மனம் போன போக்கின் அடையாளம் மாணிக்கம்
மீண்டெழுதல் உயிரிகளின் குணம். விழுந்தெழுதல்
மனிதனின் குணம். விழுவதற்காவே எழும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
கனவுகளோடு வாழச் சென்ற ஒரு பெண்ணுக்கு
கனவுகளையெல்லாம் சிதைக்கும் ஒரு கணவன் கிடைக்கலாம். பூங்காற்றை எதிர்பார்க்கும் ஒரு
பெண்ணுக்கு புயலாய் வீசும் ஒரு கணவன் கிடைக்கலாம். பூக்களை சூடச் செல்லும் ஒரு பெண்ணுக்கு
முள்ளாய்க் குத்தும் ஒரு கணவன் கிடைக்கலாம். அரவணைப்பையும் ஆதரவையும் நாடிச் செல்லும்
ஒரு பெண்ணுக்கு நிர்ஆதரவைப் பரிசாகத் தரும் கணவன் கிடைக்கலாம்.
அப்படிக் கிடைத்தாலும் பெண்கள் அவர்களைச்
சமாளித்து வாழ்கிறார்கள். வாழ்வின் சமநிலையைக் குழைய விடாமல் போராடுகிறார்கள். குடும்பத்தின்
பொறுப்பு அவர்கள் மனதைப் பாராமாய் அழுத்துகிறது. பிள்ளைகள் அவர்கள் மனத்தை நிறைக்கிறார்கள்.
பிள்ளைகளுக்காக உயிரைக் கையில் பிடித்து வாழ்கிறார்கள்.
செல்லாயிக்கு அப்படி ஒரு கணவன் கிடைக்கிறான்
மாணிக்கமாய். மாணிக்கம் கிடைத்தாலும் ஒளி வீசாத வாழ்வு செல்லாயியின் வாழ்வு.
மாணிக்கம் ஓர் ஓமியோ மருத்துவன், ஒரு
சைக்கிள் வித்தைக்காரன், ஒரு விவசாயி, ஒரு மீன் பிடிப்பவன் என்று சொன்னால் அவன் யார்தான்
இவைகளில் என்று கேட்பீர்கள்? அவன் எல்லாமுமானவன்தான். அவன் ஒரு குடிகாரன், ஒரு சூதாட்டக்காரன்
என்று சொன்னால் அவன் ஏன் எல்லாமுமாக இருக்கிறான் என்பதற்கான காரணம் கிடைத்து விடும்.
மனம் ஒரு நிலையில் நிலைக்காதவர்கள் குடியையும்,
சூதாட்டத்தையும் தேர்ந்து கொள்கிறார்கள். அப்புறம் அந்தக் குடியையும், சூதாட்டத்தையும்
காரணமாக வைத்தே ஒரு நிலையில் நிற்க முடியாமல் அல்லாடுகிறார்கள், ஒன்றால் இன்னொன்று
பரஸ்பரம் பாதித்துக் கொள்வதைப் போல.
மாணிக்கம் செல்லாயியைக் கட்டிக் கொள்கிறான்.
சக்குபாயைக் காதலிக்கிறான். செல்லாயியைக் கஞ்சிக்கும் வழியில்லாமல் அல்லாட விடுகிறான்.
சக்குபாய் தூக்கில் தொங்கக் காரணமாகிறான்.
கடைசியில் மகன் நாஞ்சிக்காக கடலில் மீன்
பிடிக்கப் போகும் போது சாகவும் துணிகிறான். அவன் இறந்தால் சங்கத்தின் மூலம் தன் மகனுக்குக்
கிடைக்கும் தொகையில் அவனுக்கு ஒரு நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்படிச்
செய்யத் துணிகிறான். மாணிக்கம் கடலை நோக்கிக் போகிறான். போய்க் கொண்டே இருக்கிறான்.
இந்த நாவல் மாணிக்கத்தின் மனநிலையைப் பேசுவதாகக்
கருதி சு.தமிழ்ச்செல்வி நாவலுக்கு பெயர் சூட்டினாலும் செல்லாயியின் வேதனைகளையும்தான்
இந்நாவல் பேசுகிறது. இந்த நாவலுக்கு செல்லாயி என்று தலைப்பிட்டிருந்தாலும் அழகாகத்தான்
இருந்திருக்கும்.
நாவலில் அந்தப் பெண் மாணிக்கத்தைக் கட்டிக்
கொண்டு படும் பாடு இருக்கிறதே! கணவன் பெயர் மாணிக்கமாக இருந்தாலும் அவன் செல்லாயியை
வறுமையில்தான் போராட விடுகிறான்.
மாணிக்கம் எப்போது எங்கே கிளம்பிப் போவான்
என்று தெரியாது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வருவான்.
கணவன் திரும்பி விட்டான் என்ற ஆறுதலாவது
செல்லாயியிக்குக் கிடைக்குமா என்றால் அவன் வரும் போதெல்லாம் அவளுக்கு அடிகளும், உதைகளும்தான்
தாராளமாகக் கிடைக்கும்.
அவ்வளவு துயர்களுக்கும் மத்தியில் பாட்டு
அவளுக்கு ஓர் ஆறுதல். ஒவ்வொரு முறையும் இடர்படும் போதும் அவள் அதைப் பாட்டாய் ஒப்பாரி
வைக்கிறாள். அவள் பாடுதான் பாட்டாய் விரிகிறது.
திருந்த நினைத்துத் திருந்த முடியாத பாத்திரமாய்
மாணிக்கத்தைத் தமிழ்ச்செல்வி பதிவு செய்கிறார். மாணிக்கம் அடங்கா மனத்தின் குறியீடு.
அவனால் எதையும் கற்றுக் கொள்ள முடிகிறது. கற்றதில் புதிய உத்திகளை உருவாக்கிக் கொள்ள
முடிகிறது. அப்படி அவன் மீன் பிடிப்பதில் அவன் உருவாக்கித் தரும் வலை பலரின் வாழ்வாதாரங்களை
உயர்த்துகிறது. உயிருக்குப் போராடும் பலரை அவன் தன் மருத்துவத்தால் காபந்து செய்கிறான்.
அவனால் அவனது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியவில்லை. தன் மனதைக் காபந்து செய்து
கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறை சாண் ஏறும் போதும் முழம் சறுக்குகிறது.
அவன் மருத்துவத்துக்கு எப்போதும் தேவை
இருக்கிறது. சம்பாதித்துக் கெடும் போது அவன் ஏன் அதை கையில் எடுக்காமல் தடுமாறுகிறான்?
அவன் ஏன் விவசாயத்தில் இறங்குகிறான்? ஏன் கடை வைக்கிறான்? மீன் பிடிக்கச் செல்கிறான்?
அவன் மருத்துவம் எப்படிச் செல்லாமல் போனதோ? தமிழ்ச்செல்வி அதை நாவலில் பதிவு செய்யவில்லை.
குடியும் சூதாட்டமும் மனம் போன போக்கும் அவனை அதைச் செய்ய விடாமல் தடுக்கிறதோ என்னவோ!
மனம் போன போக்கில் வாழ்பவன்தான் மாணிக்கம்.
தன் உயிரைக் கொடுத்து தன் மகனின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறான்.
அதையும் தன் மனம் போன போக்கில்தான் யோசிக்கிறான். மனம் போகும் பாதையெல்லாம் போனவன்
மாணிக்கம். அவன் போய்க் கொண்டே இருக்கிறான்.
குடியை நிறுத்த முடியாத, சூதாட்டத்தை நிறுத்த
இயலாத ஒரு மனிதனின் ஆற்றாமைகளின் அடையாளமாய் நிற்கிறான் மாணிக்கம்.
*****
No comments:
Post a Comment