1 Feb 2019

தமிழர்களின் சினிமா பார்வை


சினிமா பித்தின் முக்கால் நூற்றாண்டு
            சினிமாவுக்கு இருக்கும் மவுசு இலக்கியத்துக்கு இல்லை. அந்த மவுசு சினிமாவின் மீதான ஈர்ப்பினால் மட்டும் வந்ததா என்ன? சினிமாவுக்குச் செய்யப்படும் விளம்பரங்களாலும் உண்டானது.
            இலக்கியத்துக்கும் விளம்பரம் செய்கிறார்கள்தான். குறிப்பாக புத்தகங்களுக்கு. ஒரு சில இதழ்களின் ஓரத்தில் தீப்பெட்டி சைஸூக்கு அந்த விளம்பரம் இருக்கிறது. அந்த ஒரு சில இதழ்களை அதிகபட்சம் ஆயிரம் பேர் வரை பார்ப்பார்கள். படிப்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தால் அதள பாதாளத்துக்குப் போய் இன்னும் எண்ணிக்கை குறையலாம். ஆகவே அந்தக் கணக்கெடுப்பு வேண்டாம்.
            புத்தக வெளியீடுகளுக்கு அரிதாக போஸ்டர்கள் ஒட்டப்படுவதையும் பார்த்திருக்கிறேன். இது போன்ற போஸ்டர் அடித்து ஒட்டும் முயற்சி புத்தகம் அச்சிடுவதை விட செலவு பிடிக்கும் சமாச்சாரம். முதல் புத்தக வெளியீட்டுக்கு முயன்று பார்த்தவர்கள் இரண்டாவது புத்தகத்துக்கு நிச்சயம் செய்ய மாட்டார்கள்.
            அந்த போஸ்டர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவை சினிமா போஸ்டர்களைப் போல இருக்காது. நிறைய எழுத்துகள் கொண்டதாக இருக்கும். எழுதியவர் இன்னார், நூலை வெளியிடுபவர் இன்னார், சிறப்பு விருந்தினார்கள் இன்னார் இன்னார், வரவேற்புரை வழங்கப் போகிறவர் இன்னார், நன்றியுரை வழங்கப் போகிறவர் இன்னார் என்று சொற்கள் மயம்தான். நான்கு நிமிடம் செலவழித்தால் நின்று படிக்கலாம். போய்க் கொண்டே படிப்பது சாத்தியமாக இருக்காது.
            முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் என்று வந்த பிறகு இலக்கிய விளம்பரங்களும் தூள் பறக்கின்றன. சினிமாவுக்கு விளம்பரம் செய்வதைப் போலவே இலக்கியத்துக்கும் பர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் எல்லாம் வெளியிடுகிறார்கள்.
            சினிமா என்றால் டிக்கெட் வாங்கிப் போய் பார்ப்பவர்கள் இலக்கியம் என்றால் லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்டு விட்டு கண்டு கொள்ளாமல் கம்மென்று இருந்து விடுகிறார்கள்.
            சினிமா போல டி.வி.யில் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு இலக்கியம் இன்னும் பொருளாதார ரீதியாக போஷாக்காக வளர்ந்து விடவில்லை.
            சில வெகுஜனஇதழ்கள், நாளிதழ்கள் மட்டும் இந்த விடயத்தில் முன்னேறியிருக்கின்றன. தங்களது இதழை வாங்கிப் படியுங்கள் என்று விளம்பரம் செய்கின்றன. அதை வாங்கிப் படித்தால் பத்து பக்கங்களுக்கு எட்டுப் பக்கங்கள் சினிமாதான்.
            நம் மக்களைப் பொருத்த வரையில் சினிமாதான் இலக்கியம். அவர்களைப் பொருத்தவரை சினிமாதான் வாழ்க்கை. தங்களுக்கான கருத்துகளை அதிலிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள். தங்களுக்கான கண்ணீரை அதிலிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள். தங்களுக்கான மீம்ஸ்களை அதிலிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள். தங்களுக்கான தலைவரையும் அதிலிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள். இன்னும் சிறிது காலத்தில் அந்த இடத்தை சீரியல்களோ, வெப் சீரிஸ்களோ பிடிக்கலாம். சீரியஸாக எந்த மாற்றமும் வந்து விடாது.
            சில நேரங்களில் யோசித்துப் பார்த்திருக்கிறேன், சினிமாவிலிருந்து முதலமைச்சர்கள் வருவது போல சீரியல்களிலிருந்து இன்னும் முதலமைச்சர்கள் ஏன் வரவில்லை என்று. அப்படி வரவில்லை என்று அவநம்பிக்கைக் கொள்ளத் தேவையில்லை. அதிலிருந்தும் வருவார்கள் என்றே நினைக்கிறேன். காலம் இருக்கிறது. நடக்கலாம். நடக்கும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...