11 Feb 2019

டாக்டர் காலிங் பெல் அடித்துக் கொண்டு இருக்கிறார்!


புதிய தலைமுறைக் கதைகள்

            ரேனு தனக்குள் முடங்கிப் போகிறாள். எதைச் செய்யவும் ஆர்வமில்லை. அடுத்தது என்று எதையாவது செய்ய நினைக்கிறாள். ஒன்றைத் துவங்குகையிலே இது வேண்டாம் என்று இன்னொன்றைத் துவங்குகிறாள். இப்படியே மாற்றி மாற்றி ஒவ்வொன்றாய்த் தொடங்கி, தொடங்கிய ஒவ்வொன்றையும் நிராகரித்து வேறொன்றை நோக்கிப் பயணப்படுகிறாள்.
            துவங்கி முடிக்கப்படாத வேலைகள் ஏராளம் இருக்கின்றன. மனதுக்கு செய்ய வேண்டும் என்ற ஆசைகள். வெறும் ஆசைகள். செய்யத் துவங்கும் போது வெறுப்பு தட்டுகிறது. காரியம் அப்படியே நின்று விடுகிறது.
            வாட்ஸ்அப்பைத் திறக்கிறாள். இரண்டு மூன்று செய்திகளைப் படித்து முடித்த பின் எரிச்சலாக இருக்கிறது. பேஸ்புக்கைத் திறக்கிறாள். வேக வேகமாக அதன் பக்கங்களை உருட்டுகிறாள். பிடித்தமானதாக எதுவும் இல்லை.
            அவளுக்கு டிவிட்டரிலும் ஒரு கணக்கு இருக்கிறது. அதையும் திறக்கிறாள். அதுவும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு வெர்ஷனின் இரட்டைக் குழந்தைகள் என முணுமுணுக்கிறாள்.
            கூகுளில் மலர்கள் என்று டைப்பிட்டுத் தேடுகிறாள். வலைப்பக்கங்கள் பிடிக்காமல் போக இமேஜ்களாகப் பார்க்க விழைகிறாள். அழகழகான மலர்களாக வந்து கொட்டுகின்றன. எங்குப் பூத்தவைகளோ? யார் தண்ணீர் ஊற்றியவைகளோ? அதில் ஏதேனும் ஒன்றை புரொபைல் படமாக தேர்ந்து கொள்ளலமா என்று தோன்றுகிறது.
            ம்ஹூம்! வேண்டாம். நல்ல அழகான மலரை... ம்ஹூம்... நான் ரசிக்கும் ஒரு மலரைப் படம் பிடித்து அதை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள்.
            யாருக்காவது பேச வேண்டும் என்று ஓர் எண்ணம். வெறும் வாய்ஸ் காலிலேயே பேசி விடலாமா? வாட்ஸ்அப் காலில் பேசலாமா? என்று அதிலும் ஒரு சஞ்சலம் அவளுக்கு.
            இந்த உலகமே ஓர் இணையமாக இல்லையில்லை பேஸ்புக்காகவோ டிவிட்டராகவோ வாட்ஸ்அப்பாகவோ சுருங்கி விட்டதைப் போலத் தோன்றுகிறது.
            நெட்வோர்க் உலகில்தான் எனது கூடு இருக்கிறது. பைனரி உலகின் சிப்களில் எங்கேயோதான் நான் சேமிக்கப்பட்டு இருக்கிறேன். ரேனு புலம்புகிறாள்.
            டாக்டர் வர வேண்டும். அவர் வரும் வரை சமாளித்தாக வேண்டும். ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறாள். தண்ணீர் டேப்பிலிருந்து ஊற்றுகிறது.
            மாத்திரை வயிற்றுக்குள் போய் வேதிவினையைத் துவங்குகிறது. ரேனுவுக்கு கண்கள் சொக்கிக் கொண்டு வருகிறது. குறட்டை ஒலி சன்னமாக எழத் தொடங்குகிறது.
            கடிகாரத்தின் நிமிடப் புள்ளிகள் மின்னி மின்னி மறைகின்றன.
            காலிங் பெல் அடித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவர் வெளியே காத்திருக்கிறார். காலிங் பெல்லை மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டிருக்கிறார். சலித்துப் போய் ரேனுவின் கைபேசி எண்ணுக்கும் அடித்துக் கொண்டு இருக்கிறார்.
            டாக்டரின் அழைப்பு ரேனுவுக்குப் போகிறது. ரேனுவிடமிருந்து பிரதிவினை இல்லை.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...