27 Feb 2019

நிற்காத அழுகை



செய்யு - 9
            திட்டைக்கு வடக்கே ஓகையூர். வடவாதி வந்து நான்கு கிலோ மீட்டர் மண் சாலையில் பயணிக்க வேண்டும். கோடைக்காலங்களில் பயணிப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. மழைக்காலங்களில் அந்தச் சாலையில் அடியெடுத்து வைக்க முடியாது. அப்படி ஒரு வித்தியாசமான களிமண்ணை ஓகையூருக்குச் செல்லும் அந்த சாலையில்தான் பார்க்க முடியும். காலை வைத்தால் காலில் பூட்ஸ் அணிந்தது போல அப்படியே அப்பிக் கொண்டு வரும்.
            சைக்கிளில் சென்றால் சக்கரம் முழுவதும் களிமண் அப்பிக் கொள்ளும். பிரேக் கட்டை இருக்கும் இடம் தெரியாது. கம்பிகள் முழுவதும் களிமண் பிசிறு பிசிறாக ஒட்டிக் கொண்டிருக்கும். அது மாதிரியான காலங்களில் ஓகைக்குச் சைக்கிளில் சென்று வந்தால் சைக்கிளை நிச்சயம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கழுவ வேண்டும். அப்போதுதான் சைக்கிள் சைக்கிளாக இருக்கும். சரியாக கழுவாமல் விட்டு விட்டால் ரிம், போக்ஸ் கம்பிகள் எல்லாம் பழுப்புப் பழுப்பாய் துரு பிடித்துக் கொள்ளும்.
            செய்யு பிறந்து மூன்று மாதங்களில் மழை பிடித்துக் கொண்டது. மூன்று மாதங்களாக அவள் இரவும் பகலுமாக அழுது கொண்டிருந்தாள். உரைமருந்து அரைத்துக் கொடுப்பது, ஓமதண்ணி கொடுப்பது என்று கைவைத்தியமாய் நிறைய செய்து பார்த்தார்கள். இதற்கென ஊரில் இருக்கும் பெரும்பாலான இலைகளை அரைத்துப் பார்த்து ஊத்தியாயிற்று. அழுகை நின்றபாடில்லை. தம்மேந்தி ஆத்தாவும், முல்லேம்பா ஆத்தாவும் மூன்று மாதம் வரை இப்படி அழும் குழந்தைகள் அப்புறம் அழாது என்றார்கள். அவர்களின் காலக் கணக்கை மீறி செய்யு அழுது கொண்டிருந்தாள்.
            டாக்டரிடம் அழைத்துப் போய் பார்க்கலாம் என்று வீட்டில் முடிவாயிற்று. டாக்டரிடம் அழைத்துச் செல்வது என்றால் திட்டையிலிருந்து மன்னார்குடி செல்லலாம் அல்லது திருவாரூர் செல்லலாம். திட்டையிலிருந்த குடும்பங்களில் சில மன்னார்குடி போய் வைத்தியம் பார்ப்பார்கள். சில குடும்பங்கள் திருவாரூர் போய் வைத்தியம் பார்ப்பார்கள். அவர்களிடம் இது குறித்த ஒரு நம்பிக்கை இருந்தது. மன்னார்குடி வைத்தியத்துக்குச் செல்லும் குடும்பங்களைக் கேட்டால், எங்களுக்கு மன்னார்குடி போய் வைத்தியம் பார்த்தால்தான் குணமாகும் என்பார்கள். திருவாரூர் வைத்தியத்துக்குச் செல்லும் குடும்பங்களைக் கேட்டால் எங்களுக்கு திருவாரூர் போய் வைத்தியம் பார்த்தால்தான் குணமாகும் என்பார்கள்.
            விகடுவின் குடும்பத்தைப் பொருத்த வரையில் மன்னார்குடி மற்றும் திருவாரூர் போய் வைத்தியம் பார்க்கும் முறையைத் தொடங்கி வைத்தவன் விகடுதான். அவன் அப்பாவோ, அம்மாவோ டாக்டரிடம் போய் வைத்தியம் பார்த்ததில்லை. அவர்களுக்கு கைவைத்தியத்திலேயே எல்லாம் குணமாகி விடும்.
            விகடுவைப் பிடித்து ஆட்டிப் படைத்த சளிக்காக அவர்கள் மன்னார்குடி, திருவாரூர் என இரண்டு நகரத்துக்கும் சென்று பார்த்தார்கள். விகடுவுக்கு திருவாரூர் செட்டாகவில்லை. மன்னார்குடி கொஞ்சம் பரவாயில்லை ரகமாக இருந்தது. அதனால் விகடுவின் குடும்பம் மன்னார்குடி போய் வைத்தியம் பார்க்கும் வகையறாவைச் சேர்ந்தவர்கள் ஆனார்கள்.
            தீராத அழுகையால் வீட்டை ரணகளப்படுத்திக் கொண்டிருந்த செய்யுவுக்காக மன்னார்குடி டாக்டரைப் போய் பார்ப்பது என்று வீட்டில் முடிவானது.
            திட்டையிலிருந்து மன்னார்குடி போவதற்கு ரெண்டாம் நம்பர், பதிமூணாம் நம்பர் என்று ரெண்டு பஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. ரெண்டாம் நம்பரில் போவதென்றால் காலை ஏழரைக்கு முன்பே கிளம்பி கேணிக்கரை பஸ் ஸ்டாப்பில் நிற்க வேண்டும். பதிமூணாம் நம்பர் என்றால் ஒன்பதே காலுக்கு முன்பே கிளம்பி பஸ் ஸ்டாப்பில் நிற்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே போய் நின்று கொள்வது மிக மிக மிக நல்லது. சில நேரங்களில் பஸ் முன்னரே போய் பஸ்ஸைத் தவற விட்ட அனுபவங்கள் திட்டையைச் சேர்ந்தவர்களுக்கு நிறையவே உண்டு.
            இதனால் ஏழரை பஸ் என்றால் ஏழு மணிக்கே போய் விடுவார்கள். ஒன்பதே கால் பஸ் என்றால் எட்டே முக்காலுக்கே போய் விடுவார்கள்.
            மன்னார்குடி டாக்டர் என்றால் சீக்கிரமே போய் விட வேண்டும். போய் டோக்கன் போட வேண்டும். ஏழரை பஸ்ஸூக்குப் போய் டோக்கன் போட்டால் டாக்டரைப் பார்ப்பதற்கு எப்படியும் பனிரெண்டு மணிக்கு மேலாகி விடும். ஒன்பதே கால் பஸ்ஸூக்குப் போனால் ரெண்டு மணியாகி விடும். அப்புறம் ஊர் திரும்ப வேண்டும். காலையில் பொழுதோடு கிளம்பினால் பொழுதோடு ஊர் திரும்ப வசதியாக இருக்கும். இதெல்லாம் விகடுவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் உண்டான அனுபவங்கள்.
            காலையில் ஏழரைக்கு கிளம்புவதே உசிதமானது என்பதால் ஏழு மணிக்கே கேணிக்கரை ஸ்டாப்பிங்கில் போய் நின்றார்கள். அதிராம்பட்டினம் ஆத்தாவும் துணைக்கு வந்தது. விகடுதான் இந்த மருத்துவப் பயணத்தின் வழிகாட்டி. அடிக்கடி மன்னார்குடி ஆஸ்பத்திரி போய் அவனுக்கு அலுத்துப் போயிருந்தது. அந்த அளவுக்கு ஆஸ்பத்திரிக்கும் அவனுக்குமான பிரயாணங்கள் இருந்தன. ஆஸ்பத்திரியில் இருந்த எல்லாரையும் விகடுவுக்குத் தெரியும். சந்திரமோகன் டாக்டருக்கு விகடுவை நன்றாகவே தெரியும். மேலும் விகடுவுக்கு எந்த ஸ்டாப்பிங்கில் இறங்க வேண்டும், எந்தக் கடையில் டீ குடிக்க வேண்டும், எந்த மருந்து கடையில் மருந்து வாங்க வேண்டும் என்ற எல்லா விவரங்களும் அத்துபடியாகி இருந்தன.
            அதிராம்பட்டினத்து ஆத்தா நான்காக மடிக்கப்பட்ட பெரிய தேங்காய்ப்பூ துண்டில் செய்யுவை வைத்துத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டார். அம்மா பையை எடுத்துக் கொண்டார். விகடுவின் கால்சட்டையில் போவதற்கும் வருவதற்குமான  பஸ் டிக்கெட்டுக்கான கட்டணம் ரெண்டு பொட்டலங்களாக கட்டப்பட்டு பத்திரமாக இருந்தன. விகடு அடிக்கடி கால்சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
            டிக்கெட் எடுக்கும் போதே வைத்தியசாலை அல்லது சந்திரமோகன் ஆஸ்பத்திரி என்று எப்படி சொன்னாலும் கண்டக்டர் சரியாக இறக்கி விடுவார்.
            ஏழு மணிக்கே போய் நின்றாலும் பஸ் வந்த போது எட்டு மணி இருக்கும். பஸ் கூட்டமாக இருந்தது. படியில் தொங்கிக் கொண்டு வந்தவர்கள் இறங்கிக் கொண்டு ஏறுபவர்களுக்கு வழி விட்டார்கள்.  "இந்த பஸ்லயாடி கைக்கொழந்தய தூக்கிகிட்டுப் போவப் போறோம்!" என்று அயர்ந்து போனார் அதிராம்பட்டினத்து ஆத்தா. வடவாதியைத் தாண்டியதும் கூட்டம் இன்னும் ஏறியது. ஏறியவர்கள் எல்லாரும் ஒரு காலில் நின்று கொண்டிருந்தார்கள். விகடு சீட்டுக்கு பக்கத்தில் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு கிட்டதட்ட சீட்டுக்கு இடையில் இருந்த இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவனால ரேண்டு கால்களையும் வைத்துக் கொள்ள முடிந்தது. அம்மாவும் ஆத்தாவும் ஒத்தைக் காலில் நின்று கொண்டிருந்தார்கள். அதுவும் ஆத்தாவுக்கு குழந்தையை வைத்துக் கொண்டு சிரமமாக இருந்தது.
            "கைக்கொழந்தய வெச்சுகிட்டு நிக்குறது சிரமமா இருக்கு! யாராவது கொஞ்சம் எடங் கொடுங்களேன்!" என்று ஆத்தா கேட்டுப் பார்த்தார். யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உட்கார்ந்திருந்தவர்கள் எங்கெங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தனர்.
            அம்மாவும் அங்கிருந்த சிலரிடம் கெஞ்சிப் பார்த்தார். ம்ஹூம்! எதுவும் நடக்கவில்லை.
            ஆனால் தனக்கான இடத்தை செய்யு தானாகவே உருவாக்கிக் கொண்டாள். பஸ் பழையனூரைக் கடந்ததும் அதுவரை நல்ல பிள்ளையாக அமைதியாக இருந்த செய்யு அழ ஆரம்பித்தாள். பேருந்தின் இரைச்சல், பயணிகளின் இரைச்சலைக் கடந்து செய்யுவின் அழுகை ஒலி வீறிட்டு ஒலித்தது. கீச்சுக் குரலில் அந்த அழுகைக் காதைக் கிழிப்பதைப் போலிருந்தது. வீட்டில் கேட்டுக் கேட்டு அந்த அழுகை ஒலி பழகி விட்டதால் விகடு அது பற்றிய பிரக்ஞை இல்லாமல் நின்று கொண்டிருந்தான். பஸ் பிரயாணிகளுக்கு அந்த அழுகை ஒலியைச் சகித்துக் கொள்வது கஷ்டமாக இருந்தது.
            "யாராவது அந்தக் கொழந்‍தைய வாங்கி வெச்சுக்குங்களேன்!" என்று கண்டக்டர் சொல்லும் அளவுக்கு நிலைமை தீவிரமானவுடன் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு வயதான பாட்டியம்மா ஆத்தாவிடமிருந்து செய்யுவை வாங்கி வைத்துக் கொண்டார்.
            அவர் வாங்கி வைத்துக் கொண்டதும் செய்யுவின் அழுகை பன்மடங்கி அதிகமாகி ஒலிக்கத் தொடங்கியது. அவர், "ச்சு... ச்சு... ச்சு" என்று உச் கொட்டி சமாளிக்கப் பார்த்தார். "நல்ல பாப்பல்ல அழக் கூடாதுல்ல. எதுக்கு அழுவறாளாம் எம் மவராசி. பஸ்ஸிலேர்ந்து எறங்குனதும் மிட்டாய் வாங்கித் தர்வேனாம். வளயல் மணியெல்லாம் வாங்கித் தர்வேனாம்!" என்று என்னென்னமோ சொல்லிப் பார்த்தார். அதற்கெல்லாம் அழுகையை நிறுத்துபவளா செய்யு?
            அந்தப் பாட்டியம்மா முடியாமல் எழுந்து கொண்டு அதிராம்பட்டினத்து ஆத்தாவை உட்காரச் சொல்லி ஆத்தாவின் கையில் செய்யுவைக் கொடுத்தார். இனிமேல் அழுகை நின்று விடும் சுற்றியிருந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். அந்த பஸ்ஸில் செய்யுவின் அழுகை நின்று விடும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது விகடு மட்டும்தான்.
            செய்யுவுக்கு யாருடைய எதிர்பார்ப்பும் புரியவில்லை. அவள் அழுது கொண்டே இருந்தாள். கொஞ்சம் அழுகை ஒலியின் அளவை மட்டும் குறைத்துக் கொண்டிருந்தாள்.
            "முன்னாடியே எடம் கொடுத்திருந்தீங்கன்னா கொழந்த இப்படி அழ ஆரம்பிச்சி இருக்காது!" என்றார் அதிராம்பட்டினத்து ஆத்தா.
            இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் நிச்சயமாக ஒன்றை நினைக்கக் கூடும்.
            ஓகையூரைப் பற்றிச் சொல்லி விட்டு மன்னார்குடிக்கு அழைத்துச் செல்கிறானே இந்த விகடு என்று நீங்கள் நினைக்கக் கூடும். நாளையோ அல்லது நாளை மறுநாளோ அங்கே போய்தான் ஆக வேண்டும். வழியை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது சில நேரங்களில் அவசியமாகி விடுகிறது.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...