13 Feb 2019

பூட்டாத பூட்டு - அன்லாக்கிங் பிராப்ளம்


புதிய தலைமுறைக் கதைகள்

            நான் அப்பு. ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். என்னைப் போன்றவர்களைப் பற்றி நிறைய அறிந்திருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். அதனால் மேலதிக அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
            அப்புறம் எங்கள் பிரச்சனைகள் பற்றி எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் வேறெந்த மூடாக்குகளும் வேண்டாம்.
            நேரடியாக விசயத்துக்கு வந்து விடுகிறேன்.
            மீண்டும் என்னால் அப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை. கணினியில் எழுதிய கோப்பு. ஒரே ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. சேமிக்க மறந்து எப்படியோ டெலிட் செய்து விட்டேன். அந்தக் கோப்பை மீட்க செய்த முயற்சியெல்லாம் தோல்வியில் முடிந்து விட்டது.
            ஞாபகத்தில் இருந்தவைகளைக் கொண்டு இரண்டாம் முறை முயற்சித்துப் பார்த்தேன். நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. முதல் முறை செய்ததைப் போல திருப்தி இந்த முறை செய்ததில் இல்லை.
            என்னை நானே நொந்து கொண்டேன். எப்படி சேமிக்க மறந்தேன்? என்று மீண்டும் மீண்டும் என்னை கேள்வி கேட்டுக் கொண்டேன்.
            எவ்வளவு நேரம் வீண். முடிந்திருக்க வேண்டிய ஒரு காரியத்தை மீண்டும் துவக்கும்படி ஆகி விட்டதே என்ற வேதனை என்னை வாட்டியது. விரட்டியது என்றும் சொல்லலாம். அதிலிருந்து மீள மிக நீண்ட நேரம் பிடித்தது எனக்கு.
            அலுவகத்தை மூடி விட்டு இனி கிளம்ப வேண்டியதுதான். எல்லாரும் சென்று விட்டார்கள். கடைசியில் நான் மட்டும்தான் பாக்கி.
            அவசர அவசரமாக ஜன்னல்களை அடைத்தேன். ஜன்னல்களில் ஒன்று லாக் உடைந்து போனது. கம்பியை வைத்துக் கட்ட வேண்டும். கம்பியைக் காணவில்லை. எவ்வளவோ செக்கியூரிட்டி சிஸ்டம்கள் இருக்கும் இந்த அலுவலகத்தில் இந்த ஜன்னலின் குறை மட்டும் மூன்றாண்டுகளாக நீடிக்கிறது. எடுத்துச் சொல்லியாயிற்று. எவனாவது ஒருத்தன் வெளியிலிருந்து கல்லெறிந்து உள்ளிருக்கும் கணினி ஒன்றை உடைத்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். மற்றபடி சரிசெய்யுங்கள் என்று சொன்னால் எதுவும் சரிசெய்யப்பட மாட்டாது. எல்லாவற்றிற்கும் அசம்பாவிதம் தேவை.
            என்ன ஆனாலும் ஆகட்டும் என்று கம்பியைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாத விரக்தியில் ஜன்னலைச் சாத்தி விட்டு நகர்ந்தேன். நிச்சயம் வீசும் காற்றில் ஜன்னல் திறந்து கொள்ளும். அதற்கு நானென்ன‍ செய்வது? கம்பியைக் காணவில்லை.
            விடுவிடுவென்று பூட்டைப் போட்டு விட்டு வெளிகேட்டுக்கு வந்தேன். தெருவில் ஆளரவம் இல்லை. எல்லாரும் எங்கே போய் தொலைந்தார்களோ? இரண்டு மூன்று தெருநாய்கள் மட்டும் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தன.
            வெளிகேட்டின் பூட்டைப் பூட்ட முடியவில்லை. சாவியைச் சுழற்ற முடியவில்லை. பூட்டுக்குள் ஏதோ ரிப்பேர். நான்கைந்து முறை இப்படியும் அப்படியுமா சுழற்ற முயற்சித்தேன். சாவி வளைந்ததுதான் மிச்சம்.
            மீண்டும் அலுவலகத்தைத் திறந்து உள்ளே வந்தேன். வேறு ஏதேனும் பூட்டு இருக்கிறதா என்று அலுவலகத்தின் ஒவ்வொரு அலமாரியையும் திறந்து தேடிப் பார்த்தேன். அலமாரிகள் ஒவ்வொன்றும் இடித்தபுளி கணக்காக கண்டதும் கழியதுமாக கிடந்தன. அவைகளிலிருந்து எங்கேயோ ஒளிந்திருக்கும் ஒரு பூட்டைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று பட்டது.
            கடிகாரம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு மேல் பொறுமையில்லை. வெளியே ஓடி வந்தேன். மீண்டும் பூட்டுப் போட வேண்டியவைகளுக்கு பூட்டு போட்டேன்.
            வெளிகேட்டிற்கு வந்து நின்றேன். எரிச்சலாக வந்தது. அலுப்போ அதற்கு மேல்.
            வெளிகேட்டில் பூட்ட முடியாத அந்தப் பூட்டைத் தொங்க விட்டேன். என் கடன் முடிந்தது.
            வண்டியில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தேன். இனி நாளை வந்து பார்க்க வேண்டும். ஒருவேளை பூட்டாத பூட்டு அப்படியே தொங்கிக் கொண்டும் இருக்கலாம். அல்லது வெளிகேட்டு திறக்கப்பட்டு உள்ளே ஏதேனும் நிகழ்ந்தும் இருக்கலாம். அது நாளைக்கு அலுவலகத்துக்கு வந்த பின்தான் தெரியும்.
            நாளை வரை காத்திருக்க முடியாதவர்கள் உங்கள் கற்பனைக் குதிரைகளைத் தட்டி விட்டுக் கொள்ளுங்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...