தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்
- எளிய அறிமுகம்
டால்ஸ்டாய் போலவே ரஷ்ய இலக்கியத்தில்
புகழ் பெற்றவர் தஸ்தயேவ்ஸ்கி. இருவரும் சம காலத்தில் வாழ்ந்து செம புகழ் பெற்றவர்கள்.
தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துகளை வாசிப்பது
ஓர் அலாதியான அனுபவம்.
மனித மனதின் காதல், அன்பு, வெறி, காமம்,
பழிவாங்கல், அபத்தங்களை அவரைப் போல அலசிய ஒருவரை நீங்கள் பார்க்க முடியாது. அதற்காகவே
அவர் என்றும் வாசிக்கப்படுபவராக இருக்கிறார்.
கரமசோவ் சகோதரர்கள் என்ற நாவல் கரமசோவ்
என்பவரின் குடும்பத்தைப் பற்றிய கதை. கரமசோவிற்கு மூன்று பிள்ளைகள் தீமித்ரி, இவான்
மற்றும் அலெக்செய் என்று.
யார் இந்த கரமசோவ் என்றால் அவர் ரஷ்ய
நாட்டில் ஒரு மிராசு. மனித இனத்தின் அத்தனை கேவலமான குணங்களையும் பெற்றவர். அவைகளை
ஒத்துக் கொள்ளக் கூடிய பாசாங்கற்றவரும் கூட.
கரமசோவிற்கு இரண்டு மனைவிகள். அந்த இரண்டு
மனைவிகள் மூலம் மூன்று பிள்ளைகள். அந்த மூன்று பிள்ளைகளையும் அவர் வளர்க்கவில்லை. அவரது
பணியாள் கிரிகோரிதான் வளர்க்கிறார். அவருக்கு ஒரு பிச்சைக்கார பெண்ணின் மூலம் நான்காவதாக
ஒரு பிள்ளை இருப்பதாகவும் ஊர் பேசும். அந்தப் பிள்ளையும் பணியாளாக அவரிடமே இருப்பான்.
அவன் ஸ்மெர்டியாகோவ். அவனை வளர்ப்பதும் அவரின் பணியாள் கிரிகோரிதான்.
முதல் மகன் தீமித்ரி படைப்பிரிவில் சேருகிறான்.
இரண்டாவது மகன் இவான் சிந்தனையாளனாகிறான். மூன்றாவது பிள்ளை அலெக்செய் துறவி ஆகிறான்.
கதையின் முடிச்சு எங்கு விழுகிறது என்றால்
அவரது மூத்தப்பிள்ளை தீமித்ரி விரும்பும் குருசென்காவை கரமசோவும் விரும்புகிறார்.
அட படுபாவித் தகப்பா என்று நீங்கள் சொல்வீர்கள்!
அந்தப் படுபாவித் தகப்பன் கொல்லப்படுகிறார்.
கொலைப்பழி தீமித்ரி மேல் விழுகிறது.
பிறகென்ன விசாரணை நடக்கிறது.
தீமித்ரியைக் காப்பதற்காக அவனது காதலி
காத்ரீனா, சகோதரன் இவான் ஆகியோர் பிரபல வழக்கறிஞரை ஏற்பாடு செய்கிறார்கள். அட காத்ரீனா
தீமித்ரியின் காதலி என்றால் குருசென்கா யார் என்று கேட்டால் அவளும் அவனது காதலிதான்.
அவனுக்கு இரண்டு காதலிகளா என்றால், காத்ரீனாவை இவானும் காதலிப்பான்.
அடங் கொன்னியா! அது அப்படியே இருந்துட்டுப்
போகட்டும் என்று நீங்கள் நினைத்தால் விசாரணையில் குறைந்த தண்டனையோடு தீமித்ரி தப்பிக்க
வாய்ப்பு இருந்தும் அவனது காதலியாக இருந்த காத்ரீனா கொடுக்கும் ஒரு கடிதத்தால் அவனது
குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனைக்கு ஆளாவான் பாருங்கள். அது செம டிவிஸ்டாக இருக்கும்.
சரி! தீமித்ரி கொலைப்பழியைத்தான் சுமக்கிறார்
என்றால் கரமசோவை யார்தான் கொன்றார்கள்? என்ற கேள்வி உங்கள் மனதை உறுத்துகிறதா? கரமசோவின்
நான்காவது பிள்ளையாக சந்தேகிக்கப்படும் அவரது பணியாளனாக இருக்கும் ஸ்மெர்டியோகோவ்தான்
அந்த(!) வேலையைச் செய்திருப்பான். அவன் இந்தக் கொலைக்கு மூல காரணம் இவான்தான் என்பான்.
அது எப்படி என்றால் இவானும் ஸ்மெர்டியோகோவும் அப்படி உரையாடிக் கொள்ளும் அந்த இடத்தை
நீங்கள் நாவலில்தான் படிக்க வேண்டும்.
ச்சேய் என்ன தகப்பன், என்ன பிள்ளைகள் என்று
நீங்கள் நினைத்தால் மூன்றாவது பிள்ளை அலெக்செய்யைப் பற்றிக் கேள்விப்படும் போது அசந்து
போவீர்கள். அவன் அப்படி ஓர் ஒழுக்கம் நிறைந்தவன்.
இந்த நாவலில் மனித மனங்களை அப்படியே புட்டு
புட்டு வைத்திருப்பார் தஸ்தயேவ்ஸ்கி. அந்த மனவிசாரணைதான் கரமசோவ் சகோதரர்கள். பெரிய
பெரிய உளவியளாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், அறிஞர்கள் எல்லாம் இந்த நாவலை ரொம்பவே
சிலாகிக்கிறார்கள் நண்பர்களே! நீங்களும் படித்து சிலாகிக்க வேண்டாமா? நான் வாசித்தது
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள கவிஞர் புவியரசு அவர்களின் மொழிபெயர்ப்பை.
இரண்டு தொகுதிகளாக ஆயிரத்து ஐந்நூறு பக்கள். வாசிக்க ஆரம்பித்தால் நாவலை முடிக்காமல்
கீழே வைப்பது கஷ்டம்தான்.
*****
No comments:
Post a Comment