3 Feb 2019

தமிழர் உணவியல் மாற்றங்கள்


கட்டை வேகாமல் போன தாத்தா
            வைத்தி தாத்தா சொல்லும் போது வேடிக்கையாக இருக்கும். "அப்போல்லாம் நெல்லரிசிச் சோறுங்றது கனவால்ல இருக்கும். ஒரு பண்டிகை, விஷேசம்னாத்தான் வூட்டுல நெல்லரிச் சோறு. மத்த நாளுங்கல்ல கேப்பக்களி, கம்மங்கூழு, தெனஅரிசிச் சோறு இப்படித்தான் இருக்கும்.
            "தீவாளி, வருசப் பொறப்பு மாதிரி பண்டிகைன்னாத்தான் இட்டிலிக்குப் போடுங்க பொண்டுக! இட்டிலி போட்டுச் சாப்பிட்டதை ஒரு மாசத்துக்குப் பேசிட்டு இருக்குறது. இப்போ பொண்டுக சாப்பிடுதே அரை இட்டிலியும், ஒண்ணேகா இட்டிலியும். அப்படில்ல, ஒவ்வொரு பயலும் நாலு ஈடு, அஞ்சு ஈடு சாப்புடுவானுவோ.  அதுவும் நெல்லரிச் சோறுன்னா நாலு தட்டு அஞ்சு தட்டு சாப்புடுவானுவோ. கட்டுப்படியாகாது. அதுவும் பொண்டுக வடிக்கும் போது ஒரு தடவ சாப்பிட்டிடும். சோறு போடுறதுக்கு முன்னாடி ரெண்டு மூணு கவளம் அள்ளிப் போட்டு விழுங்கிடும். எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சா அப்புறம் ரெண்டு மூணு தட்டுகளாவது சாப்பிடும். இப்போ யாரு அந்த மாதிரி சாப்பிடுறா சொல்லு! ஒரு தட்டுல வைக்கிறதையே நாலா பிரிச்சு சாப்பிடுறானுவோ! ஆசையா அரை அன்னவெட்டிச் சோறு வைக்க முடியுதா சொல்லு. அய்யோ சுகரு ஏறிடும்னு சொல்றானுவோ!"
            என்னுடைய காலத்திலேயே சாப்பாடு வெகுவாக மாறி விட்டது. அநேகமாக எல்லா நாளும் நெல்லரிசிச் சோறுதான். இட்டிலி இல்லாத நாட்கள் அபூர்வம். காலையில் இட்டிலியைச் சுட்டு அதையே டிபன் பாக்ஸில் அடைத்து மதிய சாப்பாடாக கொடுத்து விட்டு விடுவார்கள். காலையில் சுட்டது மிச்சம் மீதமிருந்தால் அதையே ராத்திரிக்கும் சாப்பிட்டது உண்டு. இதனால் வைத்தி தாத்தா சொல்வதையெல்லாம் கேட்பதற்கு ஏதோ ஒரு வரலாற்றுக் காலத்தில் நடந்தவைகளைக் கேட்பது போல இருக்கும்.
            "கேவுரு, கம்பு, தென மூட்டைக இல்லாத வூடு கிடையாது தெரியுமா? அப்புறம் அவனவனும் நெல்லரிசிச் சோறு சாப்புட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா அத வெச்சுக்கிறதே கேவலம்னு ஆகிப் போச்சு. வூட்டுக்கு வர்ற விருந்தாடிகள கேவுரு கஞ்சி குடிக்கிறீங்களா? கம்மங்கூழு குடிக்கிறீங்களான்னு கேட்குறதை அகெளரவமா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க!" என்று வைத்தி தாத்தா சொல்லும் போதே ஏக்கமாக இருக்கும்.
            நான் டவுசர் போட்டு விளையாடிய நாட்களில் கம்பு, கேழ்வரகு, தினை மூட்டைகளைத் தலையில் சுமந்து கொண்டு வந்து தெரு தெருவாக விற்பவர்களைப் பார்த்திருக்கிறேன். யாரும் வாங்க மாட்டார்கள். வெறுமனே கூவிக் கொண்டு பரிதாபமாக மூட்டைகளைச் சுமந்து கொண்டு செல்வார்கள். "அதயெல்லாம் வாங்கி வெச்சு யாருடா காய வெச்சு அரைச்சுக் குடிக்கிறது?" என்று காதுபடவே கேட்டிருக்கிறேன்.
            நாட்கள் ஆக ஆக கம்பு, கேழ்வரகு, தினை விற்பவர்கள் வாராமலே போனார்கள். கிராமத்தில் எல்லார் வீட்டிலும் இருந்த அவைகள் எல்லாம் இல்லாமலே போயின.
            அதற்கப்புறம் இந்த கம்பு, கேழ்வரகு, தினை வகையறாக்களை நான் பார்த்த போது நான் நன்றாக வளர்ந்து சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கும் நிலையில் இருந்தேன். அந்த சூப்பர் மார்க்கெட்டில்தான் அவைகளைப் பார்த்தேன். வசதியானப் பெருமக்கள் எல்லாம் அவைகளைத் தாறுமாறாக வாங்கிக் கொண்டு சென்றார்கள். அப்போதும் நம் ஏழைப் பெருமக்களும், நடுத்தர மக்களும் அரிசி மூட்டைகளைத் தூக்கிச் செல்வதிலேயே கவனமாக இருந்தார்கள்.
            மிக எளிமையாக அன்று குக்கிராமத்துத் தெருக்களில் கிடைத்த கம்பும், கேழ்வரகும், தினையும் இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அன்று மிக அரிதாக நகரங்களில் மட்டும் கிடைத்த ஆங்கில மருந்து வகையறாக்கள் இன்று குக்கிராமங்களிலும் கிடைப்பது அதை விட பேராச்சரியமாக இருக்கிறது.
            கிராமத்துக் கடைகளில் ஆங்கில மருந்துகளை வாங்க முடிகிறது. கம்பு, கேழ்வரகு, தினை வேண்டும் என்றால் நகரத்துப் பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில்தான் தேட வேண்டியிருக்கிறது.
            வைத்தி தாத்தாவும் இறந்து விட்டார். இன்று அதைப் பற்றிப் பேசுவதற்குக் கூட கிராமத்தில் ஆட்கள் இல்லை.
            அண்மையில் ஒரு பெருதனவந்தர் வீட்டுக்கு மரியாதை நிமித்தமாகச் சென்ற போது கம்மங்கூழ்தான் கொடுத்தார்கள். காபியோ, டீயோ, ஆர்லிக்ஸோ சாப்பிடுவதில்லை என்றார்கள். வைத்தி தாத்தா உயிரோடு இருந்து அவரை நான் அழைத்துப் போயிருந்தால் கம்மங்கூழ் கொடுப்பதைப் பார்த்து அகம் மிக மகிழ்ந்திருப்பார். அதற்குள் கட்டையில் போய் விட்டார். ஆனாலும் என் கணிப்பு சரியாக இருக்குமானால் அவர் கட்டை வேகாமல்தான் போயிருப்பார்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...