4 Feb 2019

போராட்ட வரலாறுகளின் சுருக்கமான அறிமுகம்


போராட்டங்களின் பின்னுள்ள வேர்கள்
            களமாடும் போராட்டங்கள் ஒருபோதும் பின்னடைவைச் சந்திக்காது. பின்வாங்குதலும் போர்முறையின் ஓர் உத்திதான் என்பதைப் புரிந்து கொண்டால் பின்னடைவின் பின்னுள்ள வெற்றியைப் புரிந்து கொள்ளலாம்.
            எப்போதும் பின்வாங்கும் போராட்டங்கள் யாராலும் கற்பனை செய்ய முடியாத புதிய முறைகளை உருவாக்கிக் கொள்ளும். உலகெங்கும் நடந்துள்ள போராட்டங்களின் வரலாறு அதைத்தான் சொல்கிறது.
            விதைகள் மண்ணில் புதைந்து போவது தோல்வி முகத்தைக் காட்டுவதாக எப்படிக் கருத முடியாதோ அப்படித்தான் போராட்டங்களின் தற்காலிக பின்னடைவுகளும். ஒவ்வொரு போராளியும் இது போன்ற பின்னடைவைத்தான் மறுபரிசீலனைக்கான மகத்தான வாய்ப்பாக கருதுவார்கள்.
            போராட்டங்களின் பின்னடைவைத் தற்காலிக ஒரு பின்னடைவாகக் கொள்ளலாம். அந்தப் பின்னடைவு என்பது ஜனநாயத்தின் மேல் கொள்ளும் ஒரு மரியாதை ஆகும். தமது போராட்டத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு வெற்றிக்கு முன்னே முடிவுக்கு ஒரு போராட்டம் என்பது ஒழுக்க நெறியோடு நின்று எப்படி போராடுவது என்பதற்கான மாபெரும் பாடத்தைச் சொல்லிக் காட்டும் போராட்ட வடிவமும் ஆகும்.
            நடைபெற்றுள்ள பெரும்பாலான போராட்டங்களை ஒப்பு நோக்கும் போது குறைந்தபட்சம் ஒரு கோரிக்கையையேனும் வென்றெடுக்காமல் எந்தப் போராட்டமும் ஒரு முடிவுக்கு வந்ததில்லை. முதன்முறையாக ஒரு கோரிக்கையைக் கூட வென்றெடுக்காமல் ஒரு போராட்டம் ஒரு முடிவுக்கு வருகிறது என்றால், அது தோல்வியை ஏற்றுக் கொள்வதினால் போராளிகள் சோர்ந்துப் போவதில்லை என்பதை உலகிற்குக் காட்டுவதற்கான ஒரு சான்றாகவும் பரிணமிக்கும்.
            அதுவும் இல்லாமல் அண்மையில் நடைபெறும் போராட்டங்கள்  மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்கும் போராட்டங்களாக மாறி வருகின்றன. இப்போது மிகப்பெரிய அளவில் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு வாட்ஸ்அப் ஒரு உதவியாக இருக்கிறது. சமூக ஊடகங்களான பேஸ்புக், டிவிட்டரிலும் அவர்கள் தகவல்கள் பகிர்ந்து கொள்கிறார்கள், தங்களை ஒருங்கமைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் மாபெரும் கொள்கைப் பரப்புச் செயலாளர்களாக இன்று வாட்ஸ்அப்பே திகழ்கிறார்.
            தலைவர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ முந்தையப் போராட்டங்களில் வெளிப்படுத்திய களப்பணியை அண்மைப் போராட்டங்களில் சமூக ஊடகங்கள் செய்கின்றன. 
            பொதுவாக போராட்டங்களை ஒடுக்க முற்படுபவர்கள் இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப்பை முடக்குவதில் காட்டினால் போராட்டத்தின் கண்ணி  ஒட்டுமொத்தமாகவும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய செயலிகளில் ஒன்றான அதை முடக்குவது எந்த அளவுக்குச் சாத்தியம்? அந்தச் சாத்தியத்தையும் முயன்று பார்க்காமல் இருக்க மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்திரவாதத்தையும் கொடுக்க இயலாது.
                        போராட்டங்களின் பின்னுள்ள அமைதி என்பது ஒரு மெளனம். அது ஒரு மெளனப் போராட்டம். அந்த மெளனப் போராட்டம் வாக்குச் சீட்டு எனும் வடிவிலும் வெளிப்படும் சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்கின்றன. ஆகவேத்தான் மெளனமாக முடியும் போராட்டங்களின் பின்னுள்ள வேர்களை அதிகமாகவே ஆராய வேண்டியிருக்கிறது. தற்காலிமாக முடிவுக்கு வந்து விட்டது போன்ற தோற்றம் தரும் போராட்டங்கள் மிக நீண்ட கால பின்விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கக் கூடும்.
            ஓர் அணுஉலையைத் திறப்பதற்கு முன் நிறைய யோசிக்க வேண்டியிருப்பதைப் போலத்தான் ஒரு போராட்டத்தை முடித்து வைப்பதற்குப் பின்னும் நிறையவே யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அதன் வேர்கள் எங்கெங்கு நீண்டிருக்கின்றன என்பது யாருக்குத் தெரியும். பார்வைக்குப் புலப்படாமல் மண்ணுக்குள் பரவிச் செல்லும் வேர்களைப் போல்தான் முடித்து வைக்கப்படாத ஒரு போராட்டத்தின் காரணமாக மனதின் ஊடாக எழும் பின்உணர்வுகளும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...