20 Feb 2019

தொட்டில் பழக்கம்



செய்யு - 2
            விகடுவுக்கு மெத்தையில் படுக்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. ஒரு நாள் அவன் பிடித்த அடத்தில் அவன் அப்பா சுப்பு பள்ளிக்கூடத்துக்கு லீவ் போட்டு விட்டு மெத்தை வாங்கி வந்தார்.
            அப்பா சைக்கிளிலேயே மன்னார்குடி போய் காதியில் வாங்கி வந்த மெத்தை அது. திட்டைக்கும் மன்னார்குடிக்கும் இருபத்து நான்கு கிலோ மீட்டர் இருக்கும். அவ்வளவு தொலைவும் அவர் சைக்கிளிலேயே போனார். கேரியரில் வைத்து கட்டிக் கொண்டு திரும்ப இருபத்து நான்கு கிலோ மீட்டர் மிதித்துக் கொண்டு வந்தார்.
            அது அழகான மெத்தை. அழகு என்றால் அப்படி ஓர் அழகு. அதை எப்படிச் சொல்வது? வெள்ளை நிறம். அது முழுவதும் நீல நிறப் பூக்கள். அது என்ன பூக்கள் என்று சொல்ல முடியாத ஒரு விதமான டிசைன் பூக்கள். அந்த வெள்ளை நிறமும், நீல டிசைன் பூக்களும் விகடுவுக்கு ரொம்பவே பிடித்து விட்டது.
            விகடுவுக்குப் பிடித்து என்ன? அந்த மெத்தை அழுக்காகி விடும் என்று அதன் மேல் போட்டுக் கொள்ள ஒரு போர்வையை வாங்கி வந்திருந்தார் அப்பா. அது காபிக்கொட்டை நிறத்தில் இருந்தது. அதிலும் ஆங்காங்கே டிசைன் பூக்கள் மஞ்சள் நிறத்தில். அந்த நிறமும் அந்தப் பூக்களும் கண்ணில் அடிப்பது போலிருந்தது. அழுக்காகமால் இருக்க அந்த நிறம்தான் சரியானது என்றார் அப்பா. அந்தப் போர்வை விகடுவுக்குப் பிடிக்கவில்லை. வீட்டில் யாரும் பார்க்கவில்லை என்றால் அந்தப் போர்வையைப் போர்த்திக் கொண்டு அதன் கீழே வெள்ளை நிறத்தோடு நீல நிற டிசைன் பூக்களோடு இருந்த மெத்தையில்தான் படுத்துக் கொள்வான் விகடு.
            வேற்குடியில் லாலு வாத்தியார் வீடு இருந்தது. அவர்தான் அவருக்கு நான்காம் வகுப்பு வாத்தியார். லாலு வாத்தியார் விகடுவின் அம்மா வெங்குவின் தாய்மாமன். விகடுவுக்கு தாத்தா. அம்மா அவரை மாமா என்று கூப்பிடுவதால் விகடுவும் அவரை மாமா என்றுதான் கூப்பிட்டான். நேரில் பார்த்தால் மாமா. அவர் இல்லையென்றால் லாலு மாமா. பிள்ளைகளிடம் பேசும் போது வாத்தியார் மாமா.
            லாலு மாமா வீட்டில்தான் அவனுக்குத் தெரிந்த வரையில் டி.வி. பெட்டி இருந்தது. ஞாயிற்றுக் கிழமை ஆகி விட்டால் அப்பாவை வேற்குடி அழைத்துப் போகுமாறு நச்சரிப்பான். நீங்கள் நினைப்பது போல டி.வி. பார்க்க அன்று. லாலு மாமா வீட்டில் டி.வி. இருந்ததைப் போல மெத்தை இருந்தது. அந்த மெத்தையில் உட்கார்ந்து கொண்டுதான் எல்லாரும் டி.வி. பார்ப்பார்கள். அந்த மெத்தையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் விகடுவுக்கு. ஒருநாள் மெத்தையில் படுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அப்பாவுடன் வீடு திரும்ப முடியாதென அடம் பிடித்தான். வேறு வழியின்றி அப்பா மறுநாள் காலையில் வந்ததுதான் விகடுவை அழைத்துப் போக வேண்டியதாயிற்று.
            இப்போது விகடுவின் வீட்டிலேயே மெத்தை வந்து விட்டது. அதன் பிறகு அவன் வேற்குடி போக விரும்பவில்லை. அப்பா வேற்குடி போகும் போது லாலு மாமா விகடுவை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்.
            "மெத்தை வாங்கினதிலேர்ந்து எங்கேயும் போக மாட்டேங்றான். அதுலேயே உட்காந்துக்குறான். அதுலேயே படுத்துக்குறான். அங்கேயே படிக்குறான். அங்கே வெச்சுதான் சாப்புடுறான். பிள்ளைகளோடு ஓடி ஆடி விளையாடறதும் கொறைஞ்சுப் போச்சு. பள்ளிக்கூடம் விட்டு வந்துதுமே அதுல விழுந்து நாலு பொரளு பொரளுறான். வீட்டுக்கு வந்து சாப்புடுறதும் நின்னுப் போச்சு." என்று அப்பா பதில் சொன்னார்.
            பள்ளிக்கூடத்தில் வைத்து லாலு மாமா கேட்டார், "ஏன்டா வீட்டுப் பக்கமே வர்றதில்லை?"
            "வூட்டுப்பாடம் எழுத வேண்டிருந்துச்சு!" என்றான் விகடு.
            "இனிமே நீ வீட்டுப்பாடமே எழுத வேணாம். ஞாயித்துக் கிழம வந்துடு என்னா?"
            "ம்!" என்றான் விகடு. ஆனால் போகவில்லை.
            சுப்புவின் அப்பா திட்டைப் பள்ளியின் வாத்தியார்களுள் ஒருவர். விகடு வாத்தியார் வீட்டு பிள்ளை. வாத்தியார் வீட்டுப் பிள்ளை மக்கு என்பார்களே. அதற்கு விகடு கட்டியங் கூறுபவனாக இருந்தான். அவன் மிகவும் மந்தமாக இருந்தான். அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளும்.
            திட்டையிலிருந்து வடவாதி செல்லும் சாலையில் திட்டையூரார் சர்க்கரை ஆலை இருந்தது. அந்த ஆலைதான் விகடுவின் சளிக்குக் காரணம் என்று அப்பா நம்பினார். விகடு திட்டைக்கு வருவதற்கு முன் வடவாதியில் ஒரு வாடகை வீட்டில் இருந்தார்கள். அந்த ஆலைப் புகைதான் விகடுவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று திட்டையில் வீட்டை வாங்கிக் கொண்டு வந்தார்கள். இங்கு வந்தும் அவன் சளி குணம் ஆனபாடில்லை.
            ராத்திரி அடுப்பு வேலைகள் முடிந்ததும் நெருப்பு கனகனவென்று இருக்கும் அடுப்பில் கலயத்தை வைப்பார் அப்பா. கலயத்தில் பாதி அளவு தண்ணீர் இருக்கும். அதில் பத்து பதினைந்து ஆடாதொடை இலைகளைப் போடுவார். காலையில் எடுத்துப் பார்த்தால் அதன் சாரம் இறங்கியிருக்கும். அதிருந்து அரை டம்ப்ளர் சாரம் எடுத்து தேன் கலந்து குடிக்கக் கொடுத்தார். விகடு ஆர்வமாக வாங்கிக் குடித்தான். குடித்தான். குடித்துக் கொண்டே இருந்தான் பல நாட்கள். அதிலிருந்து அவள் சளி போய் விட்டது என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. எதற்கும் மட்டுபடாதது அவன் சளி.
            விகடு எந்நேரமும் மூக்கை உறிஞ்சுக் கொண்டுதான் இருப்பான். சளியை வெளியே விட மாட்டான். சளியைக் காறித் துப்பவும் மாட்டான். சதா நேரமும் மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்த விகடுவுக்கு மூக்குறிஞ்சி என்ற பெயரும் இருந்தது. சின்னு விகடு இல்லாத நேரத்தில் "மூக்குறிஞ்சி எங்கடா இப்போல்லாம் விளையாட வர்றதில்லை?" என்பான். நேரில் விகடு என்பான். ஒருமுறை மூக்குறிஞ்சி என்று சொன்ன மன்னுவை விகடு கும்மாங்குத்து குத்தியதைச் சின்னு பார்த்திருந்தான்.
            விகடு மெத்தை வாங்கிய சமாச்சாரத்தை கூட்டாளிகளிடம் மறைத்து வந்தான். அது தெரிந்தால் அவர்களும் மெத்தையில் வந்து படுக்கக் கேட்பார்களோ என்ற அச்சம் விகடுவுக்கு இருந்தது.
            விகடு மெத்தையில் யாரையும் படுக்க அனுமதித்ததில்லை. அவன் பண்ணுகிற அலும்பில் யாரும் அதில் படுக்கவும் விரும்பியதில்லை. ஒருமுறை விகடுவின் பெரியப்பா ராமு வீட்டுக்கு வந்த போது, "ரொம்ப முதுகுவலியா இருக்குடா தம்பி. மெத்தையில படுத்துக்குறேன். நீ கொஞ்சம் கீழ இறங்கிப் படுடா தம்பி!" என்றதற்கு, "அதெல்லாம் முடியாது. நீ ராத்திரி தங்க வேணாம். வூட்டுக்குக் கிளம்பி போ பெரியப்பா!" என்றவன் விகடு. பெரியப்பா இப்போதும் அதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.
            அந்த மெத்தையில் விகடு தன் தங்கை செய்யுவை மட்டும் படுக்க அனுமதித்து இருந்தான். அதற்குப் பதிலாக செய்யுவின் தொட்டிலில் விகடு படுத்துக் கொண்டான்.         "டேய்! பாப்பாவுக்கு உடம்பு வலிக்கும்டா! தொட்டியில படுக்காத!" அம்மா திட்டினாள்.
            "வலிச்சா வலிக்கட்டும் போ! அதுவும்தான் என்னோட மெத்தையில படுக்குது. எனக்கு என்னா உடம்பு வலிக்குதா?" என்றான் விகடு.
            இந்த ஏற்பாடு எல்லாம் சண்டை வராத நாட்களில்தான். செய்யுவோடு சண்டை வந்த நாட்களில் அடித்துத் துரத்தினான். ஒரு கட்டத்தில் செய்யுவும் இவன் சுபாவம் அறிந்து மெத்தைப் பக்கம் பார்ப்பதைக் கூட நிறுத்தி விட்டாள்.
            செய்யு தொட்டிலில் படுப்பதை நிறுத்திய பிறகும் தொட்டிலை அவிழ்க்க விகடு விடவில்லை. பகல் நேரங்களில் அவன் தொட்டிலில் ஆடுவான். படுத்துக் கிடப்பான். அதில் படுத்துக் கொண்டுதான் பாடங்களைப் படிப்பான்.
            நூல்கயிற்றில் கட்டப்பட்ட தொட்டில். வெள்ளைநிறக் கயிறு. அதில் போர்வையைத் தொட்டிலாகக் கட்டியிருப்பார்கள். போர்வையைத் துவைத்துப் போடும் நாட்களில் கயிறு மட்டும் தொங்கிக் கொண்டிருக்கும். விகடுவுக்குப் பொறுக்காது. இன்னொரு போர்வையை எடுத்து விகடுவே கட்டிக் கொண்டு அதில் ஆடிக் கொண்டிருப்பான். அம்மா வந்து திட்டுவாள், "போர்வைக் காயிறதுக்குள்ள அப்படி என்னா அவசரம்?"
            "எவ்வளவு நேரந்தான் காய வைப்ப? நேரம் ஆவுதுல்ல! அவுத்த நீ கொண்டாந்து கட்டணுமா இல்லியா? தொவைக்குறதுக்கு அவுக்கத் தெரியுது? சீக்கிரமா காய வெச்சுக் கொண்டாந்து கட்டத் தெரியுதா?" பதிலுக்கு விகடுவும் திட்டுவான்.
            சொந்தக்காரர்கள் வரும் போது, "இன்னும் செய்யு தொட்டில்லதான் படுக்குதா?" என்றார்கள்.
            "செய்யு சின்ன பாப்பாதானே. தொட்டில்லதான் படுத்துக் கிடக்கும்!" என்றான் விகடு.
            விகடு நான்காம் வகுப்பு படிக்கும் போது பிறந்தவள் செய்யு.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...