செய்யு - 3
மெத்தையில் படுத்தால் விகடுவுக்கு எப்படித்
தூக்கம் வரும், எங்கிருந்து தூக்கம் வரும் என்று தெரியாது. அப்படித் தூங்குவான். பகலும்
இரவும் முச்சூடும் என்றாலும் மெத்தைத் தூக்கம் சம்மதம் அவனுக்கு.
அதிகாலை 3 மணி. மெத்தையிலிருந்து அப்பா
அவனை எழுப்பி விட்டார். "அம்மாவுக்கு இடுப்பு வலி வந்துடுச்சு. நீ எழுந்திருச்சு
திண்ணைக்குப் போ!"
அந்த இரவு விகடுவுக்கு இன்றும் நன்றாக
ஞாபகம் இருக்கிறது. திண்ணையின் எதிரே இருந்த தென்னை மரம் காற்றில் மட்டைகளை அசைத்துக்
கொண்டிருந்தது. இரவின் வெளிச்சத்தில் பார்க்கையில் மயில் தோகை விரித்தாடுவது போலிருந்தது.
அதைப் பார்த்ததும் விகடுவுக்கு மனதுக்குள் மகிழ்ச்சி. அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பா சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
"அப்பா! நானும் வர்றேம்ப்பா!" என்றான்.
"ம்ஹூம்! நீ இங்கேயே இரு. நான் லாலு
மாமா வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்!" அப்பா துரிதமானார். விகடுவுக்கு
ஏமாற்றமாய் இருந்தது.
அப்பா கிளம்பிய சிறிது நேரத்தில் தம்மேந்தி
ஆத்தா வந்தார். அப்பா போகும் வழியில் சொல்லிவிட்டுப் போயிருக்க வேண்டும். தம்மேந்தி
ஆத்தாவுக்குப் பின் குடுகுடுவென்று முல்லேம்பா ஆத்தாவும் வந்து கொண்டிருந்தார்.
"டேய் விகடு! உனக்கு தம்பி வேணுமா?
பாப்பா வேணுமா?" என்று கேட்டுக் கொண்டே என் பதிலுக்குக் காத்திராமல் கதவைத் திறந்து
கொண்டு தம்மேந்தி ஆத்தா உள்ளே போய் விட்டார்.
விகடு, "எனக்கு ரெண்டும் வேணும்!"
என்றான். அது தம்மேந்தி ஆத்தாவின் காதில் விழுந்ததா இல்லையா என்று விகடுவுக்கு சந்தேகமாக
இருந்தது.
முல்லேம்பா ஆத்தா நெருங்கியதும்,
"உள்ளே ஆத்தாகிட்ட எனக்கு ரெண்டும் வேணும்னு சொல்லிடுங்க!" என்றான் விகடு.
"என்னடா ரெண்டு?" என்று முல்லேம்பா
ஆத்தா புரியாமல் கேட்டது.
"அதான்! தம்பி, பாப்பா ரெண்டுமே வேணும்!"
முல்லேம்பா ஆத்தா விகடுவின் நடுமண்டையில்
நங்கென்று ஒரு குட்டு வைத்து விட்டு உள்ளே ஓடினார்.
அம்மாவின் அழுகைச் சத்தம் வெளியில் கேட்டது.
பக்கத்து வீட்டு அய்யாவுவும், அம்மாசி
அம்மாவும் வெளியே வந்தார்கள்.
"விகடுவுக்கு தம்பிப் பாப்பா பொறக்கப்
போகுது!"
"எப்பப் பொறக்கும்?" என்றான்.
"கொஞ்ச நேரத்துல அழுவுற சத்தம் கேட்கும்
பாரு! அப்பா எங்க? நர்ஸம்மாவ கூப்பிடப் போயிருக்கா?" என்றார் அம்மாசி அம்மா.
"லாலு மாமா வூட்டுக்குப் போயிருக்காங்க!"
"அங்க எதுக்கு போயிருக்குத் தம்பி?"
என்றார் அய்யாவு.
"லாலு மாமாவ அழைச்சுகிட்டு நர்ஸம்மாவ
கூப்பிடப் போவாங்க!"
"அப்படித்தான் இருக்கும்!" என்று
உச் கொட்டிக் கொண்டார் அம்மாசி அம்மா.
விகடுவின் மனதுக்குள் சித்திரங்கள் மாறி
மாறி உருவாயின. தம்பிப் பிறந்தால் எப்படி இருப்பான்? பாப்பா பிறந்தால் எப்படி இருப்பாள்?
ஒருவேளை தம்பி, பாப்பா இரண்டு பேரும் பிறந்தால் எப்படி இருப்பார்கள்?
அரை மணி நேரம் கழிந்திருக்கும். பெருமாள்
குளத்திலிருந்து தவளைகளின் சத்தம் வந்து கொண்டிருந்தது. வடக்குத் தெருவிலிருந்து நாய்
ஒன்று வள்வள் ஒன்று குரைத்துக் கொண்டிருந்தது.
"ரொட்டி எடுத்து வர்றேன். திங்குறியா?"
என்றார் அம்மாசி அம்மா.
"நான் இன்னம் பல்லே விளக்குல!"
என்றான் விகடு.
"ச்சும்மா வாயைக் கொப்புளிச்சுகிட்டுத்
தின்னேன்!"
"அதெல்லாம் வேணாம்!"
"தம்பிப் பாப்பா பொறந்தா எனக்கு
சாக்லேட் வாங்கித் தர்றணும்!"
"அதெல்லாம் அப்பாகிட்ட கேட்டுக்குங்க!"
அய்யாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"நீ பள்ளியோடம் போறப்ப முட்டாய் வாங்குவேல்ல. அதுல ஒண்ண கொண்டாந்து கொடேன்டா!"
என்றார்.
விகடு மெளனமாக நின்றான். "ஏதாச்சும்
பேசுறானா பாரு?" என்று அம்மாசியிடம் சாடை காட்டினார் அய்யாவு.
குழந்தை அழும் சத்தம் கேட்டது.
"புள்ள பொறந்துடுச்சுடா. நாந் போய்
பாத்துட்டு வர்றேன்!" என்ற அம்மாசி உள்ளே நுழைந்தார்.
"நானும் வர்றட்டா?" என்றான்
விகடு.
"நீ இங்கயே நில்லுடா அய்யாவைப் பத்திரமா
பாத்துகிட்டு!"
விகடு அய்யாவுவையே வெறித்துப் பார்த்தான்.
"கொஞ்ச நேரம் கழிச்சுக் கூப்பிடுவாங்கடா! போயிப் பார்க்கலாம்!" என்று சமாதானப்படுத்தினார்.
அய்யாவு சொன்ன கொஞ்சம் நேரம் என்பது
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. விகடுவை அழைத்துக் காண்பித்து விட்டு
உடனே வெளியில் அனுப்பி விட்டார்கள்.
அப்புறம் இரண்டு மணி நேரத்துக்கு மேல்
கடந்திருக்கும். அப்போதுதான் அப்பா வந்தார். லாலு மாமா ஊரில் இல்லை என்றார்.
"பொண்ணு பொறந்திருக்குத் தம்பி!
நர்ஸம்மாவைக் கூப்பிட்டு வந்துட்டீங்களா?" என்றார் வெளியில் வந்த தம்மேந்தி ஆத்தா.
"நான் அங்க போகல. வேற்குடி லாலு
மாமா வூட்டுக்குப் போயிருந்தேன்!" என்றார் அப்பா.
"என்னா தம்பி நர்ஸம்மாவ பார்க்கப்
போயிருப்பீங்கன்னுப் பார்த்தா வேற்குடி போனதா சொல்றீங்க?"
"அங்கப் போயி அவங்கள அழைச்சுகிட்டுப்
போகலாம்னு பார்த்தேன். அவங்க இல்ல. அங்க வூட்டுல விசாரிச்சாங்க. அப்படியே பேசிகிட்டே
உட்காந்துட்டேன்!"
அப்பாவைப் பார்க்க விகடுவுக்குப் பாவமாக
இருந்தது.
அன்று விகடு பள்ளிக்குப் போகவில்லை. வீட்டில்தான்
இருந்தான்.
அம்மா கண்விழித்ததும் தம்மேந்தி ஆத்தா
எல்லா விவரத்தையும் அம்மாவிடம் சொல்லியிருக்க வேண்டும்.
அப்பாவைப் பார்த்ததும் அம்மா திட்டினார்,
"இப்படியா ஒரு மனுசம் இருப்பார்? பொண்டாட்டிக்குப் பெரசவம்னா நர்ஸம்மாவ போயிப்
பார்க்குறதா? லாலு மாமா வூட்டுக்குப் போறதா?"
அப்பா எதுவும் பேசவில்லை.
தங்கச்சிப் பாப்பா அழ ஆரம்பித்தாள்.
"அப்பாவைத் திட்டாதம்மா. பாப்பா அழுவது!"
என்றான் விகடு.
*****
No comments:
Post a Comment