10 Feb 2019

க. வீரபாண்டியனின் பூர்ணிமை - சிறுகதைத் தொகுப்பு - விமர்சனம்



பூர்ணிமை - குரலற்றவர்களின் வாக்குமூலம்
            தெரு தெருவாய் குரல்களை ஒலிக்க விடும் பிரச்சாரங்கள் சாத்தியப்படும் உலகில் வாழ்கிறோம். இந்த நொடி நடப்பதை அடுத்த நொடியில் உலகுக்கே தெரியப்படுத்தும் சாத்தியமுள்ள தொழில்நுட்ப உலகில் இருக்கிறோம். இருப்பினும் விளிம்பு நிலை மக்களின் குரல்கள் உலகம் அறியாதவைகளாக உள்ளன. மெளனத்தில் புதைந்து போகும் அவர்களின் குரல்கள் வெளியுலகுக்குத் தெரியாமலே உறைந்து போகின்றன.
            வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி, ஒவ்வொருவருக்கும் கைபேசி என்று தகவல் தொழில்நுட்ப வாய்ப்புகளும், வசதிகளும் வந்த பின்னும், பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் என்று தகவல்கள் மின்னல் பொழுதில் பகிரப்படும் சூழ்நிலைகள் ஏற்பட்ட பின்னும் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் வாழ்வியல் அறியப்படாத ஆழத்தில் புதைந்துதான் இருக்கின்றன. அவர்களின் வாழ்வை சிறுகதைகளும், நாவல்களுமே வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இலக்கியங்களே அவர்களின் துயர வாழ்விற்கான சாட்சியமாய் உள்ளது.
            எழுதப்பட்ட வரலாறுகள் இருந்த காலக்கட்டத்திலும் சரி, எதையும் காட்சிப்படுத்தும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் நிறைந்த இந்தக் காலக்கட்டத்திலும் சரி வெளியுலகம் அறியாத வாழ்வியல் இருக்கவே செய்கின்றது. வரலாறுகளில் பதிவாகாத உண்மைகளையும், தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தத் தவறிய துயரங்களையும் இலக்கியமே சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் வடித்து மனிதத்தை மீட்டெடுக்க துணை நிற்கின்றன.

            அவ்வகையில் க. வீரபாண்டியன் அவர்களின் 'பூர்ணிமை' எனும் சிறுகதைத் தொகுப்பு விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலின் உலகின் கவனத்தைத் திருப்ப வைத்திருக்கிறது.
            விளிம்பு நிலை மக்கள் காலந்தோறும் விளிம்பு நிலை மக்களாகவே வைக்கப்படுகிறார்கள். அவர்கள் மைய நிலைக்கு வரும் வாய்ப்புகள் இருந்தாலும் அந்த வாய்ப்புகள் பறிக்கப்பட்டும் பிடுங்கப்பட்டும் மீண்டும் விளிம்பு நிலையை நோக்கியே தள்ளப்படுகிறார்கள்.
            அவர்களின் பொருளாதாரம் சுரண்டப்படுகிறது. அவர்களுக்குக் குறைந்த கூலியே வழங்கப்படுகிறது. அந்தக் குறைந்த கூலியும் அவர்களின் சேமிப்பில் நிலைத்த விடாதப்படி கந்துவட்டிகளின் கரங்களால் பிடுங்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றும் விளிம்புநிலை மக்கள் தங்கள் ஆரோக்கியத்தைத் தாங்கள் கூட்டிப் பெருக்கும் கழிவுகளால் இழக்கிறார்கள், பொருளாதாரத்தை வட்டிக்கு விடுபவர்களிடம் இழக்கிறார்கள். கடன் கொண்டார் நெஞ்சம் போல என்று சொல்வார்களே! தீராக்கடன் கொண்டார் நெஞ்சம் போல என்றல்ல, தீராக் கடன் கொண்டவர்களாவே உழல்கிறார்கள். 'தீராக்கடன்' என்ற சிறுகதையின் மூலம் விளிம்புநிலை மக்களின் பொருளாதார ஸ்திரமற்ற நிலையைப் பற்றிப் பேசுகிறார் வீரபாண்டியன்.
            செருப்பு விற்கும் பேட்டா போன்ற நிறுவனங்கள் மையநகரில் அலங்காரமான ஸ்டோர்கள் வைத்து இருக்கிறார்கள். செருப்பை உருவாக்கித் தரும் தொழிலாளிகள் ஓர் ஓரத்தில் ஒதுங்கிக் கிடக்கிறார்கள். சாலையோர முச்சந்தியில் செருப்புக்கடை வைத்திருக்கிறார் முனியப்பன். அவர் தன்னுடைய கடை அப்புறப்படுத்தி விடக் கூடாது என்ற அச்சத்தில் போலீஸ்காரர்களுக்கு நயந்தும் பயந்தும் நடக்கும் நடத்தையை 'முச்சந்தியில்...'  எனும் சிறுகதையில் பதிவு செய்கிறார் வீரபாண்டியன். உழைத்து அவர்கள் சேர்க்கும் காசும் போலீஸ்காரர்களின் சந்தேகக் கேஸ்களில் சிக்கி விடும் போது செல்லாக்காசாகி விடுகிறது என்பதை 'செல்லாக்காசு' எனும் சிறுகதையில் வலியுடன் உணர வைக்கிறார்.

            அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் இழந்த துயரம் பாரி மகளிருக்கு மட்டுமா? ஆணவக்கொலையில் காதலனை இழந்த காதலிக்கும் அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவு இழப்பின் குறியீடாய் நிற்கிறது. எவ்வித நீதியுமற்ற அரக்கத்தனமான மிருகத்தனமாக ஆணவக்கொலைக்குப் பின்னான பெண்ணின் மனநிலையை அழகியலோடு பேசுகிறது பூர்ணிமை எனும் சிறுகதை.
            சுய மலத்தின் துர்நாற்றத்தையே சகிக்க முடியாத மக்கள் வாழும் உலகில், பிறர் மலங்கள் நிறைந்த மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும் மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அப்படி கழிவுக் குழியில் இறங்கி சுத்தம் செய்யும் மனிதரின் உடலை போஸ்ட்மார்டம் செய்யும் டாக்டரும் அருவருக்கிறார். பலநாட்கள் ஆகிய அழுகிய பிணங்களை போஸ்ட்மார்டம் செய்யும் அவருக்குக் கூட கழிவுக்குழியில் இறந்த மனிதரின் உடலை போஸ்ட் மார்டம் செய்வது ஏற்படுத்தும் அசூயையும் அருவருப்பின் வீச்சமும் குறித்துக் காட்சிப்படுத்தும் 'சவக்குழி' எனும் சிறுகதை இத்தொகுப்பின் ஆகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்று எனலாம்.
            காலப்போக்கில்  கண்ணில் காண்பவை எல்லாம் நவீன வடிவத்தைப் பெறுகின்றன. விளிம்பு நிலை மக்களை வதைக்கும் தீண்டாமையும் நவீன வடிவத்தைப் பெறுகிறது. ஊரே குளிக்கும் குளம் அது. ஆண்களும் பெண்களும் குளிக்கிறார்கள். அக்கா என்று அழைத்து அன்போடு கண்ணன் கொடுக்கும் லக்ஸ் சோப்பைப் போட்டுக் குளிக்கிறாய் அந்தப் பெண். குளித்து முடித்ததும் உடலெங்கும் லக்ஸ் சோப்பின் நறுமணம். அந்த சுகத்தில் லயிக்கும் அவளுக்கு சோப்பைக் கொடுத்த கண்ணன் விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்த பிறகு அந்த நறுமணம் போக மீண்டும் மீண்டும் குளிக்கிறாள்.
            சினிமா தியேட்டரில் இரண்டாம் ஆட்டத்தின் போது வாடிக்கையாளரைத் தேடும் பாலியல் தொழிலாளி, அவளிடம் அக்கறையாகப் பேசுவது போல பேசி தன்னைப் பகிர்ந்து கொள்வது போல பகிர்ந்து கொண்டு தன் குரூரத்தில் உறுதியாக இருக்கும் போலி மனிதாபிமானி, சாலையோரம் சூட்சமமாக சூதாட்டம் நடத்துபவர், சூதாட்டத்தில் இருப்பதையெல்லாம் இழந்து போகும் சிறுவியாபாரி, ஆட்டுக்கறியோடு மாட்டுக்கறியைக் கலக்கும் சூழ்நிலைகளில் கலந்துள்ள மனிதர்கள், காசுக்கும் விருதுக்கும் எழுதும் எழுத்தாளரை இறுதியில் அவர் படைத்த பாத்திரமே விசாரணைக்கு உட்படுத்தும் விசித்திரம் என்று அறியப்படாத கேள்விப்பட்டிருக்காத குரல்களின் ஊடகமாக இத்தொகுப்பின் சிறுகதைகள் கால சாட்சியத்தின் பதிவுகளாய் உள்ளன.
            ஊர் பிரசிடென்டை நம்பி உழைத்த பணத்தையெல்லாம் கொடுத்து விட்டு அதனைத் தேவைப்படும் போது பெற முடியாமல் கையறு நிலையில் நிற்கும் கன்னியம்மா, தான் சம்பாதித்தப் பணத்தை குடிகார கணவனிடமிருந்து காப்பாற்றப் போராடும் பொன்னுத்தங்கம் என்று இச்சிறுகதைத் தொகுப்பு முழுவதும் இழப்பின் வலியைச் சுமந்து நிற்பவர்கள் அதிகம்.
            பாரியின் பறம்பு மலையை மூவேந்தர்கள் பங்கு போட்டுக் கொண்டார்கள் என்றால், விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அதிகாரமும், பணமும் உள்ள ஒவ்வொருவரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். அந்த இழப்பினால் உண்டாகும் வலியின் மீளாத்துயர் இத்தொகுப்பின் ஒவ்வொரு சிறுகதையிலும் கேட்கிறது.
            ஒவ்வொரு காலத்திலும் சிறுகதையும் நாவலுமே அறியப்படாத வரலாற்றைப் பதிவு செய்கிறது. முகமற்றவர்களின் முகங்களை ஓவியமாகத் தீட்டுகிறது. இலக்கியமே மெளனத்தில் உறைந்து போனவர்களுக்காக கால சாட்சியமாய் நின்று வாதாடுகிறது. விளிம்பு நிலை மக்களை மையநிலை வணிக ஊடகங்கள் கண்டு கொள்ளாவிட்டாலும் இலக்கிய வடிவங்களான சிறுகதைகளும், நாவல்களும் கண்டு கொண்டு புறக்கணிக்கப்பட்ட அவர்களின் வாழ்வியலை அடையாளப்படுத்தும் பணியை எப்போதும் செய்யும் என்பதற்கு க.வீரபாண்டியன் அவர்கள் எழுதியுள்ள 'பூர்ணிமை' எனும் இச்சிறுகதைத் தொகுப்பே சரியானச் சான்றாகிறது.
*****


3 comments:

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...