புதிய தலைமுறைக் கதைகள்
குற்றச்சாட்டு என்பது எவ்வளவு வேடிக்கையாகி
விட்டது. பிரதான இரண்டு கட்சிகள் ஒவ்வொன்றும் எப்படி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக்
கொண்டன தெரியுமா? இப்போது இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துக் கும்மாளம் கொட்டுகின்றன.
ஆலவாயனும், ரங்கமுத்துவும் சொல்லிக் கொள்ளாத
குற்றச்சாட்டுகளா? ஆலவாயனுக்கும் ரங்கமுத்துவுக்கும் ஆகவே ஆகாது. ஓர் ஒப்பந்தப் பணிக்காக
இரண்டு பேரும் கைகோர்க்க வேண்டிய சூழ்நிலை. குற்றச்சாட்டுகள் போன இடம் தெரியவில்லை.
எல்லாம் உதிர்ந்து விட்டன. இருவரும் ஒரே காரில் போகிறார்களாம். ஒரு தட்டில் சாப்பிடுகிறார்களாம்.
ஒரு சிகரெட்டை ஆளுக்குப் பாதி என்று ஊதித் தள்ளுகிறார்களாம். ஒரே கிளாஸில் கருமம் பிடித்த
குவார்ட்டரை ஊற்றிக் குடிக்கிறார்களாம். இப்படியெல்லாம் போனால் பொடிக்குப் புகையிலை
சிக்குமா?
எல்லாவற்றிலும் நாளாக நாளாக மறதி வந்து
ஆட்கொண்டு விடுகிறது. எல்லாவற்றையுமா ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது?
அப்பனைக் கொன்ற ஏழுசாமி டவுனில் நான்கு
முதியோர் இல்லம் நடத்துவதாகக் கேள்வி.
ரமணிக்கு இதையெல்லாம் பொறுக்க முடியாது.
அவர்களைக் குமட்டிலே குத்தி குடலை உருவி வெளியே
வீசி விடலாமா என்று தோன்றும். அப்படியெல்லாம் வீச ஏதோ புராணத்தில் வருமே அந்த நரசிம்ம
அவதாரம்தான் எடுக்க வேண்டும். ஓ! அதை வைத்துதான் நாசர் அவதாரம் என்ற படத்தை எடுத்தாரோ?
என்று சம்பந்தம் இல்லாத குழப்பம் வேறு அவன் மனதை வாட்டும்.
"அட போடா நாசமா போனவனே! நீயும்தான்
குசலாவை என்னமா திட்டியிருக்கே. வாட்ஸ்அப்ல என்னவெல்லாம் திட்டி அனுப்பியிருக்கே! குசலா
கதை கதையா சொல்லியிருக்கு. எனக்கு என்ன தெரியாதுன்னா நினைச்சே?" என்று கந்தவேலு
மாமா கேட்டால் போதும் ரமணி திருதிரு என்று முழிக்க ஆரம்பித்து விடுவான்.
"அட போ மாமா! வாட்ஸஅப்ல ஒரு நாளிக்கு
எவ்ளோ வருது தெரியுமா? அத்தனையும் படிச்சுப் பார்க்கவே நேரமில்ல. படிக்காம டெலிட்டு
பண்றதுதான் அதிகங்றேன். நானே ஒரு நாளைக்கு சுமாரா ஆயிரம் பார்வேர்டு பண்ணுவேன் தெரியுமா?
அதுல எத பார்வேர்டு பண்ணேன்னு தெரியல. அதல்லாம் பார்வேர்டு மாமா! பார்வேர்டு!"
என்று காட்டமாய் சவுண்டு விட்டான் ரமணி.
"பார்வேர்டுன்னா...?" என்றார்
மாமா.
"அப்படின்னா ஒருத்தரு அனுப்புறதை
அப்படியே படிக்காம கொள்ளாம கூட இன்னொருத்தருக்கு அனுப்பி விடுறது மாமா!"
"ஒருத்தன் கேவலமா திட்டுறதை என்னா
ஏதுன்னே தெரியாமா இன்னொருத்தன் காதுக்குப் போடுறதா?"
"அப்படியும் வச்சிக்கலாம்! ஒரு கால்
வர்ருது மாமா! நான் அப்படிக்கா போய் பேசிட்டு வர்றேன்!" என்று ஒதுங்கினான் ரமணி.
"குற்றச்சாட்டுகள் வேடிக்கையாகத்தான்
போய் விட்டன. அவைகளைக் கேட்டு விட்டு சிரித்து விட்டுப் போய் விட வேண்டும். ஆராய்ச்சி
பண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது" என்று பேஸ்புக்கில் பதிவிட்டவாறே ரமணியைப் பற்றி
மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள் குசலா.
*****
No comments:
Post a Comment