முடித்ததும் கூடும் இடம்.
            மன்னு, முருகு, பரமு, சின்னு நின்றிருந்தார்கள். இன்னும் சில பிள்ளைகள் வர வேண்டும். விகடு வந்து சேர்ந்த போது "இவன் லாஸ்ட்டுடா!" என்றான் மன்னு. "இன்னும் நைனா வரல. அவன்தான் லாஸ்ட்டு!" தான் லாஸ்ட்டு என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விகடு கத்தினான். சாப்பிட்டு முடித்து அந்த இடத்தில் வந்து கூடுவதிலும் போட்டி உண்டு. முதலில் வந்தவன்தான் அன்று என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பான்.
            மன்னுதான் முதலில் வந்திருந்தான். "இன்னிக்கு முத்துன தேங்கா சாமிக்கு!" என்றான். அப்படியென்றால் ரோட்டைக் கடந்து அக்கரைக்குப் போக வேண்டும். பாகற்கொடிகளில் மிதிபாகல்களைப் பறிக்க வேண்டும். 'முத்துன தேங்கா சாமிக்கு!" என்ற சொல்லிக் கொண்டே பாகற்காய்களைப் பறிக்க வேண்டும். யார் அதிக பாகற்காய்களைப் பறிக்கிறார்களோ அவன்தான் அன்று ஜெயித்தவன்.

            மூர்த்தியப்பர் கோயிலைத் தொடர்ந்து பெருந்திடல். காரைச்செடிகளும், பாகற்கொடிகளாக கிடக்கும். ஆங்காங்கே தென்னை மரங்கள் நிற்கும். மற்றபடி கருவக்காடுதான். ஊர்மக்கள் காலை, மாலை என்றில்லாமல் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் காலைக்கடன், மாலைக்கடன், மதியக்கடன், இரவுக்கடன்  கழிக்க ஒதுங்கும் இடம் அதுதான்.
            முருகுவுக்கும் பரமுவுக்கும் 'முத்துன தேங்கா சாமிக்கு' பிடித்திருந்தது. விகடுவுக்குப் பிடிக்கவில்லை. இன்றைய தேதியில் மிதி பாகல் கிலோ எண்பதுக்கும், நுறுக்கும் வாங்குவதை நினைக்கும் போது அது அருமையான விளையாட்டுதான்.
            எல்லாரும் பாகற்கொடிகளைத் தேடி பாகற்காயைப் பறிக்க ஓடினார்கள். விகடு தயங்கி நின்றான். "டேய் விகடு! கிளம்புடா! இல்லேன்னா தோத்துடுவே!" என்றான் பரமு.
            நண்பர்கள் முன் தலைகுனிந்து நிற்க முடியுமா? விகடு பாகற்கொடிகளைத் தேடி ஓடுவதைப் போல ஓடினான். பாகற்கொடிகளுக்குத் தூரத்திலே நின்று கொண்டு பாகற்காய்களைப் பார்ப்பதைப் போல நின்று கொண்டான். பாகற்காய்களைப் பறிப்பதற்கு கொடியைத் தூக்கிப் பார்த்து கண்களைச் சுழல விட வேண்டும். பாகல் இலைகள் அப்படி காய்களை மறைத்துக் கொண்டிருக்கும்.
            பாகற்காய் பறிப்பதில் இப்போது விகடுவுக்கு ஒரு பயம் வந்திருந்தது. முன்பு இது போல நடந்த விளையாட்டுகளில் நிறைய காய்களைப் பறித்து ஜெயித்து இருக்கிறான். இப்போது பயம் வந்து கவ்விக் கொண்டிருந்தது. பறிப்பதா வேண்டமா என யோசித்துக் கொண்டிருந்தான். ஏனிந்த அநாவசிய பயம் என்று நீங்கள் கேட்கலாம்.
            சில மாதங்களுக்கு முன்புதான் பாகற்காய் பறிக்கப் போய் வெங்கிட்டு சரமெண்டலி கடித்துச் செத்துப் போயிருந்தான்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...