28 Feb 2019

வைத்தியசாலை




செய்யு - 10
            ரெண்டாம் நம்பர் பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டே சென்றது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு படிக்கட்டுப் பக்கம் வைத்து நசுக்கியது போல் அமுங்கியவாறே அது இருந்தது. படிக்கட்டுப் பக்கம் சமயங்களில் டயர் உரசி தீய்ந்த வாடை வந்தது.
            ஒவ்வொரு காலைப் பயணத்தின் போதும் இந்தப் பஸ் முழுசாய் ஊர் போய் சேருமா? என்ற அவநம்பிக்கை ஏறும் ஒவ்வொருக்கும் இருக்கும். அந்தப் பஸ்தான் அன்றிலிருந்து இன்று வரை முழுசாய் ஊர்ப் போய் சேர்ந்து பயணிகளைச் சேர்த்துக் கொண்டு இருக்கிறது.
            மிதமான வேகத்தில் பஸ் சென்றால் திட்டையிலிருந்து ஒரு மணி நேரத்தில் மன்னார்குடி சென்று விடும். இந்த டிரிப் மட்டும் அப்படிச் செல்ல முடியாது. ஒன்றரை மணி நேரம் ஆகும். கூட்டம் மிகுதியால் அவ்வளவு மெதுவாகச் செல்லும்.
            பஸ் லெட்சுமாங்குடியைத் தாண்டியதும் டிரைவர் எந்த ஸ்டாப்பிங்கிலும் நிறுத்தவில்லை. அந்த அளவுக்குத் தாள முடியாத கூட்டத்தில் பஸ் பிதுங்கி வழிந்தது. ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கைநீட்டி பஸ்ஸை நிறுத்தப் பார்த்தார்கள். பஸ் நிறுத்தாமல் போன போது பஸ்ஸின் ஊடே ஓடி வந்து அதன் ஓரங்களில் தட்டினார்கள்.
            ஒருவழியாக பஸ் வைத்தியசாலையை அடைந்த போது மணி ஒன்பதரைக்கு மேல் இருக்கும். பஸ்ஸிருந்து இறங்குவதற்கே படாத பாடு பட வேண்டியதாக இருந்தது.
            இறங்கியதும் "என்னடியம்மா இந்தக் கூட்டத்து வர்றதுக்கு புள்ள அழுதாலும் அழுவட்டும்னு வூட்டுலயே வெச்சுக்கலாம்டி!"  என்று சலித்துக் கொண்டார் அதிராம்பட்டினத்து ஆத்தா.
            பஸ்ஸிருந்து இறங்கியவுடனே ஆஸ்பத்திரி வாசலில் கால் வைத்து விடலாம். அந்த ஆஸ்பத்திரிதான் பஸ் ஸ்டாப்பிங். ரோட்டை ஒட்டி காம்பெளண்ட். காம்பெளண்டுக்கு வெளியே பலூன் விற்பவர்கள், பொம்மை விற்பவர்கள் நின்று கொண்டிருப்பார்கள். காம்பெளண்டைக் கடந்தால் பெரிய வராண்டா. உள்ளே பெரிய ஹால். மறுபடியும் உள்ளே ஒரு ஹால். ஹாலின் இடப்புற மூலையில் இருக்கும் கதவைத் திறந்தால் டாக்டர் ரூம். கதவுக்கு வெளியேயும் உள்ளேயும் நர்ஸ்கள் நின்று கொண்டிருப்பார்கள்.
            செய்யு இன்னும் அழுது கொண்டிருந்தாள்.
            "நீ போய் டோக்கன் போடுடா!" என்று அம்மா சொன்னதும் விகடு அவர்களுக்கு முன் ஓடிப் போய் டோக்கன் போட்டான்.
            "நம்பர் நூத்தி ஏழும்மா!" என்றான்.
            "இப்ப எத்தனாம் நம்பர் போய்ட்டு இருக்கு?"
            "இருபத்து ஒம்போது!"
            அம்மாவிடமிருந்து ஒரு பெருமூச்சு வந்தது.
            ஆஸ்பத்திரி முழுவதும் குழந்தைகளும் அம்மாக்களுமாக நிறைந்திருந்தார்கள். சிலர் குழந்தையை மடியில் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். சிலர் குழந்தையை மார்போடு அணைத்தவாறே நின்று கொண்டிருந்தார்கள். சிலர் குழந்தையை தூக்கிய வண்ணம் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தார்கள். ஆஸ்பத்திரி முழுவதும் குழந்தைகளின் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
            "டாக்டர எப்ப பாத்து எப்படா கிளம்புறது? இந்த பஸ்ஸூ சீக்கிரமா வந்திருந்தாலாவது அம்பது நம்பருக்குள்ள டோக்கன் போட்டுருக்கலாம். வண்டியப் போட்டு இன்னா உருட்டு உருட்ரானுவோ! டாக்டரு பாக்குறதுக்கு ரெண்டு மணிக்கு மேல ஆகப் போகுது பாரு!" அம்மாவுக்கு எரிச்சலாக இருந்தது.
            "என்னடியம்மா பண்றது? வந்தது வந்துட்டோம்! ஆனா இந்த பஸ்ஸூல இவ்வளவு கூட்டம் ஆகாதுடியம்மா! உள்ள வெச்சு நசுக்கியே உசுர எடுத்துடுவானுவோ போலருக்கே!" ஆத்தாவுக்கும் எரிச்சலாக இருந்தது.
            "காலையிலேயும் எதுவும் சரியா சாப்புடல!" கடையில போய் ஏதாச்சும் வாங்கிட்டு வர்றீயா?" என்று அம்மா பர்ஸிலிருந்து பத்து ரூபாய் பணத்தை எடுத்து நீட்டினார்.
            விகடு ஓடினான்.
            கையில் ஒரு தட்டு. அதில் மூன்று டபரா செட்டில் டீ. மூன்று வடையோடு வந்து நின்றான் விகடு.
            "பாக்கி வாங்கியாந்தியாடா?" என்றார் அம்மா.
            "டபரா செட்டைக் கொண்டாந்து கொடுத்துட்டு வாங்கிக்கச் சொன்னாங்கம்மா! பாப்பாவுக்கு டீ குடிக்குமாமா?" என்றான் விகடு.
            அம்மாவுக்குச் சிரிப்பாக வந்தது. "வயித்து வலியாத்தான் இருக்கும். அதாலதான் அழுதுங்றாங்க. இதுல டீய குடுத்தா அவ்ளோதான்!"
            மணி பனிரெண்டைக் கடந்தும் டோக்கன் எழுபது வரைதான் போயிருந்தது.
            சந்திரமோகன் டாக்டரும் வேகமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். மன்னார்குடிக்கு குழந்தைகள் வைத்தியத்தில் அவர் ஒரு பிரபலமான டாக்டர். வேதாரண்யத்திலிருந்தெல்லாம் இங்கு வந்து பார்ப்பவர்கள் இருந்தார்கள். தஞ்சாவூர் எவ்வளவு பெரிய ஊர்? அங்கில்லாத டாக்டர்களா? அங்கிருந்தும் வந்து அவரிடம் வந்துப் பார்த்தார்கள்.
            டாக்டர் திடீரென்று எழுந்து வெளியே வந்தார். விகடுவைப் பார்த்ததும் அவன் கன்னத்தைக் கிள்ளினார். "மறுபடியும் கோல்டா?" என்றார். "எனக்கில்லே பாப்பாவுக்கு!" என்றான் விகடு. "ஓ! உனக்கு தங்கச்சி பாப்பா வந்துடுச்சா!" என்று விகடுவின் கன்னத்தைத் தட்டியபடியே வேகமாகச் சென்றார்.
            காத்திருந்த கூட்டத்திலிருந்து ஒருவர் சத்தம் போட்டார். "கூட்டம் எவ்ளோ இருக்கு. இப்போ எந்திரிச்சு எங்க போறாரு இந்த டாக்டரு?" சுற்றியிருந்த நர்ஸ்கள் ஓடி வந்து அவரைச் சத்தம் போட்டார்கள், "டாக்டரை ஒன் பாத்ரூம் கூட போகக் கூடாதுங்றீங்களா?"  சத்தம் போட்டவருக்கு என்னவோ போலாகி விட்டது. தலையைக் குனிந்து கொண்டார்.
            கூட்டத்திலிருந்தவர்கள் அவ்வபோது சலசலத்துக் கொண்டிருந்தார்கள்.
            "இன்னிக்க வர வேணாம். நாளிக்கு வரலாமுன்னு சொன்னேன்ல!" என்று அதில் ஒருவர் அவரது மனைவியைத் திட்டுவது தெளிவாகக் கேட்டது விகடுவுக்கு.
            "அம்மா! நாமளும் நாளைக்கி வந்திருக்கலாம்ல!" என்றான் விகடு.
            "ஏன்டா நாமலே பத்து நாளா யோசிச்சுதான்டா இன்னிக்கு வந்திருக்கிறோம்!" என்றார் அம்மா.
            "டாக்டர் பாத்ததுக்கு அப்புறம் பாப்பா அழுவாதுல்லம்மா!"
            "ம்ஹூம்!"
            "டோக்கன் நூத்தியேழு!" என்று குரல் வந்ததும் விகடுவுக்கு சந்தோசமாக இருந்தது.
            "ம்மா! நம்ம நம்பரும்மா!" என்றபடி எல்லாரையும் டாக்டர் அறைக்குள் அழைத்துச் சென்றான்.
            "ம்! என்ன பண்ணுது?" என்றார் டாக்டர்.
            "எப்ப பாத்தாலும் அழுதுகிட்டே இருக்குது டாக்டர்!" என்றான் விகடு.
            "நீ சொல்லக் கூடாது! நீங்க சொல்லுங்கம்மா!" என்றார் அம்மாவைப் பார்த்து.
            "அவன் சொல்றதுதான் டாக்டர்! ராவைக்கும் அழுது. பகலுக்கும் அழுது. நாங்களும் கைமருந்தா எவ்ளோ கொடுத்துப் பார்த்துட்டோம் டாக்டர்!"
            டாக்டர் பாப்பாவை உற்றுப் பார்த்தார். வயிற்றில் கைவைத்து லேசாக அழுத்திப் பார்த்தார். செய்யு வீறிட்டு அழுதாள்.
            "வெளிக்கில்லாம் நல்லா போகுதா?"
            "ம்! போகுது டாக்டர்!"
            "உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு? பீவர், கோல்ட், வயித்துவலி இந்த மாதிரி ஏதாவது?"
            "அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க டாக்டர்!"
            "வேற... வாந்தி, வயித்து மந்தம், பசி இல்லாம இருக்குறது இந்த மாதிரி..."
            "அப்படில்லாம் ஏதுமில்லீங்க டாக்டர்!"
            "உங்களுக்கு ஒரு ஊசிப் போடச் சொல்றேன். போட்டுக்குங்க. பாப்பாவுக்கு மருந்து எழுதித் தர்றேன். சொட்டு மருந்து மாதிரி இருக்கும். அதுலேயே பில்லர் இருக்கும். பால் கொடுத்து முடிச்சதும் கொடுக்கணும். ரொம்ப அழுதாலும் கொடுக்கணும் சரியா?."
            "எனக்கு ஒடம்பு நல்லாத்தான் இருக்கு டாக்டர். பாப்பாவுக்குத்தான் ஒடம்பு எதோ முடியல." அம்மாவின் முகம் பயத்தால் வெளிறிப் போயிருந்தது.
            "பாப்பாவுக்காகத்தான் உங்களுக்குப் போடச் சொல்றேன். பாப்பா உங்ககிட்டேயிருந்துதானே பால் குடிக்குது!"
            "ஊசிதான் போடணுமா? மாத்திரையா கொடுங்களேன். சாப்பிட்டுக்கிறேன்!"
            "ம்ஹூம்! ஊசி கண்டிப்பா போட்டுத்தான் ஆகணும்!" டாக்டர் நர்ஸைப் பார்த்தார்.
            அதற்கு மேல் மறுக்க வாய்ப்பில்லை என்பது அம்மாவுக்குப் புரிந்து போனது.
            நர்ஸ் அம்மாவை அழைத்துக் கொண்டு பச்சை ஸ்கிரீன் கட்டியிருந்த ஓரத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அம்மா தயங்கித் தயங்கிப் போய்க் கொண்டிருந்தார். விகடுவுக்குச் சிரிப்பாக இருந்தது. அவன் கையிலும், இடுப்பிலும் ஊசி புகாத இடங்களே இல்லை. அவ்வளவு ஊசிகள் போடப்பட்டு இருக்கின்றன. ஆத்தாவும் சிரித்தது, "அநேமா இதான்டா உங்கம்மாவுக்குப் போடுற மொத ஊசி!"
            "நான்லாம் எவ்ளோ ஊசி போட்ருக்கேன். அம்மா எதுக்கு பயப்படுறாங்க?" என்று விகடு சொல்லிக் கொண்டு இருக்கும் போது,             "அய்யோ! ம்ம்மா!" என்ற சத்தத்தோடு ஸ்கிரீனைத் தள்ளிக் கொண்டு கீழே விழுந்தார் நர்ஸ்.
            செய்யுவின் அழுகை நின்றிருந்தது. டாக்டர் எழுந்து விட்டார்.
            பக்கத்தில் இருந்த இரண்டு நர்ஸ்கள் ஓடி வந்து அவரைத் தூக்கினார்கள்.
            "நல்லா இடுப்புல உதைச்சிட்டாங்கடி!" என்றார் கீழே விழுந்த அந்த நர்ஸ்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...