5 Feb 2019

போராட்டங்கள் குறித்த பார்வைகள்


அண்மைப் போராட்டங்களின் அரசியல் நோக்குகள்
            அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டம் பற்றிய பொதுமக்களின் பார்வையில்... அரசின் ஒழுங்கு நடவடிக்கை, நள்ளிரவு கைதுகள், போராளிகளுக்கு எதிரான நீதிமன்ற வழக்காடல்கள் என்று சகலவிதத்திலும் நெருக்கடியைத் தந்த போதிலும் அவர்கள் ஒருமித்தே நின்றார்கள் என்பதைப் பொதுமக்களே அழுத்தமாகச் சொல்கிறார்கள் எனும் போது எந்த இடம் அவர்களை ஒருமித்துப் பணிக்குத் திரும்பக் காரணமாக அமைந்தது என்பதைப் பொதுச் சமூகம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. பொதுச்சமூகத்தைப் பாதிக்கச் செய்யும் மறியல் என்ற போராட்ட வடிவத்தை அவர்கள் கையில் எடுத்திருக்க வேண்டாமோ என்று கூட ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. கைது செய்வதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த காவல்துறைக்கு அதுவே ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கலாம்.
            மிகப்பெரிய எண்ணிக்கையில் கூடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது அவர்களைக் காவல்துறை கைது செய்த எண்ணிக்கை மிகவும் குறைவு. கைது செய்பவர்களைக் கொண்டு செல்ல வாகன வசதியின்மை, கைது செய்தவர்களைத் தங்க வைக்க அவ்வளவு எண்ணிக்கையில் மண்டபங்களை ஏற்பாடு செய்வது என்பது காவல்துறைக்குப் பெரும் சவாலாக இருந்தது என்பதை களநிலவரம் எடுத்துச் சொன்னது. பலரும் தங்களது வாகனங்களில் தாங்களே சென்று மண்டபங்களில் கைது ஆனார்கள்.
            இவ்வளவு வகையில் சிந்திக்கும் போது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் நடத்தியப் போராட்டத்தின் பின்னடைவு என்பது அவர்களுக்கு நேர்ந்த ஒரு பின்னடைவு என்பது மட்டுமாகாது. பொதுச் சமூகத்துக்கு நேர்ந்த ஒரு பின்னடைவாகவும் இது அமையும்.
            பணியாளர்களின் எண்ணிக்கை இனி பெருமளவில் சுருங்கக் கூடும். புதிய பணியாளர்களைப் பணிக்குச் சேர்க்கும் போது இனி அதிகபட்ச நிபந்தனைகள், கட்டுபாடுகள் விதிக்கப்படலாம். ஓய்வூதியம் என்ற ஒன்று இனிவரும் காலங்களில் நிச்சயமற்ற தன்மையை நோக்கி நகரலாம். சமூகத்தின் மற்றப் பணியாளர்கள் அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தைப் பெற முடியாவிட்டாலும் அரசுப் பணியாளர்களின் ஊதியமே மற்றப் பணியாளர்களுக்கான  ஊதிய அளவை நிர்ணயிக்க அளவுகோலாக கையாளப்படுவதுண்டு. இனி அவர்களின் ஊதியமே தொகுப்பூதியம் என ஐயப்பாட்டுக்கு உள்ளாகும் போது அரசு சாரா மற்றப் பணியாளர்களுக்குமான முன்மாதிரியாக அதுவே கொள்ளப்படும் என்ற நிலையை ஏற்படுத்தி விடும். ஊதிய நிர்ணயத்தை எப்போது வேண்டுமானாலும் செய்து கொண்டு நிலுவைத் தொகைகளை மறுக்கலாம் என்பதற்கும் இப்போராட்டத்தின் பின்னடைவே ஒரு காரணமாகவும் ஆகலாம்.
            அண்மை காலமாகப் போராட்டம் என்ற சொல் பரவலாகிக் கொண்டு வருகிறது. அனைத்துத் துறை சார்ந்தவர்களும், அனைத்துப் பிரிவைச் சார்ந்தவர்களும் ஏதோ ஒரு வகையில் போராடிப் பார்த்திருக்கிறார்கள். அதிகபட்சமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்கள் வரை நிவாரணப் போருட்களுக்காக போராடிப் பார்த்து இருக்கிறார்கள். பின்னடைவைச் சந்தித்து இருக்கிறார்கள்.  கோரிக்கைகள் நிராகரிக்கப்ப்டட நிலையில் அவர்கள் தங்களுக்கானப் புதிய போராட்ட வடிவை இடைவிடாது சிந்தித்த வண்ணமே இருப்பார்கள். அந்த வடிவங்கள் அனைத்தும் ஜனநாயகப்படுத்தப்பட்ட வடிவங்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதுதான் அதன் பின்னுள்ள கவலை அளிக்கக் கூடிய ஓர் அம்சம். ஆகவே போராட்டங்கள் எப்போதும் ஒரு சில கோரிக்கைகளையாவது திருப்தி செய்யும் வகையில் நிறைவு பெறுவதே நல்லது. அவ்வகையில் அக்கோரிக்கைகளை யார் திருப்தி செய்ய வேண்டுமோ அவர்கள் அதைத் திருப்தி செய்வதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது அவர்களின் தவிர்க்க முடியாத கடமை ஆகும்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...