மக்கள் வெளியேறி விடுவது நல்லது
மக்கள் வெளியேறி
விடுவது நல்லது!
எங்கிருந்து
என்று கேட்கிறீர்களா?
தலைநகர் டெல்லியிலிருந்து.
இப்படி ஒரு
எச்சரிக்கையை விடுத்திருப்பது தீவிரவாத அமைப்போ, பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை
தரும் அமைப்போ அல்ல.
உச்சநீதிமன்றம்தான்
இப்படி ஓர் எச்சரிக்கையை வேதனை கலந்த கருத்தாக வெளியிட்டு இருக்கிறது.
அந்த அளவுக்கு
தலைநகர் டெல்லி காற்று மாசினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனிக்காலங்களில்
காற்று மாசினால் பகல் பொழுதும் இரவுப் பொழுது போல காட்சியளிப்பதாக ஊடகங்கள் டெல்லியைக்
காட்சிப்படுத்துகின்றன.
குறிப்பாக
வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு தலைநகரை மிக அதிகமாகவே மாசுபடுத்தி வருகிறது.
இந்த மாசு
டெல்லியைக் கொலைகூடமாக மாற்றி விட்டதாகவும் வேதனைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
வாகனங்களின்
விற்பனைப் பெருக்கமே பொருளாதாரப் பெருக்கம் என்பது போன்ற கருத்து அண்மைகாலமாக முன்வைக்கப்படுகிறது.
அத்தகைய பொருளாதாரப்
பெருக்கத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் விலைதான் மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு
கொலைக்கூடமாக மாறியிருக்கும் டில்லி.
டில்லிக்கு
நேர்ந்திருக்கும் இந்த நிலை மற்ற நகரங்களுக்கு வருவதற்கு நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.
வாகனங்களை
விற்க வைத்து பொருளாதாரப் பெருக்கத்தை அதிகப்படுத்திய இந்த நடவடிக்கை அடுத்த கட்டமாக
தூய காற்றை சிலிண்டர்களில் அடைத்து வைத்து விற்பனை செய்யும் பொருளாதாரப் பெருக்கமாக
உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது.
யோசித்துப்
பார்த்தால் இயற்கையாக கிடைத்த தூய காற்றைக் காசு கொடுத்து வாங்க வைப்பது என்ன வகைப்
பொருளாதாரப் பெருக்கம் என்ற ஆதங்கம் ஏற்படாமல் இல்லை.
இயற்கையாக
கிடைத்த தூய நீரை காசு கொடுத்து வாங்க வைத்த நிலை அடுத்த கட்டமாக காற்றுக்குதான்.
முன்னேற்றம்
என்ற பெயரில் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் இனியாவது நமக்கு எதிராக திரும்பாத வண்ணம்
இருக்க வேண்டும்.
கட்டற்ற முன்னேற்றம்
இறுதியில் கட்டற்ற அழிவை கட்டவிழ்த்து விட்டு விடக் கூடாது அல்லவா!
*****
No comments:
Post a Comment