22 Feb 2019

வந்தது கருப்பு!



செய்யு - 4
            விகடுவின் தாய்வழித் தாத்தாவின் வீடு வடவாதியில் இருந்தது. வடவாதி முத்தாளம்மன் கோயிலைத் தாண்டி தென்னண்டைப் பக்கம் ஒடித்தால் ஒரு சந்து. சந்து வீடுகள் அனைத்தும் முஸ்லீம் மக்களின் வீடுகள். அந்த சந்தில் நான்கு வீடுகளைக் கடந்தால் பாஞ்சலம்மன் கோயில் வரும். அக்கோயிலின் அருகேதான் வைத்தி தாத்தா வீடு. வைத்தி தாத்தா வீட்டுக்கு எதிரே அதாவது பாஞ்சலம்மன் கோயிலிலிருந்து ஒடித்தால் கோனார் தெரு. அங்கு நான்கு கோனார் வீடுகள் இருந்தன.
            சந்திலிருந்து வைத்தி தாத்தா வீட்டுக்குப் போகாமல் நேராக வந்து இடது பக்கம் ஒடித்தால் நீளும் காலனித் தெருவில் விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்தார்கள். அத்தெருவின் வழியாக ஒன்றரை அல்லது இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்தால் விகடுவின் வீட்டுக்கு வந்து விடலாம்.
            வைத்தி தாத்தாவுக்கு ஆறு பெண்மக்கள், இரண்டு ஆண்மக்கள். விகடுவையோ செய்யுவையோ மையப்படுத்திச் சொன்னால் இரண்டு பெரியம்மாக்கள், மூன்று சித்திகள், இரண்டு மாமன்கள். செய்யுவின் அம்மா வெங்கு மூன்றாவது பெண் பிள்ளை.
            செய்யுவின் ஆத்தா நங்கை. எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற மவராசி. காலனித் தெரு மக்களுக்கு சாமியாத்தா. காலனி மக்களுக்கு உடம்பு சரியில்லையென்றால் விபூதி போட்டு விட்டு வருவார். அம்மை என்றால் சாமியாத்தா இல்லாமல் எந்த காரியமும் நடக்காது. வேப்பிலை ஒடித்துப் போட்டு விட்டு வருவதிலிருந்து தலைக்கு தண்ணீர் ஊற்றுவது வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாளுக்கு ஒரு முறை பார்த்து விட்டு வந்து விடுவார்.
            விகடுவுக்கு உடம்பு சரியில்லாத போதும் சாமியாத்தா விபூதி அடிப்பார். விபூதியைத் தண்ணீரில் கலந்து குடிக்கச் சொல்லுவார். அதனால் எல்லாம் சரியாகும் சளியைப் பெற்றவனா விகடு? திட்டையின் பண்ணைக் குளம் வற்றினாலும் அவன் சளி வற்றாமல் இருந்தது.
            செய்யு பிறந்த செய்தி கேள்விபட்டதும் சாமியாத்தா காலனித்தெரு வழியாக நடந்தே வந்து விட்டார். கொஞ்ச நேரத்தில் சின்ன மாமா மணியும் வந்து சேர்ந்தார். "நான் சைக்கிள்ல கொண்டாந்து விடறதுக்குள்ள இதுக்கென்ன அவசரம்?" என்று வந்ததும் வராதுமாக ஆத்தாவைத் திட்டினார். இரண்டு மாமாக்களில் மூத்தவரான குமரு வெளிநாட்டில் இருந்தார்.
            சாமியாத்தாவுக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். இவர்களில் யார் மூத்தவர், யார் ‍இளையவர் என்ற குழப்பம் இப்போதும் விகடுவுக்கு உண்டு. இந்த விவரங்கள் செய்யுக்குச் சரியாகத் தெரியும்.
            இப்போது கணக்கிட்டுப் பாருங்களேன் இரண்டு பெரியம்மாக்கள், மூன்று சித்திகள், இரண்டு மாமன்கள், மூன்று தாத்தாக்கள், இரண்டு ஆத்தாக்கள் அவர்களின் பிள்ளைகள், அவர்களின் வழி வரும் சொந்தங்கள். இது தாய்வழிக் கணக்கில் வருபவைகள். தந்தைவழிக் கணக்குத் தனி. அதைப் பிறகு சமயம் வரும் போது சொல்கிறேன்.
            ஏன் இப்படி கொசாமுசா என்று சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்று  விகடு குழம்பி இருந்தான். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க அவன் அம்மா எப்படிச் சொந்தக்காரர்களைக் கூப்பிடுகிறார்களோ அப்படியே கூப்பிட்டு புதுக்குழப்பத்தை உண்டு பண்ணினான். கொஞ்சநாள் எல்லாரும் சேர்ந்து விகடுவைத் திருத்திப் பார்த்தார்கள். உறவுமுறைகளை அவனிடம் விளக்கி விளக்கி அவர்கள் குழம்பியதுதான் மிச்சம். கடைசியில் எப்படியோ கூப்பிட்டுப் போகட்டும் என்று சொல்ல முடியாது, எப்படியோ கூப்பிட்டுத் தொலையட்டும் என்று விட்டு விட்டார்கள். பிற்காலத்தில் அவன் மனைவி ஆயி இந்தக் குழப்பத்தைப் போக்க அவனுக்கு எவ்வளவோ துணை நின்றாள். சொந்தக்காரர்கள் வருவதற்கு முன் அவர் என்ன முறை என்று சொல்லி உஷார் படுத்தினாள். விகடு இந்தப் பிரச்சனையை வேறுமாதிரியாக எளிதாகக் கையாண்டான். ஆண்களைப் பொருத்த வரையில் ஐயா என்றான். பெண்களைப் பொருத்த வரையில் அம்மா என்றான். மற்றபடி அனைவரையும் வாங்க, போங்க என்று சமாளித்துக் கொண்டான்.
            சாமியாத்தா செய்யுவைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டார். "புள்ள நல்லா செக்கச் செவேல்னு இருக்குதுடி!" என்றார். சாமியாத்தா கருப்பு. அத்துடன் குண்டாக இருப்பார், குள்ளமும் கூட. வைத்தி தாத்தா நெடுநெடுவென இருப்பார். நல்ல சிவப்பு. ஒல்லியாக இருப்பார்.
            இது அப்படியே செய்யுவின் குடும்பத்தில் நேர்மாறாக இருந்தது. அப்பா கருப்பு, சற்று குள்ளம். அம்மா சராசரி உயரம், நல்ல சிவப்பு.
            "பொம்பள புள்ள பொறந்திருக்கு! நெலம் வாங்கிப் போடணுமே! பேத்திக்கு எங்க வாங்கித் தரப் போறீங்க?" என்றார் தம்மேந்தி ஆத்தா.
            "எத்தனப் பேருக்கு நாங்களே வாங்கித் தர்றது? பேத்திக ஒண்ணா ரெண்டா? இந்தப் பேத்திக்கு வாங்கிக் கொடுத்தா அப்புறம் மத்த பேத்திகள்லாம் எங்களுக்கு ஏன் வாங்கித் தர்லேன்னு சண்டைக்கு வந்துட மாட்டாங்களா?" என்றார் சாமியாத்தா.
            "மத்தப் பேத்திக மாதிரியா இந்தப் பேத்தி? உங்க பேரன் பொறந்து ஒம்போது வருஷம் கழிச்சுப் பொறந்திருக்கு. நீங்க நெலம் வாங்கித்தான் கொடுக்கணும்!"
            "நெலமெல்லாம் நம்மால முடியாது ஆயா! வேணும்னா வூட்டுல ஒரு கருப்பு மாடு நிக்குது. தாத்தன்கிட்ட கேட்டுகிட்டு ஓட்டிக்கச் சொல்லுங்க!"
            "அப்படிப் போடு அரிவாள. ஏண்டி வெங்கு பொண்ண பெத்த நேரம், இப்பதாண்டி ஒன் வூட்டுக்கு மாடு வரப் போவுது!"
            இந்த ஊர்ப் பகுதியில் அப்படி ஒரு பழக்கம். பெண் குழந்தைகள் பிறந்தால் நிலம் வாங்கிப் போடுவார்கள். கல்யாண நேரங்களில் அது உதவியாக இருக்கும் என்று ஒரு கணக்கு.
            வைத்தி தாத்தா பேத்திக்காக நிலம் வாங்கித் தரவில்லை. ஆனால் நிலம் வாங்குவதற்குத் துணை நின்றார்.      உலகநாதன் கோனார் மகன் கிருஷ்ண கோனார் நிலத்தை அவர்தான் பேசி முடித்தார். காலனித் தெருவில் பரமசிவத்தின் வீட்டுக்கு எதிரே இருந்தது அந்த நிலம். தொண்ணூறு குழி நிலம் அது. இங்கே குழி கணக்குதான் நிலக் கணக்கு. ஒரு குழி என்பது நூற்று நாற்பத்து நான்கு சதுர அடி பரப்பு கொண்டது.
            வைத்தி தாத்தா வீட்டிலிருந்து ஒரு சில நாட்களில் கருப்பு மாடும் வந்தது. அப்பா அதற்கானத் தொகையைக் கொடுத்து விட்டார். வைத்தி தாத்தா மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டதாகப் பேச்சு.
            கருப்பு மாட்டை வீட்டில் கருப்பு என்று பெயரிட்டு அழைத்தார்கள். கருப்பு முரட்டுத்தனமான நாட்டு மாடு. அதைக் கட்டுவதற்கென்று காம்பு எதுவும் அப்போது அடிக்கவில்லை. வேப்ப மரத்தில்தான் கட்டியிருக்கும். அவிழ்க்கும் போது கவனமாக அவிழ்க்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் கயிற்றைப் பிடுங்கிக் கொண்டு துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடும். அது பெரிய மாடாக இருந்தாலும் கன்றுக்குட்டிப் போல துள்ளிக் குதிக்கும். காலை பரப்பிக் கொண்டு அது ஓடும் வேகத்தைப் பார்த்தால் அது பசு மாடா, காளை மாடா என்ற சந்தேகம்தான் வரும். அதன் கொம்புகளும் அப்படித்தான் இருந்தது.
            தாத்தா வீட்டில் ஏராளமான மாடுகள் இருந்தன எருமைகள் இரண்டு உட்பட. விகடுவுக்கு எருமைக் கன்றுக்குட்டிகள் மேல் அலாதிப் பிரியம் இருந்தது. எருமைக் கன்றுகுட்டிகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதை கிடாரிக் கன்றிடமோ, காளைக் கன்றிடமோ செய்து விட முடியாது. தொட்டால் போதும் சிலிர்த்துக் கொள்ளும். படுத்துக் கிடந்தால் உடனே எழுந்து கொள்ளும். முட்டும் கன்றுகுட்டிகள் கூட உண்டு. எருமைக் கன்றுகள் அப்படியா? அது பாட்டுக்கு படுத்துக் கிடக்கும் அல்லது நின்று கொண்டிருக்கும். மெதுவாக எழும். மெதுவாக நடக்கும். ஓடும் போது வித்தியாசமாக இருக்கும். அதனிடம் இருக்கும் அலட்சியத்தை வேறு எதுவிடமும் பார்க்க முடியாது. பால் குடிக்கப் போகும் போதுதான் லேசாக ஒரு சுறுசுறுப்பு காட்டுவது போல இருக்கும். அதிலும் ஓர் அலட்சியம் இருக்கவே செய்யும்.
            கிராமத்தில் பேசிக் கொண்டார்கள், பொண்ணு வீட்டுக்கு வூட்டு மாட்டை ஓட்டிக் கொடுக்கக் கூடாது என்று. அப்படிக் கொடுத்தால் என்னாகும் என்பதை சில பல உதாரணங்கள் மூலம் எல்லாரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
            அப்படித்தான் ஆனது. வைத்தி தாத்தா வீட்டில் அடுத்த சில வருடங்களில் மாடுகளே இல்லாமல் போனது. 
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...