பூர்ணிமை - சிறுகதைத் தொகுப்பு - ஓர்
எளிய அறிமுகம்
விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது
க. வீரபாண்டியன் அவர்களின் 'பூர்ணிமை' எனும் சிறுகதைத் தொகுப்பு.
இத்தொகுப்பை வாசித்து முடித்ததும் யார்
இந்த வீரபாண்டியன் என்று தேடிய போதுதான் தெரிந்தது இவர் ஓர் எழுத்தாளர் மட்டும் அல்லர்,
இந்திய ஆட்சிப் பணி அதிகாரி என்பதும்.
தான் ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி என்பதை
அவர் நூலின் எந்த இடத்திலும் வெளிப்படுத்தவில்லை. அத்தன்மையே அவரைக் குறித்த எண்ணத்தில்
ஆச்சரியத்தை விளைவித்தது. தான் ஒரு ஆட்சிப்பணி அதிகாரி என்பதை விட ஓர் எழுத்தாளர் என்று
அறியப்படுவதில்தான் ஆர்வம் உள்ளவர் போலும் அவர்.
க.வீரபாண்டியன் பழசை மறக்காதவர், விளிம்பு
நிலை மக்களின் வாழ்வியல் வரலாற்றையும் பதிவு செய்ய மறக்காதவர் என்பதை இச்சிறுகதைத்
தொகுப்பு பறைசாற்றுகிறது.
பூர்ணிமை எனும் இத்தொகுப்பு முழுவதும்
விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் எழுத்தோவியங்களாக பதிவாகியுள்ளன.
கந்துவட்டிக் கொடுமையால் பொருளாதார நிச்சயமற்ற
வாழ்வில் சிக்கித் தவிக்கும் தூய்மைப் பணியாளர்கள் பற்றி 'தீராக்கடன்' எனும் சிறுகதை
பேசுகிறது.
தனது செருப்புக் கடை எப்போது பறிபோகும்
என்ற தவிப்பில் போலீஸ்காரர்களைக் கண்டு பயந்தும் நயந்தும் வாழும் செருப்புத் தொழிலாளி
பற்றி 'முச்சந்தியில்...' எனும் சிறுகதை பேசுகிறது.
உழைத்துச் சேர்த்த காசு போலீஸாரின் சந்தேகக்
கேஸில் பிடிபடும் போது செல்லாக் காசாகிப் போவதோடு தவறேதும் செய்யாமல் சிறைபுகும்
விளிம்புநிலை மனிதனின் வேதனையைச் 'செல்லாக்காசு' எனும் சிறுகதை பேசுகிறது.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... என்ற
இழப்புத் துயர் பாரி மகளிருக்கு மட்டுமா? ஆணவக்கொலையில் காதலனைப் பறிகொடுத்த காதலிக்கும்தான்
என்பதை அழகியலோடு காட்சிப்படுத்துகிறது 'பூர்ணிமை' எனும் சிறுகதை.
பாலியல் தொழிலாளியின் உள்ளக் குமுறல்களையும்,
அக்கறையாக நடந்து கொள்வது போல போலி மனிதாபிமானம் பேசும் மனிதர்களின் உள்ளத்தையும்
வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது 'இரண்டாம் காட்சி' எனும் சிறுகதை.
'காந்தியின் சிரிப்பு' எனும் சிறுகதை சாலையோரம்
நடக்கும் சூதாட்டம் குறித்தும் அதில் உள்ளதை இழக்கும் ஒரு சிறுவியாபாரியின் நிலை குறித்தும்
சொல்கிறது.
இறந்த பின்னும் விளிம்பு நிலை மக்கள் போஸ்ட்மார்டம்
செய்யப்படும் நிலையிலும் அருவருப்போடு அணுகப்படும் பரிதாப நிலையைப் பற்றிப் பேசுகிறது
'சவக்குழி' எனும் சிறுகதை. இத்தொகுப்பின் ஆக சிறந்த கதையாக இச்சிறுகதையைச் சுட்டலாம்.
நவீனத் தீண்டாமை இன்னும் ஏதோ ஒரு வடிவில்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறது 'லக்ஸ் சோப்பின் நறுமணம்'
எனும் சிறுகதை.
மாட்டுக்கறி வெள்ளாட்டுக் கறியாக ஆக்கப்படும்
சூழ்நிலைகளை நுட்பமான விவரிப்போடு சொல்கிறது 'வெள்ளாட்டுக்கறி' எனும் சிறுகதை.
கதையின் பாத்திரம் ஒன்று தன் தரப்பு நியாயங்களை
எடுத்துச் சொல்லி ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து எழுத்தாளரை விசாரித்தால் எப்படி இருக்கும்
என்பதை திரைக்காட்சி போல காட்டுகிறது 'கதாபாத்திரம்' எனும் சிறுகதை. விருதுக்கும்,
காசுக்கும் எழுதும் எழுத்தாளர்களின் முகத்திரையை கிழிக்கும் சிறுகதை இது.
ஊர் பிரசிடெண்டிடம் பணம் கொடுத்து அதை
மீட்க முடியாமல் போகும் கன்னியம்மாளின் கையறு நிலையைப் பற்றிப் பேசுகிறது 'கன்னியம்மா'
எனும் சிறுகதை.
குடிகார கணவனிடமிருந்து தான் உழைத்துச்
சேமித்தப் பணத்தை மறைத்து வைத்துப் போராடும் பொன்னுத்தங்கத்தின் கல்வைத்த தோட்டின்
மீதான வெள்ளந்தியான ஆசையைப் பற்றிப் பேசுகிறது 'கல்வச்ச தோடு' எனும் சிறுகதை.
இப்படி தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும்
ஆழமான வாசிப்பைத் தரவல்ல மனதை உலுக்கும் சிறுகதைகள்.
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டு இருக்கும்
இத்தொகுப்பை வாசிக்க விரும்புபவர்கள்
டிஸ்கவரி புக் பேலஸ்,
நம்பர் 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி
சாலை,
கே.கே.நகர் மேற்கு,
சென்னை - 600 078 எனும் முகவரியில் தொடர்பு
கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
டிஸ்கவரி புக் பேலஸின் தொடர்பு எண் -
87545 07070
இமெயில் முகவரி -
discoverybookpalace@gmail.com
வலைதளம் -
www.discoverybookpalace.com
ஆசிரியரின் இமெயில் முகவரி -
veerapandiang@gmail.com
*****
No comments:
Post a Comment