27 Feb 2019

தியாகுவின் 'சுவருக்குள் சித்திரங்கள்' - நூல் அறிமுகம்



ஒரு சமூகப் போராளியின் நாட்குறிப்பும் சமூகப் போராளிக்கான கையேடும்
            தேச விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தையும், அழித்தொழிப்புப் போராட்டத்தையும் கையில் எடுத்துப் போராடிய தோழர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு‍ போன்றோர். அவர்கள் எப்படிப்பட்ட ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தார்களோ அதே போன்றதொரு போராட்டத்தை சமூக விடுதலைக்காக சுதந்திர இந்தியாவில் முன்னெடுத்து முயன்று பார்த்தவர்கள் தியாகுவும் அவர்களின் தோழர்களும்.
            மேற்கு வங்க மாநிலத்தில்,
            டார்ஜிலிங் மாவட்டத்தில்,
            நக்சல்பாரி எனும் சிற்றூரில்,
            சாரு மஜூம்தார் தலைமையில் ஆயுதம் ஏந்திப் போராடிய நக்சலைட்டுகளின் போராட்ட குணம் தியாகுவை ஈர்க்கிறது.
            தியாகுவும் அவர்களின் தோழர்களும் தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்தை முயன்று பார்க்க களம் காண்கிறார்கள்.
            உழைக்கும் மக்களிடமிருந்து உழைப்பையும் உணவையும் பிடுங்கிக் கொண்டு சாணிப்பாலையும் சவுக்கடியையும் தந்த நிலச்சுவான்தார்கள் தியாகுவுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் அழித்தொழிப்பதற்கான இலக்காகிறார்கள்.
            உழைக்கும் மக்களின் வியர்வையை உறிஞ்சியெடுத்து அவர்களைக் கொட்டாங்கச்சியில் தேநீர் பருகச் செய்யும் அவலம் தியாகுவின் தோழர்களின் நெஞ்சில் புரட்சிக் கனலைப் பற்றி எரியச் செய்கிறது.
            கம்யூனிஸத் தோழர்களும் முன்னெடுத்த இப்போராட்டத்தில் தியாகு தம்முடைய பாதை லெனினிய மாவோயிஸப் பாதை என்று மாறுபடுகிறார்.
            என்றாலும்,
            மொத்தத்தில் அவர்களின் வலியப் போராட்டத்துக்கு அவர்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமா?
            பூந்தாழங்குடியில் பக்கிரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
            சிக்கல் பக்கிரி நிலச்சுவான்தார்கள் ஏவி விட்ட குண்டர்களால் கொல்லப்படுகிறார்.
            கேக்கரை ராமச்சந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்.
            காதர் எரியும் நெருப்பில் வீசப்பட்டு கொல்லப்படுகிறார்.
            எழுமுக்காள் பக்கிரியின் மூன்று விரல்கள் துண்டு துண்டாக்கப்படுகிறது.
            இவைகள் எல்லாவற்றையும் விஞ்சும் வகையில்,
            1968 கிறிஸ்துமஸ் நாளில்...
             கீழவெண்மணியில் 44 உயிர்கள் நெருப்புக்கு இரையாகின்றன.
            தியாகுவின் உள்ளமெங்கும் பல குரல்கள் எதிரொலிக்கின்றன.
            "இதுவரை தத்துவஞானிகள் உலகைக் குறித்த விளக்கம் சொல்லியே வந்து இருக்கின்றனர். ஆனால் அது முக்கியமல்ல. உலகை மாற்றுவதுதான் முக்கியம்!" என்ற மார்க்ஸின் குரல்,
            "புரட்சியில் ஈடுபடாமல் புரட்சியைக் கற்றுக் கொள்ள முடியாது!" என்ற மாவோவின் குரல்,
            "இளைஞனே! ஆயுதமெடு! அழித்தொழி வர்க்கப் பகைவர்களை! இதுவே புரட்சியின் தொடக்கம்!" என்ற சாரு மஜூம்தாரின் குரல் - எல்லாம் சேர்ந்து தியாகுவைப் புரட்சிப் பாதையில் தூண்டுகின்றன.
            மஜூம்தாரின் குரல் தியாகுவின் உள்ளத்தில் அதிகமாகவே எதிரொலிக்கிறது. சீனாவின் மாவோவின் பாதையில்தான் இந்தியாவின் புதிய பாதையை அமைக்க முடியும் என்று தியாகு உறுதியாக நம்புகிறார்.
            வர்க்கப் பகைவர்களை அழித்தொழிக்கும் பாதையில் அடியெடுத்து வைக்கிறார் தியாகு தன் தோழர்களோடு.
            அந்த அழித்தொழிப்புச் செயலுக்குப் பின் கைது செய்யப்படுகிறார் தியாகு.
            தங்கள் புரட்சிக்கு விலையாக தங்கள் இன்னுயிரைத் தூக்குக் கயிற்றின் முன் சமர்ப்பித்த பகத்சிங்கின் தோழர்கள் போல தியாகுவின் தோழர்களும் தூக்கு மேடையை தங்கள் தியாகத்திற்கானப் பரிசு மேடையாக எண்ணி முத்தமிடத் துடிக்கிறார்கள்.
            தியாகுவும் அவர்களின் தோழர்களும் நீதிமன்ற விசாரணையைப் புறக்கணிக்கிறார்கள்.
            கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக் கூண்டை தங்களது கருத்துகளை விதைக்கும் பொதுக்கூட்ட மேடையாக மாற்ற முனைகிறார்கள். தங்களது புரட்சிப் பாதையை மக்களிடம் அம்பலப்படுத்தும் நாடக மேடையாகவும் ஆக்குகிறார்கள்.
            கீழமை நீதிமன்றம் அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறது.
            தூக்குத்  தண்டனை கைதிகளாக அடைபடும் தியாகுவும் அவரின் தோழர்களும் தூக்குத் தண்டனை பெற்றாகி விட்டதாகவோ, தங்களின் பணி முடிந்து விட்டதாகவோ  நினைத்தார்கள் இல்லை.
            போராளிகள் எங்கு அடைபட்டாலும் போராடவே செய்கிறார்கள். தன் கடைசி மூச்சையும் போராட்டத்துக்கு விலையாகவேத் தருகிறார்கள்.
            சிறையிலும் அவர்கள் போராடுகிறார்கள். ஒரு முறை நீதிமன்றத்துக்குப் போலீசாரால் அழைத்துச் செல்லப்படும் போது தப்பிக்கிறார்கள்.
            எல்லாவற்றுக்கும் சேர்த்து அவர்கள் அடிபடுகிறார்கள். உதைபடுகிறார்கள். நிர்வாணமாய் நிறுத்தப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுகிறார்கள்.
            திருச்சி மத்திய சிறையில் தியாகுவுக்குக் கிடைக்கும் ஏ.ஜி.கே. எனும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் தோழமை இந்தியாவுக்கு உரிய புரட்சிப் பாதையைத் தீர்மானிக்க தியாகுவுக்கு வழிகாட்டியாக அமைகிறது.
            அவர்கள் விவாதிக்கிறார்கள். முரண்படுகிறார்கள். சரியாக திட்டமிடப்படுவதன் அவசியத்தை உணர்கிறார்கள். மக்களிடையே ஒரு நாயக பிம்பத்தை உருவாக்க முயலாமல், மக்கள் பங்கேற்போடு கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கண்டடைகிறார்கள்.
            சிறையில் இருக்கும் அவர்கள் சிறைச் சீர்திருத்தத்தை முன்னிறுத்தி தங்களின் போராட்டப் பயணத்தைத் துவங்க வேண்டியதன் அவசியத்தை உணர்கிறார்கள்.
            சிறைக்குள்ளே பத்திரிகை நடத்துகிறார்கள். சிறைக்குள்ளே ரகசிய சங்கத்தை உருவாக்கி வழிநடத்துகிறார்கள். அதற்கு சந்தா வசூலிப்பது உட்பட அந்த முயற்சிகள் அனைத்தும் ரசனையானவை. சிறைக்குள் பீடி செலவாணியாகவும், சந்தாவாகவும் பயன்படுத்தப்படும் ரகசியங்களையெல்லாம் தியாகு இந்நூலில் பகிர்கிறார்.
            அவர்கள் சிறைப்போராட்டத்தைத் தொடங்கும் வேளையில் எவ்வளவோ இடர்பாடுகள்.
            ஒரு கிறுக்கனைப் போல் நடந்து கொள்ளும் சீவலபேரி பாண்டி சிறையிலிருந்து தப்பிக்கிறார். சிறையின் கெடுபிடிகள் அதிகமாகின்றன. என்றாலும் அவர்கள் திட்டமிட்டபடி தங்கள் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள்.
            ஒரு மரண தண்டனைக் கைதி உட்பட உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரும்பாலான கைதிகள் எழுச்சியோடு பங்கேற்கிறார்கள். ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் எல்லாம் பேசிப் பார்க்கிறார்கள். பேச்சுவார்த்தையை நுட்பமான ஆயுதமாகப் பிரயோகிக்கிறார்கள்.
            இறுதியில் சிறைத்துறைச் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் வகையிலும், சிறைக்கைதிகளைக் குடிமகன்களாய் நடத்தும் வகையில் உடன்பாடு ஏற்பட்டு அவர்களின் போராட்டம் வெற்றி பெறுகிறது.
            அதைத் தொடர்ந்து ஒரு தொய்வு காலமும் வருகிறது. என்றாலும் சிறைக்குள்ளும் போராடி சிறைக்கைதிகளையும் மனிதர்களாய் அடையாளங் காட்டிய அவர்களின் போராட்டம் சிறைத்துறைச் சீர்திருத்தங்களுக்கு ஒரு முன்னோடி.
            நீதிமன்ற விசாரணையைப் புறக்கணித்தாலும் தியாகுவுக்காகவும், அவர்களின் தோழமைகளுக்காகவும் வெளியிலிருந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளால் அவர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகிறது.
            தியாகராஜன் எனும் தியாகுவைப் பொறுத்த வரையில் சிறைபடும் வரையில் மக்களுக்காக செய்த ஆயுதப் போராட்டம், சிறையில் கைதிகளுக்காகவும் பல்வேறு வகையில் தொடர்கிறது. அவர் எப்போதும் ஒரு போராளியாகவே இருக்கிறார்.
            பொதுச்சமூகத்திலிருந்து சிறைபட்டு, மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு அவரது போராட்ட முறைகள் வெவ்வேறு விதமாய் செழுமைபட்டுக் கொண்டே செல்வதைக் காட்டும் ஒரு போராளியின் நாட்குறிப்பாகவும் 'சுவருக்குள் சித்திரங்கள்' எனும் இந்நூலைச் சுட்டலாம்.
            குறிப்பாக,
மூல உத்திகளிலிருந்தே தந்திர உத்திக்குச் செல்ல வேண்டும். அவ்வாறில்லாமல் தந்திர உத்தியிலிருந்து மூல உத்திக்குப் போவது என்பது தலைக்கு ஏற்ற குல்லாய் வாங்குவதற்குப் பதிலாக, குல்லாய்க்கு ஏற்றாற்போல் தலையை மாற்ற முயற்சிப்பது போலாகி விடும் என்ற பேருண்மையை தன் அனுபவத்தின் மூலம் இந்நூலில் முன்வைக்கிறார் தியாகு. சமூகப் போராளிகளுக்கான மிகப்பெரிய பாடம் இது. அவ்வகையில் போராளிகளுக்கானப் பாடப்புத்தகமாகவும் இந்நூலைக் கொள்ளலாம்.
            இந்நூலில் ஏ.ஜி.கே. புரட்சி குறித்து தியாகுவோடு பேசும் ஒவ்வொரு இடமும் போராளிகளுக்கான அனுபவப் படிப்பினைகளைக் கற்றுத் தரக் கூடியவைகள்.
            "போராட வேண்டும். அதன் வரையறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நட்புச் சக்திகளை இணைத்துக் கொள்ளவும், பகைவனைத் தனிமைப்படுத்தவும், வெளியிலிருந்து ஆதரவு திரட்டவும் வகை செய்த பிறகே போராட வேண்டும்."
            "என்றும் எப்போதும் விழிப்பாய் இருப்பதுவே உரிமை வாழ்வுக்கு தரும் விலை - Etermal vigilance is the price of liberty "
            "பகைவன் ஆத்திரமூட்டுகிறான் என்பதாலேயே ஆத்திரமடைய வேண்டியதில்லை. நாம் தயாராய் இல்லாத போது பகைவன் மோதலுக்கு இழுக்கிறான் என்றால் அந்த மோதலைத் தவிர்ப்பதுதான் நல்லது. நமது போராட்டத்துக்கு நாம்தான் களமும், காலமும் குறிக்க வேண்டும்."
            "பேசுவதால் சில நன்மைகள் உண்டு. ஒவ்வொரு நாளும் எதிரியின் உள்ளத்தை அறிய இது பயன்படுகிறது. இதை எதிரியின் மீது ஓர் உளவியல் போராக மாற்ற முயல வேண்டும். அவர்களாக பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு போகட்டும். முறிவுக்கான பழி நம்மைச் சாராது. அதுதான் நல்லது."
            "பேச்சுவார்த்தை கூட ஒரு போராட்ட களம்தான். மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகிறார்கள். அமைதிக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பற்றிக் கொள்ள தயார் என்பதும், எதிரிதான் அமைதியைக் குலைத்து மோதலை நாடுகிறான் என்பதும் ஒவ்வொரு படியிலும் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்."
            இவைகள் அனைத்து ஏ.ஜி.கே. தியாகுக்குக் கற்றுத் தரும் பாடங்கள். அவ்வகையில் சமூகப் போராளிகளின் கையேடாகவும் கொள்ளத் தக்க நூல் இது.
            சிறை ஓர் அமிலப் பரிசோதனை. எந்தக் கோழையும் இங்கு வீரனாய் நடிக்க முடியாது என்று தியாகு கூறும் இடமாக இருக்கட்டும்,
            சிறை ஒரு மூடாத கல்லறை. கைதிகள் உயிரோடு இருக்கும் பிணங்கள் என்று சிறை அலுவலர் ஒருவர் சொல்லும் இடம் ஆகட்டும், சமகால சிறைகள் குறித்த ஆவணப்பதிவாகவும் கொள்ளத்தக்கது இந்நூல்.
            சக்கியடித்தல் என்றால் தூக்கில் இடுதல் என்று ஆரம்பித்து மரண தண்டனைக்கான கைதிகள் அடைக்கப்படும் இடம் கண்டம் என வழங்கப்படுவது வரை சிறை சார்ந்த பல்வேறு சொல்லாடல்களையும் இந்நூல் தருகிறது. கைதி என்பது உருதுச்சொல். சிறைபட்டவர் அல்லது தள்ளப்பட்டவர் என்பதே தமிழ்ச்சொல் என்று சொல் குறித்த ஆழம் காண்பதிலும் சிறை சார்ந்த சொற்கள் குறித்த சொற்களஞ்சியமாகவும் இந்நூல் விளங்குகிறது.
            சிறை சார்ந்த உளவியலும், சிறை சார்ந்த அரசியலும், சிறை சார்ந்த தோழமை உணர்வுகளும் பதிவாகியுள்ள இந்நூல் சமகாலத்தின் சிறை சார்ந்த தன்வரலாற்று நூல்களில் முக்கியமானதாகக் கருதத்தக்கது.
            தன் இளமை முழுவதையும் சிறையில் தியாகம் செய்த தோழர் தியாகராஜனுக்கு அந்தப் பெயர் எவ்வளவோ பொருந்தும். சிறையின் சுவர்களுக்கு இடையே அவர் வாழ்ந்த வாழ்வியலை எழுத்தோவியமாய்த் தீட்டிய வகையில் 'சுவருக்குள் சித்திரங்கள்' என்ற தலைப்பும் இந்நூலுக்கும் அவ்வளவு பொருந்தும்.
            சமூகப் போராளிகளின் ஆவண நூல் என்று கொள்ளத்தக்க இந்நூல் கிடைக்குமிடம் -
விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோயம்புத்தூர் - 620 001
தொடர்பு எண் - 0422 2382614, 0422 2385614
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...