புதிய தலைமுறைக் கதைகள்
அனந்தனைப் போட்டு படாத பாடு படுத்தினால்
அவன் என்ன செய்வான்? அவனக்கும் சில விருப்பு வெறுப்புகள் இருக்கும் அல்லவா. அதைப் புரிந்து
கொள்ளாமல் தம்முடைய விருப்பு, வெறுப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதை
மட்டும் அவனிடம் திணிப்பவர்கள் பற்றி என்ன சொல்ல?
அனந்தனைச் சுற்றியிருப்பவர்கள் அப்போதிலிருந்து
அப்படித்தான் செய்கிறார்கள். அவனக்கு விருப்பம் இல்லையென்றாலும் சில விசயங்களில் அதை
ஏற்றுக் கொண்டு செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. அதனால் அவனது மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டுப்
போவது அவன் கூட அறியாதது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்கள் ருத்ர தாண்டவம்
ஆடி விடுவார்கள்.
அன்று அப்படித்தான் அறையெங்கும் சுத்தம்
செய்யப்படாமல் கிடந்தது. அதைத் சுத்தம் செய்யலாம் என்று கையிலெடுத்த அனந்தனுக்கு நீண்ட
நேரம் ஆகி விட்டது. கிட்டதட்ட அலுவலகம் கிளம்பும் நேரமும் வந்து விட்டது.
அது ஒரு காலைக்கும் மதியத்துக்கு இடைபட்ட
நேரம்.
அவனைச் சுற்றியிருப்பவர்கள் ஆடி அசைந்து
கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆளாளுக்கு ஒரு மனம். ஒவ்வொருவருக்கும் அடுத்தவர்களைப்
போட்டு டார்ச்சர் செய்யும் மனம்.
நேரம் ஆகி விட்டது. இன்று கூடவா சற்று
விரைவாகச் செயல்படக் கூடாது? அவனுக்கு மட்டும் கடிகாரம் வேகமாகச் சுழல்வது போல பட்டது.
உலகே நிலைகுழைந்து போனால் என்ன? அவரவர்களுக்கு அவரவர் மனநிலைதானே முக்கியம்.
அவர்களை ஒரு சிறு விசயத்தில் கூட பாதித்து
விடக் கூடாது என்பது அனந்தனுக்குத் தெரியும். அப்படிப் பாதித்தால் உடனே பொங்கி எழுந்து
அதை பிரச்சனை ஆக்கி விடுவார்கள் என்பது அனந்தன் அறியாததா? கடைசியில் யோசித்துப் பார்த்தால்
அவர்களைப் பாதித்த பிரச்சனை உப்பு சப்பில்லாத பிரச்சனையாக இருக்கும். அது அவர்களுக்கு
முக்கியம் கிடையாது. அவர்களைப் பொருத்த வரையில் அவர்களைப் பாதித்து விடக் கூடாது.
அவ்வளவுதான்.
அவன் அறையைச் சுத்தப்படுத்தி முடிக்கும்
வரை அவர்கள் குளித்து விட்டு ஆடை உடுத்திக் கொண்டிருந்தார்கள். அவனக்கு எரிச்சலாக
வந்தது.
சாப்பாட்டையும் மிக மெதுவாக சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்கள். இப்படியா மசமசவென்று இருப்பார்கள்? டென்ஷன் எகிறியது.
அதனால்தான் அவன் சாப்பாட்டுத் தட்டை வாங்கிய
போது வித்தியாசமாக நடந்து கொண்டான். தட்டைத் தலைகீழாகப் பிடித்து சாப்பாடு தருமாறு
கேட்டான். சாப்பாடு போடுபவருக்கு அது விநோதமாகப் பட்டது. என்ன நினைத்தாரோ? அவன்
கேட்டபடியே சாப்பாட்டை அள்ளிப் போட்டார். சாப்பாட்டுப் பருக்கைகள் சிதறி விழுந்தன.
ஊற்றிய குழம்பு தாறுமாறாக ஓடியது.
சுற்றியுள்ளவர்கள் குறுக்கிட்டு தன்னை
செய்து விடக் கூடாது என்பதற்காக அனந்தன் எம்பி எம்பிக் குதித்தான். கிட்டதட்ட அவன்
நடந்து கொண்டது ஒரு பைத்தியம் பிடித்தவன் நடந்து கொள்வது போன்றுதான் இருந்தது. சுற்றியிருந்த
எல்லாருக்கும் அப்படித்தான் தோன்றியது.
தற்போது நிச்சயம் தனக்கு பைத்தியம் பிடித்து
விடும் என்று அனந்தனுக்கும் தோன்றியது. அவன் சிரித்தான். இடைவிடாமல் சிரித்தான். சிறிது
நிறுத்தினான். மெல்லச் சிரித்தான். கொஞ்சம் அமைதி. அப்புறம் விநோதமாக பலவிதங்களில்
சிரித்தான். திடீரென ஒரு நாயைப் போல ஊளையிட்டான்.
அந்த அளவுக்கு அவன் மனம் ரண வேதனையாக இருந்தது.
"இப்போது இதுதானே பேஷன்" அவன் சம்மந்தம் இல்லாமல் சத்தம் போட்டான்.
பைத்தியம் பிடித்து மனநோயாளியாக அலைவதும்,
அதற்காக மருந்து எடுத்துக் கொள்வதும் அவனுக்குப் பிடித்தமானவைகளாகத் தோன்றின.
அவர்கள் அதை ரசித்தார்கள் என்பது போலத்தான்
தோன்றியது.
யார் அவர்கள்?
நீங்களா? நானா? நாம் எல்லாருமோ? அந்தக்
கேள்விதான் அனந்தனை இன்றும் உறுத்திக் கொண்டு இருக்கிறது.
*****
No comments:
Post a Comment