தஸ்தவெய்ஸ்கி என்ற நாவல்
தஸ்தயேவ்ஸ்கி ஒரு மகத்தான எழுத்தாளர்.
கரமசோவ் சகோதரர்களை வாசித்த முடித்த
யாரும் அதனை மறுக்க முடியாது.
ஒரு தறுதலை தகப்பனுக்கு மூன்று பிள்ளைகள்.
கரமசோவ் என்ற அந்த தகப்பனை அப்படித்தான் சொல்ல முடியும். காரியக்கார தறுதலை தகப்பன்
அவர்.
முதல் பிள்ளை அப்பனைப் போல் ஒரு தறுதலை.
தீமித்ரி என்ற அந்தப் பிள்ளை அப்பன் அளவுக்கு இல்லை என்றாலும் அவன் ஒரு வகை தறுதலை.
இரண்டாம் பிள்ளை ஒரு சிந்தனையாளன். இவான் என்ற
அந்தப் பிள்ளை ஊசலாட்டமான சிந்தனைப் போக்கு உடையவன்.
மூன்றாம் பிள்ளை அப்பனைப் போல பிள்ளை
என்று சொல்ல முடியாதவன். கரமசோவ் என்ற குழந்தையை நேசிக்காத தகப்பனுக்குப் பிறந்த
குழந்தைகளை நேசிக்கும் அலெக்செய் என்ற அந்தப் பிள்ளை அற்புதமானவன்.
கரமசோவ் என்ற தகப்பனின் இந்த மூன்றுப்
பிள்ளைகளைச் சுற்றிச் சுழலும் கதைதான் கரமசோவ் சகோதரர்கள். சுற்றிச் சுழல்கிறது என்றுதான்
சொல்ல வேண்டும். ஒரு புயலைப் போல கதைச் சுழல்கிறது. ஒவ்வொருவரின் மனமும் சுழலும்
வேகத்தைப் பார்த்தால் நாவலைப் படித்து முடிக்கும் போது ஒரு புயலடித்து ஓய்ந்த அமைதியைத்
தரிசிக்க முடியும்.
'கரமசோவ் சகோதரர்கள்' நாவலில் உலவும்
மனிதர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.
தனது மூத்தப் பிள்ளை தீமித்ரி விரும்பும்
பெண்ணையே அப்பன் கரமசோவும் விரும்புகிறார். அப்பனும், மகனும் ஒரே ரத்தம் என்று ஒன்றுபடும்
இடம் இது ஒன்றுதான். மற்ற அனைத்திலும் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் நிறைய. நிறைய
என்றால் மலையளவு. அது ஒரு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
கரமசோவிடம் ஓர் அற்புதமான குணம் இருக்கிறது.
அதை அசிங்கமான குணம் என்று சொன்னாலும் அதுதான் அவரது குணம். பாவி என்பதை ஒத்துக் கொள்வதில்
அவர் பின்வாங்காதவர். அப்படி பாவம் செய்வதில் மகிழ்பவர் அவர். என்ன ஒரு பாத்திரம் அவர்.
மனிதர்களில் நிறையபேர் அப்படித்தான். அப்படி இருப்பதை எந்த மனிதரும் ஒத்துக் கொள்ள
மாட்டார்கள். கரமசோவ் அந்த விசயத்தில் வித்தியாசமானவர். அவர் அதையெல்லாம் ஒத்துக்
கொள்பவர்.
அப்பனுக்கும் மகனுக்கும் ஒரு பெண் மேல்
காதல் என்றால் சகோதரர்கள் தீமித்ரிக்கும் இவானுக்கும் ஒரு பெண் மேல் காதல். இந்த விசித்திரம்தான்
கரமசோவ் சகோதரர்கள்.
அப்பன் விரும்பும் பெண்ணை மகன் விரும்புகிறான்.
மகன் விரும்பும் பெண்ணை அப்பன் விரும்புகிறான். அந்த மகன் தீமித்ரி. அவனே தனது சகோதரன்
விரும்பும் பெண்ணையும் விரும்புகிறான்.
இப்படிப் பெண்களை விரும்பும் குடும்பம்
கரமசோவ் உடையது என்று ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. தஸ்தயேவ்ஸ்கி அலெக்செய்யை
உருவாக்கி அவனை குழந்தைகளை விரும்பும் அன்பாளாராகக் காட்டி ஒரு நெருக்கடியை உருவாக்குவார்.
மூவாயிரம் ரூபிள் பணம், பெண்களின் மீதான
காதல் / காமம் இரண்டில் எது கொலைப்பழியில் போய் முடிகிறது என்ற ஒரு விசாரணையை நிகழ்த்துவார்
தஸ்தயேவ்ஸ்கி. ஒரு முடிவற்ற விசாரணை அது. நாவல் முடிந்த பிறகும் மனதில் நீண்டு கொண்டிருக்கும்
விசாரணை தஸ்தாவெய்ஸ்கியின் வெற்றி.
கரமசோவுக்கு உண்மையில் மூன்று பிள்ளைகள்தானா?
நான்காவது பிள்ளையாக பணியாளானாக வரும் ஸ்மெர்டியோகோவ் இருப்பானா? என்ற சந்தேகத்தை
வலுவாக எழுப்புவார் தஸ்தயேவ்ஸ்கி. ஆனால் அவர் விடை சொல்ல மாட்டார். கரமசோவ் என்ற
காமுகனுக்கு அவன் நான்காவது பிள்ளையாகவும் இருக்கலாம். ஒரு காமுகனுக்கு எத்தனைப் பிள்ளைகள்
வேண்டுமானாலும் இருக்கலாம். அதை கரமசோவோ ஒத்துக் கொள்ளக் கூடியவர்கள்தான். இதற்காக
நீங்கள் கரமசோவை அவர் என்ன ஒரு பிறவி என்று நீங்கள் திட்டலாம். அதையும் ஏற்றுக் கொள்ளக்
கூடியவர்தான் கரமசோவ். நீங்கள் அப்படித் திட்டியதையும் ஒரு வதந்தியாக்கிப் பரப்பி
அதில் இன்பம் காணக் கூடியவர் கரமசோவ் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. அப்படி
ஒருவர் இந்தப் பூமியில் வாழத்தான் வேண்டுமா என்று நீங்கள் கேட்டால், அந்த வேலையைத்தான்
ஸ்மெர்டியோகோவ் செய்கிறான். அவன் இவானிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கரமசோவைக்
கொன்றதை உறுதிப்படுத்துகிறான். ஒருவேளை அவன் நான்காவது பிள்ளையாக இருந்தால் அவன் தந்தையைக்
கொல்கிறான். முதல் பிள்ளை தீமித்ரி அப்பனைக் கொன்ற கொலைப்பழியைச் சுமக்கிறான். அதற்கான
தண்டனையைப் பெறுகிறான்.
ஓர் ஊதாரி மற்றும் பெண் பித்தன்தான் தீமித்ரி.
தான் தன்னுடைய தந்தையைக் கொல்லவில்லை என்பதை உறுதியாக மறுக்கிறான். சூழ்நிலைகள் அவனைக்
கொலைகாரனாக வலுப்படுத்துகின்றன. அது அவனுடைய சூழ்நிலைகளா? வெறும் சூழ்நிலைகளா? அவன்
தனது மனநிலையால் உருவாக்கிக் கொண்ட சூழ்நிலைகளா? சூழ்நிலைகள் உருவாக்கிய மனநிலைகளா?
என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து விட்டால் நீங்கள் தஸ்தாவெய்ஸ்கியைப்படித்து விட்டீர்கள்
என்றுதான் சொல்ல வேண்டும். அல்லாது போனால் நீங்கள் மீண்டும் சில முறைகள் இந்த நாவலை
வாசிக்க வேண்டும்.
நீங்கள் இந்த நாவலின் நாயகன் தீமித்ரியா?
அலெக்ஸெயா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். தீமித்ரிதான் என்று தீர்மானித்தால் நீங்கள்
மீண்டும் மீண்டும் இந்த நாவலைப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அலெக்ஸெய் என்றால்
ஒரு முறை போதும் என்று நினைக்கிறேன். தீமித்ரி மீண்டும் மீண்டும் உள்வாங்கப்பட அவன்
அலெக்ஸெயாக உருமாறுவான் என்று நம்புகிறேன்.
அலெக்ஸெய் அன்பாளன். குழந்தைகளை நேசிக்கும்
பண்பாளன். குழந்தைகளை மட்டும் என்று குறுக்கி விட முடியாதுதான். அவன் அனைவரையும் நேசிக்கும்
அன்பாளன். அந்த அன்புக்காக அவன் அனைவரிடமும் மன்றாடுகிறான். அது அலெக்ஸெய்யின் மன்றாடல்
போலத் தெரிந்தாலும் அது தஸ்தாவெய்ஸ்கியின் மன்றாடல்தான். அவர் இந்த உலகிற்காக அந்த
அன்புக்காகத்தான் மன்றாடுகிறார்.
ஒரு விசயத்தை உறுதியாகச் சொல்ல முடியுமானால்
இந்த நாவலின் அனைத்துப் பாத்திரங்களும் தஸ்தாவெய்ஸ்கிதான். அவர்தான் எல்லாமும். ஒரு
மனிதர்தான் எல்லாமும். ஒரு மனிதருக்குள்தான் அவ்வளவும். நுட்பமான விவரிப்புகள் அனைத்தும்
அதைத்தான் சொல்கின்றன. ஒரு மனிதரே அத்தனையுமாக இருந்தால்தான் இது சாத்தியம். அவர்
அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அந்த அத்தனை மனிதருக்குள்ளும் விரும்பப்படுபவர்
அன்பாளர் மட்டுமே. அந்த அன்புதான் எவ்வளவு அழகானது. அவ்வளவு கொடிய காட்சிகளுக்கு மத்தியில்
அந்த அன்பு மட்டும் எவ்வளவு அழகாகப் பூக்கிறது என்பதை அறிவதற்காகவது நீங்கள் இந்த நாவலை
ஒரு முறை அல்லது பலமுறை உங்கள் விருப்பம் போல் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.
தஸ்தாவெய்ஸ்கி அப்படி ஒரு வாசிப்பு போதையை உருவாக்குபவர்.
தஸ்தயேவ்ஸ்கி தன் மனதிலுள்ள அலெக்ஸெய்க்காகத்தான்
இந்த நாவலை உருவாக்கியிருப்பார். அல்லது அன்பான உலகை விரும்பும் தன் கனவுக்காகவும்
இந்த நாவலை உருவாக்கியிருப்பார். அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. அவர் இலக்கியத்தை நோக்கி
வந்த செய்தியைக் கேள்விபடும் போது அதுவும் ஒரு நாவலைப் போலத்தான் இருக்கிறது. இந்த
கரமசோவ் சகோதரர்கள் நாவலைப் போல. அவரே ஒரு நாவல்தான். அவரும் டால்ஸ்டாயையும் சமகால
எழுத்தாளர்கள். ஆனால் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாத எழுத்தாளர்களாம். தஸ்தவெய்ஸ்கி
ஒரு நாவல்தான். ஒரு விசித்திர நாவல்தான்.
*****
No comments:
Post a Comment