15 Feb 2019

மூன்று கோலங்கள்


புதிய தலைமுறைக் கதைகள்

            ரங்காத்தாவுக்கு மூன்று பிள்ளைகள். மூன்று பிள்ளைகளுக்கும் பார்த்து பார்த்து கல்யாணம் செய்து வைத்தது ரங்காத்தா. மூன்று மருமவள்களையும் ரங்காத்தா பார்த்துக் கொண்டது போல யாரும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
            எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் ஆத்தா மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்பியது.
            ரங்காத்தா கட்டுதிட்டாக இருந்தவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. குடும்பத்துக்காக உழைத்துக் கொட்டியது. ரங்காத்தா உடல் அளவில் உடைந்து போன போது மூன்று பிள்ளைகளும் தனிக்குடித்தனம் போயின. ரங்காத்தாவுக்கு தனியாக இருப்பது பிடிக்காமல் பிள்ளைகளோடு போய் ஒட்டிக் கொண்டது.
            ஒவ்வொரு பிள்ளையின் வீட்டிலும் ஒரு நாளின் சில மணி நேரங்கள் ரங்கத்தாவைப் பார்க்கலாம். ராத்திரி ஒண்டிக் கொள்ள மட்டும்தான் அதனது வீடு.
            ரங்கத்தாவின் உடல் நடுக்கம் கண்டது.
            மூன்று மருமவள்களுக்கும் மனக்குறை.
            காலையில் தன் வீட்டில் ரங்காத்தா கோலம் போட வரவில்லை என்று மூன்றும் அடித்துக் கொண்டன.
            மருமவள்கள் அடித்துக் கொள்ள மாமியார் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
            தாள முடியாத கை நடுக்கத்தோடு மூன்று பிள்ளைகள் வீட்டிலும் ஓடியோடிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தது ரங்காத்தா.
            கோலம் போடுதலில் உண்டான தகராறு பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீடு அலசி விடுதல் என்று நீண்ட போது ரங்காத்தா அதையும் மூன்று வீடுகளுக்கும் ஓடியோடி சமாளித்தது.
            கடைசியில் ரங்காத்தா என்ன நினைத்ததோ? விதி என்ன நினைத்ததோ?
            ரங்காத்தா மூன்று பிள்ளைகள் வீட்டு வாசல் முன் நின்று சிரிக்க ஆரம்பித்தது. இப்போது மூன்று மருமவர்களுக்கும் ரங்காத்தாவை வாசலை விட்டு விரட்டுவதில் போட்டி ஆரம்பித்தது.
            ரங்காத்தா பைத்தியமாகி விட்டதாக ஊரில் எல்லாரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ரங்காத்தாவின் பிள்ளைகள் பார்த்தால் அடித்துத் துரத்தினார்கள். மருமவள்கள் கண்ணில் பட்டால் கல்லெடுத்து அடித்தார்கள்.
            இப்போதும் ரங்காத்தா நடுநிசி நேரங்களில் மூன்று வீடுகளின் முன் எதையாவது கோலம் என்ற பேயரில் போட்டு விட்டு ஒளிந்து கொள்கிறது.
            மூன்று வீடுகள்.
            மூன்று கோலங்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...