ஜனநாயகத்தின் பேராபத்து
ஊழல் இந்தியாவின் முக்கியப் பிரச்சனையாகிக்
கொண்டிருக்கிறது. இருக்கின்ற இந்திய வளமெல்லாம் ஊழலாகவே சுரண்டி எடுக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் மத்தியில் யார் அதிகம்
ஊழல் செய்வது என்று போட்டியே நடக்கிறது. அதிகம் ஊழல் செய்யும் கட்சியே தேர்தல் நேரத்தில்
அதிக மதிப்பில் ஓட்டுக்கு நோட்டு தர இயலும் என்ற சூழ்நிலையும் அண்மைக் காலமாக உருவாகி
விட்டது.
அரசியல், அரசு இயந்திரம் என்று எதையும்
விட்டு வைக்கவில்லை இந்த ஊழல். பெரும் அளவில் சம்பாதிப்பவர்கள் தொடங்கி, சிறு அளவில்
சம்பாதிப்பவர் வரை அவரவர் அளவுக்கு ஏற்ப ஊழல் செய்வது அந்தந்தப் பணியின் தர்மம் என்பது
போல ஒரு சூழல் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
நேர்மையாக இருப்பதும், அப்பழுக்கில்லாமல்
செயல்படுவதும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு உரிய தோற்றங்களாக உருப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
எல்லா காலத்திலும் இருப்பது போலவே இப்போதும்
ஊழல் மற்றும் முறைகேடுகள் இருப்பதாகச் சொன்னாலும் தற்போதைய அளவு கூடுதலான அளவேயாகும்.
எல்லா நாடுகளும் இப்படி ஒரு நிலையைச் சந்தித்தே
மீண்டு வந்திருக்கிறது என்று சொன்னாலும் இந்தியாவின் இந்நிலை மிக அதிகபட்சமாகும்.
அதிலும் குறிப்பாக அப்படி மீண்டு வந்த நாடுகளில் ஓட்டுக்கு நோட்டு என்கிற அதிபரிட்சார்த்தமான
முயற்சிகள் எல்லாம் நடந்திருக்குமா என்ன?
தாங்கள் கறைபட்ட ஊழல் கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக
இருப்பது மட்டுமல்லாமல், வாக்காளர்களாகிய குடிமக்களையும் ஓட்டுக்கு நோட்டு வாங்க வைத்து
கறைபட்ட கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக மாற்றினார்களே இந்த நாட்டின் தலைபெருமக்கள்
அதை என்னவென்று சொல்வது?
அரசர் எவ்வழியோ குடி படைகளும் அவ்வழி
என்பது போலவே, தலைவர் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி என்பதாக எடுத்துக் கொள்வதா என்ன?!
ஊழல் ஜனநாயகத்தின் பேராபத்து!
ஊனமாகாதோ இந்த ஊழல் கரங்கள்?
*****
No comments:
Post a Comment